வழிதவறிப்போகும் மதரஸாக்கள்!
[ உண்மைகளை உரைக்க வேண்டிய உலமா சமூகமும் உறக்கத்தில் உரைந்து கிடக்கிறது.]
இவ்வாக்கத்தில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் ஸ்ரீலங்காவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வரம்புமீறிய செயல்களாகும். அண்டை நாட்டில் இந்த அளவு முன்னேறி (!!!) இருக்கிறார்கள் எனும்பொழுது நாங்கள் மட்டும் என்ன குறைந்தவர்களா? என்று தமிழகத்திலுள்ள சில பழம்பெரும் மதரஸாக்களும் சுற்றுலா எனும் பெயரில் மதரஸா மாணவர்களை இழுத்துக்கொண்டு ஊர் ஊராக தர்ஹாக்களை வலம் வந்து விட்டு பொதுமக்கள் கேட்கும்போது வேறுவிதமான பதிலைக்கூறி தப்பிப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
அல்லாஹ்வின்மீது முழுமையான நம்பிக்கைகொள்ளும் உறுதியான ஈமானை மதரஸா மாணவர்களின் உள்ளத்தில் பதிய வைக்காமல், கல்வி கற்கும் காலத்திலேயே அவர்களது ஈமானை கெடுத்து அவர்களுக்கு பட்டமும் வழங்கி அவர்களை வெளியில் அனுப்பும்போது எவ்வளவு சமுதாயச் சீர்கேடு உண்டாகும் என்பதை ஒவ்வொரு ஊரின் அறிந்தவர்களும், கல்வியாளர்களும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம்.
மார்க்கத்தை அறிவதற்கு மதரஸாக்களை விட்டால் வேறு வழியில்லை எனும் காலத்தில் நாம் வாழ்வில்லை. நம் முன்னோர்களின் காலத்தைப்பற்றி அல்லாஹ் நம்மிடம் கேள்வி கேட்க மாட்டான். ஆனால், மார்க்கம் சம்பந்தப்பட்ட அனைத்து விளக்கங்களும் கடல்போல் பரவிக்கிடக்கும் இக்காலத்தில், பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும் மாணவர்கள்கூட ஆர்வத்தோடு மார்க்கம் சம்பத்தப்பட்ட உண்மையான விஷயங்களை அறிந்து அதன்படி செயல்படும் வாய்ப்புகள் மிக மிக அதிகமுள்ள காலத்தில் வாழக்கூடிய நாம் அலட்சியமாக இருந்தோமானால் நமது அடுத்த தலைமுறை ஜாஹிலியாக்களாகத்தான் உருவாகும்.
ஆலிம்கள் சொன்னால் அது வேத வாக்கு எனும் நம்பிக்கையை அவர்களே தூள் தூளாக உடைத்து விட்ட பிறகு மார்க்க விஷயத்தில் அவர்களை நம்பிப் பயனில்லை. எல்லா துறையிலும் போலிகள் மிகைத்துக்கொண்டு வருவதுபோல் மதரஸாக்களிலிருந்து வெளியாகும் ஆலிம்களும் தகுதியற்றவார்களாக வெளியாகும் காலமாக மாறிக்கொண்டு வருகிறது.
தஹஸ்ஸில் வகுப்பில் அதிக மாணவர்களை சேர்த்து தங்கள் மதரஸாக்களின் அந்தஸ்தை உயர்த்திக்காட்ட போட்டி போடும் அவலநிலை இன்று பல ஊர்களில் சர்வ சாதாரண காட்சியாக மாறிவிட்ட பிறகு ஆலிம்களின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகி நிற்கிறதே!
மஸ்அலா பிரச்சனைகளிலேயே அளவுக்கதிகமக நேரத்தை வீன் விரயம் செய்து வெற்று வாதங்களில் தங்கள் வாழ்நாளை தொலைத்துக்கொண்டிருக்கும் இவர்களா சமுதாய வழிகாட்டிகள்? சிரிப்புதான் வருகிறது. இதில் ஒருவர் மாற்றி ஒருவரை சவாலுக்கு இழுக்கும் அசிங்கமான கலாச்சாரம் வேறு. உண்மையான இறையச்சமுடைய ஆலிம்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அல்லாஹ்வின் மீதே இந்த சமுதாயம் முழுமையான நம்பிக்கை வைக்கட்டும். அவனிடமே முறையிடுமோம். நேர்வழி அவன் புறத்திலிருந்து மட்டுமே! – adm. nidur.info
அறிவியற் சுற்றுலாக்களும் அரங்கேற்றப்படும் அந்நிய ஜாஹிலிய்யத்துக்களும்
முன்திர்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்புவியில் நுபுவ்வத் எனும் ஒளிவிளக்கால் இருளில் சிக்குண்ட சமுதாயத்தை ஒளிரச் செய்ததன் விளைவாக ஒழுக்க சீலமுள்ள உத்தம ஸஹாபா சமூகத்தை இஸ்லாம் ஈன்றெடுத்தது.
ஜாஹிலிய முட்புதர்களில் அல்லுண்டு போன அச்சமுகத்தில் அல்லாஹ்வின் தூதர் அடைய நாடிய இலக்கை மிகக்கவனமாக சிந்தனைக்கு எடுத்துச்செயல்பட்டார்கள்.
அதன் ஆரம்பபடி அவர்களோடு இரண்டறக்கலந்திருந்த ஜாஹிலியப்பழக்கவழக்கங்களை காலடியில் போட்டு புதைத்தமையாகும். அவர்கள் சத்தியத்தை நோக்கி வருவதற்கு முட்டுக்கட்டையாக முட்டி நின்றது அவர்களின் மௌட்டீக கலாசாரங்கள்தான் என்பதை தத்துவார்த்தமாக உணர்ந்த அண்ணலார் அவர்கள் நபித்தோழர்கள் ஏலவே, விழுந்த குட்டையில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக பாரிய அணைகளையும் வேலிகளையும் போட்டார்கள். அவற்றில் சில.
‘உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கள் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், வேறெவரை என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூசயீது அல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஸஹீஹுல் புகாரி 3456)
மேலும், ‘யார் பிற சமுதாய கலாசாரத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவரே’ (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத் 4003)
இதுவும் அண்ணலாரின் மிக முக்கிய போதனையாகும். இவ்வாறான அணைகள் தான் ஸஹாபா சமுகத்திற்கு அசைக்க முடியாத ஈமானை உண்டாக்கியது. அந்தோ பரிதாபம் இன்றைய முஸ்லிம் சமூகத்தின் நிலை! அன்றைய ஸஹாபா சமூகம் ஜாஹிலிய கலாசாரத்தை குழிதோண்டிப்புதைத்து நபிகளாரின் கலாசாரத்தை மனித வாழ்வியலின் கலாசாரமாகக் கருதினார்கள். இதனால்தான்,
‘ரளியல்லாஹு அன்ஹும் வரளூ அன்ஹு’ (அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள்.) என்ற பட்டத்தையும் பெற்றார்கள். ஆனால் நாம் நபிகளாரின் கலாசாரத்தை குழிதோண்டிப்புதைத்து விட்டு ஜாஹிலிய கலாசாரங்களுக்கு வடிவங்கள் கொடுக்கின்ற நடிகர்களாக இருக்கின்றோம்.
இன்று எமது பாடசாலைகள், அரபுக்கல்லூரிகள் அறிவியற் சுற்றுலாக்கள் சொல்வதும் அனுபவங்களைப் பெறுவதும் ஆரோக்கியமான விடயமே. இதனையே அல்குர்ஆன்,
‘பூமியில் பயணம் செய்து, பொய்யெனக் கருதியோரின் முடிவு எவ்வாறு இருந்தது? என்பதைச் சிந்தியுங்கள்! என்று கூறுவீராக!’ (அல்குர்ஆன் 06:11) என்று குறிப்பிடுகின்றது.
நமது கல்வியில் பிரதான அங்கமான இவ் அறிவியற் சுற்றுலாக்கள் மாணவர்களது திறன்களையும், உளவியல் விருத்திகளையும் ஏற்படுத்த வல்லது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்ததன் உண்மைதான் இச்சுற்றுலாக்கள்.
இவ்வாறு சுற்றுலாக்கள் போகின்ற போது நமது ஆசான்களும். மாணவர்களும் சில சந்தர்ப்பங்களில் இஸ்லாத்தின் அரண்களுக்கு அப்பால் சென்று அகீதாவுக்கும், மார்க்கத்திற்கும் முரணான காரியங்களில் ஈடுபடுகின்றனர்.
இவற்றுள் மாற்றுமத வணக்கஸ்த்தலங்களுக்குள் சென்று அங்கு சொல்லப்படும் வழிகாட்டல்களுக்கமைய பூசாரிகள் பொட்டு வைத்து விடுவது, பூஜையில் கலந்து கொள்வது, தலதா மாளிகை போன்றவற்றிற்கு செல்லும் போது முற்றுமுழுக்க பௌத்த கலாசாரத்தை கடைப்பிடிப்பது, சர்வமத பிரர்த்தனைகள் என்ற பெயரில் அந்நிய மதத்தவர்களோடு சேர்ந்து (ஜெபம்) துஆ செய்வது போன்ற விடயங்கள் நிச்சயமாக ஷர்க்கை ஏற்படுத்தவதாகும்.
அதேபோல், வயதுவந்த பெண்பிள்ளைகள் வேளைக்கு தொழுகையைக் கடைப்பிடிக்காமல் தாராளமான கெட்டப்புகளில் புகைப்படம் எடுத்துக் கொள்வதும் அறிவியற் சுற்றுலாக்கள் முழவதும் விரச வார்த்தைகள், அசிங்கமான சினிமா என்பற்றோடு இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட இசையுடன் கூடிய இஸ்லாமியகீதங்கள் என்று எவ்வித பாகுபாடுமின்றி பாடுவது அசைவது, தாராளமாகவும் பரவலாகவும் நடந்து வருகின்றது.
இவ்விடயத்தில் ஆசிரியர்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் எமது பகுதியிலும் எந்த ஜாஹிலியத்துக்கள் முஸ்லிம் சமூகத்தில் தாண்டவமாடக்கூடாது என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயந்தார்களோ, அந்த ஜாஹிலியத்துக்கள் இன்றைக்கு முஸ்லிம் சமூகத்தில் ஊடுருவி அதன் உயிர்நாடிகளாகத் திகழும் அரபு மத்ரஸாக்களை ஆக்கிரமித்திருப்பதானது எம்சமூகம் வீழ்ச்சியின் விளிம்பிலேயே வீழ்ந்து கிடக்கிறது என்பதற்கு பெரியதொரு சான்றாகும்.
உண்மைகளை உரைக்க வேண்டிய உலமா சமூகமும் உறக்கத்தில் உரைந்து கிடக்கிறது.
நமது ஊரில் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா என்ற போர்வையில் ஒரு அரபுக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு இற்றைக்கு வரை சில வருட நிறைவுகளை அடைந்துள்ளது. இக்கல்லூரி இஸ்லாமிய விழுமியங்களிலும், கற்கை நெறிகளிலும் அதிக அக்கறை செலுத்தினாலும் அவ்வப்போது ஜாஹிலியத்துகளும் அவ்வரபு மதரஸாவில் தலைபோட்டுக்கொண்டே இருக்கிறது.
அறிவியல் சுற்றுலா? என்ற பெயரில் இஸ்லாமிய அறிவியலை குழிதோண்டிப்புதைத்து நவீன ஜாஹிலியத் அறிவை அரங்கேற்றி தீமைகளின் ஆழமறியா அப்பாவி மாணவ சமூகத்தையும், சேர்த்துக்கொண்டு கலை நிகழ்ச்சிகள் என்ற போர்வையைப் போர்த்தி ஈமானிற்கும் அகீதாவிற்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் சிலைகளுக்கு முன்னின்று விளக்கேற்றி வைத்து நமஸ்காரம் செய்து விட்டு வந்த உலமா சமூகத்தை என்னவென்று சொல்வது?
அவுலியாக்களின் கப்றுகளுக்கு விளக்கேற்றுவது மட்டும்தான் இவர்களுக்கு ஷர்க்காகத் தென்பட்டதோ தெரியவில்லை. இவற்றையெல்லாம் உரத்துச் சொல்ல மிம்பர் மேடைகளும் இடம்தராது.
இதில் வேதனைக்குரிய அம்சம் யாதெனில் இஜ்திஹாத் சார்ந்த மஸ்அலாக்களைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு மணிக்கணக்கில், நாட்கணக்கில், மாதக்கணக்கில் மிம்பர் மேiடைகளைப் பாழ்படுத்தியவர்கள் மிகப்பெரிய இந்த அநியாயத்தைப் பற்றிப் பேசாது வாய்மூடி மௌனிகளாக இருந்தமைதான்.
இதே நேரம் மாற்று தஃவா அமைப்புகள் இக்கீழத்தரமான நடவடிக்கையை மேற்கொண்டிருப்பின் போர்க்கொடி தூக்கி இருப்பார்கள். வெளியில் நடந்தால் ஒரு மார்க்கம், உள்வீட்டுக்குள் நடந்தால் இன்னொருமார்க்கம்.
இந்த பித்அத்தை எந்த ஸலபுகளின் கிதாபுகளில் படித்தார்களோ தெரியவில்லை (சம்பந்தப்பட்ட தாயிகள் அல்லாஹ்வை அதிகம் அஞ்சிக் கொள்ளட்டும்) சில மஸ்அலாக்களில் நாம் முரண்பட்ட போது புனிதமான மிம்பர் மேடைகளை பயன்படுத்தி மக்களின் பொன்னான நேரத்தை பாழ்படுத்தினார்கள். (இஜ்திகாத் அம்சங்களில் புலியாய் பாய்ந்தவர்கள் இஃதிகாத் (கொள்கை) அம்சங்களில் பூனையாகி போய்விட்டார்கள்) அவர்களின் பக்கச் சார்பின் தஃவா இப்போது அம்பலத்துக்கு வந்துவிட்டது. எல்லாவற்றிக்கும் அல்லாஹ் போதுமானவன் .
அதேநேரம் நமது ஊரிலிருக்கும் மற்றுமொரு பழமை வாய்ந்த அரபு மத்ரஸா அண்மையில் ஒரு நாள் சுற்றுலா என்ற பெயரில் நாளைய சமூகத்தின் தலைவர்களாக வேண்டியவர்களை நடிகர்களாக்கி நஸாராக்களின் இறக்குமதிகளில் ஒன்றான நாடக மேடைகளை அரங்கேற்றியது ஊரறிந்த உண்மையாகும்.
14ம் நூற்றாண்டின் கிறிஸ்தவர்களின் மதஆலயங்களில் மத அனுஷ்டானமாயிருந்த இந்த கலாசாரம் முஸ்லிம் சமூகத்துக்குள்ளே சிறிது சிறிதாக ஊடுருவி இஸ்லாமிய கலை என்ற மகுடத்தைச் சூட்டி புத்திசாதுரியத்தனமாக இதனை முஸ்லிம் சமூகத்திற்குள் புகுத்திய நஸாராக்களின் நரகக் காரியங்களுக்கு பச்சைக் கொடி காட்டுகிறது இவ்வாறான அறபு மதரஸாக்கள.
நாடகம் என்பது கற்பனைகளும், பித்தலாட்டங்களும், மனிதத்துவத்தைக் கீறிக் கிழிப்பதும், இறை விசுவாசியிடம் இருக்க வேண்டிய வெட்க சுபாவத்தைக் களங்கப்படுத்துவதும், உண்மைக்குப் புறம்பான கதைகளை சோடிப்பதும் ஆக பல ஹராம்கள் கலக்கப்பட்ட இஸ்லாமிய அங்கீகாரம் பெறாத கற்பனைக் காவியங்கள் என்று இந்த அறிஞர் பெருந்தகைகளுக்கு தெரியவில்லையா? பழமையான ஜாஹிலியத்துக்களில் ஊறிப்போன இவர்கள் நவீன ஜாஹிலியத்துக்களிலும் எட்டிப்பார்க்கிறார்கள் போலும்!
கனாக் காணும் காலங்கள், செல்வி, சிம்ரன் திரை போன்ற நாடகங்களை ஒளிபரப்பும் ஷைத்தானியர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? மார்க்கத்தின் மாணிக்கங்களாக திகழ வேண்டியவர்கள் மார்க்கத்தின் புனிதத்துவத்தையே கெடுத்திருக்கின்றார்கள்.
பெரும்பான்மை அறிஞர்களால் அங்கீகாரம் பெற்ற சர்வதேசப் பிறையை அங்கீகரித்ததாக குற்றம் சாட்டி மத்ரசாவையே இழுத்து மூடிய துர்ப்பாக்கியமான வரலாற்றுக்கு சொந்தக்காரர்களான இவர்கள் பெரும்பான்மை அறிஞர்களால் தடுக்கப்பட்ட ஜாஹிலியத்தை (நாடகத்தை) அரங்கேற்றியது எவ்வகையில் நியாயமாகும்.
இவைகள் தவிர எமது முஸ்லிம் சமூகத்தில் கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் உலா வரும் களியாட்டங்கள், வைரவிழாக்கள், இல்ல விளையாட்டு நிகழ்வுகளில் ஆண், பெண் கலப்புக்கள் என்ற பல அநாச்சாரங்களை எமது ஊரின் தலைமைகளும், புத்தி ஜீவிகளும் அரங்கேற்றி வருவதனை கண்ணூடாகக் காணும் போது அல்லாஹ்வின் தூதரின் எச்சரிக்கை வார்த்தைகள் தான் கண்முண்ணே வந்து நிற்கின்றன.
நிச்சயமாக இறைவன் அறிவை அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பிடுங்கி விடமாட்டான். எனினும், அறிஞர்கள் மரணிப்பதன் மூலம் அறிவைப் பிடுங்கி விடுவான். (அப்போது) மனிதர்கள் அறிவீனர்களைத் தலைவர்களாக ஆக்கிக் கொள்வார்கள். அவர்களிடத்தில் சென்று பத்வாக்களைக் கேட்க அவர்கள் (தலைவர்கள்) அறிவு ஞானம் இல்லாமல் பத்வா கொடுப்பார்கள். அதன் மூலம் அவர்களும் வழிதவறி பிறரையும் வழிதவற வைப்பார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)
ஜாஹிலிய்யத்துக்களை குழிதோண்டிப் புதைக்க வேண்டிய முஸ்லிம் சமூகம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது ஒவ்வொரு உரையிலும் உரத்துச் சொன்ன ‘கலாசாரங்களில் சிறந்த கலாசாரம் முஹம்மது நபியின் கலாசாரம்’ என்ற பொன்மொழியைக் குழிதோண்டிப் புதைத்திருக்கின்றனர்.
பெண்கள் இமாம் ஜமாஅத் நடத்த முடியும், இஃதிகாப் அனைத்துப் பள்ளிவாயல்களிலம் இருக்க முடியும் என்றெல்லாம் புனித மிம்பர் மேடைகளில் (உங்கள் பார்வையில்) சர்ச்சைக்குரிய அம்சங்களை அலசி பெறுமதியான நேரங்களைப் பாழ்படுத்திய சமூக சீர்திருத்தத்தில் அக்கறை கொண்டவர்களுக்கு இவைகளெல்லாம் பாவங்களாகத் தெரியவில்லையா? அதே போன்று மாணவர்கள் ஆசிரியருக்கு எழுந்து மரியாதை செய்யாமலிருப்பது ஒழுக்க சீர்கேடான காரியமெனக் கூறி அதற்கென்று ஆய்வு நூல் வெளியிடுகின்றோம் என்ற பெயரில் அபத்தங்களை அள்ளி இறைத்தவர்களுக்கு, பாடசாலையில் விளையாட்டுப் போட்டி என்ற பெயரில் இடம்பெறும் ஆண், பெண் கலப்புக்கள், களியாட்டங்கள் போன்றவை ஒழுக்க சீர்கேடுகளாகத் தெரியவில்லையா?
இத்தனை அநாச்சாரங்களையும் தாருல்அதர் செய்தால் தான் எதிர்ப்பார்கள் போலும்! அவ்வாறான எதிர்பார்ப்புக்கள் இருந்தால் அவற்றை உடனடியாக கைவிடுங்கள் என குறித்த சகோதரர்களை விநயமாக வேண்டிக் கொள்கின்றோம். நன்மையை ஏவித் தீமையை தடுக்கும் உன்னதமான பணியை காழ்ப்புணர்வுகளுக்காகவும் சமூக அந்தஸ்த்துக்களுக்காகவும், தலைமைப் பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் செய்வதை விடுத்து அழ்ழாஹ்வுக்காக இப்பணியில் தூய்மையான உள்ளங்களோடு ஈடுபடுமாறு விநயமாக வேண்டிக் கொள்கின்றோம்.
இனிமேலாவது தாயிகள் உறக்கத்திலிருந்து விழிப்பார்களா?
இறுதியாக,மேற்படி கட்டுரையானது எந்த தனிநபர்களையோ அல்லது நிறுவனங்களையோ இலக்கு வைத்து எழுதப்பட்டதல்ல. இந்த மாதிரியான பாவங்களை யார் செய்தாலும் இறையச்சத்தை மாத்திரம் முன்னிறுத்தி எழுதியுள்ளோம் என்பதைக் கூறிக்கொள்கின்றோம்.
source: http://dharulathar.com/