புறம் பேசினால் அமல் இழப்பு
அடுத்தவர் விவகாரங்களை தவறாகப் பேசுவது கூடாது. மிகவும் எச்சரிக்கையாக பேசவேண்டும். மற்றவரை குறைபடுத்தி பேசக்கூடாது.
துனியாவில் நாம் உதாரணம் பார்க்கலாம். தரக்குறைவாகப் பேசினால் மான நஷ்ட வழக்கு போடுகின்றனர். இவர் என்னைப் பற்றி பேசியதால் எனக்கு கண்ணியம் குறைந்து விட்டது. இவ்வளவு இழப்பு ஏற்பட்டது. என் வணிகம் படுத்துவிட்டது. வணிக நட்டம் வந்தது. இல்லாததும் பொல்லாததுமான செய்திகளை பரப்பிவிட்டார். அது உண்மையுமல்ல. நட்டத்துக்கு இவரே பொறுப்பு. ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வாங்கித் தருமாறு மனு அளிக்கின்றனர்.
ஒருவர் கஷ்டப்பட்டு உழைத்த, சம்பாதித்த, பணத்தை மாஜிஸ்டிரேட் இன்னொருவருக்கு உத்தரவிடுகிறார். எத்தகைய உழைப்புமின்றி பாதிக்கப்பட்டவர் வாங்கி செல்கிறார். தவறாக, இட்டுக்கட்டி பேசியதால் வந்த தண்டனை.
இன்னொருவரை குறித்து தவறாக புறம்பேசினால் அமல் நற்கரும பரிசு அவருக்குச் சென்றுவிடும். உமது கையை விட்டுப்போன பணம் உமக்கு நஷ்டம். அதே போன்று உமது அமல் இன்னொருவர் கணக்கில் சென்றுவிட்டால் உனக்கு இழப்பு, இழப்புதான்.
நாம் அமல் செய்கிறோம். அடுத்தவரை தரக்குறைவாக பார்த்து அமல்களை இழந்து வருகிறோம். நோன்பு பிடித்து தூங்கி தொலையுங்கள். அதுவும் இபாதத். விழித்துக் கொண்டிருந்தால் புறம்பேசி அமல்களை இழந்துவிடுகிறீர்.
நோன்பாளி தூங்கினாலும் இபாதத். புறம் கூறி அமல் பறிபோகாது. தூங்கிக் கொண்டே தொழ முடியாது. தூக்கத்தில் கஃபா தவாபு செய்ய முடியாது. தூங்கிக் கொண்டே ஹஜருல் அஸ்வத் புனித கல்லை முத்தமிட முடியாது. தூங்கிக் கொண்டே எந்த அமலும் செய்ய முடியாது. தானம் கொடுப்பதற்கும் விழிப்பு தேவை. தூக்கத்தில் தொழுகையாளி, கொடையாளியாக வாய்ப்பில்லை. ஆனால் தூக்கத்தில் நோன்பாளியாக முடியும்.
இபாதத் அறுந்துபோகவில்லை. நோன்பு தொடர்கிறது. விழிப்பு தூக்கம், நோன்பின் பயன் உண்டு. வாய் மூடியிருந்தாலே போதும். பெரிய தஸ்பீஹ். வாய் திறந்து அடுத்தவரை தரக்குறைவாகப் பேசிவிடக் கூடாது.
நான் கண்ணாடி அணிந்துள்ளேன். கண்ணாடி வழியாக உங்களை பார்க்கிறேன். கண்ணாடி பார்ப்பதில்லை. கண்ணாடி முன்னால் இருக்கிறது. என்றாலும் நான்தான் உங்களை பார்க்கிறேன். சிருஷ்டி இருகிறது. ஆனால் அதனுடன் இருந்து கொண்டு அல்லாஹ் உமது தேவையை பூர்த்தி செய்கிறான். கண்ணாடிக்கு பின்னால் ஜீவனுடன் இருப்பவன் யார். காலையிலிருந்து இரவு வரை செயல் செய்தாலும் நபிகளார் போன்று செய்தால் மட்டுமே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். இல்லையென்றால் நிராகரிப்பான்.
இறப்பு வரை எந்த செயல் செய்தாலும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்ததை மட்டும் செய்ய இயலும். அல்லாஹ்வை இல்ம், ஞானம் மூலம் பார்க்கலாம். புறக்கண்ணால் பார்க்க இயலாது. கண்களை கண்களால் பார்க்க முடியாது. முன்னால் ஒரு கண்ணாடி வேண்டும். கண்களை மேஜையில் வைத்துவிட்டால் பார்க்கமுடியாது. என் கண்களை பார்ப்பதற்கே ஒரு கண்ணாடி தேவைப்படுகிறது.
-மௌலானா பிலாலிஷாஹ் ஹஜ்ரத்
தகவல் : ஆணங்காச்சி ரசூல்முஸ்லிம் முரசு மார்ச் 2012