நற்செயல்களை தாமதப்படுத்தக் கூடாது!
எந்தவொரு நல்ல விஷயமானாலும் சரி, அதை உடனே செய்து விட வேண்டும். தாமதப்படுத்தக் கூடாது.
ஏன் தாமதப்படுத்தக் கூடாது? காரணம்; முதலாவதாக காலம் கடந்து போய் விடும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்; “மறதியை ஏற்படுத்தும் வறுமை, பாவம் செய்யத்தூண்டும் செல்வநிலை, மிக மோசமான நோய்நொடி, அறிவிப்பில்லாமல் வரும் திடீர் மரணம், பேச்சில் தடுமாற்றம் ஏற்படும் முதுமை, இறுதிக்காலத்தில் வரும் தஜ்ஜால், ஆகிரத் என்ற இறை தீர்ப்பு நாள் – இந்த ஏழு விஷயங்கள் ஏற்படுவதற்கு முன்னால் நீங்கள் நற்செயல்களை விரைந்து செய்து விடுங்கள்.” (அறிவிப்பாளர் அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ 2306)
நற்செயல்களை ஏன் தாமதப்படுத்தக்கூடாது என்பதற்கான இரண்டாவது காரணம்; மனசு மாறிவிடும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; “ஒருவன் காலையில் நல்லதொரு இறைநம்பிக்கையாளனாக இருப்பான். மாலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். இதே போல மாலை நேரம் இறைநம்பிக்கையாளனாக இருப்பான். காலையில் நேர் எதிராக மாறிவிடுவான். உலக இன்பங்களுக்காக தன்னுடைய மார்க்கத்தை விலை பேசிடவும், துறந்திடவும் துணிந்து விடுவான்.” (அறிவிப்பாளர் அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 118)
நற்செயல்களை தாமதப்படுத்தக்கூடாது என்பதற்கான மூன்றாவது காரணம்: உரிய நேறத்தில் செய்யப்படும் நற்செயல்களுக்குத்தான் அதிக நன்மையும் இறை அங்கீகாரமும் கிடைக்கும்.
ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, அதிக நன்மையைப் பெற்றுத் தரும் தர்மம் எது? என்று வினவினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
“நீ ஆரோக்கியமாக இருக்கின்றாய்; செல்வந்தராக வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. தர்மம் வழங்கினால் ஏழையாகி விடுவோமோ என்ற பயமும் உள்ளது. இந்த நிலையில் நீ வழங்கிடும் தர்மம்தான் அதிக நன்மையைப் பெற்றுத்தரும். அவ்வாறு இல்லாமல் உனது இறுதி நேரம் நெருங்கி, உயிர் தொண்டைக்குழிக்கு மத்தியில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இன்னாருக்கு இவ்வளவு கொடு, இன்னாருக்கு அவ்வளவு கொடு என்று நீ இறுதி அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறாயே! அதுவரை தர்மம் வழங்குவதை நல்லறங்கள் செய்வதை பிற்படுத்த வேண்டாம். ஏனென்றால், அந்த நேரத்தில் உனது செல்வம் உனக்குறியதல்ல; உனது வாரிசுகளுக்குச் சொந்தமானதாகி விடுகிறது.” (அறிவிப்பாளர் அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1419)
“காலத்தே பயிர் செய்” என்பார்கள். “காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்” என்பதாகவும் கூறுவார்கள். இதனடிப்படையில் நற்செயல்களை உரிய நேரத்தில் நாம் செய்து விட வேண்டும். இதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களின் தோழர்களும் முன்மாதிரிகளாகத் திகழ்ந்துள்ளார்கள்.
ஒருமுரை மதீனாவில் உள்ள மஸ்ஜிதுன் நபவியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு அஸர் தொழுது கொண்டிருந்தோம். தொழுகை முடிந்து ஸலாம் கொடுத்த மறுநிமிடமே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது இருப்பிடத்தை விட்டு எழுந்து, அவசர அவசரமாக வீட்டுக்குள் நுழைந்தார்கள். அவர்களின் அந்த வேகத்தைக்கண்டு, என்னாச்சு, ஏதாச்சு என்ற பதைபதைப்பில் நாங்கள் இருந்தோம்.
சிறிது நேறத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தார்கள். ஆச்சரியத்துடன் நின்ற எங்களைப்பார்த்து, “நீங்கள் எதுவும் பதற்றப்பட வேண்டாம். பொதுமக்களுக்குச் சேர வேண்டிய ஸகாத் பொருளின் ஒரு சிறு பகுதி வீட்டில் எஞ்சியிருந்தது என் நினைவுக்கு வந்தது. அது என்னிடம் இருக்க, மரணம் என்னை வந்தடைந்து விட்டால் நாளை இறைவனிடம் என்ன பதில் சொல்வேன் என்ற அச்சம் ஏற்பட்டது. அதை உரியவர்களிடம் பங்கிட்டு விடுங்கள் என்று எனது வீட்டாரிடம் கட்டளையிட்டு வந்தேன்” என்று விளக்கினார்கள். (நூல்: புகாரி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மாத்திரமல்ல, அவர்களின் அருமைத் தோழர்களும் நற்செயல்கள் புரிவதில் ஆர்வத்தோடு செயல்பட்டுள்ளார்கள்.
உஹதுப் போர் கொண்டிருந்தது. ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார். இறைத்தூதர் அவர்களே! நான் இந்த அறப்போரில் கலந்து, அதில் நான் கொல்லப்பட்டுவிட்டால், எங்கே இருப்பேன்?” என்று வினவினார். “உறுதியாக சொர்க்கத்தில் இருப்பாய்” என்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
உடனே அவர் உண்பதற்காக தமது கையில் வைத்திருந்த பேரித்தம்பழங்களைத் தூர எறிந்தார். அறப்போரில் கலந்து கொண்டார். இறுதியில் எதிரிகளின் அம்புகளுக்கு இரையாகி ஷஹீதானார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.).
இதுபோன்ற தியாக வரலாறுகளைப் படிக்கும்போதும் அல்லது கேட்கும்போதும் நமக்கு ஓர் ஆர்வம் பிறக்கும். நற்செயல்களில் ஈடுபட மனசு ஆசைப்படும்.
உதாரணமாக, நாளை முதல் நான் அதிகாலையில் எழுவேன்.
ஸுபுஹு தொழுவேன். குர்ஆனிலிருந்து ஒரு சில பகுதிகளை பொருள் உணர்ந்து படிப்பேன்.
அரை மணி நேரம் நடை பயிற்சி செய்வேன்.
ஏழை எளியவர்களுக்கு தானம் செய்வேன்.
நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்து நலம் விசாரிப்பேன்.
விடுமுறை நாட்களில் நூலகம் சென்று பொது அறிவை வளர்த்துக் கொள்வேன்.
மருத்துவமனை சென்று நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் சொல்வேன்.
இப்படியாக பல ‘ன்’களை மனதில் நாம் எண்ணுவோம். ஆனால், அந்த “ன்”களில் ஒரு “ன்”னையும் செய்திருக்க மாட்டோம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: “நாம் மரணித்து விட்டால், நம்மை மூன்று விஷயங்கள் பின் தொடர்கின்றன. அவற்றில் இரண்டு பாதி வாழ்விலேயே திரும்பி விடுகின்றன. ஒன்றே ஒன்று மட்டும் நம்மோடு துணை வருகிறது.
சொத்தும், குடும்பமும் பாதி வழியிலேயே திரும்பிவிடக் கூடியவை. நமது நற்செயல்கள்தான் இறுதிவரை துணை வருபவை. இறுதி வரை நம்மோடு துணை வரும் அந்த நற்செயல்களைச் செய்வதில் நாம் சோம்பல் கொள்ளலாமா? சிந்திப்போம். நன்றே செய்வோம். அதுவும் இன்றே செய்வோம்.
– சிந்தனை சரம். டிஸம்பர் 2011 டிஸம்பர்
www.nidur.info