ஒவ்வொரு இஸ்லாமிய இளைஞர்களின் கரங்களில் இருக்க வேண்டிய நூல்
[ வெறுங்கையால் முழம் போடுகிற அறிவுஜீவிகள் ஒரு புறம்; திறமையும் ஆற்றலும் நிரம்பிய இளைஞர்கள் அமைப்பை மாற்றுகிற கவலையின்றி அந்த அமைப்பிலேயே தம்மையும் தொலைத்துக் கொள்கிற அவலம் மறுபுறம்….!
இந்த நிலையில் இந்தக் களத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டு இதற்குப் பதிலாக ஒரு தெளிவான, தீர்க்கமான மாற்று ஒன்றைக் கட்டமைக்க வேண்டும் என்கிற தொலைநோக்குடனும் கவலையுடனும் ஆழமான ஈடுபாட்டுடனும் பற்றியெரிகிற ஆசையுடனும் செயற்கலத்தில் குதிக்கிற இளைஞர்களே இன்று நமக்குத் தேவைப்படுகிறார்கள்.
ஓர் இறைநம்பிக்கையாளரின் இருபத்தியோராம் நூற்றாண்டின் உலகம் எத்தகையதாக இருக்கும்?
அதன் நகரங்கள் எப்படி அமைந்திருக்கும்?
அதன் கட்டடங்கள் எந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்?
அவை என்னென்ன வசதிகளைக் கொண்டதாக இருக்கும்?
அதன் கல்லூரிகளில் என்னென்ன கற்றுத்தர்ப்படும்?
தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கும்?
சிறந்த அறிவாளிகள் எந்தத் துறையில் குவிந்திருப்பார்கள்?
பொருளாதாரம் எப்படி இருக்கும்?
வளர்ச்சித்திட்டங்கள், கொள்கைகள் எத்தகைய நிறத்தையும் திசையையும் கொண்டிருக்கும்?
ஆராய்ச்சிக்கான முன்னுரிமைகள் என்னவாக இருக்கும்? யோசியுங்கள். ]
அறிவுக் களங்களைக் கைப்பற்றுவோம்!
நம்மைச்சுற்றி நடப்பவற்றைப் பார்த்து, உலக மயமாக்கல் ஏற்படுத்தி இருக்கும் கோர விளைவுகளைக் கண்டு மனம் பதைத்து ‘இது சரியல்ல’ என்று மனதுக்குள் சொல்லிக் கொள்கிறோம். ‘இது அநீதி’ என நமக்குள் பேசிக்கொள்கிறோம்.
ஆனால், அதற்கு மாற்று என்ன? அந்த இடத்தில் கொண்டு வரப்பட வேண்டிய திட்டம் என்ன? இது குறித்து தெளிவான சிந்தனை கிடையாது. பலரும் பலவிதமான கருத்துக்களை முன் வைக்கிறார்கள். ஆனால், இவையெல்லாமே மார்க்ஸிஸம், பின் நவீனத்துவம், அனார்க்கிஸம், தாராள சோஷியலிஸம் போன்ற வழிகெடுக்கிற, குழப்ப மயமான சிந்தனைகளின் பின் விளைவுகளாகவே இருக்கின்றன.
இஸ்லாமிய மாற்று பற்றிய சிந்தனை இன்றும் தொடக்க நிலையிலேயே இருக்கின்றது. மலர்ந்தும் மலராத இரண்டுங்கெட்டான் நிலை.
இஸ்லாம் முன் வைக்கும் கோட்பாடுகளின் அடிப்படையில் அறிவுக்களங்களை மறுகட்டமைப்புச் செய்தால் மட்டுமே இஸ்லாமிய மாற்றை உறுவாக்க முடியும். இதற்கு முழுமையான ஈடுபாடும், வெறித்தனமான உழைப்பும் நிரம்பிய ஓயாத தொடர் முயற்சி இன்றியமையதாகும்.
கடுமையாக உழைத்தால் மட்டுமே நம்மால் இஸ்லாமிய நெறிமுறைகளின் அடிப்படையிலான, நடைமுறைப் படுத்தத்தக்க மாற்றுகளை உருவாக்க முடியும். நம்முடைய அறிவுக்கூர்மை மிக்க ஆற்றலும் ஆர்வமும் படைத்த இஸ்லாமியப் பற்று மிக்க இளைஞர்கள் இந்தக் களங்களில் ஈடுபடுவதற்கும், அர்ப்பணிப்பு உள்ளத்துடன் பாடுபடுவதற்கும் முன் வர வேண்டும்.
நம்மிடையே அறிவுஜீவிகளுக்குப் பஞ்சமில்லை. ஆய்வரங்குகள் நடத்துங்கள்; அழகாக ஆய்வுரைகளை நிகழ்த்தி அவையோரை ஆச்சர்யத்திலாழ்த்தி விடுவார்கள். கருத்தரங்குகளை நடத்துங்கள். கருத்தாழமிக்க கருத்துரைகளை நிகழ்த்தி கேட்பவர்களை மகிழ்விப்பார்கள். புயல் வீசுகின்ற சமயத்திலும் ஆழிப்பேரலைகளைக் கிழித்துக் கொண்டு நீந்துவது எப்படி? அதற்கான அழகிய நடைமுறைகளை என்ன என விளக்கமாக விவரிப்பார்கள்.
இந்த அறிவுஜீவிகளின் நிலைமை இப்படியிருக்க, நடைமுறை வாழ்வில் காலெடுத்து வைக்கும் நம்முடைய இளைஞர்களோ உலகமயமாக்கலின் வண்ணத்தில் தங்களைத் தோய்த்தெடுத்துக் கொள்கிறார்கள். இருக்கின்ற அமைப்பில் தங்களை முழுமையாகட்ப் பொருத்திக் கொள்கிறார்கள்.
வெறுங்கையால் முழம் போடுகிற அறிவுஜீவிகள் ஒரு புறம்; திறமையும் ஆற்றலும் நிரம்பிய இளைஞர்கள் அமைப்பை மாற்றுகிற கவலையின்றி அந்த அமைப்பிலேயே தம்மையும் தொலைத்துக் கொள்கிற அவலம் மறுபுறம்….!
இந்த நிலையில் இந்தக் களத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டு இதற்குப் பதிலாக ஒரு தெளிவான, தீர்க்கமான மாற்று ஒன்றைக் கட்டமைக்க வேண்டும் என்கிற தொலைநோக்குடனும் கவலையுடனும் ஆழமான ஈடுபாட்டுடனும் பற்றியெரிகிற ஆசையுடனும் செயற்கலத்தில் குதிக்கிற இளைஞர்களே இன்று நமக்குத் தேவைப்படுகிறார்கள்.
லட்சிய இளைஞர்களை உருவாக்குவது எப்படி?
பன்னாட்டு நிறுவனங்களுக்கு இத்தகைய இளைஞர்கள் போனாலும் அங்கு வெற்றிகரமான பணியாளராக மட்டும் முடங்கிப் போக மாட்டார்கள். ஒரு மாற்று வணிக அமைப்பையும் அதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான சிந்தனையையும் தருவார்கள். கல்வித் துறையில் காலடி பதித்தாலும் கூட அங்கு ஒரு புதிய கல்வித் திட்டத்தை வகுப்பது குறித்து யோசிப்பார்கள்.அந்த புதிய கல்வித் திட்டத்தை தற்போதைய இந்தியச் சூழல்களில் நிலைநிறுத்துவதற்கான வழிமுறைகளையும் சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து சொல்வார்கள்.
இத்தகைய லட்சிய இளைஞர்களை உருவாக்குவது எப்படி? முதலில் நம்முடைய இளைஞர்களுக்கு வாழ்வின் லட்சியங்கள் குறித்த ஒரு தெளிவும் பிடிப்பும் ஏற்பட வேண்டும். அவர்களுடைய வாசிப்பும் அதிகமாக வேண்டும். நவீன இலக்கியங்களுடனும் இஸ்லாமியக் கல்வி மற்றும் ஞானத்தின் ஊற்றுகளுடனும் அவர்களுடைய உறவும் பிணைப்பும் ஆழமாக வலுப்பட வேண்டும். இன்று உலகில் காணப்படும் மாற்று சித்தாந்த நெறிமுறைகள் குறித்தும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.
அல்லவற்றுக்கும் மேலாக நாம் நம்முடைய குழந்தைகளிடமும், இளைஞர்களிடமும் கனவு காண்கிற பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தற்போதைய சூழல் குறித்த கவலையும், வேதனையும், வருத்தமும் மேலோங்க வேண்டும். அதே சமயம் ஒரு மாற்று பண்பாட்டைக் கட்டமைப்பதற்கான கனவையும் ஊட்ட வேண்டும்.
ஓர் இறைநம்பிக்கையாளரின் இருபத்தியோராம் நூற்றாண்டின் உலகம் எத்தகையதாக இருக்கும்? அதன் நகரங்கள் எப்படி அமைந்திருக்கும்? அதன் கட்டடங்கள் எந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்? அவை என்னென்ன வசதிகளைக் கொண்டதாக இருக்கும்? அதன் கல்லூரிகளில் என்னென்ன கற்றுத்தர்ப்படும்? தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கும்? சிறந்த அறிவாளிகள் எந்தத் துறையில் குவிந்திருப்பார்கள்? பொருளாதாரம் எப்படி இருக்கும்? வளர்ச்சித்திட்டங்கள், கொள்கைகள் எத்தகைய நிறத்தையும் திசையையும் கொண்டிருக்கும்? ஆராய்ச்சிக்கான முன்னுரிமைகள் என்னவாக இருக்கும்? யோசியுங்கள்.
பண்பாட்டைக் கட்டமைக்கும் பணியில் செங்கற்களாகவும், சுண்ணாம்புக் கலவையாகவும் பங்காற்றுவது எண்ணங்களே! சிந்தனைகளே! இந்த நூற்றாண்டில் இஸ்லாமிய இயக்கங்களை நிறுவிய முதன்மைச் சிற்பிகளின் காலகட்டத்துக்குப் பிந்தைய காலகட்டத்தில் நாம் எந்தத் துறையில் படுதோல்வி அடைந்திருக்கிறோம், தெரியுமா?
ஒளிமயமான, சிறப்பான எண்ணங்களையும் கருத்துகளையும் செதுக்குவதில்தான் நாம் மோசமாகத் தோல்வி கண்டிருக்கிறோம்.
நவீன யுகத்தின் மினுமினுப்புகள், ஜொலிப்புகள் எல்லாமே என்னவென்று நினைத்தீர்கள்….! 250 ஆண்டுகளுக்கு முந்தைய நாவலாசிரியர்களின் கற்பனைகளில் உதித்தவைதான் எல்லாமே…!
அல்லாமா இக்பாலின் ஆக்கங்களை ஆழ்ந்து படித்துப் பாருங்கள். அவருடைய படைப்புகளில் பக்கத்துக்குப்பக்கம் இந்தத் தொலைநோக்கும் சிந்தனையும் பொதிந்து கிடப்பதை உணர முடியும்.
மானுடத்தின் ரகசியம் நீ!
மலர்ந்த படைப்பின் ஆன்மா நீ!
உயிருடன் இருப்பவன் நீயென்றால் – உன்
உலகை நீயே உருவாக்கு!
குருட்டுத் தனம்மய் பின்பற்றும்
குணம்தற் கொலையினும் இழிந்ததடா;
வழியை நீயே தேடிச்செல்;
வழிகாட்டியை எதிர் பார்க்காதே!
இலட்சிய த்திற் கப்பால் உன்
இலட்சி யங்கள் விரியட்டும்;
வாழ்க்கை என்பது என்றென்றும்
மாறாப் பயண ஆசையடா!
இந்த இரவு பகல்களிலே
இறங்கிச் சிக்கிக் கிடக்காதே!
உன்றன் உயர்ந்த இலட்சிய
உலகம் இவற்றிற் கப்பாலே!
படைப்பின் அந்த ரங்கம்நீ!
பார்வையில் உன்னை வெளிப்படுத்து!
சுயத்தின் ரகசியம் உணர்ந்துகொள்;
இறைவனின் விளக்க உரையாகு!
மண்ணுக் காக அல்லநீ
வானுக் காக அல்லநீ
உலகம் என்பது உனக்காக
உலகிற் காக அல்லநீ!
ஆனால், இன்றுவரை மாற்றார்களின் சிந்தனைகளையும் மற்றும் எண்ணங்களையும் பொறுக்கி எடுப்பதில் முழுமூச்சாக ஈடுபட்டிருக்கிறோம். என்னதான் வீம்புக்காக வானளவுக்கு நீட்டி முழங்கினாலும் இதுதான் நிஜம். சுடுகிற நிஜம். நம்முடைய முன்னோர்கள் சிந்தனை, அறிவுக்கான அடித்தளங்களை மிக அழகாக அமைத்து விட்டுச் சென்றார்கள். சந்தேகம் இல்லை. ஆனால், அந்த அடித்தளங்களின் மீது புதிய சிந்தனைகளை வார்த்தெடுப்பதற்கான பணிதான் இன்று வரை செய்யப்படமல் எஞ்சி நிற்கிறது.
நம்மிடையே திறமைகளுக்கு, திறமையாளர்களுக்குப் பஞ்சமில்லை. இதனை ஊறுதியாகச் சொல்ல முடியும். உலகின் மிகச் சிறந்த திறமையாளர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். இன்று உலகின் புதிய அறிவுக் களங்களிலும் கலைகளிலும் இன்றியமையாத சக்தியாக, முதுகெலும்பாக இந்தியர்கள் உருவெடுத்திருக்கிறார்கள். பொதுவான இந்தியச் சமூகத்தில் திடீரென்று வெடித்துப் புலப்பட்டுள்ள புதிய பாதையைப் (Breakthrough) போன்று முஸ்லிம் சமூகத்திலும் மறுமலர்ச்சிக்கான பாதை புலப்படுவதற்கு வாய்ப்பிருக்கின்றது.
எல்லாமே எண்ணத்தில்தான் இருக்கிறது; சிந்தனையில், மனோபாவத்தில்தான் இருக்கிறது. குறிக்கோள்கள் உயர்வான லட்சியங்களைச் சார்ந்தே எல்லாமே இருக்கிறது. நாம் நம்முடைய குழந்தைகளை சற்றே விலகி நின்று சிந்திப்பவர்களாக (Out of the Box) ஆக்க வேண்டும். எதிலும் புதுமை. எங்கும் நவீனம்.
நம்முடைய தாலாட்டுகளில் புதிய பண்பாட்டுக்கான கனவு இல்லை. நம்முடைய சொற்பொழிவுகளிலும் தீமைகளை அழித்தல், நன்மைகளை ஏவுதல்; சமுதாய முன்னேற்றம்; சில இஸ்லாமிய விழுமங்களை மட்டுமே தூக்கிக்கொண்டாடுதல் என அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கின்றோம். புதிய எழுச்சி இல்லை. புத்துலகு சமைக்கிற கனவு இல்லை.
மிதமிஞ்சிப்போனால் தீனை நிலநாட்டுதல்; சத்தியத்திற்கு சான்று பகர்தல் என மிகவும் பொருட்செரிந்த சொற்றொடர்களைக் கையாள்கிறோம். இந்தச் சொற்றொடர்களின் பொருள் பெருங்கடலைப்போன்று விரிவானது; ஆழமானது. ஆனால், அந்தக் கடலில் மூழ்கி முத்தெடுக்கின்ற முயற்சிதான் இன்றுவரை காணோம்! நம்முடைய கனவுகளின் வீழ்ச்சி நம்முடைய நிகழ்காலத்தின் வீழ்ச்சிக்கும் அடிப்படைக் காரணமாகும்.
இன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்வியைப் பொறுத்து வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் நிர்ணயிக்க முடியாது. அதுவும் முக்கியமானதுதான். என்றாலும் இன்றைய இக்கட்டான சூழல்களில் நாம் செய்யக்கூடிய யாதொன்றின் நிலையும் என்னவாக இருக்க வேண்டும்? உலக நிலைமைகளில் அது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும்? போன்ற கேள்விகளே முக்கியமானவை. “இன்று” குறித்து யோசிப்பதற்குப் பதிலாக “நாளை” குறித்து யோசிக்க வேண்டும்.
நாளை குறித்து கனவு காண வேண்டும். அதனை மெய்ப்பித்து உலகுக்குக் காட்ட வேண்டும்.
இன்று அமெரிக்கப் பண்பாட்டு மாடலை எதிர்ப்பவர்கள் கிளர்ச்சி அரசியலின் பக்க விளைவுகளாகத்தான் இருக்கிறார்கள். அவர்களில் எவரிடமும் நீண்ட காலத் திட்டம் கிடையாது; மற்றவர்களை வடிவமைப்பதற்கான பார்வையும் வியூகமும் கிடையாது. “மாற்று” மாடலை உருவாகுவதற்குறிய திறனும், திட்பமும் நுட்பமும் முஸ்லிம்களுக்கு மட்டுமே உண்டு.
நன்னம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் இதனைச் சொல்லவில்லை. மாறாக, உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் இதனைச் சொல்கிறேன். மற்ற “எதிர்ப்பாளர்கள்” எல்லோருமே – ஒன்று, எதிர்ப்பை மூட்டை கட்டி வைத்து விட்டு அமெரிக்காவுடன் சேர்ந்து விடுவார்கள். (இந்தியாவைப் போல) அல்லது கிளர்ச்சி, ஆர்ப்பாட்டம், வெற்று முழக்கம், ஆரவாரத்தில் மும்முரமாக இருப்பார்கள்.
குழந்தைகளின் அறிவுத் திறனை வளர்த்து படைப்பாக்கத்தை ஊட்டி வளருங்கள்.
“பெரிய பொரியாளர் ஆவேன், மருத்துவர் ஆவேன்” என கனவு காண்பது பெரிய விஷயமல்ல. இறைவனுக்காக என் பேச்சைக் கேளுங்கள். இறைவனுக்காக, அதனையே பெரிய சாதனையாக ஆக்கி விடாதீர்கள். அவர்களைக் கொஞ்சம் வித்தியாசமாக விலகி நின்று சிந்திக்கத் தூண்டுங்கள். புதியதைச் சிந்திக்க, புதியதைச் செய்ய ஊக்கப் படுத்துங்கள். உற்சாகமளியுங்கள்.
கிளிப்பிள்ளையாகப் பாடங்களையும், செய்யுள்களையும், சமன்பாடுகளையும், வாய்ப்பாடுகளையும் மனனம் செய்து ஒப்புவிக்கிற கூத்திலிருந்து அவர்களை விடுவியுங்கள்.
புதியதைச் சிந்திக்கட்டும். புதியதைப் படைக்கட்டும்.
இது சின்ன வேலைதான். குழந்தைகளிடமும், இளைஞர்களிடமும் கனவு கானும் பழக்கத்தை உண்டுபணுகிற வேலை.
ஆனால், இந்தச் “சின்ன வேலையில்” நாம் பெறுகிற வெற்றி இன்ஷா அல்லாஹ் – புதிய, ஒளிமயமான பண்பாட்டுக்கான வித்தாக அமையும்.
. அன்புள்ள வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு .
இங்கு இடம்பெற்றுள்ளது ‘’உலகமயமாகலும் முஸ்லிம் இளைஞர்களும்’’ எனும் நூலிலுள்ள ஒரு கட்டுரை மட்டுமே!
இன்றைய இஸ்லாமிய சமூகத்திற்கு மிகவும் தேவையான கருத்துக்களைத் தாங்கி நிற்கும் இந்நூலை முஸ்லிம்கள் – அதிலும் குறிப்பாக இளைஞர்கள் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டும்.
சமுதாயப்புரவலர்கள் இதுபோன்ற நூல்களை உரிமையாளர்களிடம் அனுமதிகோரி இலவசமாக அச்சிட்டு இக்கருத்துக்கள் அனைவரையும் சென்றடையும்படி செய்தால், இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக இச்சமூகத்திற்கு மிகவும் பயனுள்ள சேவையாக அமையும் என்பது திண்ணம்.
நன்மை சேர்க்கும் நோக்கில் இலவசமாக ‘சில சூரா’க்களை நூலாக அச்சிட்டுக் கொடுக்கும் பழக்கம் எங்கும் பரவியிருக்கும் இக்காலத்தில் அதற்குப் பதிலாக இதுபோன்ற நூல்களை அச்சிட்டுக்கொடுக்கும் பழக்கத்தை சமுதாய மக்கள் மேற்கொண்டால் முஸ்லிம்களின் அறிவு வளர்ச்சிக்கு அது பெருந்துணையாக அமையுமல்லவா? சிந்திப்போமே! – adm. www.nidur.info
இந்நூலின் பொருளடக்கம்:
பாகம் 1 : உலகமயமாக்கலும் முஸ்லிம் இளைஞர்களும்
1. உலகமயமாக்கல் தந்தது என்ன?
2. வெங்காய பகோடாவும் வாழைக்காய் பஜ்ஜியும்
3. எல்லாம் அமெரிக்க மயம்
4. பண்பாடுகளுக்கு எதிரான போர்ப் பிரகடனம்.
5. ஆலைகளாகிவிட்ட கல்விக் கூடங்கள்.
6. முஸ்லிம் இளைஞர்கள் செய்ய வேண்டியதென்ன?
7. அவர்களின் அசல் இலக்கே வேறு…!
8. இது வளர்ச்சியா அல்லது வீழ்ச்சியா?
9. வளர்ச்சிக்கான மாற்று வழி இருக்கின்றதா?
10. படிப்படியான மாற்று வழிமுறைகள்
11. எளிமையான வாழ்க்கைமுறை
12. நுகர்வியப் பண்பாட்டிலிருந்து விடுதலை!
13. சமூக ஏற்றத்தாழ்விலிருந்து விடுதலை!
14. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம்
15. அறிக் களங்களைக் கைப்பற்றுவோம்.
பாகம் : 2 உலகமயமாக்கலின் உண்மை முகங்கள்
1. உலகம்யமாக்களின் உண்மை முகங்கள்
2. உலகமயமாக்கல்
3. தலமயமாக்கல்
4. தாராளமயமாக்கல்
5. தனியார்மயமாக்கள்
பாகம்: 3 கடன் பயங்கரவாதம் : தீர்வு என்ன?
1. கடன் பயங்கரவாதமும் குட்டி போடும் கூட்டு வட்டியும்
2. வெடிக்கக் காத்திருக்கும் “டைம் பாம்”
3. புத்துலகு சமைப்போம்.
கட்டுரையாசிரியர்கள்
சைய்யத் ஸஆதத்துல்லாஹ் ஹுஸைனி,
டாக்டர் மன்ஸூர் துர்ரானி,
பேராசிசிரியர் மலிக் முஹம்மத் ஹுஸைன்
தமிழில்: T. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
170 பக்கங்கள் கொண்ட இந்நூலின் வில ரூபாய் 50 மட்டுமே
வெளியீடு
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை 600012
தொலைபேசி : 2662 4401
Fax: 2662 0682