சத்தியமா…? ஜாக்கிரதை!
மவ்லவீ, லியாகத் அலீ மன்பஈ
“உங்களின் சத்தியங்களில் வீணானவற்றைக் கொண்டு அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான். எனினும், உங்கள் உள்ளங்கள் உறுதியிட்டுச் செய்த சத்தியங்களைக் கொண்டே உங்களை அவன் குற்றம் பிடிப்பான். அல்லாஹ் மிக மன்னிப்பவன், சாந்தமானவன். (அல்குர்ஆன் 2:225)
சத்தியம் செய்யுங்கள் என்றோ, செய்யக்கூடாது என்றோ கட்டளை ஏதுமின்றி, எந்த சத்தியத்தால் நமக்கு குற்றம் உண்டாகும்? எதனால் உண்டாகாது? என்ற விளக்கத்தை இவ்வசனம் தருகின்றது.
சத்தியம் ஏன்?
பொதுவாக மனிதர்கள் தாங்கள் சொல்வதை மற்றவர் நம்ப வேண்டும் என்பதற்காக பயன்படுத்தும் அதிகபட்சமான வார்த்தைதான் சத்தியம் என்பது. குக்கிராமத்து குழந்தை முதல் கோர்ட் வரை இவ்வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அப்படியானால் இதுபற்றிய விதிமுறைகளை நாம் அறியத்தானே வேண்டும்! அதை ஒவ்வொன்றாகப் பார்ப்போமே!
சத்தியம் என்றால் என்ன?
ஒருவன் தன் தரப்பு வாதத்தை உறுதி செய்வதற்கு எதிரிகள் உட்பட எல்லோரும் அதை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு வேறு எந்த வகையிலும் சாட்சியங்களோ, ஆதாரங்களோ இல்லாத நிலையில் “சத்தியமாக” என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும் என்பதை எல்லா மதத்தினரும், எல்லா மொழியினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதனை செயல்படுத்தியும் வருகின்றனர்.
சத்தியம் என்றால் தமிழில் உண்மை என்று பொருள். (சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது என்பது போல).
அதே சொல் தான் அறுதியிட்டு உறுதியாகக் கூறும் விஷயத்துக்கும் பயன்படுகின்றது. ஆனால், அரபியில் உண்மை என்பதற்கு பயன்படுத்தப்படும் சொல் வேறு. சத்தியத்துக்கு பயன்படும் சொல் வேறு. உண்மைக்கு “ஹக்” என்றும், சத்தியத்துக்கு “யமீன்” என்றும் இரு தனிதனிச் சொற்கள் உள்ளன. ஏனெனில், சத்தியம் செய்பவன் உண்மைதான் உரைக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. “பொய் சத்தியம்” என்று சர்வசாதாரணமாகச் சொல்வதுண்டு. எனவே அரபியில் பயன்படுத்தப்படும் “யமீன்” என்ற சொல்லின் பன்மை இவ்விறை வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. “அய்மான்” என!
இரு வகை சத்தியங்கள்
அத்துடன் சத்தியங்களில் வீணானவை, வேண்டுமென்று செய்பவை என இரண்டு வகையான சத்தியங்களைப்பற்றி இவ்வசனம் பேசுகிறது. “உண்மைச்சத்தியம், பொய்ச்சத்தியம் என்றுதான் நாம் கேள்வி பட்டுள்ளோம். வீண் சத்தியம், வேண்டுமென்று சத்தியம் என்பது புதுமையாக இருக்கிறதே!” என்று நீங்கள் நினைக்கிறீர்கள் இல்லையா? அதற்கான விளக்கத்தைத் தஃப்ஸீர்கள் இப்படிக் கூறுகின்றன.
“அரபியர்கள் எதற்கெடுத்தாலும் சத்தியம் செய்பவர்களாக இருந்தனர். (லாவல்லாஹி) சத்தியமாக உண்டு (பலாவல்லாஹி) சத்தியமாக இல்லை என்று கூறுவது அவர்களின் சர்வசாதாரண வழக்கமாக இருந்தது. இவ்வாறான வார்த்தைகளினால் தன்னையறியாமலேயே அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்வது, அரபிகளின் பேச்சு வழக்கமாக வந்ததால், புனித இஸ்லாமில் இணைந்த பிறகும் இவ்வழக்கத்தைக் கடைப்பிடித்தே வந்தனர். இவ்வாறு எடுத்ததற்கெல்லாம் சத்தியம் செய்வதால் சத்தியத்தின் பரிகாரமாக ஏதேனும் செய்ய வேண்டுமோ என்ற ஐயம் பலருக்கும் எழுந்தது. எனவேதான் அவர்களின் ஐயத்துக்குத் தெளிவாக இவ்வசனம் இறங்கியது” என்று அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாக தஃப்ஸீர்கள் தெளிவுபடுத்துகின்றன.
குற்றம் தரும் சத்தியம்
இதன் மூலம் சத்தியம் செய்யும் நோக்கம் இன்றி பேச்சுவாக்கில் வருகின்ற வார்த்தைக்கு இறைவன் குற்றம்பிடிப்பதில்லை. எனினும் உள்ளத்தில் உறுதியுடன், தான் சொல்வதை முன்னால் இருப்பவர்கள் நம்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் சத்தியம் செய்வதுதான் சத்தியத்தின் சட்டத்துக்கு உட்பட்டதாக அமையும். அவ்வாறு சத்தியம் செய்தால் அதில் உறுதியாக இருக்க வேண்டும். அவ்வாறு இன்றி, அந்த சத்தியம் செயல்படுத்த முடியாமல் போய்விட்டால் அதற்குப் பரிகாரம் செய்வது கடமையாகும். அது என்ன பரிகாரம்? என்பதை மற்றோர் இறைவசனம் கூறுகின்றது.
மூன்று பரிகாரங்கள்
“ உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது, உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். ஆனால் (இம் மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்; நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும். உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு நள்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை – ஆயத்களை – உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான்.” (அல்குர்ஆன் 5:89)
ஆக, மனமறிந்து செய்யாமல் பேச்சுவாக்கில் வாய் தவறிச் செய்துவிடும் சத்தியத்துக்குப் பரிகாரம் தேவையில்லை என்றும், வேன்டுமென்று செய்யப்படும் சத்தியங்களே சட்டத்தின் கீழ் வரும் என்றும் இறைவசனங்கள் கூறிவிட்ட பிறகு சத்தியம் பற்றிய சட்ட விளக்கங்களைப் பல நபிமொழிகள் நன்கு புலப்படுத்துகின்றன. அவற்றையும் பார்ப்போம்.
யார் மீது சத்தியம்?
“சத்தியம் செய்பவர் யாராக இருந்தாலும் அவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்ய வேண்டும். அல்லது வாய் பொத்தி இருக்க வேண்டும். மாறாக உங்கள் தாய் தந்தையர் மீதோ அல்லாஹ் அல்லாத மற்ற எவர் மீதோ சத்தியம் செய்வது கூடாது.”
“அல்லாஹ் அல்லாதவர்களைக் கொண்டு ஒருவர் சத்தியம் செய்தால் அவர் இணை வைத்தவராகி விட்டார்.”
இந்த நபிமொழிகளின் அடிப்படையில் (நூல்: அஹமது) ஒருவர் அல்லாஹ் அல்லாத எதன் மீது சத்தியம் செய்தாலும் அது சத்தியமாக கருதப்பட மாட்டாது. உதாரணமாக குர்ஆன் மீது, நபியின் மீது, கஃபாவின் மீது என சத்தியம் செய்தாலும் அது சத்தியமாக கருதப்பட மாட்டாது. மாறாக, அவ்வாறு செய்வது பெரும் பாவமாகும். இணை வைப்பதற்கு நெருக்கமாகக் கொண்டு போய் விடும். எனவே அல்லாஹ்வைத் தவிர வேறு எதன் மீது சத்தியம் செய்தாலும் அது சத்தியமாக ஆகாது. எனவே அதற்குப் பரிகாரம் தேவையில்லை. ஆனால், அது பாவம் என்பதால் அதற்காக தவ்பாச் செய்வது அவசியமாகும்.
“லாத் – உஸ்ஸா எனும் பொய் தெய்வங்கள் மீது எவரேனும் சத்தியம் செய்தால் உடனே “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று கூறித் தம் ஈமானை புதுப்பிக்க வேண்டும்” என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பதால் (நூல்: புகாரி, முஸ்லிம்) அல்லாஹ் அல்லாத எப்பொருளின் மீதும் ஏன் குர்ஆன் ஷரீஃப் மீது கூட சத்தியம் செய்யக் கூடாது.
கோர்ட்டில் குர்ஆன்
நீதிமன்றங்களில் கூண்டில் ஏற்றப்படும் சாட்சிகள் முஸ்லிம்கள் என்றால் அவர்களிடம் குர்ஆன் ஷரீஃபைக் கொடுது “நான் சொல்வது எல்லாம் உண்மை” என்று சத்தியம் செய்யச் சொல்வதாக நாம் கேள்விப்பட்டுள்ளோம். இது உண்மை எனில் குர்ஆனைக் கையில் வாங்கி “இந்தக் குர்ஆனுடைய இறைவன் மீது சத்தியமாக” என்று சொல்ல வேண்டுமே தவிர “குர்ஆனின் மீது சத்தியமாக” என்று கூறிவிடக்கூடாது.
பாவத்துக்கு சத்தியமா?
இந்த அடிப்படையில் ஒரு காரியத்தைத் தான் செய்யப்போவதாக சத்தியமிட்டுச் சொல்லி விட்டால் அதை நிறைவேற்றியாக வேண்டும். சக்தியிருந்து நிறைவேற்றாவிட்டாலும், நிறைவேற்ற சக்தியில்லாவிட்டாலும் அதற்கு பரிகாரம் செய்வது கட்டாயமாகும். அந்த காரியம் மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்டதாக இருந்தால்தான் அதை நிறைவேற்றுவது கட்டாயமாகும். மாறாக ஒரு பாவத்தைச் செய்வதாக சத்தியம் செய்து விட்டாலோ அல்லது ஒரு நன்மையை செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தாலோ அந்தச் சத்தியத்தை நிறைவேற்றக்கூடாது. அந்தச் சத்தியத்துக்குப் பரிகாரம் செய்வதும் கட்டாயமாகிவிடும். இதுபற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே இப்படிக் கூறுகிறார்கள்.
“நான் ஒன்றைச் செய்வதாகச் சத்தியம் செய்துவிட்டு அதை விடச்சிறந்ததாக வேறு ஒன்றைக் கருதினால் அந்த வேறொன்றைத்தான் செய்வேன். அதே நேரத்தில் சத்தியம் செய்ததற்காகப் பரிகாரமும் செய்து விடுவேன்.” (நூல்: புகாரி, முஸ்லிம்)
உறவை முறிக்கும் சத்தியம் :
இன்று மட்டுமல்ல அன்றும் பல தோழர்கள் தன் உறவினர் மீது கோபம் வந்துவிட்ட நேரங்களில் அவருடன் பேசுவதில்லை என்றும், அவருக்கு எந்த உதவியும் செய்வதில்லை என்றும் சத்தியமிட்டுக் கூறுபவர்களாக இருந்தனர். இதுபோன்ற நிலை ஹளரத் அபூபக்கர் சித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் ஏற்பட்டது. ஆம்! அவர்களின் அருமைப்புதல்வியும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்புத் துணைவியுமாகிய அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் மீது அவதூறு சொன்ன மாபெரும் குற்றத்தில் ஈடுபட்டதற்காக தம் உறவினரும், ஏழையுமாகிய மிஸ்தஹ் ரளியல்லாஹு அன்ஹு என்பவர் மீது கடும் சினமுற்று அவருக்கு இதுவரை வழங்கி வந்த அன்றாட உதவித்தொகையை நிறுத்திவிடுவதென்றும், இனி கொடுப்பதே இல்லை என்றும் அவர்கள் சத்தியம் செய்து விட்டார்கள்.
நீங்கள் மன்னித்தால் நான் மன்னிப்பேன்
அப்போது தான் பின்வரும் இந்த வசனம் இறங்கியது.
“இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன்.” (அல்குர்ஆன் 24:22)
அற்புத மாற்றம்
இவ்வசனம் தன் செவியில் பட்டதுதான் தாமதம். உடனே சித்தீகுல் அக்பர் ஹளரத் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்களாம், “ஆம்! என் இறைவன் என்னை மன்னிக்க வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன். எனவே மிஸ்தஹை நான் மன்னிக்கின்றேன். அதுமட்டுமல்ல, இனி அவருக்கு எக்காலமும் உதவியை நிறுத்த மாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன்” என்று சொன்னது மட்டுமல்ல, செய்தார்கள். அந்த மிஸ்தஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு – தம் மகளின்மீது அவதூறு சொல்வதில் ஈடுபட்டவருக்கு இதற்கு முன்னர் கொடுத்து வந்ததைப் போல இரு மடங்கு கொடுத்து வந்தார்கள் என சில அறிவிப்புகள் உள்ளன.
செத்தாலும் முழிக்க மாட்டேன்
இது போன்ற பிரச்சனைகள் எங்கும், எப்பொழுதும் இருக்கத்தான் செய்யும். கோபம் வந்தவுடன் சத்தியமாக இனிமேல் பேச மாட்டேன்… நீ செத்தாலும் உன் முகத்தில் முழிக்க மாட்டேன்… நான் செத்தாலும் என் முகத்தில் நீ முழிக்கக் கூடாது… என சண்டாமருதம் செய்து கொள்வது எல்லாக் குடும்பங்களிலும் சகஜம் தான். ஆனால், அவ்வாறு தாம் செய்த சத்தியத்தை முறிக்கவும் வேண்டும். அதற்காகப் பத்து ஏழைகளுக்கு உணவு கொடுத்துப் பரிகாரம் செய்யவும் வேண்டும். அவ்வாறின்றி, தாம் சொன்னது சொன்னது தான் என்று பேசாமல் இருந்தால் என்னவாகும் என்பதைக் கீழ்காணும் நபிமொழி பயங்கரமாக எச்சரிக்கிறது.
நேரடி நரகம்
“ஒரு முஸ்லிம், தன் சகோதரருடன் (இன்னொரு முஸ்லிமுடன்) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்கக் கூடாது” (நூல்: புகாரி, முஸ்லிம்)
“அவ்வாறு பேசாமல் இருக்கும் நிலையில் இவர் மரணமடைந்தால் நேரடியாக நரகம் தான் செல்வார்.” (நூல்: அஹமது, அபூ தாவூது)
“ஒவ்வொரு திங்கட் கிழமையும், வியாழக் கிழமையும் அல்லாஹ்வுக்கு இணை வைக்காத எல்லா முஸ்லிம்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப் படுகின்றது. ஆனால், பேசாமல் இருக்கும் இருவருக்கு மட்டும் மன்னிப்பு வழங்கப்படுவதில்லை. “இவ்விருவரும்” பேசிக்கொள்ளும் காலம் வரை மன்னிப்புக் கிடையாது என்று கூறப்பட்டுவிடும்.” (நூல்: முஸ்லிம்)
உறவும் பரிகாரமும் :
எனவே சத்திய்ம் செய்துவிட்டோம் என்பதை காரணமாகக் காட்டி உறவை முறிக்கக் கூடாது. உறவைப் புதுப்பிக்கவும் வேண்டும். செய்த சத்தியத்துக்காகப் பரிகாரம் பத்து ஏழைகளுக்கு வயிறார சாப்பாடு கொடுக்கவும் வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி, சத்தியம் செய்வதற்கு முன் எப்போதும் உஷாராக, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக தாய்மார்களே! இது உங்களுக்கும் தான் எச்சரிக்கை! முகத்தில் முழிக்காதே என்ற வீராப்பு வசனம் உங்களிடத்தில் தானே சர்வசாதாரணமாக உல வருகின்றது!
பொய் சத்தியம்
இனி ஒரு காரியத்தைச் செய்வதற்காகவோ செய்யாமலிருப்பதற்காகவோ சத்தியம் செய்வது பற்றிய சட்டங்களைத் தான் இதுவரை சொல்லி வந்தோம்.
ஏற்கனவே செய்துவிட்ட ஒரு காரியத்தை செய்யவில்லை என்று மறுப்பதற்கோ, செய்யாததைச் செய்துவிட்டதாக சாதித்துப் பேசுவதற்கோ சத்தியம் செய்வது ஷரீ அத்தில் பாபெரும் பாவமாகக் கருதப்படும். இதற்குப் பொய் சத்தியம் என்று சொல்லப்படுகிறது.
மாபெரும் பாவம்
“உங்களை அழிக்கக்கூடிய மாபெரும் பாவங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்”. என்று எச்சரித்துள்ள அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
1. அல்லாஹ்வுக்கு இணை வைப்பது,
2. பெற்றோரை இம்சிப்பது,
3. கொலை செய்வது,
4. பொய் சத்தியம் செய்வது – என்று கூறி, பொய் சத்தியம் செய்வது மிகக் கொடிய பாவம் என எச்சரித்தார்கள்.: (நூல்: புகாரி)
எனவே எவ்வளவு இலாபம் கிடைப்பதாக இருந்தாலும், எதை இழப்பதாக இருந்தாலும் பொய் சத்தியம் செய்வதை முற்றாக தவிர்ப்பது முஸ்லிம்களின் கடமையாகும்.
திருந்த வழியுண்டா?
இவ்வாறு பொய் சத்தியம் செய்தால் அதற்கும் பரிகாரம் செய்ய வேண்டுமா? என்பது பற்றி இமாம்களிடம் கருத்து வேறுபாடு நிலவுகிறது. இம்மாபெரும் பாவத்துக்கு, பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது போன்றவை பரிகாரம் ஆகாது. எனவே இதற்காகத் தனியாக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டுத் “தவ்பா”ச் செய்வதும், யாரிடம் பொய் சத்தியம் செய்தானோ அவரிடம் விஷயத்தை விளக்கி அதனால் ஏற்பட்ட நஷ்டத்தை சரிகட்டுவதும் அவசியமாகும் என்பது ஹனஃபி மத்ஹபின் நிலைப்பாடாகும்.
பரிகாரம் கொடுக்கவும் வேண்டும். தவ்பாவும் செய்ய வேண்டும் என மற்ற சில இமாம்களும் கூறி இருப்பதால் பரிகாரமும் கொடுத்துத் தவ்பாவும் செய்வது மிகச் சிறந்ததாகும். சத்தியம் செய்ததால்தானே இவ்வளவு பிரச்சனை! வாயைக் கொடுப்பானேன், வம்பை விளைக்கு வாங்குவானேன்!
“என் வாழ்நாளில் நன்மையாகவோ, பாவமாகவோ, உண்மையாகவோ, பொய்யாகவோ நான் எதற்கும் சத்தியம் செய்ததே இல்லை” என்று இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியிருப்பதை கவனத்தில் கொண்டு சத்தியத்திலிருந்து நம் நாவை முற்றாக விலகச் செய்வதே மிக மிகப் பேணுதலாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.
www.nidur.info