பொய்யும், பொய் சார்ந்த இடமும்!
இன்று பொய் பேசுபவர்கள் யாரும் இல்லை என்பதை விட பொய் பேசாதவர்கள் நம்மில் யாரும் இல்லையேன்றே சொல்லலாம். விளையாட்டிற்காகவோ, பிறர் சிரிக்க வேண்டுமென்பதற்காகவே சொல்லும் பொய்யானது இந்த சமூகத்தின் பார்வையில் ஒரு பொழுதுப்போக்காகவே பேசப்படுகிறது. அதைவிட ஒரு ஆச்சரியமான விசயம் பொய் என்பது ஒரு சமூகத்தீமையாக கூட கணக்கில் எடுத்துக்கொள்ள படுவதில்லை.
உணவகங்களில், வர்த்த நிறுவனங்களில், தெருவோர கடைகளில், இப்படி மக்கள் கூடும் வியாபார தளங்களில் எல்லாம் இயல்பாகவே மக்கள் பொய் பேசும் நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. பொய் பேசுவது என்பது வேலை பெற நமது கூடுதல் தகுதியுடன் இன்று சேர்க்கப்பட்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை.
நம்மிடம் அரை மணி நேரம் ஒருவர் கூடுதலாக பேசினால் கூட அர்ஜன்ட்டா சின்ன வேலை இருக்கு என…அவரிடமிருந்து தப்பிப்பதற்கு பொய்யாக தான் ஒரு காரணத்தை தேர்ந்தெடுக்கிறோம். பொய் என்பதற்கு தற்கால அகராதியில் பொருள் தேடினால் சாமர்த்தியம் என்றே பொருள் மாற்றம் செய்யப்பட்டிருக்கும்.பொய் பேச மறுப்பவனை பிழைக்க தெரியாதவன் என்று கேலி பேசுகிறது இந்த சமூதாயம்.
இன்று பலரும் பிறர் மத்தியில் தமது ஹூரோயிஸம் பேசப்பட வேண்டும் என்பதற்காக பொய் பேசுவதை ஒரு ஆயுதமாக வைத்திருக்கிறோம். இந்த பழக்கம் பின்னாளில் நமக்குள் பல்வேறு தீய எண்ணங்களையும் உள்வாங்கிக்கொள்கிறது நெருப்பு விறகினை தின்பதுப்போல்…
இந்த சமூகத்திற்கு தீமையென்று என்று தெரியாமலே இந்த சமூகத்திற்கு எதிராய் ஒன்றை செய்து கொண்டிருக்கிறோமென்றால் அது பொய் என்று சொல்வதில் பொய்யில்லை.! சகோஸ்
பொய்யானது பிறர் மீது வெறுப்பையும், பொறாமையும், பிறரை மதிக்காமல் ஏளனம் செய்யும் நிலையையும் இயல்பாகவே நம்முள் ஏற்படுத்த வழிவகுக்கிறது. உதாரணம் சில சொல்லணும்னா.,
நம்மை கடக்கும் ஒருவர் கால் வழுக்கி சறுக்கினால் கூட ஒரு நமட்டு சிரிப்பிற்கு பின்னரே அவருக்கு உதவ விரைகிறோம். சாலையோர கூட்டத்தை பிளந்து என்னமோ ஏதோ என வேகமாய் முண்டியடித்து போய் பார்க்கும் போது ஏற்பட்ட விபத்து அவ்வளவு பெரிதொன்றுமில்லையென்றால் நமக்கு ஏற்படும் நிம்மதியை விட ஏமாற்றமே அதிகம்.
இப்படி பிறர் நலனில் கொள்ளவேண்டிய அக்கறையை கூட பொழுதுப்போக்காக்கும் இந்த கொடிய பழக்கத்தை நாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லையென்றால் பொய் என்னும் போதை நம் உள்ளத்தில் ஊடுறவ தொடங்கிவிட்டதென்ற பொருள்.
இப்படி தனி மனித ஒழுக்கத்திற்கும், பிறர் நலனுக்கும் கேடுவிளைவிக்கும் இத்தகைய செயலை விட்டொழிக்க தெளிவான எச்சரிக்கையே நபிகள் நாயகம் அவர்கள் மனிதக்குலம் முழுமைக்கும் மிக கவனமாக பிரகனப்படுத்தினார்கள்.
ஒருமுறை தோழர்கள் மத்தியில் நபியவர்கள்,
‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)’ என்று கூறினோம்.‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்’ என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)’ என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் ‘அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?’ என்று நினைக்கும் அளவிற்கு சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
இறைவனுக்கு இணைவைக்கும் பெரும்பாவ பட்டியலில் பொய்யையும் இணைத்து இருக்கிறார்கள் என்றால் பொய் பேசுவது நம்மை எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்பதை நாம் நிதர்சனமாக உணர்ந்துக்கொள்ளலாம்
அடுத்து பாருங்கள்.
‘நம்பிக்கையாளர் கோழையாக இருக்க இயலுமா?’ என நபிகள் நாயகத்திடம் வினவப்பட்ட போது, அதற்கு ‘ஆம்’ என்றனர். ‘கஞ்சனாக இருக்க இயலுமா?’ என்றபோது அதற்கும் ‘ஆம்’ என்று பதிலளித்தனர். ‘பொய்யனாக இருக்க இயலுமா?’ என்று கேட்டபோது அதற்கு அவர்கள், ‘இல்லை (இருக்க இயலாது)’ என்று பதிலளித்தார்கள்.
இறை நம்பிக்கையாளர் ஒருக்காலும் பொய் சொல்வராக இருக்க முடியாதென்பதை மிக தெளிவாக கோடிட்டு காட்டி அப்படி பொய் சொல்பவராக இருந்தால் அவரது இறை நம்பிக்கையானது அர்த்தமற்றது என்பதையும் பறை சாற்றுகிறது இந்நபிமொழி..
சிறு பருவத்தில் கற்பிக்கப்படும் எதுவும் அவர்களின் மனதில் ஆழமாக பதிய வாய்ப்பு அதிகம். அப்படி அவ்வயதில் விளையாட்டிற்காக சொல்லப்படும் பொய்களை கூட அங்கீகரிக்கவில்லை நபிகள் நாயகம் ஸல் அவர்கள்
ஒருமுறை எங்கள் வீட்டிற்கு நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தபோது என் தாயார் என்னை அழைத்து, ‘இங்கே வா! உனக்கு ஒரு பொருள் தருகின்றேன்!’ என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார், ‘நீர் அவனுக்குத் எதனைத் தர விரும்புகின்றீர்?’ என்று வினவினார்கள். அதற்கு என் தாயார், ‘நான் அவனுக்கு பேரித்தம் பழம் தர விரும்புகின்றேன் என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார் என் தாயாரிடம், ‘நீர் எதனையாவது அவனுக்குக் கொடுப்பதாக அழைத்து கொடுக்கவில்லையென்றால், உம் வினைப்பட்டியலில் இந்தப் பொய் எழுதப்பட்டுவிடும்’ என்று கூறினார்கள்.
பொய் என்பதின் அளவுக்கோல் என்னவென்பதை உண்மையாய் விளக்க இந்த ஒரு நபிமொழியே போதுமென்று நினைக்கிறேன்.
பொய் சொல்லுவியாடா… -ஏதோ போலி காரணம் சொல்லி காலையில் ஸ்கூலுக்கு போக மறுத்த சிறுவ(யது மக)னை அடித்து பொய்க்கு எதிரான சீர்திருத்தத்தை தொடங்கும் நாம்..
அப்பா வீட்டுல இல்லேன்னு சொல்லு கண்ணு… மொபைலில் கடன்காரனிடம் சொல்லப்பணிக்கும் மாலை பொழுகளில் ஏனோ மறக்க தான் செய்கிறோம்…
அந்நிலை மாற்றப்பட வேண்டுமென்றால்
மலையோ, மணலோ, காடோ, வயலோ, கடலோ இப்படி எதுவாக இருப்பீனும் அது
பொய்யும், பொய் சார்ந்த இடமும் ஆகாமல் பார்த்துக்கொண்டால் போதும்.!
அல்லாஹ் நன்கு அறிந்தவன்