குடும்ப முன்னேற்றத்திற்கு தடையாக நிற்கும் பெண்கள்!
இன்றைய சூழலில் படித்த அனைவருக்கும் பாதுகாப்பான அரசு வேலை கிடைப்பது சாத்தியமில்லை. தனியார் துறையும் மாத சம்பளத்திற்கு எல்லோருக்கும் வேலை கொடுத்துவிட முடியாது. ஏதேனும் சொந்தமாக தொழில் துவங்கி முன்னேறுவதே வழி. திருமணமான ஆண்கள் இத்தகைய முயற்சி எடுப்பதை பெண்கள் ஆதரிப்பதில்லை.
’’இங்கு வரும் பெண்களில் பெரும்பாலானோர் எதிர்மறை சிந்தனை(Negative thinking) கொண்டவர்களாக இருக்கிறார்கள்” என்கிறார் சுய தொழில் துவங்க ஆலோசனை வழங்கும் நண்பர் ஒருவர். பெண்கள் திரும்பத்திரும்ப ”நஷ்டம் ஆகி விட்டால் என்ன செய்வது?” என்பதையே அதிகம் கேட்கிறார்கள். ஒரு உதாரணத்தையும் கூறினார்.
சாதாரண அரசுப்பணியிலிருந்து பணி ஓய்வு பெற்றவரின் மகன் அவர்.படிப்பு,தந்தை சொத்து இவ்ற்றை வைத்து திருமணமும் ஆகி விட்ட்து. ஒரு தனியார் கம்பெனியில் வேலையில் இருந்தார். நாளாக நாளாக வருமானம் போதவில்லை. இப்போது தந்தையும் இல்லை.சில லட்சங்கள் கையில் இருந்த்து. சொந்தமாக வீடு கட்டவேண்டும் என்பது உள்ளிட்ட ஏராளமான எதிர்பார்ப்புகள். திறமையான ஆள். எவ்வளவோ முயற்சி செய்தும் அவர் மனைவி தொழில் துவங்க மறுத்து விட்டார்.அவர் மனைவி சொன்ன காரணம் எதற்கு ரிஸ்க் என்பதுதான்.
இதை பாதுகாப்பு உணர்வு என்று சொல்ல முடியாது.எதையும் பாசிடிவ்வாக எண்ணாமல் இருப்பதுதான். எத்தனையோ பேர் தொழில் துவங்கி இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர்களில் பெண்களும் உண்டு. அவர்களை உதாரணமாக கொள்ளாமல் அவநம்பிக்கையுடன் சிந்திப்பது குடும்பத்திற்கு மட்டும் அல்ல, நாட்டிற்கும் இழப்புதான்.
சுயமாக தொழில் துவங்குவது போன்ற ரிஸ்க் எடுக்கும்போது உடனிருப்பவர்களின் உணர்வுப்பூர்வமான ஆதரவு தேவை. கூட்டுக்குடும்பங்கள் மறைந்து போனதன் கெடு பலன்களில் இது முக்கியமானது. தைரியம் சொல்லவும், புரிந்து கொள்ளவும் இப்போது யாரும் இல்லை. மனைவி மட்டுமே உடன் இருக்கிறார். அவரும் அவநம்பிக்கையுடன் இருக்கிறார்.
பொதுவாகவே பெண்கள் ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டார்கள் பாதுகாப்பான நிலையையே தேர்ந்தெடுப்பார்கள் என்கிறார்கள். சுயமாக தொழில் துவங்கி முன்னேறிய பெண்களுக்கு பின்னணி நல்ல விதமாக இருக்கலாம். இதில் விதிவிலக்கு இருக்கவும் வாய்ப்புண்டு. பெண்களுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கற்றுத்தராமல் ஜாக்கிரதை, ஜாக்கிரதை என்றே சமூகம் சொல்லிக்கொண்டிருக்கிறது.
பெண்களிடம் எதிர்மறை சிந்தனையை தொலைக்காட்சித் தொடர்கள்தான் வளர்த்துக்கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது. ஒரு தன்னம்பிக்கை தரும் நூல் நல்ல முயற்சிகளை, எண்ணங்களை ஏற்படுத்துவது போல சீரியலகள் நஞ்சை மனதில் ஏற்றிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் மோசமான திருப்பங்களையும், சோகங்களையுமே பார்க்கும் மனம் புதிதாக துவங்கும் எந்த முயற்சியையும் நெகடிவ்வாகவே பார்க்கும். இது ஒரு மோசமான நிலை.பெரும் சுழலில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.