உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரும், பாதுகாவலரும் ஆவார்.
அல்லாஹ்வின் விதி விலக்குகளை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பின்பற்ற வேண்டும் என்று முதலில் எனக்கும் பின்பு உங்களுக்கும் உபதேசம் செய்கின்றேன்.
முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர், அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (அல்குர்ஆன் 66:6)
தாய், தந்தையர் தங்களுடைய பிள்ளைகளின் மீது எவ்வளவு கருணையும் பாசமும் காட்டுகின்றனர். தங்களுடைய பிள்ளைகளின் சுக துக்கத்திற்காகவே தங்களை மாற்றிக்கொண்டவர்கள் எத்தனைபேர்? தன்னுடைய மகனுக்கு மகளுக்கு ஒரு வயதில் என்ன உணவு கொடுக்கவேண்டும் என்பதிலிருந்து அவர்களின் வருங்கால வாழ்க்கை எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்பது வரை தீர்மானித்து வைத்து இருக்கின்றனர். அவர்கள் எந்தத் துறையில் ஆர்வமாய் இருக்கின்றார்களோ அவற்றில் அவர்களின் ஆர்வத்தை தூண்டிவிடுகின்றனர். தன் மகன் மகள் இலட்சியத்தை அடையும்வரை போராடுகின்றனர்.
ஆனால் வாழ்க்கையின் மிக முக்கியமான இம்மையிலும் மறுமையிலும் வெற்றியைத் தேடித்தருகின்ற காரியத்தைச் செய்யச் சொல்வதில் அவர்கள் மறந்து விடுகின்றனர்.
தங்களின் மகனின் மகளின் உற்றார் உறவினர்களின் சுகதுக்கத்தில் பங்கு கொள்கின்ற நாம் அவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் எவ்வளவு வேதனைப்படுகிறோம். ஆனால் தன் மகன் மகள் உற்றார் உறவினர்கள் ஒரே இறைவனை வணங்காமல் இறைவனின் ஏவல் விலக்கல்களை ஏற்காமல் வாழ்கின்றார்களே அவர்களை நேர்வழியில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோமா? இல்லை அவர்கள் செய்யும் அனாச்சாரங்களை விட்டாவது விலகி இருக்கின்றோமா?
”உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரும், பாதுகாவலரும் ஆவார். உங்களில் ஒவ்வொருவரும் அவரது கண்காணிப்பின் பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றி கேட்கப்படுவார்.” (அறிவிப்பாளர்: இப்னுஉமர், நூல்: புகாரி, முஸ்லிம்)
பெரும்பாலான தாய் தந்தையர்கள் தம் பிள்ளைகள் குடும்பத்திற்காகவே வாழ்கின்றனர். அவர்களின் இம்மையின் வருங்காலம் பிரகாசமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே பாடுபடுகின்றனர். தன் பிள்ளைகளை கண்காணித்துக்கொண்டே இருக்கின்றனர்.
நாளை தேர்வு உண்டே படிக்கவில்லையா? என்று தன் பிள்ளைகளிடம் கேட்கும் பொறுப்பாளர்களே! நாளை உங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் தேர்வு உண்டே அதற்கு தயாராகி விட்டீர்களா? உங்களை தயார் படுத்திக் கொண்டீர்களா?
பொறுப்பாளர்கள் தன் மகன் மகள் இறைவனின் அருட்கொடைகளை எண்ணி மகத்தான இறைவனுக்கு வழிபடுகின்றனரா? இல்லை, மகத்தான இறைவனின் அருட்கொடைகளை புறக்கனிக்கின்றனரா? ஒரே இறைவனை மட்டும்தான் வணங்கவேண்டும் என்பதை அவர்கள் அறியவில்லை. அறிந்திருந்தாலும் அதை அவர்கள் வெளிப்படுத்தவில்லை. லுக்மான்அலைஹிஸ்ஸலாம் தன் மகனுக்கு உபதேசம் செய்வதைப் பாருங்கள். லுக்மான் அலைஹிஸ்ஸலாம் உபதேசம் செய்தது மாதிரி நீங்கள் உபதேசம் செய்தீர்களா?
இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு; ”என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக) (அல்குர்ஆன் 31:13)
பொறுப்பாளர்கள் தம் பிள்ளைகள் பரிட்சையில் மதிப்பெண் குறைத்து வாங்கிவிட்டால் உடனே கோபப்பட்டு அடிக்கின்றீர்கள். ஆனால் தன் பிள்ளைகள் 10 வயது அடைந்த பிறகும் தொழாமல் இருப்பதற்கு எத்தனை பொறுப்பாளர்கள் உங்களது பிள்ளைகளை அடித்தீர்கள் என்று நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள். லுக்மான் அலைஹிஸ்ஸலாம் உபதேசம் செய்ததைப் பாருங்கள்.
(லுஃக்மான் தம் புதல்வரிடம்) என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் சித்து அளவே எடையுள்ளது ஆயினும்; அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன். (அல்குர்ஆன் 31:16)
”என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும். (அல்குர்ஆன் 31:17)
இவ்வாறு பெற்றோர்கள் மிக முக்கியமாக இஸ்லாமிய போதனைகளை படித்து கொடுக்காமல் இம்மையை நினைவுபடுத்தி மறுமையை நினைவூட்டவில்லையானால் தங்கள் பிள்ளைகள் மறுமையில் நஷ்டமே அடைவார்கள்.
அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் தன் சகோதரனை விட்டும் – தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்; தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும் அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும். (அல்குர்ஆன் 80:34-37)
(அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான். அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்: தன் மக்களையும்- தன் மனைவியையும், தன் சகோதரனையும்- அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்- இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்). (அல்குர்ஆன் 70:10-14)
ஆகவே நாம் இறைவன் ஒருவனையே வணங்கி அவனுடைய தூதரை மட்டுமே நமது வழிகாட்டியாக எண்ணி செயல்பட்டு நமது பிள்ளைகளுக்கும், உறவினர்களூக்கும் உபதேசம் செய்து வாழ அல்லாஹ் கிருபை செய்வானாக!