திருமணம் என்பது விளையாட்டல்ல
இளம் பெண்களால் ஏற்படும் பிரச்சினைகள் சமீபகாலங்களில் அதிகரித்து வருகின்றன. இளம் பெண்களின் பெற்றோர் உஷாராக இருந்து அவர்களை வழிநடத்தவேண்டும். இப்படி…!
o உங்களுக்கு கிடைத்த அனுபவங்களை வைத்துக்கொண்டு, நீங்கள் சந்தித்த பெண்களை நினைத்துக்கொண்டு உங்கள் மகளை சந்தேகப்பட வேண்டாம். அவர்களை ஓரளவு கண்காணிக்க வேண்டும் என்பது அவசியம்தான். அதற்காக அவர்களது ஒவ்வொரு செயலிலும் மூக்கை நுழைப்பது அவசியமற்றது.
o மகளை தனியாக இருக்கவும், தனிமையில் இருந்து சிந்திக்கவும் அதிக வாய்ப்புகளை கொடுக்கவேண்டாம். தனிமையை விரும்பும் பெண்கள் தன்னம்பிக்கை குறைந்தவர்களாகவும், எளிதாக காதல் வசப்பட்டு விடுபவர்களாகவும், சின்னச் சின்ன தோல்விகளைக்கூட தாங்க முடியாதவர்களாகவும் இருப்பதுண்டு.
o மகளின் படிப்பு, வேலை, எதிர்காலம், திருமணம் பற்றிய உங்கள் கனவு எப்படி இருக்கிறது என்பதை அவளிடம் உணர்த்துங்கள்.
o நமது பாரம்பரியம், ஒழுக்கம், கலாசாரம் போன்றவைகளை அடிக்கடி மகளிடம் சொல்லிக்காட்டாமல் நீங்கள் அதன்படி நடந்து காட்டுங்கள். அதுதான் அவளையும் நல்வழிப்படுத்தும்.
o நீங்கள் அவளுக்கு கொடுக்கும் எல்லா சுதந்திரமும் எல்லைக்குள் இருக்கட்டும். `நீ எதை வேண்டுமானாலும் படி… நீ எந்த வேலையானாலும் பார்… நீ எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் செல்.. நீ யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்…’ என்பது போல் சுதந்திர எல்லையை பரவலாக்க வேண்டாம். நீ எதைச் செய்ய முன்வந்தாலும் அதில் எங்கள் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும் என்பதை அழுத்தமாகச் சொல்லிவையுங்கள்.
o திருமணம் என்பது விளையாட்டல்ல. அது சடங்குகளுக்கும், கோலாகலத்திற்கும் உருவாக்கப்பட்டதல்ல. பொறுப்பும், புனிதமும் நிறைந்தது. அதனால் அதற்குரிய மரியாதையை கொடுத்தே ஆக வேண்டும் என்பதை உணர்த்துங்கள்.
-ஆஷா தினேஷ்.