ஆண்களை விட பெண்களே அன்பை எதிர்பார்க்கின்றனர்
நல்லதொரு குடும்பம், பல்கலைக் கழகம். ஒரு குடும்பம் எனும்போது, அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தங்கை மற்றும் தம்பி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். எத்தனை சண்டை சச்சரவு வந்தாலும் குடும்ப வாழ்க்கை எப்பொழுதும் ஒரு இனம் புரியாத ஆனந்தம்.
இந்தக் குடும்ப வாழ்க்கை நம்மை கணவன் அல்லது மனைவி என்ற முறையில் கடைசிவரை கூட்டிச் செல்லும். எத்தனை இன்னல்கள், மனக் கசப்புகள் மற்றும் வீண் பிரச்சினைகள் வந்தாலும், இறுதிவரை இயன்ற அளவு பொறுமை உடனும் புரிந்துணர்வுடனும் ஒரே பாதையில் பயணிப்பதே ஒரு ஒழுங்கான தம்பதியினருக்கு சிறந்த எதிர் காலத்தைத் தரும்.
இவ்வாறு ஒரு குடும்ப வாழ்க்கையில் எவ்வகையில் பிரச்சினைகள் வரலாம் என்பதில் எந்த முன் அனுபவமும் இல்லாத எனது கருத்துக்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
1) சந்தேகம்
தனிப்பட்ட ரீதியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சொல்ல முடியுமான சில விடயங்களும் சொல்ல முடியாத சில விடயங்களும் இருப்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. சிலர் இதில் திறந்த புத்தகம். எல்லா விடயங்களையும் முகத்திற்கு நேரே சொல்லி விடுவார்கள். இவற்றில் இரு பாலாருக்கும் சந்தேகம் எவ்வாறு வரும் என்பது மிகவும் தொலைவில் உள்ள சிந்திக்கவே முடியாத ஒரு விடயம் அல்ல.
பொதுவாக இரு பாலாரும் எதிர் பாலாருடன் சகஜமாகப் பழகுவது இதற்குப் பெரிதும் வழி வகுக்கும். இதைக் குறைத்துக் கொண்டாலே இலகுவில் சந்தேகம் எனும் பிரச்சினையைத் தூக்கி எறிந்துவிட முடியும். அதிலும் முக்கியமாக, ஒருவர் மற்றவருக்கு “நீ இவ்வாறு அந்த நபருடன் பழகுவது எனக்குப் பிடிக்கவில்ல” என்று சொல்லத் தயக்கமாக இருக்கும்.
இதை மனதிலேயே பூட்டி வைத்து உள்ளுக்குள் நொந்துகொண்டு இருப்பார்கள். இது மேலும் தொடரும்போது, ஒருவர் மற்றவர்மீது வெகுவாக எரிந்து விழுவது போன்று, ஒரு வெறுப்பைக் காட்ட ஆரம்பிப்பார்கள்.
இந்த சமயத்தில் வேறு ஏதாவது தொடர்பற்ற விடயத்தில் சிறு பிரச்சினை வந்தால் கூட, அதை மையமாக வைத்து, இந்தப் பிரச்சினையை ஊதிப் பெரிது படுத்தி விடுவார்கள். இத்துணைக்கும் அந்த நபரின் மனதில் கூட அவ்வாறு ஒரு எண்ணம் இருந்திரக்காமல் இருக்கலாம். இது போன்று பிரிந்த எத்தனை குடும்பங்களை வாழ்க்கையில் கண்டுள்ளோம்!
பொதுவாகக் கணவன் மனைவிக்கு இடையில் புரிந்துணர்வு முக்கியம். எந்த அளவு புரிந்துணர்வு இருந்தாலும், சந்தேகம் என்பது எப்போதும் வரலாம். அதனால், புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளும் அதே நேரம், எந்தப் பிரச்சினை மனதில் தோன்றினாலும், தெளிவாக அதைப் பேசி அதற்கான தெளிவான முடிவைக் காண்பதே இதற்குச் சிறந்த வழி.
அதிலும், எதைச் சொல்வாதாயினும் நீங்கள் உங்களது கணவனை அல்லது மனைவியைப் புரிந்துகொண்ட முறையில் அவர்களுக்குப் பொருந்தும் வகையில் அழகாகச் சொல்வது இன்னுமோர் முக்கய விடயம். உதாரணமாக, உங்கள் மனைவி உங்களது நண்பர் ஒருவருடன் யதார்த்தமாகப் பழகும் விதம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவருடன் அன்பாகப் பேசி, நீங்கள் எந்த அளவுக்கு அவரை நேசிக்கின்றீர்கள் என்பதை உணர்த்தி, எதிர்காலம் பற்றியும் குழந்தைகள் பற்றியும் பேசி, பிரச்சினை இல்லாத ஒரு அழகான வாழ்க்கையைக் கண்ணில் காட்டி, உங்களது மனதில் உள்ள சந்தேகத்தை எடுத்துக் கூறினால், கல்லாக இருந்தாலும் உங்களைப் புரிந்து கொள்ளும்.
2) தாம்பத்திய உறவில் திருப்தி
எந்த அளவுக்குத்தான் ஒருவரைக் காதலிக்கிறோம் என்று கூறினாலும், நாம் நமது தாய், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மேல் கொண்டுள்ள அன்பிலிருந்து கணவன் அல்லது மனைவி மீது கொண்டுள்ள அன்பு குறிப்பிட்ட அளவு காமமும் கலந்த அன்பாகும். இல்லை என்று யாராலும் சொல்லவே முடியாது. இந்த அன்பு மற்றைய எல்லா அன்பை விடவும் வேறு பற்றதாகும். இதில் எந்த வகையில் பிரச்சினைகள் வரலாம்?
இதுபற்றி விரிவாகப் பேசுவதற்கு நான் விரும்பவில்லை. சுருக்கமாகச் சொல்கிறேன். பொதுவாக ஆண்களும் பெண்களும் ஒரேயடியாகத் தாம்பத்திய உறவில் திருப்தி காண்பது குறைவு. சிலவேளை கணவன் முதலில் திருப்தி அடையலாம் அல்லது மனைவி முதலில் திருப்தி அடையலாம். இதில் முதலில் திருப்தி அடைந்தவர் மற்ற நபரின் திருப்தி அடையாத நிலையை உணர்ந்தாலே பாதிப் பிரச்சினை தீர்ந்து விடும்.
அத்தோடு அதற்குப் பல்வேறு உத்திகளும், உளவியல் மற்றும் வேறு உடலியல் யுத்திகளும் இருப்பதையும் நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சரியான முறையில் திருப்தி காணாத எல்லோரும் இன்னொருவரை நாடிப் போவது என்று சொல்லுவதைவிட எத்தனை பேர் உள்ளுக்குள் தமது உணர்வுகளைப் பூட்டி வைத்து யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மை. இதுவே சில சமயங்களில் மற்றவர் மீது வெறுப்பு உண்டாகவும் காரணமாக அமையலாம்.
3) அன்பும் அரவணைப்பும்
ஆண்களை விடப் பெண்கள் பொதுவாக ஆரம்பத்தில் போலவே கடைசிவரைத் தனது கணவனிடம் இருந்து அன்பை எதிர் பார்க்கின்றனர். அதே நேரம் சில ஆண்களும் இதை எதிர் பார்க்கின்றனர். இது கடைசிவரை ஒரே மாதிரி இருக்க வாய்ப்புக் குறைவாகவே அமைகிறது.
பொதுவாகப் பிள்ளைகள் என்று ஆனவுடன் மனைவியின் அன்பு பிள்ளைகளுக்கும் செல்வதோடு, வீட்டு வேலையில் தீவிரமாக ஈடுபடும்போது, கணவன் மீது அன்பு காட்டுவதற்கான சந்தர்ப்பம் குறைவாகவே அமைகிறது. அதேபோன்று, வேலைத்தளத்தில் வேலைப் பழு மற்றும் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக கணவனுக்கும் இதற்கான சந்தர்ப்பம் குறைவாகவே அமைகிறது.
கணவன் அல்லது மனைவிக்கு ஏதாவது துன்பம் வந்தாலோ, ஒரு நோய் வாய்ப்பட்டாலோ அல்லது அவர்களது உறவினர்களில் யாருக்காவது ஏதேனும் துன்பம் நேர்ந்தாலோ, அவற்றை நமது பிரச்சினை போன்று பார்ப்பவர்கள் குறைவாகவே உள்ளனர்.
அது ஒருபுறம் இருக்க, பொதுவாக நாங்கள் ஒருவருடன் மிகவும் நெருக்கமாகப் பழகும்போது, எங்களிடம் உள்ள அனைத்து இரகசியங்களையும் மற்ற நபர் அறிந்து கொள்வது வழக்கம். எப்பொழுதுமே ஒருவர் ஒரு புரியாத புதிராக இருக்கும் பொழுது, அனைவரும் அவருடன் பழக வேண்டும், அவர் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொள்வர்.
ஒருவரைப் பற்றி நன்கு அறிந்துகொண்ட பிறகு, அவரிடம் பேசுவதற்குக் கூட எதுவும் இருக்காது. அத்தோடு, எந்த நபரைப் பற்றியும் நன்கு தெரிந்துகொண்ட பிறகு அனைவரும், அந்த நபரை இடை போட்டு விடுவார்கள். அதற்குப் பின்னர் அந்த உறவில் சந்தோசம் குறைவாகவே இருக்கும். இதுவே திருமண வாழ்விலும் எமக்குப் பிரச்சினையாக அமையலாம். இது எல்லோருக்கும் பொருந்தாது. எனினும், மற்றைய நபரின் தன்மையை உணர்ந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்வது எங்களது கையில்தான் உள்ளது.
இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை என்று சொல்ல முடியாது. பின்வரும் சில பழக்க வழக்கங்களைக் கடைப் பிடித்து வந்தால் அவற்றை அடியோடு இல்லாமல் செய்வது என்பதைவிட அவற்றைக் குறைத்துக் கொள்ளலாம் என்று சொல்லலாம்.
o வாரத்திற்கு ஒரு நாலாவது இருவரும் ஒன்றாய் உண்ணுவது.
o மாதத்திற்கு ஒருமுறையாவது வெளியே சென்று தனிமையில் மனதுவிட்டுப் பேசுவது.
o ஒருவரை ஒருவர் ஆட்சி செய்ய முயலாமல், விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது.
o எந்தப் பிரச்சினை வந்தாலும் கோபத்தில் வார்த்தைகளை வெளிவிடாமல் இருப்பதோடு, ஆத்திரத்தில் எந்த முடிவையும் எடுக்காமல் இருத்தல்.
o ஒருவரது உணர்வை மற்றவர் மதித்து, நல்ல புரிந்துணர்வுடன் இருத்தல்.
இதுபோன்ற பல வழிமுறைகள் இருக்கின்றன.