முழங்கியது போதும் வழங்குகள் உரிமைமையை!
ஃபாகிரா
நாம் மேடையில் நின்று கொண்டு, ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தில் பெண்களுக்கு இன்னின்ன உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன என்று முழங்கினால் மட்டும் போதாது. மாறாக, இஸ்லாம் அளித்துள்ள பெண்ணுரிமைகளை நடைமுறையில் செயல்படுத்திக் காட்டவேண்டும்.
பெண்களின் பிரச்னைகளும் அவற்றின் தீர்வுகளும் என்று பேசுவதற்கு முன்பு முதலில் பெண்களின் இருப்பு பற்றி புரிந்து கொள்ளவேண்டும். பெண்ணுரிமை என்ற பெயரில் எவ்வளவோ போராட்டங்கள் நடைபெற்றன. கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழிக்கப்பட்டன. ஏராளமான முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. அப்படியெல்லாம் இருந்தும் கூட பெண்களின் நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நீதி எனும் பெயரில் அநீதிகள்தான் அரங்கேறின. இன்றுவரை அந்த இழு பறியும் போராட்டமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
எல்லாரும் அறிந்த உண்மை என்னவென்றால், இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள உரிமைகள் போன்ற இன்றைய நவீன உலகம் கூட அளிக்கவில்லை. இஸ்லாத்தில் பெண்களுக்கு எல்லாமே உண்டு. உரிமைகள் உண்டு. கண்ணியம் உண்டு. மரியாதை உண்டு. பாதுகாப்பு உண்டு. முஸ்லிம் பெண்களின் இந்த உரிமைகள் குறித்து இன்று அதிகம் பேசப்படுகின்றது. ஆனால் நடைமுறையில் அவை பேணப்படுவதில்லை.
தொடக்கத்திலிருந்தே மேற்கத்தியர்கள் முஸ்லிம் சமுதாயம் பற்றி தவறான கருத்துகளையே கொண்டிருந்தனர். ஆனால் நாம் கொள்கையை மட்டுமே சமர்ப்பிக்கிறோம். நடைமுறை உதாரணங்கள் தருவதில்லை. பெண்களை மேற்கத்தியப் பிடியிலிருந்து காப்பாற்ற என்ன செய்வது? நாம் மேடையில் நின்று கொண்டு, ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தில் பெண்களுக்கு இன்னின்ன உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன என்று முழங்கினால் மட்டும் போதாது. மாறாக, இஸ்லாம் அளித்துள்ள பெண்ணுரிமைகளை நடை முறையில் செயல்படுத்திக் காட்டவேண்டும். அந்த உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாக உள்ளவற்றை எல்லாம் தகர்த்தெறியப் போராட வேண்டும்.
பெண்களின் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு இஸ்லாத்தில் இருக்கிறது எனத் தெளிவாகக் குறிப்பிடலாம். இஸ்லாத்தில் பெண்களுக்கு எந்த அளவுக்கு உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளன எனில் ஆண்களுக்கும் கூட அந்த அளவுக்கு உரிமைகளை அளிப்பதில்லை. ஆனால் நடைமுறையில் இந்த உரிமை பெண்களுக்குக் கிடைக்கிறதா எனும் கேள்வி எழுகிறது. சாதாரண முஸ்லிம்களை விடுங்கள். நல்ல மார்க்கப்பற்றுள்ள குடும்பங்களில் கூட பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்படுகிறது.
அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் செய்தது போல் சுதந்திரமாக வணிகம் செய்ய அனுமதி தரப்படுவதில்லை. தங்களின் முழுமையான திறமையையும் ஆற்றலையும் பயன்படுத்தி பெண்கள் சமுதாயப் பணி செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இஸ்லாத்தில் மட்டுமே பெண்களுக்கான ஈடேற்றமும் அமைதியும் உள்ளன என முஸ்லிம் பெண்கள் இதர பெண்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அநீதிக்கும் கொடுமைக்கும் எதிராகக் குரல் எழுப்புவது ஈமானின் இறைநம்பிக்கையின் தேட்டமாகும். மனிதர்களாய்ப் பிறந்த நாம் சமுதாயத்தில் நடைபிணமாக இருக்கக் கூடாது. உயிர்த்துடிப்புடன் செயலாற்ற வேண்டும். அன்னை ஆயிஷா, அஸ்மா ஆகியோரின் சமூகக் களப்பணிகள் நமக்கு முன்மாதிரிகளாக விளங்க வேண்டும்.
பெண்கள் தங்களின் வீட்டைப் பராமரித்து நிர்வகிப்பதிலும் திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். அதே சமயம் சமுதாயப் பணிகளிலும் தங்களின் முத்திரையைப் பதிக்க வேண்டும். சமூக சேவையில், சமுதாயப் பணிகளில் இன்று முஸ்லிம் பெண்கள் யாரேனும் சாதனை படைத்திருக்கிறார்கள் எனில், அவர்கள் இஸ்லாத்தைப் புறக்கணித்து விட்டு, அல்லது இஸ்லாத்தைக் குறை சொல்லிக் கொண்டுதான் அந்தச் சாதனையைப் புரிந்திருக்கிறார்கள். இஸ்லாமிய வரம்புக்குள் இருந்து கொண்டே, இஸ்லாம் தரும் உந்துசக்தியைக் கொண்டே நாம் சாதனைகள் படைத்துக் காட்டவேண்டும். இந்தியாவில் ஏழுகோடி முஸ்லிம் பெண்கள் இருக்கிறார்கள். இவர்களை வாய்மூடி மௌனிகளாக இருக்கச் செய்துவிட்டு இங்கே எந்தப் புரட்சியையும் நாம் கொண்டுவர முடியாது.
இந்தியப் பெண்கள் மீது இரண்டு விதமான கொடுமைகள் நடைபெறுகின்றன. ஒன்று பாரம்பர்யமாக நடைபெற்றுவரும் கொடுமைகள். குடும்ப வன்முறை, சமத்துவமின்மை, வரதட்சணை போன்றவை பாரம்பர்யக் கொடுமைகளாகும். மற்றொன்று நவீனத்தின் பெயரால் நடைபெறும் கொடுமைகள். பெண் விடுதலை, பெண்ணியம், பாலியல் சுரண்டல் போன்றவை. இந்த இரண்டு வகைக் கொடுமைகளுக்கும் பலியாவது பெண்கள்தாம். இந்தப் பாரம்பரியக் கொடுமைகளையும் நவீனக் கொடுமைகளையும் “கொடுமை’ என்று ஏற்றுக் கொள்ளவே பலர் தயாராக இல்லை.
முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், நுகர்வியம் போன்றவை தங்களின் சுயலாபத்துக்காகப் பெண்களைச் சுரண்டுகின்றன. இத்தகைய எல்லாவிதமான தீமைகளுக்கும் சுரண்டல்களுக்கும் ஒரே தீர்வு இஸ்லாம்தான். ஆனால் நாம் பேசிக்கொண்டே இருக்காமல் களத்தில் இறங்க வேண்டும். ஆந்திராவில் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு பெண், மதுக்கடைகளுக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்கினாள். அவளுடைய இடைவிடாத முயற்சியின் காரணமாக இன்று ஆந்திராவில் 800 மதுக்கடைகள் மூடப்பட்டுவிட்டன. இந்தச் சாதனை புரிய அவள் மாநாடு நடத்தவில்லை. சுவரொட்டிகள் ஒட்டவில்லை. பெரிய பெரிய “பயான்கள்’ எதுவும் செய்யவில்லை. ஆகவே நாமும் அதுபோல் களத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டும்.
-சமரசம்