AN EXCELLENT ARTICLE PLEASE DON’T MISS IT
V.S.முஹம்மது அமீன்
[ “நாளை மறுமையில் கூட நான் மன்னிக்க மாட்டேன். அவர்களுக்கெதிராய் வழக்கு தொடர்வேன்” என்ற குரலை சில பாமரர்களிடம் அவ்வப்போது கேட்க முடிகிறது.
நம்மீது உண்மையிருந்து நம்மை காயப்படுத்தியவர்கள் மீது மறுமையில் நாம் வழக்கு தொடர்ந்தால் அதன் காரணமாக அந்த குற்றவாளிகள் நரகில் தள்ளப்படுகிறார்கள் என வைத்துக் கொள்வோம். அதைவிடக் கேவலம் என்ன இருக்க முடியும்?
ஒரேயொருவரையாவது சுவனத்தின் பக்கம் கொண்டு செல்ல மாட்டோமா…? அதற்காகத்தானே இவ்வுலகில் இத்தனை அர்ப்பணிப்புகள், உழைப்புகள், தியாகங்கள். அந்த ஒன்றுதானே அழைப்புப் பணியின் உந்து சக்தியாக இருக்கிறது.
“அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டுமென நீங்கள் விரும்புவதில்லையா?” என இறைவன் கேட்கும் வினா சிலிர்க்க வைக்கிறது.]
நம் பிரார்த்தனையில் அவர்களுக்காகவும் ஒரு துளி ஈரம் இருக்கட்டும்
ஈக்களுக்கு நம்மிடம் என்ன தேவையிருக்கிறது? எதற்காக இந்த நச்சரிப்பு ரீங்காரங்கள்?
ஈக்களின் மீதான எரிச்சல்களையும் தாண்டி அவைகள் மின்சார விளக்கில் அடிபட்டுச் செத்து விழும்போது பரிதாபம் எழுகிறது.
தேவையற்ற தொந்தரவுகள் ஈக்கள் மட்டும் தானா? சில மனிதர்களுக்ம்தான். மனிதர்களை விடுங்கள். நம் மனசும் ஒரு வகையில் “ஈ” தான்.
எங்கெல்லாமோ வட்டமிடுகிறது. சாக்கடையில், இனிப்பு பலகாரங்களில், சீழ் வடியும் காயங்களில், சாப்பாட்டுத் தட்டில், தொட்டில் குழந்தைகளின் கன்னத்தில்… என அங்கிங்கெனாதபடி அலைந்து கொண்டிருக்கும் ஈக்களைப் போல் தான் நம் மனசும்!
மனம் எதிலும் நிலைகொள்வதில்லை. அசந்து உறங்கும்போது கூட எழுந்து, கனவாய் நடமாடித்தொலைக்கிறது.
மனக்குளம் அடிக்கடி கலங்கித் தெளியும். வலிகளற்ற மனசு யாருக்கேனும் இருக்கிறதா?
எல்லா மனதிலும் பகை உறைந்து கிடக்கும். நம் பகைவர்கள் ஒரு காலத்தில் நம் நண்பர்கள். சொந்தங்கள் தான் இல்லையா? ஆனாலும் அந்த நட்பின் ஆழமான நினைவுகள் எங்கே? அன்பும், நன்றியுணர்வும் தொலைந்து பகையும், வெறியும் எஞ்சிக் கிடக்கிறதே எப்படி?
பல ஆண்டுகளாய் ஒட்டி, உறவாடி, உயிர் கலந்து தோள் கொடுத்த தோழமை ஏதோ ஒரு நாள் கருத்து வேறுபாட்டில் விலகிப் போகும்போது எதிரியாய் மட்டுமே மனம் பார்க்கிறதே எப்படி?
இத்தனை ஆண்டுகாலத்தில் ஒருநாள் கூடவா அவன் நமக்காக பயணித்திருக்க மாட்டான்? ஒரு பொழுது நமக்காய் தூக்கம் தொலைத்திருக்க மாட்டான்? ஆதரவிற்கு வலி சுமந்த நேரத்தில் அன்பின் ஒத்தடங்கள் தந்து காயமாற்றி இருக்க மாட்டானா? ஒருவேளை உணவு தந்தவைல்லையா அவன்?
நம் நட்புக் காலத்தில் நமக்காக ஒரு துளிக் கண்ணீர், ஒரேயொரு புன்னகை, ஒரு நாள் பிரார்த்தனி கூடவா இல்லாதிருந்திருக்கும்? ஆண்டுக் கணக்கில் அன்பொழுகச் சிரித்துப் பேசியதை மறந்துவிட்டு இறுதியாய் சொன்ன ஒற்றைச் சுடுசொல் மட்டுமே மனதில் எஞ்சியிருக்கிறதே எப்படி?
நமக்கு முன்பின் அறிமுகமில்லாதவர்கள் நமக்கு பகைவர்களாக முடியுமா? நம் உறவும், சொந்தமும், தோழமையும் தானே இன்று பகையாய் கிடக்கிறது.
நமக்கு வெளிப்படையான பகைவன் ஷைத்தான் மட்டுமே! ஆனால், அவன் தோள் மீதுதான் கைபோட்டு சுற்றிக்கொண்டிருக்கிறோம்.
பெற்ற தாய் தந்தையரே ஒரு சிலருக்கு பகைவர்களானது எவ்விதம்? கருவில் உயிராய் சுமந்ததிலிருந்து, ஈன்று, பாலூட்டி, சீராட்டி, உணவளித்து, உடைமாற்றி, நடை பயிற்றுவித்து, அசிங்கங்கள் கழுவி… நம்மை மனிதனாய் செதுக்கியவளை பகைப்பவனைவிட இழிவானவன் உலகத்தில் இருக்க முடியுமா?
பெற்றோரைப் பகைப்பதற்குக் காரணம் வேறு இருக்க முடியுமா? இந்தத் தகப்பனின் உழைப்பில்தானே உணவு உண்டோம். அவரின் பாதுகாப்பு நிழலில் தானே வளர்ந்தோம். நம்மை மருத்துவமனையில் சுகவீனமாய் சேர்த்து ஏதோவொரு நாளில் துடித்துப்போனவரில்லையா இந்தத் தந்தை! எத்தனைமுறை நமக்காக கசிந்திருக்கும் இந்தக் கண்கள்? இவரை எட்டி உதைப்பவனையும்விட கேடுகெட்டவன் உலகில் இருக்க முடியுமா? அதைவிட கொடுஞ்செயல் வேறெதுவும் உண்டா? படைத்து, ரட்சிக்கும் இறைவனையே நிராகரிக்கும் நன்றி கெட்டவனில்லையா மனிதன்!
சுருங்கிக் கிடக்கும் மனித மனதிடம் எந்த நன்றியை எதிர்பார்க்க முடியும்?
“காலமெல்லாம் கடைசி வரைக்கும் உன்னோடு இருப்பேன். நீ இல்லாத வாழ்க்கையை நினைச்சே பார்க்க முடியலையடா…! என்ற காதல் (?) உளறல்கள், விடிந்ததும் கலைந்து போகும் இருட்டு போன்ற போலி வார்த்தை அலைகள்”.
மருத்துவமனையில் நம் கை பிடித்து, “இந்த உதவியை உயிருள்ளவரை மறக்க மாட்டேன்” என கண்ணீர் சிந்தியவர்கள் நம் முகம் பார்க்க மறுத்ததுண்டு தானே!
அவர்களெல்லாம் நம் பரிதாபதுக்குரியவர்கள்தானே தவிர பகைவர்களல்ல…! இறைவனின் எதிரிகள் தான் நம் எதிரிகள். அவர்களைவிடவும் உட்பகையைத் தான் நாம் பெரிதாய் கருதுகிறோம்.
“நாளை மறுமையில் கூட நான் மன்னிக்க மாட்டேன். அவர்களுக்கெதிராய் வழக்கு தொடர்வேன்” என்ற குரலை சில பாமரர்களிடம் அவ்வப்போது கேட்க முடிகிறது.
நம்மீது உண்மையிருந்து நம்மை காயப்படுத்தியவர்கள் மீது மறுமையில் நாம் வழக்கு தொடர்ந்தால் அதன் காரணமாக அந்த குற்றவாளிகள் நரகில் தள்ளப்படுகிறார்கள் என வைத்துக் கொள்வோம். அதைவிடக் கேவலம் என்ன இருக்க முடியும்?
ஒரேயொருவரையாவது சுவனத்தின் பக்கம் கொண்டு செல்ல மாட்டோமா…? அதற்காகத்தானே இவ்வுலகில் இத்தனை அர்ப்பணிப்புகள், உழைப்புகள், தியாகங்கள். அந்த ஒன்றுதானே அழைப்புப் பணியின் உந்து சக்தியாக இருக்கிறது.
நாம் வழக்கு தொடர்ந்து ஒருவனை நரகில் தள்ள முயல்கிறோம் என்றால் அது அழைப்புப் பணியாக இருக்க முடியுமா?
“அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டுமென நீங்கள் விரும்புவதில்லையா?” என இறைவன் கேட்கும் வினா சிலிர்க்க வைக்கிறது.
நம் நண்பர்களுக்காக நம்மால் என்ன செய்ய முடியும்?
அவர்களுக்காக பிரார்த்திக்கலாம் என்கிறீர்களா…?
ஆம், எப்போதும் நம் பிரார்த்தனையில் அவர்களுக்காகவும் ஒரு துளி ஈரம் இருக்கட்டும்.
– சிந்தனை சரம் நவம்பர் 2010
www.nidur.info