குகைக்குள் மறைந்திருக்கும் தகவல்கள்
நீங்கள் எப்போதாவது மலைக் குகைகளில் தங்கி இருக்கிறீர்களா? அதுவும் ஓர் இரவுப் பொழுதில்! ஒருவிதமான பயமும் உங்களுடன் சேர்ந்து தங்கியிருக்கும். அப்போதுதான் குகையின் பூர்வீக வரலாறுகள் அந்த மலையைப் பற்றியோ, அந்த குகையைப் பற்றியோ அந்த வட்டாரங்களில் தகவல்களாகக் கேள்விபட்டிருப்பீர்கள்.
இப்படி ஒவ்வொரு மலைக்குகைக்கும் ஒவ்வொரு விதமான வரலாற்றுப் பின்னணிகள் உண்டு. அதைப்போல குர்ஆனில் சில குகைகளைப் பற்றிய தகவல்களை அல்லாஹ்வும் பதிவு செய்கிறான், அதுவும் சற்று சுவாரஸ்யமாக!
1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜபல் நூர் மலையிலிருக்கும் ஹிரா குகையினுள் சென்று தவமிருந்தார்கள். அவர்களுக்கு நாற்பது வயதானபோது அக்குகைக்கு ஒரு மலக்கு வந்து “ஓதுக” என்று கூறினார்.
“எனக்கு ஓதத்தெரியாது” என மும்முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பகர, வந்த மலக்கு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மூன்று முறை கட்டித்தழுவி ஆலிங்கனம் செய்து, “முஹம்மதே! நீர் அல்லாஹ்வின் தூதர். நான் ஜிப்ரயீல்…” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் அம்மலக்கு. இந்ந்கழ்ச்சி ஒரு திங்கட் கிழமை மிக அதிகாலைப் பொழுதில் நடந்தது.
வானவர் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூலமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்ட குர்ஆன் வேதத்தின் முதல் ஐந்து வசனங்களைச் சொல்லிக் கொடுக்கப்பட்டது.
(நபியே!) அனைத்தையும் படைத்த உங்களது இறைவனின் திருப்பெயரால் (எனது கட்டளைகள் அடங்கிய திருக்குர்ஆனை) நீங்கள் ஓதுவீராக! அவனே மனிதனை கருவிலிருந்து படைத்தான். (நபியே பின்னும்) நீங்கள் ஓதுங்கள்! உங்களது இறைவன் மாபெரும் கொடையாளி! அவன் தான் எழுதுகோலைக் கொண்டு எழுதக் கற்றுக் கொடுத்தான். அதன் மூலம் மனிதன் அறியாதவைகளையெல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறான். (அல்குர்ஆன் 96: 1-5)
பூலோகத்தில் பாக்கியமான குர்ஆன் முதலில் இறங்கியது ஒரு குகையில் தான் என்று எண்ணும்போது வியப்பாக இருக்கிறதல்லவா? இந்த புனித குகை வாசலில் இன்றும் “இக்ரஃ பிஸ்மிக்க” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இக்குகையிலிருந்து வெளியே பார்த்தால் தொலைவிலுள்ள கஃபத்துல்லாஹ் தெளிவாகத் தெரிகிறது.
2. எகிப்து நாட்டில், “ஸீனாய்” என்ற பிரதேசத்திலுள்ள ஒரு மலைக்குப் பெயர் “தூர்”. எனவே அம்மலைக்கு “தூர் ஸீனாய்” மலை என்று பெயர். ஃபிர்அவ்னின் கொடுமையிலிருந்து தங்களை மீட்ட நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் மீது, இஸ்ரவேலர்கள் நம்பிக்கையும், விசுவாசமும் கொண்ட அவர்கள் ”அல்லாஹ்வின் சட்டதிட்டங்களைத் தாருங்கள் நாங்கள் அதன்படி செயல்படுகிறோம்” என்று கூறினார்கள். இது பற்றி நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனிடம் வேதம் பற்றிக் கேட்க, இறைவன் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தூர்ஸீனாய் மலையிலுள்ள ஒரு குகையில் 30 நாட்கள் தொடர்ச்சியாக இரவும் பகலும் நோன்பு நோற்கக் கட்டளையிட்டான்.
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 30 நாட்கள் தொடர் நோன்பு வைத்தார்கள். ஆயினும் வாயில் நாற்றமிருப்பதால் இறைவனிடம் பேசுவது ஒழுக்கமான செயலாக இருக்காது என கருதி 30 ஆவது நாளில் பகலில் மிஸ்வாக்கு செய்தார்கள். இக்குற்றத்திற்காக இன்னும் 10 நாட்கள் அதிகமாக நோன்பு நோற்க இறைவன் கட்டளையிட்டான். (இது குறித்த விபரங்கள் குர்ஆனின் 7:142 ஆவது வசனத்தில் இடம்பெற்றுள்ளன),
பின்பு “தவ்ராத்” என்னும் வேதத்தைக் கொடுத்தான்.
அல்லாஹ் தூர்ஸீனாய் மலையைப் பற்றி தனியாக (தூர் – மலை) என்கிற ஒரு அத்தியாயத்தையே குர்ஆனில் இடம்பெறச் செய்து, அதன் முதல் வசனத்தில், மலையின் மீதும், தவ்ராத் வேதத்தின் மீதும் சத்தியம் செய்தவாறு,
“வஹி அருளப்பெற்ற மலையின் மீது சத்தியமாக; விரித்த கடிதத்தில் வரி வரியாக எழுதப்பட்ட வேத நூலின் மீது சத்தியமாக” (அல்குர்ஆன் 52: 1-3) என்று இறைமறையில் குறிப்பிட்டுள்ளான்.
ஆக, தவ்ராத் வேதமும் ஒரு மலையின் குகையில் வைத்துத்தான் அருளப்பட்டது.
3. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அன்புத் தோழர் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் மக்காவை விட்டு மதீனாவிற்கு “ஹிஜ்ரத்” செய்யும்போது, வழியில் “தெளர்” என்னும் குகையில் தங்க நேரிட்டது. மக்கத்து குரைஷிகள் தப்பித்த இருவரின் தலைக்கும் பெரும் தொகை பரிசாகத் தருவதாக அறிவித்தார்கள். எதிரிகள் மக்காவெங்கும் தேடினார்கள். மக்காவிலிருந்து புறவழிச் செல்லும் எல்லா பாதைகளிலும் தேடினார்கள்.
தேடும் கூட்டம் ஒன்று “தெளர்” குகையின் வாசலின் அருகே கையில் வாளோடும், ஈட்டியோடும் வந்தது. தோழர் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு திடுக்கிட்டு “யா ரஸூலல்லாஹ்! நாம் இருவர்தானே இக்குகையில் உள்ளோம்” என்றதும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இறைவனும் நம்மோடு இருக்கிறான்” என்று கூறியதை குர்ஆனில் அல்லாஹ்,
“நிராகரிப்போர் அவரை ஊரைவிட்டு வெளியேற்றிய சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான். “தெளர்” என்னும் மலைக் குகையில் இருந்த இருவரில் ஒருவராக அவர் இருந்தபோது விரோதிகள் வந்து சூழ்ந்து கொண்ட சமயத்தில் தன்னுடன் குகையில் இருந்த தோழரை நோக்கி, ”நீர் கவலைப்படாதீர், நிச்சமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” ( “லா தஹ்ஸ(z)ன் இன்னல்லாஹ மஅனா” ) என்று ஆறுதல் கூறினார்கள். (அல்குர்ஆன் 9:40)
ஒரு கணப்பொழுதிலும் இறைவனை மறக்காத நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய இவ்வாசகம் தான் “மெஞ்ஞானத்தின் மிகப்பெரிய சித்தாந்தமான ஏகத்துவத்தோடு தொடர்ப்படுத்தி மரித்துப்போன இதயத்தையெல்லாம் உயிர் கொடுத்த உயர்ந்த சொல். அதனை இந்த “தெளர்” என்கிற புனித குகையில் வைத்துத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவுளமானார்கள்.
( இங்கு ஒரு சிறு குறிப்பை பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இராக்கின் முன்னால் அதிபர் ஸத்தாம் ஹுஸைனின் மாளிகையோ அல்லது அலுவலகமோ என்று தெரியவில்லை. அதன் நிலை வாசலுக்கு மேல் மிகப்பெரிய அளவில் இவ்வாத்தை, அதாவது “லா தஹ்ஸ(z)ன் இன்னல்லாஹ மஅனா” எனும் அவ்வார்த்தை அழகாகப் பொறிக்கப்பட்டிருந்ததை பத்திரிகை புகைப்படமொன்றில் கண்ணுற்றபோது மிகவும் ஆச்சரியமாகக்கூட இருந்தது. அதனால்தான் என்னவோ 30 க்கும் மேற்பட்ட நாடுகள் அந்நாட்டைத் தாக்கியபோதும் அவர் சிறிதும் அஞ்சாமல், இன்னும் சொல்லப்போனால் உயிருக்குக்கூட அஞ்சாமல் இருந்த காரணத்தினால் தான் அவரது இறுதி மூச்சை அல்லாஹ் தனது திருக்கலிமாவை மொழியச்செய்து அதனை ஒட்டுமொத்த உலகமும் பார்க்கும்படி செய்தான் என்று எண்ணத் தோன்றுகிறது.)
4. உஹது யுத்தத்தின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முபாரக்கான பல் ஷஹீதாக்கப்பட்டது. அச்சமயம் ஸஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உஹது மலையிலுள்ள ஒரு குகையில் அமரச் செய்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருமகளார் அன்னை ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முதலுதவி செய்யப்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஆசுவாசப்படுத்தி இளைப்பாறியது அந்த உஹது மலையிலுள்ள குகையில்தான். இன்றும் அந்த குகையிலிருந்து கஸ்தூரிமணம் கமழ்ந்து கொண்டே இருக்கிறது!
5. திருக்குர்ஆனில் “குகை” என்ற என்ற தலைப்பிலேயே ஒரு அத்தியாயத்தை “ஸூரத்துல் கஹ்ஃப்” ஐ இறக்கியுள்ளான் இறைவன். இந்த 18 ஆவது அத்தியாயத்தில் வியப்புக்குறியதொரு வரலாறு விவரிக்கப்படுகிறது.
அமைதியாக இறைவனை வணங்க விரும்பிய சில வாலிபர்கள் ஒரு மலைக்குகையைத் தங்களின் பாதுகாப்பான இடமாகத் தேர்ந்தெடுத்து இறைவணக்கத்திற்குச் சென்றனர். ஆஸியா மைனரின் மேற்குக் கரையிலுள்ள ஸ்மிர்னாவுக்கு 50 மைல் தெற்கேயுள்ள எஃபெஸஸ் நகரத்தில் 7 வாலிபர்கள் இறைவழிபாட்டில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அப்பகுதியை ஆண்டுவந்த அரசன் சிலை வணக்கம் புரிபவனாக இருந்ததால், அவ்வாலிபர்களின் ஏக இறைவழிபாட்டுக்கு இடையூறுகள் பல விளைவித்து அவர்களை துன்புறுத்தினான். அரசனின் தொல்லையிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளும் பொருட்டு அவ்வாலிபர்கள், அருகிலுள்ள மலைக் குகையொன்றைத் தேர்ந்தெடுத்து அங்கு சென்று இறைவழிபாட்டில் மூழ்கினார்கள். அந்தக் குகையின் அமைப்பை அல்குர்ஆன் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது;
“சூரியன் உதிக்கும்போது குகையின் வலப்பக்கத்தில் அது சாய்வதையும், அது அஸ்தமிக்கும்போது இடப்பக்கத்தையும் அது கடந்து செல்வதையும் நீர் காண்பீர்.” (அல்குர்ஆன் 18:17)
இறைவழிபாட்டில் மூழ்கிய இவர்கள் சிறிது நேரத்தில் அப்படியே அயர்ந்த உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்கள். உறக்கம் தெளிந்து விழித்தபோது, பசித்தது. சிறிது நேரம்தான் உறங்கியிருப்போம் என்று கருதி தங்களில் ஒருவரிடம் பணம் கொடுத்து ஊருக்குள் சென்று உணவு வாங்கி வருமாறு அனுப்பினார்கள். அவர் கொண்டு சென்ற வெள்ளிக்காசுகளை உணவுக்கடைக்காரர்கள் செல்லாதவையென்று வாங்க மறுத்துவிட்டனர்.
இறுதியில் அவர் அரசனிடம் முறையிட்டார். அந்த வெள்ளிக்காசுகளை வாங்கிப்பார்த்த அரசன் அவை 300 ஆண்டுகளுக்கு முந்திய பழைய நாணயங்களாக இருப்பதைக்கண்டு அதிசயித்து விசாரித்தான். அந்த அரசனின் பெயர் இரண்டாவது தியோஷியஸ்.
உணவு வாங்க வந்த வாலிபரின் வாயிலாக குகைத் தோழர்களைப்பற்றி அறிந்த அரசன் அவரையும் அழைத்துக் கொண்டு குகைக்குச் சென்றான். அப்போது தான் உணவு வாங்க வந்த வாலிபருக்கு, தாங்கள் 300 ஆண்டுகள் உறங்கிவிட்ட உண்மை புலப்பட்டது.
குகைக்குச் சென்ற அரசன் அந்தக் குகையில் சில வாலிபர்களும், அவர்களுக்குத் துணையாகச் சென்ற ஒரு நாயும் உறங்கிக் கொண்டு இருக்கக் கண்டான். அரசனுடன் வந்த வாலிபரும் குகைக்குள் சென்று மீண்டும் தம் தோழர்களுடன் தூகத்தில் ஆழ்ந்துவிட்டார். குகையின் வாயிலும் அடைக்கப்பட்டுவிட்டது.
அரசனும் அவனுடன் வந்தவர்களும் தாங்கள் கண்கூடாகக் கண்ட இந்த அற்புதக் காட்சியைப் பற்றி அந்த மலைக்குகை வாசலில் கல்லில் விரிவாகச் செதுக்கி வைத்துவிட்டுத் திரும்பினர்.
“குகைத் தோழர்களும் (அந்த மலையில் உள்ள குகை வாசலில் பொறிக்கப்பட்டிருக்கும்) கல்வெட்டும் நம்முடைய அத்தாட்சிகளில் அதிசயமானதென்று நீர் எண்ணுகிறீரா…?” (அல்குர்ஆன் 18:9)
6. குர்ஆனில் தெரிவிக்கப்படும் மற்றுமோர் சான்று “குகை இல்லங்கள்” ஆகும்.
அரேபியாவின் வடமேற்குப் பகுதியில் மதீனாவுக்கும் ஸிரியாவுக்கும் நடுவே “ஹிஜ்ர்” என்ற மலை நாட்டை தலைநகராகக் கொண்டு வாழ்ந்தனர் ஸமூது மக்கள். செல்வச் செழிப்புடன் வாழ்ந்த இந்த சமூகத்தினர், சிற்பக்கலையில் சிறந்து விளங்கினர். மாட மாளிகைகளை எழுப்பினாலும் மலைப்பாறைகளைக் குடைந்து குகை இல்லங்களை அமைத்து அதில் வாழவே விரும்பினர்.
இச்சமூகத்தினருக்கு நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அனுப்பி சத்திய நெறியினை சொல்லிட அல்லாஹ் நாடினான். ஸமூது மக்கள் நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், அவர்களின் ஆதரவாளர்களையும் அடியோடு ஒழித்திடச் சதித் திட்டம் தீட்டினர். மேலும், தங்களை யாராலும் எவ்வித இயற்கை சக்தியாலும் அழிக்க முடியாது என்ற இறுமாப்பில், மலைகளைக் குடைந்து பாதுகாப்பான குகைகளை அமைத்து வாழ்ந்ததையும், அவ்வாறிருந்தும் இறை தண்டனைய்லிருந்து தப்ப முடியாமல் அழிந்ததையும் அல்குர்ஆன் வர்ணிக்கிறது
“அச்சமயம் வாழலாம் எனக்கருதி அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகள் அமைத்தார்கள். அவர்களை விடியற்காலையில் பெரும் சப்தம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்களை ரட்சித்துக் கொள்ளச் செய்திருந்தவைகளில் ஒன்றுமே அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.” (அல்குர்ஆன் 15: 82-84)
ஒரு பெரிய சமுதாயமே மலைகளில் குகைகளை அமைத்தும், கட்டிடக் கலையில் முன்மாதிரியாகவும் திகழ்ந்ததையும் ஆராய்ந்த கிரேக்க சரித்திர ஆசிரியர்களான தாஸ்டட்வர்ஸ், இஸ்ட்ராயூ போன்றவர்கள் புகழ்ந்து எழுதியுள்ளார்கள்.
– சிந்தனை சரம் ஜூன் 2010
www.nidur.info