தடுமாறும் தாம்பத்யம்!
சோர்ந்து போயிருந்த ஷர்மிளாவுக்கு 26 வயது. பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்றில் பொதுமக்கள் தொடர்பு துறையில் பணி. எந்நேரமும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டது போல் விரைந்து கொண்டிருப்பவள். 32 வயதான கணவர் கம்ப்யூட்டர் என்ஜினீயர். ‘தான் தாய்மையடைவது தள்ளிக்கொண்டே போகிறது’ என்றபடி என்னிடம் வந்தாள்.
“உங்களை.. கணவரை… வாழ்க்கையைப் பற்றி சொல்லுங்கள்?” என்றேன்.
“வாழ்க்கையில் நான் எதைத்தேடி ஓடிக்கொண்டிருக்கிறேன் என்றே தெரியவில்லை. கல்லூரி படிப்பை முடித்ததும் கைநிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்தது. நான் செய்யும் ஒவ்வொரு காரியமும் நிறுவனத்திற்கு பெயரைத் தேடித் தந்ததால் நான் ஓகோவென்று புகழப்பட்டேன். என்னைப் போல் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் என் மாமா மகனை எனக்கு பிடித்ததால் அவரை திருமணம் செய்துகொண்டேன். திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. வாழ்க்கை என்றால் என்னவென்றே எனக்கு புரியவில்லை.
எப்போதாவது மெரினா கடற்கரை பகுதிக்கு சென்றால், அங்கு கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கும் காதலர்களைப் பார்த்தால் என்னை அறியாமலே ஏங்கி அழுதுவிடுகிறேன்…” என்றாள், அழுகையை அடக்கிக்கொண்டு.
“குழந்தை பிறக்கவில்லை என்ற ஏக்கமா?”-என்றேன்.
“நாங்கள் திருப்தியாக செக்ஸ்கூட வைத்துக்கொள்ள நேரம் இல்லையே…” என்றாள் வருத்தத்தோடு!
கணவரும், மனைவியும் போட்டி போட்டு அவரவர் வேலையில் காட்டிய ஆர்வம் அவர்களுக்கிடையேயான பேச்சை, நெருக்கத்தை, அன்பை பாதித்துவிட்டது. வேலையை முடித்துவிட்டு ஆளுக்கொரு நேரத்தில் வீடு திரும்புவது, அவர் லேப்டாப்பை எடுத்துக்கொண்டு ஹாலில் அமர்ந்துகொள்வது, அவள் டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்தபடி படுக்கை அறையில் காத்திருப்பது. இவளுக்கு தூக்கம் வரும்போது அப்படியே படுக்கையில் சாய்ந்துவிடுகிறாள். அவருக்கு தூக்கம் வரும்போது அவரும் போய் அதே படுக்கையில் படுத்துக்கொள்கிறார். அருகருகே தூங்குகிறார்கள்… ஆனால்…?!
“நாங்கள் இருவரும் ஒரே படுக்கையில்தான் தூங்குகிறோம். ஆனால் தூங்கும் போது மட்டும்தான் அதில் ஒன்றாக! விழித்திருக்கும் போது குட் மார்னிங் சொல்லிவிட்டு பிரிந்து விடுவோம். தூக்கம் எங்களை ஒன்று சேர்க்கிறது. விழிப்பு எங்களை பிரிக்கிறது…” என்று அவள் கவிதை நடையில் சொன்னபோது, அவள் கண் ஓரத்தில் நீர் கசிந்தது.
“இரண்டு பேரும் இளமையாக இருக்கிறீர்கள். வாரத்தில் எத்தனை நாட்கள் உறவு வைத்துக் கொள்கிறீர்கள்?”
“ஒரு வருடத்திற்கு முன்பு வரை வாரத்தில் ஒரு நாள் என்று முடிவு செய்திருந்தோம். சனிக்கிழமை வேலை முடிந்ததும் நான் ஏதாவது ஒரு ஹோட்டலில் போய் அமர்ந்து கொண்டு அவரை அழைப்பேன். வருவார் இருவரும் சாப்பிடுவோம். பின்பு இரவில் வீடு திரும்புவோம். இரவு 11 மணியில் இருந்து அரை மணிநேரத்தை `தாம்பத்யத்திற்காக’ ஒதுக்கி இருந்தோம். அந்த நேரத்தில் நான் அதை அனுபவிக்கும் மனநிலையில் இருப்பேன். அவரோ அந்த நேரத்திலும் என்னிடம் அவருடைய வேலை தொடர்பாக ஏதாவது ஆலோசனை கேட்டபடியே இருப்பார். அவருடைய கவனமே செக்சில் இருக்காது. அதனால் எனக்கு சனிக்கிழமை எதிர்பார்ப்பு குறைந்து போனது. இப்போது முத்தம், கட்டிப் பிடித்தல் இவைகள் தான் எங்கள் செக்ஸ். அவர் தன் வேலையில் நாளுக்கு நாள் பிசியாகிக் கொண்டிருக்கிறார். இப்போது அடிக்கடி வெளிநாடுகளுக்கும் போகத் தொடங்கிவிட்டார்.
நான் எப்போதாவது செக்ஸ், குழந்தை என்று பேச்சை எடுத்தாலே, `உன்னிடம் இளம் வயதில் எவ்வளவு பெரிய லட்சியங்கள் இருந்தன. இப்போது நீயும் சராசரியான பெண் போல் ஆகிவிட்டாயே’ என்று கேட்கிறார். எனக்கு வாழ்க்கை என்றால் என்னவென்று புரிந்துவிட்டது. ஆனால் அவர் புரிய மறுக்கிறார். இப்போதெல்லாம் எனக்கு செக்ஸ் என்றாலே எரிச்சலும், ஏமாற்றமும் வந்துவிடுகிறது…” என்றாள்.
வங்கியில் நிறைய பணம் இருந்தும் நிம்மதியில்லையே என்று நினைத்த அவள், அந்த பணத்தை செலவு செய்வதற்காக வீடு நிறைய விதவிதமான வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் குவித்திருக்கிறாள். லாக்கரில் இருந்த நகைகளை எல்லாம் எடுத்துக் கொண்டுவந்து வீட்டில் வைத்துக் கொண்டு, அலுவலகத்திற்கு கூட நிறைய நகைகளை அணிந்துகொண்டு செல்லத் தொடங்கியுள்ளாள்.
கடற்கரைப் பகுதிகளுக்கு சென்று காதலர்கள் ஒன்றாக இருப்பதை பார்ப்பது, நர்சரி பள்ளிகளுக்கு அருகில் சென்று குழந்தைகள் பள்ளிக்கு வருவதையும், போவதையும் கண் இமைக்காமல் பார்ப்பது போன்ற மனப்பிரமை நிலைக்கு அவள் சென்றுவிட்டாள்.
அவளுக்கும், கணவருக்கும் செக்ஸாலஜிஸ்ட் ஆலோசனை தேவைப்பட்டது. ஷர்மிளாவின் பணியில் அவள் நிறைய மனிதர்களை சந்திக்க வேண்டியிருந்தது. அதனால் அவளுக்கு ஆட்கள், பேச்சு, காட்சி போன்ற மாற்றங்கள் இருந்தன. அவளது கணவருக்கு கம்ப்பியூட்டர், டி.வி. இரண்டு மட்டுமே வாழ்க்கையாகி இருந்தது. உடல் களைத்துப் போகும் அளவிற்கு கம்ப்பியூட்டரில் வேலை பார்க்கும் அவர் டெலிவிஷன் பார்ப்பதைத்தான் ஓய்வு என்று கருதி இருந்தார். அதனால் வீட்டிற்கு வந்ததும் டெலிவிஷன் பார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்த அவர், கண்வலியும், கழுத்துவலியும் ஏற்பட்டதும் தூங்கப் போய்விடுவார்.
திருமணமான புதிதில் தாங்கள் ஈடுபட்ட துறையில் சாதிப்பதும், சம்பாதிப்பதுமே வெற்றிகரமான வாழ்க்கை என்று கருதியிருக்கிறார்கள். மேலும் தங்கள் வாழ்க்கையில் எல்லா செயலுக்கும் திட்டமிட்டு நேரம் ஒதுக்கி, அந்தந்த நேரத்திற்குள் அந்தந்த செயலை செய்து முடிக்க வேண்டும் என்று கணக்குப் போட்டிருக்கிறார்கள். அந்த வகையில் அவர்கள் `உறவுக்கென்று’ சனிக்கிழமைகளில் மட்டும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியிருக்கிறார்கள். திருமணமான புதிதிலே மனஅழுத்தமும், சாதனை வெறியும் இருவரிடமும் இருந்ததால் ஒதுக்கிய சிறிதளவு நேரத்திலும் அவர்களால் முழுமையாக உறவில் ஈடுபட முடியவில்லை. தொடர்ந்து செக்ஸ் இருவருக்குமே திருப்தியற்றதாக இருந்ததால் திருமணமான ஒரு சில மாதங்களிலே செக்ஸ் மீது எரிச்சல் கொண்டு அதிலிருந்து விலகி இருக்கிறார்கள். அந்த சிந்தனை வராமல் இருப்பதற்காக தங்கள் முழு நேரத்தையும் அலுவலக உழைப்பில் காட்டி இருக்கிறார்கள். அதனால் செக்ஸ் அவர்கள் வாழ்க்கையில் ஏக்கமாகவும், கற்பனையாகவும் மாறிவிட்டது. (இப்படிப்பட்ட தம்பதிகளின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்துவருகிறது)
திவ்யாவும், அவள் கணவரும் தற்போது தினமும் தங்களுக்கென்று நேரத்தை ஒதுக்கிக் கொள்கிறார்கள். அன்பாகவும், அன்யோன்யமாகவும் இருக்கிறார்கள். அவர்கள் `தாம்பத்ய’ வாழ்க்கையில் வசந்தம் ஏற்பட்டிருக்கிறது. அவளுக்கு இருந்த ஒரு சில குறைபாடுகள் எளிதான சிகிச்சையால் அகற்றப்பட்ட நிலையில் தற்போது அவள் தாய்மையடைந்திருக்கிறாள். இந்த மாற்றம் அவர்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி இருக்கிறது.
இளம் தம்பதிகளிடையே பண மோகமும், வேலை மீது இருக்கும் வெறித்தனமான காதலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது அவர்கள் வாழ்க்கையில் பல்வேறு கசப்புகளை உருவாக்கி, வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கிறது.
-டாக்டர் கே.எஸ்.ஜெயராணி
நன்றி: தினத்தந்தி