உயர்த்தும் கரங்களை உதவும் கரங்களாகவும் மாற்றுவோம்
மவ்லவீ ஹாஃபிழ் அ.சைய்யது அலீ மஸ்லஹி பாஜில் தேவ்பந்தீ
ஒரு முஸ்லிமுக்கு தன்னைப் படைத்த அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய உரிமைகளும், கடமைகளும் இருக்கின்றன. அதுபோல, ஒரு முஸ்லிமுக்கு பொது மக்களுக்கு செய்ய வேண்டிய உரிமைகளும், கடமைகளும் இருக்கின்றன.
ஒரு முஸ்லிம் அல்லாஹ்விற்கு ஆற்றவேண்டிய உரிமைகளிலும், கடமைகளிலும் தொய்வை ஏற்படுத்தாமல் தொடர்ந்து செய்து வந்தார். ஆனால், பொது மக்களுக்கு ஆற்ற வேண்டிய உரிமைகளிலும், கடமைகளிலும் தொய்வை ஏற்படுத்தி, தொடராமல் விட்டு விட்டால் அவர் உண்மையில் பரிபூரண விசுவாசியாக முடியாது.
நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதுபோன்று, ஒரு முஸ்லிமுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று இறைவன் பக்கம்; மற்றொன்று மக்கள் பக்கம்; நாணயத்தின் ஒரு பகுதி நன்றாக இருந்து மறுபகுதி தவறாக அமைந்தால், அது செல்லத்தக்க நாணயமாக மதிக்கப்படாதது போன்று ஒரு முஸ்லிமின் ஒரு பகுதி நன்றாக இருந்து மறு பகுதி தவறாக அமைந்துவிட்டால் அவர் உண்மை விசுவாசியாக மதிக்கப்படமாட்டார்.
வல்ல அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முழு மனித சமுதாயத்திற்கும் இறுதி நபியாக அனுப்பி வைத்தான். அவர்களுக்கு இரண்டு வகையான பணிகளையும் செய்யும் படியும் ஏவினான். ஒன்று இறைப்பணி; மற்றொன்று சமூகப்பணி, இரண்டு பணிகளையும் சிறப்பாக செயல்படுத்தினார்கள். அவர்களுடைய இறைப்பணியைப் பற்றி தெரியவேண்டிய அவசியம் இருக்காது எனலாம். ஆனால் அவர்களுடைய சமூகப் பணியைப்பற்றி அனைவரும் தெரிந்து வைத்திருப்பது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
ஹளரத் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சமூகப்பணியும் :
“எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ – அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும், இன்ஜிலிலும் இவரைப்பற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்களை செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்கு தடுத்துவிடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும் இறக்கிவிடுவார்”. (அல்குர்ஆன் 7 :157)
ஹளரத் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள் :
“முதன் முதலாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறைச்செய்திகளை ஹள்ரத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கொண்டு வந்தார்கள். இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு விளக்கினார்கள். ‘ஒரு நாள் ஒருவானவர் என்னிடம் வந்து, ‘ஓதுவீராக’ என்றார். ‘அதற்கு நான் ஓதத் தெரிந்தவனில்லையே’ என்றேன். அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு, என்னை விட்டுவிட்டு மீண்டும் ‘ஓதுவீராக’ என்றார். (அப்போதும்) ‘நான் ஓதத் தெரிந்தவனில்லையே!’ என்றேன். இவ்வாறு இரண்டாவது, மூன்றாவது முறையும் கட்டி அணைத்துவிட்டு ‘படைத்தவனாகிய உம்முடைய இரட்சகனின் திருப்பெயரால் ஓதுவீராக! அவன் தான் கரு வளர்ச்சியின் ஆரம்ப நிலையிலிருந்து மனிதனை படைத்தான். ஓதுவீராக : உமது இரட்சகன் கண்ணியமிக்கவன் என்றார்”.
மேலும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுவது:
“பிறகு இதயம் படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் தமது மனைவி ஹள்ரத் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வந்து என்னை போர்த்துங்கள்; என்னை போர்த்துங்கள்’ என்றார்கள். ஹள்ரத் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை போர்த்தினார்கள். (நடுக்கம் தீர்ந்ததும்) ஹள்ரத் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நடந்த செய்தியைத் தெரிவித்து விட்டு தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது ஹள்ரத் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அவ்வாறு கூறாதீர்கள்; அல்லாஹ்வின் மீது ஆணை! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்.
ஏனெனில், தாங்கள்
1. உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்கள்.
2. சிரமப்படுவோரின் சுமைகளை தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்.
3. வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்.
4. விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள்.
5. உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகின்றீர்கள் என்றார்கள். (புகாரீ : 3)
தமது கணவர் ஹள்ரத் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயத்தால் பதறியபோது நபியின் அருமை மனைவி ஹள்ரத் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கொஞ்சமும் பதறாமல் நிதானத்தை கடைப்பிடித்து, கணவரின் மனதை தேற்றியதோடு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்போடு ஒட்டிப் பிறந்த அருமையான ஐந்து நற்குணங்களை ஞாபக மூட்டி ஆறுதல் கூறினார்கள்.
“உங்களுக்கு எந்த துன்பமும் வராது ஏனெனில்,
1. நீங்கள் உறவோடு உறவாடி வாழ்கிறீர்கள்.
2. ஒடுக்கப்பட்டவர்கள், நசுக்கப்பட்டவர்கள், மறுக்கப்பட்டவர்கள் சிரமம் கொடுக்கப்பட்டவர்கள், அனாதைகள், அடிமைகள் ஆகியோரின் சுமைகளை தாங்கிக் கொண்டு அவர்களின் உரிமைகளுக்காக போராடுகிறீர்கள்.
3. சமுதாயத்தில் பின் தங்கிய நலிந்த மக்களுக்காக நாளெல்லாம் உழைக்கிறீர்கள்.
4. வந்தாரை வாழவைப்பதற்காக விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்.
5. சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டவர் களின் உரிமைகளை மீட்டுத் தர போராடுகிறீர்கள். இவ்வாறு மக்களுக்காக உழைக்கும் உங்களை பொதுச் சேவையில் ஈடுபட்டிருக்கும் உங்களை அல்லாஹ் ஒருபோதும் கைவிடமாட்டான்” என்றார்கள்.
“நீங்கள் ஹிரா குகையில் தவம் செய்கிறீர்கள்; பசித்திருக்கிறீர்கள்; தனித்திருக்கிறீர்கள்; விழித்திருக்கிறீர்கள்; இறைவனை தொழுகிறீர்கள் நீங்கள் நம்பிக்கையாளர், வாய்மையாளர் என்றெல்லாம் தனிமனித பண்புகளைக் கூறி ஆறுதல் சொல்லாமல், சமூகப்பணிகளையும், சமுதாய சேவைகளையும் சொல்லி ஆறுதல் அளித்திருப்பது எதை உணர்த்துகிறது? ஈமான் என்பது இறைவணக்கம் மட்டுமல்ல. பொதுச்சேவைகளில் ஈடுபடுவதும் ஈமான் ஆகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள் :
”ஈமானுக்கு எழுபதுக்கும் அதிகமான கிளைகள் உண்டு. அவற்றில் சாதாரணமானது நோவினை தரும் பொருட்களை நடைபாதையிலிருந்து அகற்றுவது. அவற்றில் சிறந்தது ‘லாயிலாஹ இல்லல்ல்லாஹ்’ என்று கூறுவது” (அறிவிப்பாளர் : ஹள்ரத் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதீ – 2614)
ஒரிறைக் கொள்கையை ஏற்றுக்கொண்டிருப்பது போன்று, பொது மக்களுக்கு இடையூறு தரும் பொருட்களை அகற்றும் பொதுப்பணியில் ஈடுபடுவதும் இறைநம்பிக்கையில் கட்டுப்பட்டது ஆகும்.
பொதுச் சேவையில் ஈடுபடுவது இறைவசனத்திற்கு சமமானது :
ஹள்ரத் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
“விதவைகளுக்கும், வறியவர்களுக்கும் உழைப்பவர் அல்லாஹ்வின் பாதையில் போராடும் போராளியைப் போன்றவர் ஆவார். மேலும் பகல் முழுவதும் நின்று வணங்கியவரையும் போன்றவர் ஆவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்”. (நூல்: புகாரீ 5353)
மக்களுக்காக உழைப்பவருக்கும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவருக்கும் அப்படி என்ன தொடர்பு இருக்கிறது? சம்பந்தமே இல்லாதது போன்று தெரியும். ஆனால் நிறைய சம்பந்தங்கள் உள்ளன.
ஒரு போராளி அல்லாஹ்வின் நாமம் உயர்வடைவதற்காகவும், “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமாவை உயர்த்துவதற்காகவும், இஸ்லாம் மேன்மை அடைவதற்காகவும் பாடுபடுகிறார்.
ஒரு சமூக சேவகர் மக்களின் இன்னல்களை துடைப்பதற்கும், வளமான வாழ்விற்கும், அவர்களின் வாழ்வாதாரம் உயர்வு அடைவதற்காகவும் பாடுபடுகிறார். இரண்டு பேருக்குமிடையே ஒற்றுமையான விஷயம் ‘இருவருமே’ உயர்வுக்காக பாடுபடுகிறார்கள்.’
தொழுவதால் இறைக்கடமை நீங்கிவிடுகிறது. ஆனால் பொதுச் சேவையில் ஈடுபடுவதால், பகலில் நோன்பிருந்த நன்மையும், இரவில் நின்று வணங்கிய நன்மையும் கிடைப்பதுடன், மக்களுக்கு சேவை செய்த நன்மையும் கிடைத்து விடுகிறது. இறைவனுக்காக பாடுபடுவதைப் போன்று மக்களுக்காகவும் பாடுபடுவதுதான் இஸ்லாம்.
உலகில் வாழ்ந்து சென்ற ஹள்ரத் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிலிருந்து இறுதித்தூதர் ஹள்ரத் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரைக்கும் மக்களுக்காக பாடுபட, பொதுச்சேவையில் ஈடுபட்டிருக்கிறார்கள். நபியாக ஒருவர் தேர்வு செய்யப்படுவதற்கு பல தகுதிகள் உண்டு. அவற்றில் ஒன்று பொதுச்சேவையில் ஈடுபடுவது ஆகும்.
ஹளரத் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும், பொதுப்பணியும் :
ஹள்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை கொலை செய்வதற்காக ஃபிர்அவ்னின் படை துரத்துகின்றது. உயிரை காப்பாற்றிக்கொள்ள ஹள்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எகிப்திலிருந்து ‘மத்யன்’ என்ற பகுதிக்கு விரைகிறார்கள். நீண்ட நெடிய தூரம் பயணம் செய்ததால், பசி ஒரு பக்கம் பயம் ஒரு பக்கம். இந்த கவலையான சூழ்நிலையிலும் ‘மத்யன்’ என்ற ஊரின் ஒரி கிணற்றில் ஆட்டு இடையர்கள் தங்களின் கால்நடைகளுக்கு தண்ணீர் புகட்டிக் கொண்டிருக்க, இரண்டு பெண்கள் மட்டும் கூட்டத்தை விட்டு தன்னந்தனியாக நின்று கொண்டிருப்பதைப் பார்த்த ஹள்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பசியையும் பாராமல், பயத்தையும் பொருட்படுத்தாமல் அப்பெண்களுக்கு உதவி செய்தார்கள்.
இடையர்கள் தங்களின் கால்நடைகளுக்கு தண்ணீர் புகட்டிய பிறகு, அந்தக் கிணறை மூடிவிட்டு சென்று விட்டார்கள். பத்து நபர்கள் சேர்ந்து தூக்கினால் தான் அந்த மூடியை தூக்க முடியும். ஆனால் ஹள்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனிநபராக அந்த மூடியை அகற்றி, இரு பெண்களுக்கும், கால்நடைகளுக்கு தண்ணீர் புகட்ட ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு, இதற்கு எனக்கு கூலி வேண்டும் என்றோ, எனக்கு சாப்பாடு போடவேண்டும் என்றோ கூறாமல் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி, அல்லாஹ்விடம் பின்வரும் துஆவை கேட்கிறார்கள்.
“ஆகையால் அவ்விருவருக்குமாக அவர் (ஆட்டு மந்தைக்கு) தண்ணீர் புகட்டினார்; பிறகு அவர் (ஒருமர) நிழலில் ஒதுங்கி ‘என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றை செய்வதின் பக்கம் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கிறேன்’ என்று கூறினார்”. அல்குர்ஆன் (28 :24)
இது எவ்வளவு பெரிய ‘துஆ’ என்று பாருங்கள். இறைவா என்பயத்தை போக்கி, பசியை நீக்கு! என்று கேட்கவில்லை. மாறாக, “இறைவா! நான் இன்னும் நற்சேவைகளை செய்வதற்கு தேட்டமுடையவனாக உள்ளேன். அந்த பாக்கியத்தை எனக்கு வழங்குவாயாக” என்று ஹள்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்டார்கள். இது எவ்வளவு பெரிய சிந்தனை என்று நாம் சிந்திக்க வேண்டும்.
ஒரு முஸ்லிம் தன் தேவைகளை படைத்த இறைவனிடம் கைகளை உயர்த்தி கேட்கிறான். இறைவனும் அவனது தேவைகளை நிறைவேற்றித் தருகின்றான்.
அல்லாஹ்விடம் தமது தேவைகளுக்காக, உயர்த்தும் கரங்களைவிட பொதுமக்களின் தேவைகளுக்காக உழைக்கும் கரங்களே சிறந்தவை. உதவும் கரங்களே உயர்ந்தவை. இவ்வாறு தான் ஹள்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “இறைவா! எனது கைகளை உயர்த்துகின்றேன். இவற்றை எனக்காக உயர்த்தவில்லை. இவற்றை பொது மக்களுக்காக உழைக்கும் கரங்களாகவும், உதவும் கரங்களாகவும் ஆக்கி வைப்பாயாக!” என்று கேட்டார்கள்.
வாங்கும் யாசகனின் கரங்களைவிட கொடுக்க (உழைக்கும்) சமூக சேவகனின் கரங்கள் தான் சிறந்தவை. நமது தேவைகளுக்காக அல்லாஹ்விடம் கரங்களை உயர்த்தும்போது நமது தேவைகள் மட்டுமே நிறைவேறும். பொதுமக்களின் தேவைகளுக்காக நமது கரங்கள் சேவை செய்ய உழைக்கும்போது, மக்களுக்காக உழைத்த நன்மையும் கிடைக்கின்றன. அவர்களுக்காக நாம் உழைக்கும் காலமெல்லாம் நமது தேவைகளும் அல்லாஹ்வினால் நிறைவேற்றித்தரப்படுகிறது. இறைவனுக்காக பாடுபடுவதைப் போன்றே மக்களுக்காகவும் பாடுபடவேண்டும். இது தான் இஸ்லாம். இது தான் ஈமான்.
நன்றி: குர்ஆனின் குரல், மார்ச் 2012