குப்பைகள் – தப்பும் சரியும்
எராளமான வீட்டு உபயோகப் பொருட்களின் குப்பைகளும் ஆபத்தான ரசாயனக் கழிவுகளையும் மக்கள் தினமும் அலட்சியமாக கொட்டி நாம் வாழும் இந்த அழகிய பூமியை மாசுபடுத்தி வருகிறார்கள்.
வீட்டை அழகு படுத்துவதில் நாம் செலுத்தும் கவனத்தில் கொஞ்சம் நம் சுற்று சூழலைக் காப்பதிலும் செலவழித்தால் வரும் தலைமுறையினருக்கு நலமான வாழ்க்கையை விட்டுச் சென்றவர்களாக இருப்போம்.
நாம் பொறுப்பின்றி செய்யும் பல காரியங்களும் பல மடங்கு நமக்கே பாதகமாக மாறிவிடக்கூடும். மல்லாந்து கிடந்து எச்சில் துப்புவதை போன்ற இயற்கையை பாழ் படுத்தும் காரியங்கள் எவை என உணர்வதும் அதை தவிர்ப்பதும் அது பற்றிய மக்கள் விழிப்புணர்வும் மிக மிக தேவையான கால கட்டத்தில் இருக்கிறோம்.
குடி தண்ணீரை மாசுபடுத்தும் செயல்களை எங்கே கண்டாலும் எதிர்த்திடுங்கள். மக்களை பெருமளவு கொள்ளையடித்து செல்லும் நோய்கள் பெரும்பாலும் மாசுபட்ட தண்ணீராலையே பரவுகிறது. தொழிற்சாலைகள் ஈவிரக்கமின்றி அதன் கழிவுகளை ஆற்று நீரில் கலப்பதால் ஆபத்தான ரசாயனங்கள் அப்பகுதி மக்களுக்கு தலை முறை தலைமுறையாய் பாதிப்பு ஏற்படுத்தும்.
காற்றை மாசு படுத்துபவர்களையும் கண்டும் காணாமல் விடக்கூடாது. தொழிற்சாலைகளில் உருவாகும் புகை சுற்று சூழலை கெடுக்கா வண்ணம் அமைக்கப்பட வேண்டும். வாகனங்கள் வெளிவிடும் கார்பன் மோனாக்ஸைட் காற்றில் அதிகரித்து காற்று விஷமாகி வருவது பறறி கவலை இன்றி நகரங்கள் புகைக்கு பழகிவிட்டன. சுவாசிக்க சுத்தமான ஆக்ஸிஜன் கிடைக்காததும் இன்று பெருகிவரும் மன அழுத்தம் போன்ற பல நோய்களுக்கும் காரணம்.
பிளாஸ்டிக் பொருட்கள்: மரம் ,காகிதம் போல பிளாஸ்டிக் பொருட்கள் எளிதில் மக்கி இயற்கையோடு கலக்காமல் அப்படியே வெகு காலம் இருக்கும். இப்படியே போனால் உலகம் வெறும் பிளாஸ்டிக் குப்பைகளால் நிறைந்து விடும்.
குப்பை கழிவுகளுடன் மண்ணில் பிளாஸ்டிக் பைகளை புதைப்பதால், அவை நெடுங்காலத்துக்கு மண்ணில் மக்கிப்போகாமல் தாவரங்களின் வேர்கள் ஊடுருவ முடியாமலும், மழைநீர் மண்ணுக்குள் செல்வதைத் தடுக்கவும் செய்வதால் நிலத்தடி நீர்மட்டம் குறைய காரணமாக அமைகின்றன.
பிளாஸ்டிக் பைகளில் உள்ள உணவுப் பொருட்களை கால்நடைகள் உட்கொள்ளும்போது, கால்நடைகளின் உணவுக்குழல் அடைபட்டு அவை இறந்து போகின்றன. சில உயிரினங்கள் பேப்பர் என்று நினைத்துக் கொண்டு தவறுதலாக பிளாஸ்டிக் பைகளை உண்டுவிடுகின்றன. இதனால் இறந்தும் விடுகின்றன.
கடைக்கு போய் என்ன சாமான் வாங்கினாலும் உடனே ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு கொடுத்து விடுவார்கள். இப்படி வீட்டில் சேரும் குப்”பை”களை தெருவில் எறிந்து விடுகிறோம். கொஞ்சம் பொறுப்பாக கடைக்கு போகும் போதே ஒரு பையை கொண்டு போகலாம். அல்லது பை வேண்டாம் பேப்பரில் பொதிந்து கொடுங்கள் என்று கேளுங்கள். துணிப்பைகள், சணல்பைகள், பழைய துணிகளால் தைக்கப்பட்ட பைகள், விழாக்களில் கொடுக்கப்படும் மஞ்சள் பைகளை பயன்படுத்துவோம்
பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லும்போது, பிளாஸ்டிக் சூடாகி வேதியியல் மாற்றங்களால் ஹைட்ரோகார்பன் மற்றும் பியூரான் போன்ற நச்சு வாயுக்கள் உணவில் கலந்து விடுகின்றன. அந்த உணவை உண்பவர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படுகிறது.
மெல்லிய பைகளை விட கெட்டிப் பைகள் அழிவதற்கு ஆண்டுகள் பல பிடிக்கும்.
குழந்தைகளுக்கு தேவையற்ற பிளாஸ்டிக் விளையாட்டுப்பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள். நீங்கள் பெருமைக்காக வாங்கிக் கொடுக்கும் அனேக விளையாட்டுப் பொருட்களை விட மிக எளிமையான சாதாரணப்பொருட்களே குழந்தைகளுக்கு விளையாடப் போதுமானது. அதையே அவர்கள் விரும்புகிறார்கள். ஒரிரு தினங்களில் குப்பையாகிப் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் பொருட்களை தவிர்கலாமே. அத்தகைய பிளாஸ்டிக் குப்பைகளை எல்லாம் எரிப்பது கூட ஆபத்தான செயலாகும். பிளாஸ்டிக்கை எரிப்பதால் வெளியாகும் நச்சுப்புகை உயிருக்கு ஆபத்தானது.பல்வேறு சுவாச நோய்களை உண்டாக்குகிறது.
எலெக்ட்ரானிக் பொருட்கள் மிகவும் மலிந்த இக்காலத்தில் அவைகள் தான் குப்பைகளில் முதலிடம் வகிப்பது. முன்பெல்லாம் எலெக்ட்ரானிக் பொருட்கள் பழுதானால் பழுது நீக்கி பயன் படுத்தலாம். இப்போது பழுதானால் தூர எறிந்து விட்டு புதிதாக ஒன்றை வாங்கி கொள்வதே லாபமாக இருக்கிறது. பழுதான பொருட்களை தூர எறியவும் மனமின்றி குப்பைகளாக வீட்டிலேயே இடத்தை அடைத்து கொண்டு பாதுகாப்பவர் பலர்.
ஆசைகளுக்காகவும் பெருமைகளுகாகவும் பொருட்கள் வாங்காமல் தேவைகளுக்காக மட்டும் பொருள் வாங்கப் பழக வேண்டும். நமக்கு தேவையற்றதை தேவையின்றி சுமக்கவும் கூடாது. ஒரு டிவிடி பிளேயர் புதிதாக வாங்கினால் ஏற்கனவே இருந்த காசட் பிளேயரை அது தேவைப்படுவோருக்கு கொடுத்து விடுங்கள். எல் சி டி டீவி வாங்கினதும் பழைய டீவியை மூலையில் வைக்காமல் யாருக்காவது கொடுத்து விடுங்கள்.
பாட்டரிகள் : விளையாட்டு பொருட்கள், ரிமோட் கண்ட்ரோலர்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப் பட்டு வீணான பாட்டரிகள் குப்பைகளில் போடப்பட்டு பூமியில் ஆபத்தான ரசாயன கழிவுகளாக மாறுகிறது. அதனுள் இருக்கும் மெர்குரி போன்ற பொருட்கள் அதிக விஷத்தன்மை வாய்ந்தது. இவை அதிக அளவு பூமியை மாசுபடுத்துவதை தவிர்க்க மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்த்க் கூடிய ரீசார்ஜ் பாட்டரிகள் பயன்படுத்தலாம். ஒரு ரீசார்ஜபிள் பாட்டரி 300 சாதாரண பாட்டரிகளுக்கு சமம். ரீசார்ஜபிள் பாட்டரிகளை ரீசைக்களும் செய்யலாம். எனவே அவை குப்பையாவதில்லை.
சிடிக்களும் டீவிடிக்களும் மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதால் இவைகளும் சில உபயோகங்களுக்கு பிறகு அழியாத குப்பைகளாக மாறுகின்றன. ஹார்ட் டிஸ்க் மற்றும் தம்ப் ட்ரைவுகளை தற்காலிக சேமிப்புகளுக்கு பயன் படுத்துவது நல்லது.
தேவையற்ற வீட்டு உபயோகப் பொருட்களையும் வாங்கிக் கூட்டுவதும் ஆரோக்கியமான பழக்கம் அல்ல.
சி எஃப் எல் வகை மற்றும் சாதாரண குழல் விளக்குகள் பழுதானால் அதை உடைத்து எறியாமல் ரீ சைக்கிள் செய்ய வேண்டும். பார்க்க LampRecycle.org. அவற்றை உடைப்பதால் அதிலிருந்து மிகவும் ஆபத்தான பாதரச வாயு வெளிப்படும். அதை சுவாசிப்பது மிகவும் கெடுதல். அப்படி ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் என்ன செய்ய ?என்று EnergyStar.gov தளத்தில் வழிமுறைகளை பார்க்கவும்.
பெரும் விருந்துகள், திருமன நிகழ்சிகளில் சில சமயம் ஏராளமான உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுகின்றன. மீதம் வரும் அத்தகைய உணவுகளை அருகே உள்ள அனாதை ஆசிரமங்களுக்கோ், வறியவர்களுக்கோ வழங்குவது இரட்டை புண்ணியம்.
தினமும் சேரும் வீட்டு குப்பைகளை மக்கும் பொருள் மக்காத பொருள் என தரம் பிரித்து அதற்குரிய நகராட்சி குப்பைத்தொட்டிகளில் இட வேண்டும்.
மக்குகின்ற குப்பைகள் சிறந்த இயற்கை உரமாகும்.சில கிராமங்களில் இப்படி சேரும் மக்குகின்ற குப்பைகளிலிருந்து கோபார் வாயு எடுக்கப்ப்ட்டு சமையல் அடுப்பு மற்று விளக்குகளில் பயன்படுத்துகிறார்கள். மக்காத பொருட்களை கூட தரம் பிரித்து அலுமினியம், பித்தளை, செம்பு, இரும்பு, காகிதம், பாட்டில்கள், பிளாஸ்டிக் என பழயை பொருட்கள் வாங்கும் கடைகளில் விற்று காசாக்கலாம். அதோடு சுற்று சூழலையும் காக்கலாம்.
வாகனங்கள், இன்வெர்ட்டெர், எமெர்ஜென்சி லைட்களில் பயன் படுத்தப்படும் lead acid Batery கள் பழுதானால் கூட தூக்கிப் போடாதீகள். அதிக பணம் தந்து வாங்குபவர்கள் இருக்கிறார்கள்.தேவையற்ற பொருட்களை விற்க இணையத்தில் e-bay போன்ற எவ்வளவோ தளங்கள் இருக்கின்றன. குப்பைகள் என கருதுவதைக் கூட காசாக்கலாம்.