பொது வாழ்வும் தனி வாழ்வும்
மவ்லவி, ஹாஃபிள் அ ஹ்மது ஜஃபருல்லாஹ் நத்வி,
கலாச்சார ரீதியில் உலகம் இரண்டாகப் பிரிந்துள்ளது. மேலை நாட்டு கலாச்சாரம் கிழக்கின் கலாச்சாரத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக இந்நவீன உலகில் உள்ளது. குறிப்பாக இஸ்லாம் மேலை நாட்டின் மனிதத் தன்மையற்ற பெரும்பாலான கலாச்சாரத்தை கடுமையாக எதிர்க்கின்றது. எனவேதான் இன்று இஸ்லாமும் முஸ்லிம்களும்தான் மற்றெல்லாவற்றையும் விட குறிப்பாக மேலை நாட்டினரால் குறி வைக்கப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டின் சுதந்திரதின விழ்ழவை முன்னிட்டு அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் பேசுகையில், “வருங்காலங்களில் மேற்கின் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள நாடுகளுக்கும் அக்கலாச்சாரத்தை எதிர்ர்க்கும் நாடுகளுக்கும் மத்தியில் கடுமையான பனிப்போர் நடைபெறும். அதில் இஸ்லாமிய நாடுகள்தான் முன்னணியில் நிற்கும்” எனக் கூறினார். விஷயம் மேற்கண்டவாறு இருந்தபோதிலும் சில நல்ல விஷயங்களும் மேற்கின் கலாச்சாரத்தில் உள்ளன. அவற்றை முஸ்லிம்கள் வெறுக்கவில்லை.
இருவித வாழ்வு
பொது வாழ்க்கை (Public Life) தனிப்பட்ட வாழ்க்கை (Private Life)
என இருவிதமாக மனித வாழ்வு உள்ளது. கிழக்கத்திய நாடுகளில் பொதுவாழ்வுக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ளது. இங்கு ஒருவர் தனது தனிப்பட்ட வாழ்வில் யாருக்கும் தெரியாமல் சில தவறுகளைச் செய்து விட்டால் எவரும் அதை பெரிது படுத்திக் கொள்வதில்லை. பொதுவாழ்க்கையில் சுத்தமாக இருப்பது மிகவும் அவசியமெனக் கருதப்படுகின்றது.
இதற்கு மாறாக மேற்கே பொதுவாழ்வு மிகவும் மோசமாக உள்ளது. கிழக்கிலிருந்து செல்லும் ஒருவர் எடுத்த எடுப்பிலேயே வெறுக்குமளவுக்கு மோசம். எனினும், அங்கு தனிப்பட்ட வாழ்வின் சில நல்லவைகள் உள்ளன. வணக்கஸ்தலங்களுக்குச் செல்லுதல், நேரம் தவறாமை போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
இஸ்லாம்
இஸ்லாம் மனிதனை அவனது தனிப்பட்ட அந்தரங்க வாழ்வு, பொது வாழ்வு இரண்டையும் சுத்தமாக வைக்கத் தூண்டுகிறது. திருக்குர் ஆன் கூறுகிறது;
“(முஃமீன்கள்ளே!!) பாவத்தில் வெளிப்படையானதையும், அதில் அந்தரங்கமானதையும் நீங்கள் விட்டு விடுங்கள். நிச்சயமாக பாவத்தைச் சம்பாதிக்கின்றவர்கள் தமது பாவத்தின் காரணமாக (உரிய) தண்டனை கொடுக்கப்படுவார்.” (அல்குர்ஆன் 6:121)
மற்றோர் வசனம் கூறுகிறது;
“மானக்கேடான செயல்களின் பக்கம் – அவற்றின் வெளிப்படையானவற்றிற்கும், ரகசியமானவற்றிற்கும் நீங்கள் நெருங்காதீர்கள்.” (அல்குர்ஆன் 6:152)
பொது வாழ்வு
ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் வந்து “எனக்கு விபச்சாரம் புரிய அனுமதி தாருங்கள்” எனக் கேட்டார். அதைக்கேட்டு கோபமுற்ற ஏனைய ஸ ஹாபாக்கள் அவரைக் கொல்ல மூற்பட்டனர். ஆனால், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஸ ஹாபாக்களைத் சமாதானப்படுத்திய பின் அந்த நபரை தன் அழைத்து “விபச்சாரத்தை உன் தாய்க்கோ, உன் மகளுக்கோ, உன் சகோதரிக்கோ, உன் சிறிய தாய்க்கோ, உன் மாமிக்கோ விரும்புவீரா?” எனக் கேட்டார்கள். அதற்கு அந்த நபர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் அதை விரும்ப மாட்டேன்” என்றார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அவ்வாரெனில், பிறரும் தனது தாய், மகள், சகோதரி, சிறிய தாயார், மாமி போன்றோருக்கு விபச்சாரத்தை விரும்ப மாட்டார்கள். (அதாவது நீ உன் தனிப்பட்ட வாழ்க்கையை சுத்தமாக வைக்க விரும்புவது போல் பொது வாழ்வையும் சுத்தமாக அமைத்துக்கொள்ள வேண்டும்) எனக் கூறினார்கள். பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்காக து ஆச்செய்தார்கள். அன்றிலிருந்து விபச்சாரம் புரிவதை அவர் தவிர்த்து விட்டார். (நூல்: முஸ்னத் அஹ்மத்)
அந்தரங்க வாழ்வு
ஹளரத் அதாயிப்னு யஸார் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து ‘நானும் என் தாயாரும் தனியாக ஒரு வீட்டில் வசிக்கின்றோம். (வீட்டில் வேறு யாரும் வசிக்கவில்லை.) இந்நிலையில் வெளியில் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பும்போது நான் அனுமதி கேட்டுத்தான் வீட்டினுள் நுழைய வேண்டுமா?’ என மூன்று முறை கேட்டார். மூன்று முறையும் ‘ஆம்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் கூறினார்கள். இறுதியாக ‘தோழரே! உன் தாயாரை நீர் நிர்வாணமாக பார்க்க விரும்புவீரா?’ என அவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள். ‘நிச்சயமாக விரும்ப மாட்டேன்’ என அவர் பதில் கூறினார். ‘அவ்வாரெனில்நீர் உனது தாயார் இருக்கும் வீட்டில் அனுமதி பெற்று செல்வீராக!’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: மு அத்தா பின் மாலிக்)
மேற்கண்ட ஹதீஸில் தனிப்பட்ட வாழ்வையும் அலட்சியமாக விட்டு விடக் கூடாது என விளக்கப்படுகிறது.
குற்றங்கள் குற்றமாகாது
பொது வாழ்விலோ அல்லது தனிப்பட்ட வாழ்விலோ சில குற்றங்கள் பரவலாக மிகைத்துக் காணப்படுவதால் அக் குற்றங்கள் நன்மையாக மாறிவிடாது. அலட்சியம் செய்யப்பட மாட்டாது. குற்றங்கள் எப்போதும் குற்றங்கள் தான். அவற்றை தவிர்ப்பது, தடுப்பது எப்போதும் கடமையாகும். இக்கருத்தை பின் வரும் இறைவசனம் எடுத்துக்கூறுகிறது.
“(நபியே!) தீயதும், நல்லதும் சமமாகமாட்டா; தீயவை அதிகமாக நடப்பது உம்மை வியப்பிலாழ்த்தினாலும் சரி! எனவே, அறிவுடையோரே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள் என்று கூறுவீராக!” (அல் குர் ஆன் 5:100)
– ஜமா அத்துல் உலமா பிப்ரவரி 1998