ஆன்மீக சூழல் அற்றுப் போகும் முஸ்லிம் வீடுகள்
”உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான்.” (16:80)
வீடுகள் அமைதிக்குரியதாகவும் நிம்மதிக் குரியதாகவும் அமைய வேண்டும் என்றே எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடிய எவரும் தங்களுடைய வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பி அமைதி பெற வேண்டும் என்றே விரும்புகின்றனர்.
வீட்டுக்குள் இருப்பவர்களாலோ அயலவர்களாலோ அல்லது சூழலில் உள்ளவர்களாலோ எந்த பிரச்சினையுமில்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றே பெரிதும் விரும்புகின்றனர்.
நிம்மதி மற்றும் அமைதியை மனிதன் விலைகொடுத்து வாங்க முடியாது. அமைதியான வாழ்வை, நிம்மதியான சுவாசத்தை அவனே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான வழிகளை இஸ்லாம் காட்டித் தந்துள்ளது.
அல்லாஹ்வுடைய ரஹ்மத்தையும் ரஹ்மத்துக்குரிய மலக்குகளையும் வீட்டுக்கு வரவழைக்கின்ற வழிகள் மூலமே அந்த வீடு அமைதி பொருந்திய இடமாக காட்சி தரும்.
அல்லாஹ்வுடைய கோபத்தையும் லஃனத்திற்குரிய ஷைத்தானையும் வீட்டுக்கு வரவழைக்கின்ற வழிகள் மூலம் அந்த வீடு மையவாடியாகக் காட்சித்தரும்.
அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை பெறுவதற்கான முதல் வழி, அல்லாஹ்வை நினைவு கூர்வதும், தொழுவதும், குர்ஆன் ஓதுவதும், திக்ருகள் செய்வதும் இபாதத்களில் ஈடுபடுவதும் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய பிரகாரம் வாழ்வதுமாகும்.
அல்லாஹ் ஒருவனை கடவுளாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களது வீடுகள் இன்று சினிமா, நாடகங்கள் மூலம் ஷைத்தானின் ராகங்களை ஒளிபரப்பும் வீடுகளாக மாறி வருகின்றன. காலையிலிருந்து தூங்கச் செல்லும்வரை மெகா தொடர்களிலும் சினிமாக்களிலும் வானொலி நிகழ்ச்சிகளில் அரட்டையடிப்பதிலும் காலம் போய்க் கொண்டிருக்கிறது.
அல்லாஹ்வை நினைவுபடுத்துவதற்கோ -திக்ர் செய்வதற்கோ- குர்ஆன் ஓதுவதற்கோ ஐந்து நேரம் தொழுவதற்கோ நேரமில்லை. அதற்கான எண்ணமுமில்லை.
“கேபிள் டீவி மூலமும், Dish மூலமும் நூற்றுக்கணக்கான “செனல்கள்” காண்பிக்கப்படு வருவதால் ஒவ்வொரு செனல்களிலும் எந்தெந்த நேரங்களில் என்னவிதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என்பதை மனனமிட்டுவைத்திருக்கிறார்கள் மூலம் வௌ;வேறு விதமான நிகழ்ச்சிகளை பார்த்து வணக்கத்திற்கான நேரத்தை தொலைத்து விடுகிறார்கள்.
பெண்களும் சிறுவர்களும் தங்களுடைய அதிகமான நேரங்களை இதில் செலவிடுகின்றனர். குறிப்பாக வயது வந்த பெண்பிள்ளைககள் அரட்டையடிக்கிறார்கள். பிள்ளைகள் படிப்பில் கோட்டை விடுவதற்கும் கணவன் மனைவிக்கிடையில் விரிசல்கள் ஏற்படுவதற்கும் இதுவே பிரதான காரணமாகும். திசைமாறும் பயணங்களுக்கு இசைவான வழிகளை அமைத்துக் கொள்கிறார்கள்.
குர்ஆன் மனனம் செய்யப்பட வேண்டிய உள்ளங்கள் ஷைத்தானின் கீதங்களை பதிவு செய்கின்றன. அல்லாஹ்வுடைய வேத வசனங்கள் ஓதப்பட வேண்டிய உதடுகள் ஷைத்தானின் ராகங்களை இசைத்துக் கொண்டிருக்கின்றன. ஆன்மீகத்தை ஒதுக்கிவிட்டு அசிங்கங்களை அரங்கேற்றுகிறார்கள்.
“உங்கள் வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிவிடாதீர்கள். நிச்சயமாக ஸூறதுல் பகரா ஓதப்படும் வீட்டை விட்டு ஷைத்தான் விரண்டோடுகிறான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
குர்ஆன் ஓதப்படும் வீட்டிலிருந்து ஷைத்தான் விரண்டோடுகிறான். அந்த வீட்டாரிடத்தில் எந்த விதமான தீமையை தூண்டவும் செய்ய வைக்கவும் முடியாமல் போகிறது.
குர்ஆன் ஓதாது விட்டால் அந்த வீட்டாரிடத்தில் ஷைத்தானின் சூழ்ச்சிகளே அதிகம் இடம்பெறும். நன்மை செய்வதற்குப் பதிலாக தீமைகளைச் செய்வதற்கு அவன் தூண்டி விடுவான். தீமைகள் அதிகரிக்க அதிகரிக்க உள்ளங்கள் வரண்ட பூமியாக மாறிவிடும்.
“இரவில் தூங்கச் செல்லும்போது நீ ஆயதுல் குர்ஸியை ஓதிக் கொண்டால் காலை வரை அல்லாஹ்-விடத்திலிருந்து பாதுகாவலர் ஒருவர் வந்து பாதுகாத்துக் கொள்வார். ஷைத்தான் உம்மை நெருங்க மாட்டான்” என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
அல்லாஹ்விடத்திலிருந்து வரக்கூடிய பாதுகாவலர் ஒரு மலக்கு ஆவார். ஷைத்தான் நெருங்க முடியாத அளவிற்கு பாதுகாவல் போடப்படுகிறது. துரதிஷ்ட வசமாக அல்லாஹ்விடமிருந்து வரக்கூடிய பாதுகாவலரை விரட்டி விட்டு ஷைத்தானை துணைக்கு வரவழைக்கின்ற காரியங்கள்தான் இன்று வீடுகளில் நடக்கின்றன.
ஒரு மனிதர் ஸூறதுல் கஹ்பை (இரவில்) ஓதிக் கொண்டு இருந்தார். அவரிடத்தில் ஒரு குதிரை இருந்தது. அது இரு கயிறுகளால் கட்டப்பட்டிருந்தது. அப்பொழுது ஒரு மேகம் அவரைச் சூழ்ந்து அவரிடம் நெருங்கி வர ஆரம்பித்தது. அதைக் கண்டு அவரது குதிரை விரண்டோட ஆரம்பித்தது. பின்னர் அவர் காலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து இரவு நடந்த விபரத்தைக் கூறினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அது குர்ஆனுக்காக (குர்ஆன் ஓதியதற்காக) இறங்கிய ஸகீனத் (நிம்மதியம் சாந்தியும்) ஆகும் எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: பராஉ இப்ன ஹாஸிப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, முஸ்லிம்)
குர்ஆன் ஓதும் வீட்டுக்கு அல்லாஹ்-விடமிருந்து அமைதி (ஸகீனத்) இறங்குகின்றபோது அந்த வீடு பாக்கியம் பொருந்திய வீடாக மாறிவிடுகிறது. குர்ஆன் ஓதுவதற்கு மாற்றமாக சினிமா, நாடகங்கள், ஆடல்-பாடல்கள் ஒலிக்கின்றபோது ஷைத்தானின் ஊசலாட்டங்களும் ஊடுருவல்களும் அந்த வீட்டில் நுழைய ஆரம்பிக்கின்றன.
“நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர வணங்குவதற்குரியவன் வேறு யாருமில்லை. எனவே என்னையே வணங்குவீராக. என்னை நினைப்பதற்காக தொழுகையை நிலை நாட்டுவீராக. (குர்ஆன் 20:14)
அல்லாஹ்வின் கட்டளை பிரகாரம் வாழ்வதற்கான நினைவூட்டலே தொழுகையாகும். தொழுகையை விட்டு விடுகின்றவன் அல்லாஹ்வை நினைவுகூர்வதிலிருந்து விடுபடுகிறான். அல்லாஹ்வை மறந்து விட்ட பிறகு அவனது ரஹ்மத் எப்படி கிடைக்கும்? வீடு எப்படி அமைதிக்குரிய இடமாக அமையப் பெறும்?
உங்களுடைய தொழுகைகளில் ஒரு பகுதியை உங்கள் வீடுகளில் ஆக்கிக் கொள்ளுங்கள். அந்த வீடுகளை (தொழுகை இல்லாத) மண்ணறைகளை (மையவாடி களை)ப் போன்று ஆக்காதீர்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, முஸ்லிம்)
உங்களில் ஒருவர் தம் (பர்லான) தொழுகையை முடித்துக் கொண்டால் தம் தொழுகையின் ஒரு பகுதியை தம் வீட்டில் ஆக்கிக் கொள்ளட்டும். நிச்சயமாக அவர் வீட்டில் தொழுவதின் காரணமாக அல்லாஹ் அவருக்கு அங்கு நலவை ஏற்படுத்துவான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
மலக்குகள் வருகை தருகின்ற முக்கியமான சந்தர்ப்பங்களில் ஒன்றாக சுபஹ் தொழுகை பற்றியும் குர்ஆன் ஓதும் சந்தர்ப்பம் பற்றியும் அல்லாஹ் குறிப்பிடுகிறான். துஹஜ்ஜுத் மற்றும் சுபஹ் தொழுகைக்காக எழுந்து நிற்காமல் விடியும் வரை தூங்கும்போது அந்த வீடு ரஹ்மத் பெற்ற வீடாக அமையப் பெறுமா?
வீட்டுக்குள் நுழையும் போது அல்லாஹ்வின் பெயரை கூர்வதும், சாப்பிடும்போது அல்லாஹ்வின் பெயரை நினைவுகூர்வதும், தூங்கும் போது அல்லாஹ்வின் பெயரை கூர்வதும் – ஷைத்தான் வீட்டுக்குள் நுழைவதையும் தங்குவதையும் தடுக்கும் என நபியவர்கள் கூறிய நபிமொழிகள் பல காணப்படுகின்றன.
ஷைத்தானை தூரப்படுத்துகின்ற இக்காரியங்களுக்கு மாற்றமாக வவேற்கின்ற நிகழ்வுகள் நடைப்பெறும் போது “முஸீபத்துக்கள் நிறைந்த வீடாகவே அவ்வீடு மாறிவிடும்.
ஒவ்வொரு நிகழ்ச்சி நிரல்களையும் நினைவில் வைத்திருப்பவர்களால் துஆ அவ்ராதுகள் மற்றும் தொழு கைகளின் நேரங்களை நினைவில்கொள்ள முடியாத அவலங்களை பார்க்க முடிகிறது. பெண்களும் தொழுவதில்லை. பிள்ளைகளையும் தொழ வைப்பதில்லை. பொறுப்க்குரிய கணவனும் ஏவுவதில்லை.
முற்றிலுமாக அல்லாஹ்வை மறந்துவிட்டு ஷைத்தானுக்கான அனைத்து வழிகளையும் திறந்து விட்டு-முகாமிட வழிவிட்ட- பிறகு அல்லாஹ்வுடைய ரஹ்மத்தும் பரகத்தும் எப்படி இறங்கும்?
அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வை நினைவுகூர்வதன் மூலம் (திக்ர் செய்வதன் மூலம்) உள்ளங்கள் அமைதி பெறுகின்றன. (அல்குர்ஆன்:13:28) என அல்லாஹ் கூறுகின்றான்.
மனிதர்களது நிம்மதியான, அமைதியான, ஆரோக்கியமான வாழ்வுக்கு உள்ளம் நோயற்றதாக இருக்க வேண்டும். வாழ்வு நிம்மதியாக இருக்கும். வாழும் வீடும் சூழலும் அமைதியானதாக இருக்கும்.
உள்ளம் இறந்துவிட்டால் வாழ்வே நாசமாகிவிடும். ஆன்மீகத்தை அழகானதாக, ஆழமானதாக நிலைபெறச் செய்து நிம்மதியான சூழலை அமைப்போமாக.
– மௌலவி M.S.M. இம்தியாஸ் ஸலஃபி