பிரான்ஸுக்குப் புதிய தலைவர், ஐரோப்பாவுக்கு புதிய திசை!
பாரீஸ், மே 7: பிரெஞ்சு சோஷலிஸ்ட் கட்சித் தலைவரான ஃபிரான்ஷுவா ஹொலாந்த் வெற்றி பெற்றிருப்பது பிரான்ஸý க்கு மட்டும் அல்ல ஐரோப்பிய நாடுகள் அனைத்திலுமே உள்ள ஏழைகளுக்குக் கிடைத்த வெற்றி என்று அரசியல் பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பணக்காரர்களுக்கு வரிச் சலுகை, கடன் ரத்து, ஏற்றுமதி மானியம் என்று அள்ளி வழங்கும் அரசுகள் ஏழைகள் பயன்படுத்தும் பொருள்களுக்கான மானியங்களைக் குறைப்பது, வரிகளை உயர்த்துவது, சேவைக் கட்டணத்தை அதிகரிப்பது என்று அவர்களுடைய வாழ்க்கையை நரகமாக்குகின்றன.
அத்துடன் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றைப் போக்க ஒழுங்கான நடவடிக்கைகளை எடுக்காமல், உலகம் முழுக்கப் பொருளாதார மந்த நிலை நிலவுவதால் ஏதும் செய்வதற்கில்லை என்று ஒரே பல்லவியையே பாடுகின்றன.
அத்துடன் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி, தடையற்ற வர்த்தகத்துக்கு வரவேற்பு என்று கூறி நாட்டின் வளங்களை பன்னாட்டுத் தொழில்துறைகளுக்குத் திறந்துவிட்டு அதில் கமிஷன் வாங்கி சொந்த லாபம் அடைகின்றன.
இதையெல்லாம் பார்த்துப்பார்த்து பொருமும் மக்கள் அத்தகைய அரசுகளையும் ஆட்சியாளர்களையும் தேர்தல் மூலம் தூக்கி எறியத் தொடங்கிவிட்டனர். இதைத்தான் பிரெஞ்சு அதிபர் தேர்தல் உணர்த்துகிறது.
கடன் சுமையில் பிரான்ஸ் நாடு தத்தளிக்கிறது. பிரான்ஸில் வந்து குடியேறிய ஆப்பிரிக்க, ஆசிய மக்களை பிரெஞ்சு மக்களோடு எப்படி இணைத்து சமூக ஒற்றுமையை ஏற்படுத்துவது என்று தெரியாமல் அரசு விழி பிதுங்கி நிற்கிறது. தொழில்துறையில் தேக்க நிலை காணப்படுகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது.
விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்ந்து நிற்கிறது. ஏழைகள், நடுத்தர மக்கள் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் தவிக்கின்றனர். அரசின் சிக்கன நடவடிக்கைகளால் அவர்கள்தான் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவேதான் சர்கோஸியை ஆட்சியிலிருந்து அகற்ற முடிவு எடுத்தனர்.
1981 முதல் 1995 வரை ஃபிரான்ஷுவா மித்தரான் அதிபராக இருந்தார். அவருக்குப் பிறகு இப்போதுதான் சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இடதுசாரித் தலைவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். இது ஐரோப்பிய நாடுகளில் உள்ள இடதுசாரி ஆதரவாளர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்திருக்கிறது.
பாரீஸ் நகர வீதிகளில் மக்கள் எல்லாவிதமான கொடிகளையும் கையில் ஏந்திவந்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
அவர்களிடையே பேசிய ஹொலாந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
“”சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் தங்களுடைய கழுத்தைப் பிடிக்கும் அரசுகளை வெளியேற்றத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் ஐரோப்பிய நாடுகளின் மக்கள் நாம் செய்திருக்கும் இந்தக் காரியத்துக்காக நமக்கு நன்றி தெரிவிக்கின்றனர்” என்று அவர் கூறியபோது மகிழ்ச்சி ஆரவாரம் பெருக்கெடுத்தது.
“”நீங்கள் தந்துள்ள இந்த எழுச்சி ஐரோப்பிய நாடுகளில், ஏன் உலகம் முழுவதிலுமே அலைகளை ஏற்படுத்தி வருகிறது” என்று பாராட்டினார்.
புதிய அதிபர் ஹொலாந்த் இம் மாதம் 16-ம் தேதி பதவி ஏற்பார்.
கிரேக்க நாட்டு நாடாளுமன்றத்துக்கும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடந்தது. அங்கும் மக்களின் கோபம் ஆட்சியாளர்களுக்கு ஆபத்தாக முடியும் என்று தெரிகிறது.
ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் தேர்தல்களும் இதே முடிவைத்தான் தரப்போகின்றன என்பது நிச்சயம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
பிரான்ஸ் நாட்டில் மொத்த வாக்காளர்களில் 81% பேர் வாக்களித்தனர். பதிவான வாக்குகளில் 95% எண்ணப்பட்ட நிலையில் ஹொலாந்துக்கு ஆதரவாக 51.6% வாக்குகளும் சர்கோஸிக்கு 48.4% வாக்குகளும் கிடைத்தன.
அதிபராகப் பதவி ஏற்ற பிறகு தான் செய்யப்போகும் முதல் வேலை, ஐரோப்பியநாடுகளின் தலைவர்களுக்குக் கடிதம் எழுதி, சிக்கன நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்வதுதான் என்று ஹொலாந்த் குறிப்பிட்டார்.
சிக்கன நடவடிக்கைகளைவிட அரசின் நிதியைச் செலவிட்டு பொருளாதார நடவடிக்கைகளைத் தூண்டிவிடுவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும் என்று தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
அரசின் செலவைக் குறைக்கும் சிக்கன நடவடிக்கைகளை பிரான்ஸின் சர்கோஸியும் ஜெர்மனியின் ஏஞ்செலா மார்கெல்லும்தான் முன்னின்று மேற்கொண்டனர். அதை பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை என்பதை இந்தத் தேர்தல் முடிவு தெளிவாக உணர்த்திவிட்டது.
பிரெஞ்சு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஹொலாந்துக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார்.
அவருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாகவும் அமெரிக்காவின் கேம்ப்டேவிட் என்ற இடத்தில் இம் மாத இறுதியில் ஜி-8 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் அவரை நேரில் சந்தித்துப்பேச ஆர்வமாக இருப்பதாகவும் அச் செய்தியில் கூறியிருக்கிறார்.
புதிய பிரெஞ்சு அதிபருடன் இணைந்து பணியாற்ற சீனா தயார் என்று அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரி நிருபர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தார்.
பிரான்ஸ் நாட்டு வரலாற்றிலேயே இதுவரை எந்த ஓர் அதிபர் மீதும் பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு இந்த அளவுக்கு வெறுப்பு இருந்ததாகத் தெரியவில்லை.
பொருளாதார நெருக்கடியைப் போக்குங்கள் என்று மக்கள் குரல் எழுப்பியபோது, சிக்கன நடவடிக்கைதான் ஒரே வழி என்று உண்மையைச் சொன்னதுதான் சர்கோஸி மீதான வெறுப்புக்குக் காரணம். அறிவார்ந்த விஷயங்கள் எல்லாவற்றிலும், மற்றெல்லோரையும் விடத் தாங்கள் மேம்பட்டவர்கள் என்ற எண்ணம் கொண்டவர்கள் பிரான்ஸ் நாட்டினர். இத்தகைய மனோபாவம் கொண்டவர்களிடம் தங்கள் நாட்டின் பொருளாதார நிலைமை சரியில்லை என்கிற உண்மையை சர்கோஸி தனது வெளிப்படையான பேச்சுகளால், செய்கையால் வெளிப்படுத்தியதால் மக்களுக்கு அவர்மீது கோபம் ஏற்பட்டதில் வியப்பொன்றும் இல்லை.
பணிஓய்வு வயதை 60-லிருந்து 62}ஆக உயர்த்தினார் சர்கோஸி. இது பெரும் எதிர்ப்புக்கு வழி வகுத்தது. 60 வயதானவர்களை ஓய்வு கொள்ள அனுமதித்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் அளித்தாக வேண்டும். அந்த ஓய்வூதியத்தின் அளவு சம்பளத்தில் பாதியாக இருக்கிறது. ஓய்வூதியப் பலன்களையும் அளித்தாக வேண்டும். அரசு சிக்கன நடவடிக்கையில் இருக்கும்போது இது பெருஞ்செலவு. (ஏறத்தாழ இந்தியாவும் அதே பிரச்னையை எதிர்கொள்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.)
ஆகவே, ஓய்வு வயதை 62}ஆக உயர்த்த அனுமதித்தார். வேலையில்லாத இளைஞர்கள் தாங்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அவதிப்பட வேண்டுமா என்று கொதித்தெழுந்தனர். இதற்கிடையில் கார்லா புரூணியைக் காதல் திருமணம் செய்துகொண்டதும் பிரெஞ்சு மக்களிடம் அவர் மீதான வெறுப்பை அதிகரிக்கச் செய்தது. அவர் கடந்த தேர்தலில் போட்டியிட்டபோது, லிபியாவின் மறைந்த அதிபர் கடாஃபியிடம் 5 கோடி யூரோவை தேர்தல் செலவுக்காகப் பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டும் சேர்ந்து அவருக்கு எதிரான எதிர்ப்பு அலையை உருவாக்கியது. போதாக்குறைக்கு, பல பிரச்னைகளில் அவர் எடுத்த அமெரிக்க ஆதரவு நிலையும் மக்களை முகம் சுளிக்க வைத்தது.
இப்போது அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஹொலாந்த் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பும். ஐரோப்பா முழுவதும் அவரது நடவடிக்கையை ஆவலுடன் எதிர்நோக்குகிறது. ஹொலாந்த் சொல்வதையெல்லாம் செய்ய முடியுமா என்பதும், அதனை நாடாளுமன்றம் அனுமதிக்குமா என்பதும் சந்தேகம்தான். அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் சோஷலிசக் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைத்தால்தான், சொன்னதையெல்லாம் ஹொலாந்த் செய்ய முடியும். இல்லையென்றால், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைக்காமல் அவர் அறிவித்ததெல்லாம் வெறும் தேர்தல் வாக்குறுதிகளாகவே இருந்துவிடும்.
சோஷலிசக் கட்சியே அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றாலும்கூட, ஒரு மில்லியன் யூரோவுக்கு அதிகமாக சம்பாதிப்போருக்கு 75% வரி விதிக்கப்படும் என்கிற அவரது அறிவிப்பெல்லாம் சாத்தியமே இல்லை என்கிறார்கள். அத்தகைய நடவடிக்கையில் ஹொலாந்த் இறங்கினால், அந்த அளவுக்குச் சம்பாதிப்போர் யாரும் பிரான்ஸில் வசிப்பதையோ, தொழில் நடத்துவதையோ தவிர்த்துவிடுவார்கள். பிறகு, பிரான்ஸின் நிதி நிலைமை மேலும் மோசமடையும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
பிரான்ஸ், ஏற்கெனவே கடன் சுமையில் தத்தளிக்கிறது. மேலும் கடன் வாங்கித்தான் நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்கிற நிலைமை. பல மக்கள் நல சேவைகளை நிறுத்திவிட முடியாது. மானியங்களைத் தவிர்க்க முடியாது. 2012}ஆம் ஆண்டுக்கு மட்டுமே 180 பில்லியன் யூரோ கடன் வாங்கியாக வேண்டும். 2013-க்கு 200 பில்லியன் யூரோ கடன் வாங்கியாக வேண்டும். அரசு இயந்திரம் மற்றும் மக்கள் நலத் திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்தாலொழிய நிலைமையைச் சீர் செய்வது கடினம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
“2017 பட்ஜெட்டில் கடன் வெறும் பூஜ்ஜியமாக இருக்கும்’ என்று தேர்தல் வாக்குறுதியில் ஹொலாந்த் சூளுரைத்தபோது, அது எப்படி சாத்தியம் என்று மக்களும் கேட்கவில்லை, அவரும் சொல்லவில்லை. கடினமான நடவடிக்கைகளை சர்கோஸி போல இவரும் மேற்கொண்டால் அவருக்கான நிலைமைதான் இவருக்கும் ஏற்படும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
உலகளாவிய அளவில் மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை எந்த ஒரு தலைவனாலும் பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு நுகர்வுக் கலாசாரம் மக்களை மாற்றி இருக்கிறது. இந்த நிலையில், அரசியல்வாதிகள் ஒரு விஷயத்தை நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள். பொய்யான வாக்குறுதிகளையும் மக்களை மயக்கும் கவர்ச்சித் திட்டங்களையும் அறிவித்து எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பது; ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு கொள்ளை அடிக்க முடியுமோ அடித்துவிட்டு, பணபலத்தால் மீண்டும் பதவியைப் பிடிக்கப் பார்ப்பது, இல்லையென்றால், அடுத்த தேர்தலில் ஆளும்கட்சியின் மீதான எதிர்ப்பலையில் தங்களுக்குக் கிடைக்கப் போகும் வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருப்பது என்பதுதான் அது.
நன்றி: தினமணி