வன்முறை தவிர்க்கும் வழிமுறைகள்
க.அருள்மொழி
வன்முறை! செய்திகளில் இந்தச் சொல்லைக் கேட்காத நாளே இல்லை. நாள்தோறும் ஏதேனும் ஒரு இடத்தில்… தவறு! அனேகமாக எல்லா ஊர்களிலும் இது நடக்கிறது. தனி மனிதனாகவோ, குழுவாகவோ இச்செயல் நடந்துகொண்டே இருக்கிறது.
தனி மனிதனுக்கோ ஒரு சமூகத்திற்கோ சட்டத்திற்குப் புறம்பாக, ஒழுக்க விதிகளுக்கு மாறாக நடந்துகொள்வதும் அதனால் மற்றவர்களின் அல்லது தன் சொந்த உடலுக்கோ, உடைமைக்கோ, உயிருக்கோ சிறிய அளவிலோ முழுமையாகவோ பாதிப்பு ஏற்படுமாயின் அந்தச் செயல் ‘வன்முறை’ என்றாகும்.
தமிழறிஞர் மா.நன்னன் அவர்கள் இதைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘வன்முறை என்று குறிப்பிடுவதுகூடத் தவறு, முறையற்ற செயலை எப்படி ‘முறை’ என்று சொல்ல முடியும் வன்செயல் என்பதே சரி’ என்பார். என்றாலும், வழக்கப்படிப் புரிந்துகொள்வதற்காக அந்தச் சொல்லையே பயன்படுத்துகிறேன்.
இப்போது இளைஞர்கள் அதிக அளவில் வன்முறையில் ஈடுபடுகிறார்கள், வன்முறைக்குப் பலியாகிறார்கள். வெளிநாடுகளில் மட்டுமல்லாமல் நம் நாட்டிலும் ‘கலாச்சார’ ஊடுருவலாகப் பரவியுள்ளது.
வன்முறையைப் பற்றி ஓரிரு சொற்றொடர்களில் விளக்கிவிட முடியாது. அதற்குப் பல காரணங்களைச் சொல்ல வேண்டும். அதில் பலவற்றை உங்கள் வாழ்க்கையில் பார்த்திருக்க முடியும், அதில் சிலவற்றில் நீங்களேகூட ஈடுபட்டிருக்கக் கூடும்.
வன்முறைக்குக் காரணங்கள் :
ஒருவர், மற்றவரைக் குத்துவதற்கு, அடிப்பதற்கு, காயப்படுத்துவதற்கு அல்லது துப்பாக்கியால் சுடுவதற்குக் (இந்தச் செயல்களைத் தனக்கே செய்துகொள்வதற்கு) காரணம் என்ன? முன்பே சொன்னது போல் இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
உணர்ச்சி வெளிப்பாடு: சிலர் தன்னுடைய கோபத்தையும் ஏமாற்றத்தையும் மனச் சோர்வையும் வெளிப்படுத்த வன்முறையைக் கையாள்கிறார்கள். அவர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காததால் ஏற்பட்ட கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சியை வன்செயலால் வெளிப்படுத்துகிறார்கள்.
சூழ்ச்சித் திறன்: ஒன்றைப் பெறுவதற்காக அல்லது மற்றவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக கையாளும் சூழ்ச்சி முறை இந்த வன்முறை.
பழிவாங்குதல்: தனக்குப் பாதிப்பை ஏற்படுத்தியவர்களுக்குப் பதிலடி கொடுப்பதற்காக வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.
வன்முறை ஒரு பயிற்றுவிக்கப்பட்ட நடத்தை :
மற்ற நடத்தைகளைப் போல இதுவும் பழக்கத்தால் ஏற்படுவதுதான். இது மாற்றக்கூடியது . ஆனால் எளிதல்ல. ஏனென்றால், வன்முறைக்குப் பல காரணங்கள் உள்ளதால் எளிதான தீர்வை எதிர்பார்க்க முடியாது. நீங்கள் செய்ய முடிவதெல்லாம், வன்முறைக்கான அறிகுறிகளை அடையாளம் காணப் பயில்வதும், உங்களுக்குள்ளேயோ அல்லது உங்கள் நண்பர்கள் உறவினர்களிடமோ வன்செயலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அதனைத் தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்வதும்தான்.
வன்செயல் நடத்தைக்கான காரணங்கள் சில :
தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள.
மரியாதைத் தேவைக்காக.
தன்னைப் பற்றிய தாழ்வெண்ணம்.
குழந்தைப் பருவப் புறக்கணிப்பு அல்லது தகாத பயன்பாடு (Abuse).
வீட்டிலோ சமூகத்திலோ ஊடகங்களிலோ வன்முறையைப் பார்ப்பது.
ஆயுதங்கள் எளிதாகக் கிடைப்பது.
மற்றவர்களின் வன்முறை நடத்தையை உணர்ந்துகொள்ளல். அடிக்கடி வன்செயல்களில் ஈடுபடுபவர்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் சிரமப்படுவார்கள். அவர்கள் மற்றவர்களால் ‘காயப்பட்டவர்களாக இருப்பார்கள்.
வன்முறைமூலம் பயமுறுத்தலாம். அது பிரச்சினையைத் தீர்த்துவிடும். மரியாதையைத் தரும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள்.
வன்முறையைக் கையாள்பவர்கள் மரியாதையை இழக்கிறார்கள். அதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டும் வெறுக்கப்பட்டும் நடத்தப்படுவதால் அவர்கள் மேலும் கோபத்துடனும் மனத் தளர்வுடனும் காணப்படுகிறார்கள்.
கீழ்க்காணும் அறிகுறிகள் வன்செயலைச் சாத்தியப்படுத்துபவை.
அன்றாடம் கோபமும் எரிச்சலுமாக இருப்பது.
அடிக்கடி அடிதடியில் ஈடுபடுவது.
சொத்துக்களை அல்லது கலைப் பொருட்களை அழித்தல்.
மது அல்லது போதைப் பொருளைப் பயன்படுத்துவது அதிகரித்தல்.
இடர் ஏற்கும் (Risk-taking) நடத்தை அதிகமாதல்.
வன்செயலுக்கான விரிவான திட்டமிடல்.
மிரட்டல் விடுத்தல் அல்லது அடுத்தவரைக் காயப்படுத்த முற்படுதல்.
விலங்குகளைக் காயப்படுத்தி ரசித்தல்.
ஆயுதங்களை வைத்திருத்தல்.
கீழ்க்காணும் அறிகுறிகள் அதிகமாகக் காணப்பட்டால் வன்செயல்களில் ஈடுபடுவது உறுதி.
வன்செயல்கள் அல்லது கோபமான நடத்தை முன்பதிவுகள். (History)
மோசமான மது அல்லது போதைப் பழக்கம்.
குற்றவாளிகளுடன் கூடியிருப்பது அல்லது கூட்டமாக இருக்க வேண்டுமென்ற விருப்பம்.
ஆயுதங்களைக் கையாள்வது அல்லது தயாரிப்பது.
மற்றவர்களை எப்போதும் மிரட்டுவது.
கோபம் போன்ற உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாமை.
வழக்கமான வேலைகளிலிருந்தும் நண்பர்களிடமிருந்தும் விலகியிருத்தல்.
வெறுக்கப்பட்டவராகவோ தனியனாகவோ எண்ணுதல்.
கேலி வதையால் பாதிக்கப்பட்டவராயிருத்தல்.
பள்ளியில் வருகைப் பதிவு குறைதல்.
ஒழுக்கக் குறைபாடு அல்லது அதிகாரிகளிடம் அடிக்கடி சண்டையிடுதல்.
மரியாதை தரப்படுவதில்லை என நினைத்தல்.
மற்றவர்களின் உணர்ச்சியையும் உரிமையையும் அவமதித்தல்.
மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் தகுந்த ஆலோசனையையும் உதவியையும் நாடவேண்டும்.
உங்களுக்கு நெருங்கியவர்கள் வன்முறை அறிகுறிகளோடு இருந்தால் என்ன செய்வது?
வன்முறை அறிகுறிகளோடு யாராவது இருப்பதை நீங்கள் கண்டுகொண்டால் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவரோடு தனிமையில் இருக்காதீர்கள். சாத்தியப்பட்டால் உங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அவரை அந்தச் சூழ்நிலையில் இருந்து அகற்றி அமைதிப்படுத்தும் இடத்திற்கு மாற்றுங்கள்.
உங்களுக்கு நம்பிக்கையான ஒருவரிடம் உதவி கேளுங்கள். அவர்கள் ஒரு ஆலோசகர், அல்லது உளவியலாளர், ஆசிரியர், குடும்பத்தினர், நண்பர்கள் என யாராகவும் இருக்கலாம். வன்செயலால் நீங்கள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டால் உங்களைக் காப்பாற்றக்கூடிய அதிகாரம் உள்ளவரை (காவல்துறையினை) நாடலாம். நீங்களே ஆயுதம் எடுக்காதீர்கள்.
உண்மையில் வன்முறை நடத்தையை மாற்ற தொழில் முறையிலான உளவியல் வல்லுநரின் உதவி தேவைப்படும். முக்கியமாக தனியராக இந்த முயற்சியை எடுக்க வேண்டாம்.
கோபத்தைச் சமாளிப்பது பற்றி…
பொதுவாக, நம்மைத் தோல்வியடையச் செய்யும் நிகழ்வுகளும் துரோகங்களும் நமக்குக் கோபத்தை ஏற்படுத்தச் செய்வன. ஆனால், கோபம் எல்லாம் வன்முறையாக மாறுவதில்லை. ஆனாலும் அதைக் கட்டுப்படுத்துவதும் கடினம்தான். கோபம் ஏற்படும்போது அமைதியாக இருக்க முயற்சி செய்வதுதான் சரியான விளைவைத் தரும்.
கோபம் வன்முறையாக மாறாமலிருக்க சில வழிகள் :
o உங்கள் உணர்ச்சிகளைக் கொட்டித்தீர்க்கப் பழகுங்கள். ஒரு நம்பிக்கையான நண்பர் அல்லது மூத்தவர்களிடம் உதவி கேளுங்கள்.
o அமைதியாக உங்கள் கட்டுப்பாட்டை இழக்காமல் உங்களுடைய கோபத்தை, வருத்தத்தை, தோல்வியை, விமர்சனத்தை வெளிப்படுத்தப் பழகுங்கள். உங்களுடைய எதிர்வினை பாதுகாப்பானதாகவும் காரணத்தோடும் உள்ளதா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்
o மனச் சோர்வடையாமல் உங்களுக்கு வரும் எதிர்வினைகளைக் கேட்டு உள்வாங்கி பதில் சொல்லுங்கள். மற்றவர்களின் பார்வையில் இருந்து உங்களைப் பார்க்க முயற்சி செய்யுங்கள்.
o மாற்று வழிகளைப் பற்றி யோசியுங்கள். அல்லது சமாதான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். கோபம் வாழ்க்கையின் ஒரு பகுதி. அது வன்முறையாக மாறாமல் இருக்க உங்கள் உணர்ச்சிகளைப் பேசித் தீர்க்கப் பயிற்சியும் முயற்சியும் எடுக்க வேண்டும். உறுதியாக, பாதுகாப்பாக, அமைதியாக இருங்கள்.
நீங்கள் வன்முறை நடத்தை ஆபத்திலிருக்கிறீர்களா?
வன்முறை நடத்தை அறிகுறிகள் உங்களிடமிருப்பதை அறிந்தால் உடனே உதவியை நாடுங்கள். மற்றவர்களைக் காயப்படுத்துவதைப் பற்றிய குற்ற உணர்வோ வருத்தமோ மனத்தளர்வோ இல்லாமலிருப்பது நல்லதல்ல. மற்றவர்களைக் காயப்படுத்துவது தவறு என்பதை ஏற்றுக் கொள்வது முதல்படி. அடுத்ததாக ஒரு ஆலோசகர், அல்லது உளவியலாளர், ஆசிரியர், குடும்பத்தினர், நண்பர்கள், அறிஞர்கள் யாரிடமாவது பேசலாம். அவர்கள் மன நல வல்லுநர்களின் உதவியைப் பெற உதவுவார்கள்.
வன்முறை நடத்தையிலிருந்து உங்களை நீங்களே கட்டுப்படுத்துவது எப்படி?
ஒவ்வொருவரும் கோபத்தை ஒவ்வொரு வகையில் உணர்கிறார்கள். கோபத்தை நீங்கள் எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் என்று உணர்ந்து அதைக் கட்டுப்படுத்துங்கள்.
நீங்கள் கோபப்படும்போது கீழ்க் கண்டபடி உணரலாம்.
தசைகள் இறுக்கமாதல்.
இதயத் துடிப்பு அதிகரித்தல்.
வயிற்றில் ஒரு முடிச்சு விழுந்ததுபோல் அல்லது பட்டாம்பூச்சி பறப்பதுபோல் உணர்தல்.
மூச்சு விடுதலில் இயல்புக்கு மாறான நிலைமை.
படபடப்பு.
தலையை மோதிக்கொள்ளுதல்.
முகம் சிவந்துபோதல்.
இது போன்ற நேரங்களில் அட்ரினல் வேகமாக சுரப்பதால் இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, குரல் ஓங்கி ஒலிக்கிறது, நரம்புகள் புடைத்துக் கொள்கின்றன. இதைத் தவிர்க்க,
மூச்சை நிதானமாகவும் ஆழமாகவும் அதனையே கவனித்துக் கொண்டு உள்ளிழுத்து வெளிவிடவும்.
நீங்கள் ஒரு கடற்கரையிலோ பூங்காவிலோ இதமான தென்றலை அனுபவிப்பதாகக் கற்பனை செய்துகொண்டு அமைதியாக உடலைத் தளரச் (Relax) செய்யவும்.
.உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் கடந்த கால நிகழ்வுகளில் மூழ்கவும்.
உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்…
“அமைதியாக இரு….”
“என்னை நானே வருத்திக் கொள்ள வேண்டியதில்லை”.
“மற்றவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.”
நிற்க… பின்விளைவுகளைப் பற்றிச் சிந்தியுங்கள். செயல்படுவதற்கு முன் யோசியுங்கள். உங்கள் கோபத்தைத் தூண்டியவரின் செயல்கள் அல்லது சொற்களில் உள்ள பொருள் பற்றி நடுநிலையோடு அல்லது நேர்மறையாகச் சிந்தியுங்கள். மற்றவர்கள் முன்னால் விவாதம் செய்யாதீர்கள். பிரச்சினையை முடிப்பது பற்றி இலக்கு நிர்ணயுங்கள்… ஆளை முடிப்பது பற்றியல்ல! கோபத்தைக் கட்டுப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் கட்டுப்பாட்டை இழப்பதால் ஏற்படும் மோசமான பின்விளைவுகளைப் பற்றியும் சிந்திக்கக் கற்றுக் கொள்ளுங்கள். கோபம் உங்களை ஆட்கொள்ள(கொல்ல) விடாதீர்கள். உங்கள் வன்செயலைக் கட்டுப்படுத்துவது உங்கள் கையில் இருக்கட்டும்.
சிலர் கோபத்தை மற்றவர்கள் மேல் காட்டுவதற்குப் பதிலாக தன் மீதே காட்டுவார்கள். தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வது, பட்டினி கிடப்பது, வேலைசெய்ய மறுப்பது, பேசாமலிருப்பது போன்றவை. பெரும்பாலும் இதன் அதிர்ச்சியடையச் செய்யும் விளைவு தற்கொலையாக இருக்கிறது. மற்ற வன்முறை வடிவங்களைப் போல தற்கொலையையும் தடுக்க முடியும். அதற்கு எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டறிவது, மற்றும் உதவியை நாடுவதுதான் வழிகளாகும்.
சுய வன்முறையின் அடையாளங்கள் :
+ முந்தைய தற்கொலை முயற்சிகள்.
+ குறிப்பிடத்தக்க மது அல்லது போதைப் பழக்கம்.
+ தற்கொலை பற்றிய பயமுறுத்தல் அல்லது தகவல் அளித்தல், மரணத்திற்குப் பின் என்ன என்பதைப் பற்றிப் பேசுதல்.
+ திடீரென அதிகரிக்கும் அமைதி, விலகி இருத்தல், தனிமை தேடல்.
+ உண்ணுவதிலும் தூங்குவதிலும் பெரிய மாற்றங்கள்.
+ உதவாக்கரை என்ற எண்ணம், குற்ற உணர்வு.
+ கட்டுபாடற்ற நடத்தை.
+ திடீர் மனவெழுச்சி, கோபம் அதிகரித்தல்.
+ பள்ளி அல்லது வேலைக்குச் செல்ல விருப்பமின்மை.
+ வழக்கமான நடவடிக்கைகளில் ஆர்வமின்மை.
+ உயரதிகாரிகளிடம் முரண்படுதல்.
+ திடீரென மிகச் சரியானவராக இருத்தல்.
+ சொத்துக்களைப் பற்றிய அக்கறையின்றி இருத்தல்.
+ எதிர்காலம் பற்றிய அக்கறை இல்லாததோடு ‘விடை பெறும்’ போக்கு.
இந்த அறிகுறிகள் முக்கியமாக …
அண்மையில் நடந்த குடும்ப உறுப்பினரின் அல்லது நண்பரின் மரணத்தின்போது,
அண்மையில் நடந்த காதலன் அல்லது காதலியுடன் ஏற்பட்ட பிரிவு அல்லது பெற்றோருடன் தகராறு ஏற்படும்போது,
அவரைச் சுற்றி ஏற்படும் இளவயதினரின் தற்கொலை நிகழ்வுகள் ஆகியவற்றின்போது அதிகமாகக் காணப்படும்.
பெரும்பாலும் உள ரீதியான வலிகள் அதிகமாகும்போது தற்கொலைகள் அதிகமாக நடைபெறுகிறது. காரணம், மரணம் ஒன்றே அதிலிருந்து வெளிவர வழி என்று நினைப்பதுதான். ஆனால் அப்படியல்ல.
ஒருவேளை உங்கள் நண்பர்கள் தற்கொலையைப் பற்றி அடிக்கடி குறிப்பிட்டால் அதைக் கவனமாகக் கையாளுங்கள். உடனடியாக நிபுணர்கள் மூலமாக உதவி செய்யுங்கள் . அவர்களுடைய தற்கொலை எண்ணத்தை ரகசியமாக வைக்காதீர்கள்-அவர்கள் கேட்டுக்கொண்டாலும் கூட.
வன்முறை என்பது இருபக்கமும் கூரான ஆயுதம். இதை மழுங்கச் செய்யக்கூடியதும் ஒரு கூரான ஆயுதம்தான். அது அறிவாயுதம்! வன்முறைக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்வோம். மனித நாகரிகத்தை முன்னெடுத்துச் செல்வோம்.
நன்றி: உண்மை