நோயின் ரகசியம்!
ஹாஃபிள் A.J.கலீஃபுல்லாஹ், வளவனூர்
[ 1. பாவங்களைக் குறைப்பதற்காக, 2. அந்தஸ்தை உயர்த்துவதற்காக. இவ்விரு காரணத்திற்காகத்தான் நோய் ஏற்படுகிறது.]
மனிதனாய் பிறந்துவிட்ட அனைவருமே ஏதேனும் ஒரு சோதனைக்குள் அகப்படுவர் என்பது காலத்தின் நியதி. இவை மனிதனாலேயே மனிதனுக்கு ஏற்படுவதல்ல. மனித சக்திகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட இறைவனின் நாட்டப்படி நிகழ்கின்றது.
மனித சோதனையில் நோய் முக்கிய அங்கம் வகிக்கிறது. எனவே இங்கு நோய் ஏன் ஏற்படுகிறது? நோய் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? இதனால் கிடைக்கும் பிரதிபலன் என்ன? போன்றவைகளை சற்று அலசிப்பார்ப்போம்.
சோதனைகளைப்பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது, “உங்களில் யார் அழகிய நற்கருமங்கள் செய்கிறார்கள் என்பதை அறிவதற்காகவே நாம் உங்களை சோதிக்கின்றோம்” (அல்குர்ஆன் 67:2) என்று கூறுகின்றான்.
மேற்கூறப்பட்ட இறைவசனத்திலிருந்து மனிதன் ஏன் சோதிக்கப்படுகிறான் என்பது தெளிவாகின்றது. மனிதன் எந்தச் சூழலிலும் மனம் தளராது நற்காரியங்கள் செய்கின்றனரா என்பதை அல்லாஹ் பார்க்க விரும்புகிறான்.
மேலும் நபிமொழிகளான ஹதீஸ்களை ஆராயும் பொழுது மனிதர்களுக்கு நோய் வருவது இரண்டு காரணங்களினால்தான் என்பது புலனாகின்றது.
1. பாவங்களைக் குறைப்பதற்காக,
2. அந்தஸ்தை உயர்த்துவதற்காக.
இவ்விரு காரணத்திற்காகத்தான் நோய் ஏற்படுகிறது.
ஒரு மனிதனுக்கு மிக அதிகமாக நோயைக் கொடுத்து அல்லாஹ் சோதிக்கின்றான் என்றால், அவனை ஏதோ ஒரு நற்காரியத்திற்காகத் தேர்ந்தெடுக்கின்றான் என்று பொருள். இவ்வுலகில் பயன் கிட்டவில்லையென்றாலும் மறுமையில் கிடைப்பது உறுதி.
எனவே நோய்வாய்ப்பட்டவர்கள் மனம் தளர்ந்து விடாமல் இருப்பதும், அதிகமாக ”துஆ”ச் செய்வதும் அவசியமாகும். ஏனெனில், “நோயாளியைச் சந்தித்தால் து ஆச்செய்யும்படி அவர்களிடன் கூறுங்கள். நோயாளிகளின் ”துஆ”, மலக்குமார்களின் ”துஆ” போன்றதாகும்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: இப்னு மாஜா)
முஸ்லிம் சகோதரர்கள் நோய்வாய்ப்பட்டால் அவரிடம் சென்று நலம் விசாரிப்பது இஸ்லாமிய அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். (ஆதாரம்: முஸ்லிம்) மேலும் இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழமைகளிலும் உள்ளதாகும்.
நோயாளிகளை நலம் விச்சாரிக்கவில்லையெனில் அதைப் பற்றியும் கியாமத் நாளில் விசாரணை செய்யப்படும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்; “அல்லாஹுத்தஆலா கியாமத் நாளில் அடியார்களைப் பார்த்து, ‘ஏ ஆதமின் மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேனே, ஏன் என்னிடம் நீ நலன் விசாரிக்க வரவில்லை?’ என்று கேட்பான். அதற்கு அடியான், ‘இறைவனே! நீயோ அகிலத்தின் பரிபாலன். உன்னை நான் எவ்வாறு நலன் விசாரிக்க முடியும்?’ என்று கூறுவான். பின்பு இறைவன் ‘உலகில் இன்ன மனிதன் நோயுற்று இருந்தானே! அவனை நீ சென்று நலன் விசாரிக்க வில்லையே, ஏன்?’ என்று விச்சரணை நடத்துவான்.” (நூல்: முஸ்லிம்)
இதன் மூலம் நோயுற்றவரை விசாரிப்பது எந்தளவிற்கு தலையாயக் கடமை என்பது புரிகின்றது.
நோயுற்றோரை விசாரித்து ஆறுதல் கூறுவதன் மூலம் நோயாளிக்கு நிம்மதி ஏற்பட்டு நோய் குணமாகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளத்தில் தோன்றி நோய் குறைய வாய்ப்பு ஏற்படுகிறது என்பது மருத்துவ அறிஞர்களின் கூற்றாகும்.
இதுபோன்ற விஷயங்களை அடிப்படையாக வைத்து பார்க்கிறபோது மனிதனுக்கு நோய் உண்டாவதே ஒரு இறை அருள் (ரஹ்மத்) என்பது மிகத் தெளிவாகவே புரிகின்றது.
விஷயம் இவ்வாறிருக்க நம்மில் அநேகர் நோய்வாய்பட்டு விட்டால் அல்லாஹவை வசைபாடி இறைக்கோபத்திற்கு ஆளாகிவிடுகின்றோம். நோயின் மூலம் ஆவேசப்படுவதால் அல்லல் படுவது நாம் தான் என்பதை உணர்ந்துகொண்டோமானால் பிரச்சனைகளுக்கு வாய்ப்பிருக்காது.
எனவே, ஒவ்வொரு விஷயங்களும் ஏன் உண்டாகின்றது என்ற அடிப்படை ரகசியங்களை அறிந்து பொறுமையுடன் சகித்துக்கொல்வது வாழ்வை வளமாக்கும், ஈருலகிலும் நற்பயன் கிட்டும்.
www.nidur.info