முடிச்சவிழும் முதலீட்டு மர்மங்கள்!
முதலீடு(Investment) என்பது பணக்காரர்களுக்கே உரிய விஷயம் என்று ஒருவர் நினைப்பது இயற்கைதான். அதே மாதிரி, வங்கியாளர்களும், முதலீட்டு ஆலோசகர்களும் (Investments advisors) சொல்வதெல்லாம் உண்மை என்று நம்புவதும், அவர்களுக்கு முதலீடு பற்றி எல்லாம் தெரியும் என்று பொதுமக்கள் பலரும் நினைப்பதும் உண்மைதான். ஆனால், ஒரு வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், இப்போதெல்லாம் பல காப்புறுதி ஆலோசகர்கள் (Insurance advisors)
Time-Sharing Schemes’, ‘Multi Level Marketing (MLM)’ அல்லது வெளிநாட்டு நிலவங்கிகள் போன்றவையெல்லாம் இப்படிப்பட்ட திட்டங்கள்தான். இது போன்ற வேறு பல திட்டங்களும் இருக்கின்றன.
இந்தக் கட்டுரை, சாதாரண மனிதர்கள் அல்லது பல சமயங்களில், பணம் படைத்தவர்கள் கூட சந்திக்கக்கூடிய , பணம் சார்ந்த, விடை தெரியாத சிக்கல்களுக்கு விடை சொல்ல முற்படுகிறது.
நாம் முதலில், ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்ற கேள்வியில் இருந்து தொடங்குவோம்.
பணம், அளவிடக் கூடிய வளம் என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால், அது எப்போதுமே போதுமானதாக இருப்பதில்லை என்றும் புலம்பவும் செய்கிறார்கள். அதனால், நம்மிடம் இருக்கிற வளங்களை நிர்வாகிப்பதற்குப் போதுமான முயற்சிகளை எடுப்பதே புத்திசாலித்தனமான செயலாகும். அப்படி செய்யாமல் இருந்தால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவையாக இருக்கும். பணத்தை சரியாக நிர்வாகிக்காததால் ஏற்படும் பல உள்ளூர் சிக்கல்களையும், தங்களுக்குள் அடித்துக் கொள்ளும் பல குடும்பங்களையும் நாம் நீதிமன்றங்களில் பார்க்கிறோம்.
உங்கள் பணத்தை நீங்கள் சரியாக நிர்வாகம் செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு இன்னொரு முக்கியக் காரணம்- தொடர்ந்து அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவீனங்கள்!
வளமான காலங்களில் வசதியாகச் செலவு செய்த குடும்பங்கள், கஷ்டமான காலங்களில், சூல்நிலைக்குத் தக்கவாறு தங்களை மாற்றிக் கொள்ள மிகுந்த சிரமப்படுவார்கள். பணத்தை நிர்வாகிப்பதில், நம் கட்டுப்பாட்டில் இல்லாத பல புறக் காரணிகளும் (External Factors) முக்கியப் பங்காற்றுகின்றன என்பது உண்மைதான். உதாரணத்திற்கு, உயர்ந்து வரும் போக்குவரத்து, மின்சாரம், தண்ணீர்க் கட்டணங்களைச் சொல்லலாம். கவனமாக இல்லையென்றால், இவை உங்கள் சேமிப்பின் பெரும்பகுதியைச் சாப்பிட்டு விடும்.
நான் அடிக்கடி கேள்விப்படக்கூடிய இன்னொரு முக்கியமான காரணம், பணவீக்கம் (Inflation)!
பணவீக்கத்தின் ஆழ்ந்த நுணுக்கங்களை ஆராயாமல், அதன் அடிப்படை என்ன என்பதையும், பணவீக்கம் எப்படி நமது பணத்தை நேரடியாகப் பாதிக்கிறது என்பதையும் புரிந்து கொள்வது அவசியம்.
பணவீக்கம் (Inflation) என்றால் என்ன…
எளிமையாகச் சொல்வதென்றால், கால ஓட்டத்தில் மாறும் பணத்தின் மதிப்புதான் பணவீக்கம். உதாரணத்திற்கு, ஒருவர் 5% பணவீக்கம் என்று சொல்கிறார் என்றால், முன்பு $1.00 வெள்ளிக்குக் கிடைத்த பொருளின் இன்றைய விலை $1.05 என்று அர்த்தம். அதாவது, விலையில் வீக்கம் ( Inflation in the cost) ஏற்பட்டிருக்கிறது என்று பொருள். இந்தச் சூழ்நிலையில் நீங்கள் சேமிப்பை வங்கியில் வைத்திருந்தால், போதுமான வட்டி கிடைக்காத நிலையில், அதிகரித்து வரும் பணவீக்கச் சூழல் உங்கள் பணத்தின் மதிப்பை மெல்ல, மெல்லக் குறைத்து விடும். அது எப்படி நடக்கிறது என்பதைப் பற்றித் தொடர்ந்து வரும் கட்டுரைகளில் விரிவாகப் பார்ப்போம்.
உங்கள் பணத்தை நிர்வாகிப்பது என்றால், நீங்களே நேரடியாகப் பணத்தை பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் நீங்கள் போதுமான அளவு நேரத்தை செலவிட்டு, உங்களுடைய பணமும், வளமும், பிரச்சனைகளற்ற, ஆனால், நல்ல வருமானம் வரக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டும். உங்கள் முதலீடுகளுக்கு அதிகபட்ச லாபமும், குறைந்தபட்ச இழப்பும் ஏற்படுமாறு பார்த்துக் கொள்வதே இதன் முக்கிய நோக்கம்.
முதலீடு என்று வரும்போது பலரும் சொல்வது, ‘இதைப் புரிந்து கொள்வது சிரமம்’ என்ற குறைதான். பின் வருபவை அவர்களுக்கு இருக்கும் சில முக்கியமான பயங்கள், குழப்பங்கள்….
o முதலீடு செய்ய உள்ள திட்டங்கள், புரிந்து கொள்ள முடியாத அளவிற்குச் சிக்கலானவை
o நிதி மற்றும் வணிகத் துறையில் பயன்படுத்தப்படும் மொழியைப் புரிந்து கொள்வது சிரமம்
o அதில் சொல்லப்படும் விளக்கங்கள் குழப்பமாக இருக்கின்றன. உதாரணத்திற்கு, ஒருவர் ‘உங்கள் முதலீடு பாதுகாக்கப்பட்டது’ என்று சொல்ல, மற்றவர் ‘உங்கள் முதலீடு உறுதி செய்யப்பட்டது’ என்று சொல்கிறார்
o வங்கி அதிகாரியால் அவர் விற்கும் திட்டங்களைப்பற்றிச் சரியாக, நான் விரும்பும் மொழியில், எனக்கு விளக்கிச் சொல்ல முடியவில்லை.
o முதலீடு செய்வதென்று முடிவு செய்த பிறகு அதில் இருந்து விலகி வருவது முடியாத காரியம் .
o முதலீட்டைப் பற்றிய மாதாந்திர கணக்கு விவரத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை .
இப்படி இன்னும் பல…
முதலில், ஒரு முதலீட்டாளராக, நீங்கள் உங்களது உரிமைகளைப் பற்றி அறிந்து வைத்திருப்பது அவசியம். இரண்டாவது, நீங்கள் முதலீடு செய்யும் திட்டங்களைப் பற்றி (Investment product) உங்களுக்குப் போதுமான தெளிவு கிடைக்கும்வரை, உங்கள் முதலீட்டு ஆலோசகரை நிறையக் கேள்விகள் கேட்பதும் அவசியம்.
உதாரணத்திற்கு, சிங்கப்பூரின் நிதி கட்டமைப்பு (financial infrastructure), சில்லரை வியாபாரத்தைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, வளர்க்கப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு பொருளாதாரச் சிக்கலுக்குப் பிறகும் உயர் அதிகாரிகள் அதைப்பற்றி மறுஆய்வு செய்கிறார்கள். அதன் வழி, அதிக அபாயமுள்ள திட்டங்களில் (highly risky investment products) முதலீடு செய்யக்கூடிய சில்லறை வியாபார முதலீட்டாளர்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்களை, ஓட்டைகளை அடைத்து முதலீட்டிற்குப் பாதுகாப்பு தருகிறார்கள்.
அரசாங்கத்தின் இந்த துரித நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம், சில்லறை வர்த்தக முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதும், சர்வதேச நிதி மையம் என்ற சிங்கப்பூரின் நற்பெயரைக் கட்டிக்காப்பதுதான். அப்பாவியான முதலீட்டாளர்களை ஏமாற்றும் நோக்கோடு வரும், நேர்மையற்ற முதலீட்டுத் திட்டங்களை அனுமதித்தால், அது நம் நாட்டின் நற்பெயருக்குப் பங்கம் விளைவிப்பதோடு, உலக முதலீட்டு நிர்வாகிகளை நம்மிடம் ஈர்க்க முடியாமலும் செய்து விடும்.
மொத்தத்தில், நீங்கள் உங்களிடம் உள்ள பணத்தை, செல்வவளத்தை மேலும் வளர்ப்பதற்கு முயல வேண்டும். நீங்கள் முயலாவிட்டால், வேறு யாரும் உங்களுக்காக முயலப் போவதில்லை. ஒரு நல்ல முதலீட்டு ஆலோசகர் என்பவர், நீங்கள் முதலீடு செய்ய உள்ள திட்டங்களைப் பற்றி நன்கு விளக்கி உதவுவார். ஏனென்றால் அப்படி செய்வதன் மூலம், உங்கள் முதலீட்டைப் பெற்று அவரும் பயனடைகிறார். அதேநேரத்தில், முதலீட்டு ஆலோசகர் என்ற பெயரில், நன்றாகப் பேசக்கூடிய விற்பனையாளர்கள், உங்களை ஏமாற்றி விடாமல் கவனமாகவும் இருப்பதும் அவசியம்.
முதலீட்டிற்காகவோ, அல்லது காப்புறுதிக்காகவோ உங்களிடம் வந்து, அவர்களது திட்டங்களில் முதலீடு செய்யும்படி சொல்பவர்களிடம் நீங்கள் கேட்க வேண்டிய முக்கியமான கேள்விகளைப் பற்றிய விவரங்களை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
ஒரு பொருளை உங்களிடம் விற்க முனையும் விற்பனையாளர் தகுதி பெற்றவர்தானா? நீங்கள் ஏமாற்றப்பட்டதாகக் கண்டுபிடித்தால் என்ன செய்ய வேண்டும்? போன்ற பல கேள்விகளுக்கு அதில் விடை காணலாம். அத்தோடு, நிதிச் சந்தையில் நீங்கள் முதலீடு செய்யத்தக்க பல திட்டங்களைப் பற்றியும், அதன் நன்மை தீமைகளைப் பற்றியும் விரிவாகப் பேசலாம்.
– தங்கமீன்.காம்