தன்னம்பிக்கை எங்கள் சாய்ஸ்
அன்று; சம்பளமில்லாத வேலைக்காரி – இன்று; M.B.A. பட்டதாரி!
சேலம், சின்ன திருப்பதிதான் என் சொந்த ஊர். நான் ஐந்து வயது சிறுமியாக இருக்கும்போது, என் அம்மா இறந்திட்டாங்க. எனக்கு ஒரு தம்பி, ஒரு தங்கை. என் அப்பா வேறு ஒரு திருமணம் செய்து கொண்டடதால், உறவினர்கள் வீட்டில் வளர்ந்தோம். அப்பாவின் இரண்டாவது மனைவியின் குழந்தையை கவனிப்பதற்காக ஐந்தாவதுடன் படிப்பை நிறுத்தினர். சம்பளம் இல்லாத வேலைக்காரியாக அந்த வீட்டில் இருந்தேன்.
பின், 15 வயதில் L.I.C. யில் வேலை பார்த்த பியூனுக்கு திருமணம் முடிச்சாங்க. 10 ஆவது படித்த கணவன் என் வற்புறுத்தலால் M.A. முடித்தார். வாழ்க்கை நிம்மதியாகப் போய்க்கொண்டிருந்தபோது திடீரென ஒருநாள் என் கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். நான் கொஞ்சம் தடுமாறிய காலம். ஆனாலும், இரண்டு பெண் குழந்தைகள் வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், 20 வருடம் கழித்து தமிழ்நாடு திறந்தவெளி பலகலைக்கழகத்தில் எட்டாவது படித்தேன்.
கஷ்டப்பட்டு படிச்சு, பாஸ் பண்ணி, கணவரின் வேலையைப் பெற்றேன். படிப்படியாகப் படித்து இன்று M.B.A. பாஸ் செய்து விட்டேன். என் பொண்ணுங்க எனக்கு இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்தாங்க. தேர்வு எழுதி, பியூனிலிருந்து டபுள் புரமோஷன்ல, ஆஃபீஸ் மேனேஜ்மென்ட் டிபார்ட்மென்டோட அசிஸ்டென்ட் ஆகிட்டேன்.
என்னால் இதை நம்பவே முடியலைன்னு சொல்ல மாட்டேன். யாரிடமும் கையேந்தாம, என் பொண்ணுங்களை வாழவைக்க முடியும்னு நம்பியதால் சாதிச்சேன்.
இன்னைக்கு நானும், என் பொண்ணுங்களும் M.B.A. பட்டதாரிகள். பிரச்சனை வந்தா பின்வாங்கவோ, பதட்டப்படவோ, கண்ணீர் சிந்தவோ செய்யாதீங்க. அது உங்களை இன்னும் பலவீனமாக்கும். தொடர்ந்து முயற்சி செய்தும் பலன் இல்லையேன்னு, முயற்சி செய்றதை விட்டுறாதீங்க. உழைப்புக்கு இணையான மிகப்பெரிய விஷயம் எதுவுமே இந்த உலகில் இல்லை.
– பாதியில் விட்ட படிப்பைத் தொடர்ந்து, படித்து மனவலிமையுடன் வாழ்க்கையில் ஜெயித்திருக்கும் இந்திராணி.
அன்று; கார் டிரைவர் – இன்று; கல்லூரிப் பேராசிசிரியர்!
முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் T.R.T.O. வில் பணியாற்றியபோது அவரிடம் கார் டிரைவராக இருந்த கதிரேசன் என்பவர் அப்துல் கலாமின் அறிவுரையைக் கேட்டு அடுத்தடுத்து படித்து இன்று டாக்டர் பட்டத்துடன் கல்லூரிப் பேராசிரியராக உயர்ந்துள்ளார்.
கடந்த 80 களில் பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகத்தில் (T.R.O.) அப்துல் கலாம் இயக்குநராக இருந்தார். அப்போது அவருக்கு கார் டிரைவராக இருந்தவர் கதிரேசன். இவர் ராணுவத்தில் டிரைவராக இருந்தவர். அங்கிருந்து அப்துல் கலாமின் டிரைவராக மாற்றப்பட்டார்.
அப்துல் கலாமிடம் கதிரேசன் பணியில் சேர்ந்தபோது அவருடைய குடும்ப நிலைகளைக் கேட்டறிந்தார் அப்துல் கலாம். இதையடுத்து அவரை உயர்த்த முடிவு செய்த அவர், ஏன் நீங்கள் தொடர்ந்து படிக்கக்கூடாது? என்று கேட்டார். மேலும் படிக்குமாறு ஆலோசனையும் கூறிவந்தார்.
அப்துல் கலாமே இவ்வாறு சொன்னதால் நெகிழ்ந்து போன கதிரேசன் வைராக்கியத்துடன் தனது கல்வியின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கினார். பத்தாவது வகுப்பில் தோல்வியுற்றிருந்த அவர் அதை முதலில் முடித்தார். பின்னர் தனித்தேர்வாக பிளஸ் டூ எழுதி பாஸ் ஆனார். 1998 ஆம் ஆண்டு ராணுவ கார் டிரைவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தபால் மூலம் B.A. வரலாறும், தொடர்ந்து M.A. வரலாறும் முடித்து பட்டங்கள் பெற்றார். அத்தோடு நில்லாமல் B.Ed., M.Ed. படிப்புகளையும் முடித்தார்.
அப்போதும் அவர் படிப்பு வேட்கை நிற்கவில்லை. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக்கழகத்தில் M.Phil.ஆய்வுப் படிப்பை முடித்தார். அப்படியும் நில்லாமல் P.hd. யையும் மேற்கொண்டு அதையும் முடித்து டாக்டராகிவிட்டார். ஒருவழியாக தனது படிப்பு வேட்கையை முடித்த கதிரேசன் வேலை வேட்டையைத் தொடங்கினார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக தேர்வாகி அங்கு பணியில் சேர்ந்துள்ளார்.
தனது வாழ்க்கை இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு அப்துல் கலாம் கொடுத்த உக்கம்தான் காரணம் என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் கதிரேசன். அப்துல் கலாம் குறித்து அவர் கூறுகையில், அப்துல் கலாமுடன் பணியாற்றிய காலத்தை மறக்கவே முடியாது. யாரிடமும் அவர் கடுமையாக நடந்து கொள்ள மாட்டார். தன்னுடன் இருக்கும் அனைவரையும் ஊக்கப்படுத்துவார். அவருடைய வழியில் இளைஞர்களுக்கு நாட்டுப்பற்றை உருவாக்கும் பணியை தொடர்ந்து செய்வேன் என்கிறார் பேராசிரியர் கதிரேசன்.
விடாமுயற்சியுடன் முயன்றால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்திராணியும், கதிரேசனும் ஓர் சிறந்த நிகழ்கால எடுத்துக்காட்டு.
www.nidur.info