அறிவுக்கெட்டாத நிலையை, அறிவென்னும் வலை வீசிப் பிடிக்க இயலாது
[ அறிவு என்பது இரண்டு இருள்களுக்கிடையே பாயும் ஓர் ஒளிக்கீற்று ஆகும். ஆனால், அறிவானது அந்த இருளுக்கு மேலேயோ, அந்த இருளைக் கடந்தோ போக இயலாது.
அறிவு என்கிற போதைக்கு அடிமையாவது, மற்றவற்றிற்கு அடிமையாவது போலத்தான். அது வெறுமை, தனிமை, ஏமாற்றம் என்கிற பயத்திலிருந்தும், உபயோகமற்றவராகி விடுவோமோ என்கிற பயத்திலிருந்தும் தப்பிக்கச் செய்கிறது.
நாம் இறந்த காலத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய எண்ணம் இறந்த காலத்தின் அடிப்படையில் தோற்றுவிக்கப் படுகிறது. இறந்த காலம், அறிந்த நிலை (KNOWN) ஆகும். இறந்த காலத்தின் பிரதிபலிப்பு, எப்போதும் நிகழ்காலத்தை – அறிவுக் கெட்டாத நிலையை – முழுமையாக மறைத்துக் கொண்டிருக்கிறது.]
அறிவு (Knowledge)
நாங்கள் இரயிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தோம். இரயில் தாமதமாக வந்து கொண்டிருந்தது. பிளாட்பாரம் அசுத்தமாகவும், இரைச்சலாகவும் காட்சியளித்தது. சீதோஷ்ணம் எரிச்சலூட்டக் கூடியதாக இருந்தது. நிறைய பேர், எங்களைப் போலவே, வரப் போகும் இரயிலுக்காகக் காத்துக் கிடந்தார்கள்.
குழந்தைகள் அழுத வண்ணமிருந்தன. ஒரு தாய் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டிக் கொண்டிருந்தார். பிளாட்பாரக் கடைக்காரர்கள் தங்கள் பொருட்களையும், TEA , காபி போன்றவற்றையும் கூவி விற்றவாறிருந்தனர். மொத்தத்தில் அந்த இடம், சுறுசுறுப்பும், கூச்சலும், பரபரப்பும் மிக்கதாக இருந்தது.
நாங்கள், எங்கள் காலடிகள் எழுப்பும் ஓசையைக் கேட்டபடியும், எங்களைச் சுற்றிய வாழ்க்கையின் வேகமான அசைவைக் கவனித்தபடியும் பிளாட்பாரத்தில் மேலும் கீழும் நடந்து கொண்டிருந்தோம். ஒரு மனிதர் எங்களை நோக்கி வந்து, உடைந்து போன ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். எங்களை அவர் கவனித்தபடி இருந்ததாகவும், எங்களிடம் ஏதேனும் பேசுவதற்குத் தான் உந்தப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
ஓர் உன்னதமான உணர்வுடன், இனிமேல் தான் ஒரு தூய்மையான வாழ்வைத் தொடரப் போவதாகவும், அந்தக் கணத்திலிருந்து ஒருபோதும் புகை பிடிக்கப் போவதில்லை என்றும் அவர் உறுதியளித்தார். ரிக்க்ஷாக்காரக் குடும்பத்தைச் சார்ந்ததால், தான் படிக்கவில்லை என்றும் அவர் சொன்னார். ஒளி படைத்தக் கண்களும், இனிமையான புன்னகையும் கொண்டிருந்தார் அவர்.
சீக்கிரத்திலேயே இரயில் வந்தது. எங்கள் பெட்டியில் ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் ஒரு நன்கறியப்பட்ட அறிஞர். அவருக்குப் பலமொழிகள் அத்துப்படியாயிருந்தன. அந்த மொழிகளிலிருந்து அவர் எளிதாக மேற்கோள்கள் காட்ட முடிந்தது. அவர் ஆண்டாண்டு கால அனுபவமும், புலமையும், வசதியும், பேரவா நிறைந்த நோக்கங்களும் கொண்டவராயிருந்தார். அவர் தியானத்தைப் பற்றிப் பேசினார். ஆனால், அவர் தன் சொந்த அனுபவத்திலிருந்து பேசவில்லை என்கிற எண்ணத்தை அவர் பேச்சு உண்டாக்கியது
சூரியன் மறைய ஆரம்பித்திருந்த அந்தி நேரம். இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது. கால்நடைகள் வீடு திரும்பிக் கொண்டிருந்தன. அதனால் கிளம்புகிற பொன்னிற தூசித் துகள்கள். தொடுவானத்தில் கருத்த பெருமேகங்கள் திரண்டிருந்தன. தூரத்தே ஓர் இடிமுழக்கம் கேட்டது. பச்சை வயல்கள் பார்ப்பதற்கு எவ்வளவு பரவசமானவை! வளைந்து நெளிந்து போகிற மலையின் மடிப்பிலே நிற்கிற அந்தக் கிராமம்தான் எவ்வளவு அழகாய் இருக்கிறது! இருள் கவிந்து கொண்டிருந்தது. ஒரு பெரிய நீல மான் புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. கர்ஜித்தபடி செல்கிற இரயிலை அது ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
அறிவு என்பது இரண்டு இருள்களுக்கிடையே பாயும் ஓர் ஒளிக்கீற்று ஆகும். ஆனால், அறிவானது அந்த இருளுக்கு மேலேயோ, அந்த இருளைக் கடந்தோ போக இயலாது. அறிவு நிபுணத்துவத்திற்கு அத்யாவசியமானது – எஞ்சினுக்குக் கரியைப் போல. ஆனால், அது அறிவுக்கெட்டாத நிலையை (UNKNOWN) எட்டித் தொட இயலாது. அறிவுக்கெட்டாத நிலையை, அறிவென்னும் வலை வீசிப் பிடிக்க இயலாது. அறிவுக்கெட்டாத நிலை உண்டாக, அறிவு புறந்தள்ளி வைக்கப்பட வேண்டும். ஆனால், அறிவை அப்படிப் புறந்தள்ளி வைப்பது எவ்வளவு கடினமானது!
நாம் இறந்த காலத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய எண்ணம் இறந்த காலத்தின் அடிப்படையில் தோற்றுவிக்கப் படுகிறது. இறந்த காலம், அறிந்த நிலை (KNOWN) ஆகும். இறந்த காலத்தின் பிரதிபலிப்பு, எப்போதும் நிகழ்காலத்தை – அறிவுக் கெட்டாத நிலையை – முழுமையாக மறைத்துக் கொண்டிருக்கிறது. எதிர்காலம் என்பது, இறந்த காலமானது தன்னை நிச்சயமற்ற நிகழ்காலத்தின் வழியே உந்திச் செல்வது ஆகும். இந்தப் பிளவு, இந்த இடைவெளி – தொடர்ச்சியாக இல்லாமல், விட்டு விட்டு எரிகிற, அறிவு என்கிற விளக்கினால் நிறைக்கப்பட்டு, நிகழ்காலத்தின் வெறுமை மூடப்படுகிறது. ஆனால், அந்த வெறுமையே வாழ்வின் அதிசயத்தைத் தாங்கி நிற்கிறது.
அறிவு என்கிற போதைக்கு அடிமையாவது, மற்றவற்றிற்கு அடிமையாவது போலத்தான். அது வெறுமை, தனிமை, ஏமாற்றம் என்கிற பயத்திலிருந்தும், உபயோகமற்றவராகி விடுவோமோ என்கிற பயத்திலிருந்தும் தப்பிக்கச் செய்கிறது. அறிவின் வெளிச்சமென்னும் நுண்ணிய மூடியின் கீழ் உறையும் இருளை மனம் ஊடுருவ முடியாது. மனமானது இந்த அறிவுக்கெட்டாத நிலை குறித்துக் கலங்கி அஞ்சுகிறது. எனவே, அது அறிவு, கோட்பாடுகள், எதிர்பார்ப்பு, கற்பனை ஆகியவற்றுள் தன்னை நுழைத்துத் தப்பித்துக் கொள்கிறது. ஆகவே, இந்த அறிவானது, அறிவுக்கெட்டாத நிலையை அறியவும் புரிந்து கொள்ளவும் உதவாத தடைக்கல்லே ஆகும். அறிவைப் புறந்தள்ளி வைப்பது, பயத்தை வரவேற்பது போலாகும்.
அதே போல், அறிவுணர்வின் உபகரணமாகத் திகழும் மனத்தை மறுதலிப்பது, துயரத்திற்கும், உணர்வுகள் பொங்குகிற மகிழ்விற்கும் இடம் கொடுப்பதாகும். ஆனால், அறிவைப் புறந்தள்ளி வைப்பது அவ்வளவு சுலபமல்ல. அறிவிலியாக (IGNORANT) இருத்தல், அறிவிலிருந்து விடுதலை பெற்ற நிலை அல்ல. அஞ்ஞானம் (IGNORANCE) என்பது சுய-விழிப்புணர்வு நிலையின் பற்றாக்குறையாகும். சுயத்தை – நான் என்கிற நிலையை – புரிந்து கொள்கிற வழிகள் சொல்லவில்லையெனில், அறிவும் கூட அஞ்ஞானமே. சுயத்தை – நான் என்கிற நிலையைப் – புரிந்து கொள்வதே அறிவிலிருந்து விடுதலை ஆகும்.
– ஜே. கிருஷ்ணமூர்த்தி