”ஷிர்க்”கை உடைத்தெரியும் ஃபத்வாக்கள்
கேள்வி 1 : அவ்லியாக்களின் கப்றுகளுக்குச் சென்று அவைகளை வலம் வருவது, அவர்களிடம் உதவி தேடுவது, பரக்கத்துக்காக அதைத் தொடுவது, அவைகளிடம் நேர்ச்சை செய்வது, அவைகளைக் கட்டுவது, அல்லாஹ்விடத்தில் வாங்கித் தரும் இடைத்தரகர்களாக அவர்களை நினைப்பது ஆகியவைப் பற்றிய இஸ்லாமீய தீர்ப்பு என்ன?
பதில் : அவ்லியாக்களின் கப்றுகளுக்குச் சென்று அவர்களிடம் உதவி தேடுவது, அவர்களிடம் நேர்ச்சை செய்வது, அல்லாஹ்வின் முன்னிலையில் அவர்களை இடைத்தரகர்களாக எண்ணுவது இந்த அனைத்து செயல்களும் இஸ்லாமிய வட்டத்திலிருந்து ஒருவரைவெளியேற்றுவதும் மற்றும் மரணத்திற்குப் பின் நிரந்தர நரகத்தைப் பெற்றுத்தரும் பெரும் ஷிர்க்காகும்.
கப்றுகளை வலம் வருவதும், அவைகளைக் கட்டுவதும் வழிகெட்ட பித்அத்தாகும். அவர்களது (மரணித்தவரது) திருப்தியை நாடி இவ்வாறு செய்வது முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது. இதுவும் ஷிர்கில் சேரும் செயல்களாகும். அக்கப்றுகளை சுற்றி வலம் வருவதன் மூலம் அவர்களது (மரணித்தவரது) திருப்தி, அவர்கள் அருள் புரிவார்கள், நமக்கு துன்பங்கள் வருவதை விட்டுத் தடுப்பார்கள் என எதிர்ப் பார்க்கப்படுகிறது. எனவே இது தடை செய்யப்பட்ட ஷிர்க்காகும்.
கேள்வி 2 : அவ்லியாக்களுக்காக நேர்ச்சைசெய்து, அவர்களுக்காக பிராணிகளை அறுத்து, அச்செயல்களின் மூலம் அவர்களிடம் நன்மையை எதிர்ப்பார்த்து துன்பங்களிலிருந்து நீங்கியிருப்பதற்கு பிரார்த்தப்பது பற்றிய இஸ்லாமீய தீர்ப்பென்ன?
பதில் : அங்கு அடக்கப்பட்டிருக்கும் நல்லடியார்களின் பெயரில் அறுத்துப் பலியிடுவது மிகப் பெரும் ஷிர்க்காகும். எவர் அப்படிச் செய்வாரோ அவர் அல்லாஹ்வுடைய சாபத்திற்கு உட்படுவார்.
‘எவர் அல்லாஹ் அல்லாத ஒன்றின் பெயரில் அறுத்துப் பலியிடுவாரோ அவருக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
கேள்வி 3 : மரித்தோரிடம், மறைவானவற்றிடம் உதவி தேடுவது பெரும் ஷிர்க்காகுமா?
பதில் : மரணித்தவர்களிடம், மறைவானவற்றிடம் உதவி தேடுவது பெரும் ஷிர்கில் சேரும், எவர் இப்படியான பெரும் பாவங்களில் ஈடுபடுவாரோ அவர் இஸ்லாமீய வட்டத்தை விட்டு வெளியேறிவராவார்.
அல்லாஹ் கூறுகிறான்:
‘எவர் அல்லாஹ்வுடன் வேறு எவரையும் இணைத்து அழைப்பாரோ அவருக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. நிச்சயமாக அவரது தீர்ப்பு அல்லாஹ்வின் முன்னிலையிலாகும். நிச்யமாக நிராகரிப்பாளர்கள் வெற்றிபெற மாட்டார்கள்’
மற்றுமோர் இடத்தில்:
‘இன்னும் அவனையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கின்றீர்களே அத்தகையவர்கள், ஒரு வித்தின் (மேலிருக்கும்) தொலி அளவும் அதிகாரம் பெறமாட்டார்கள்’
கேள்வி 4 : நபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிக்கும் நோக்கில் பிரயாணம் மேற்கொள்ள முடியுமா? இப்படியாக தரிசிப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?
பதில் : கப்றுகளைத் தரிசிக்கும் நோக்கில் பயணம் மேற்கொள்ள முடியாது. அது நபிமார்களுடையதாக இருக்கலாம், அவ்லியாக்களுடையதாக இருக்கலாம். அவை வழிகெட்ட பித்அத்தாகும்.
‘மார்க்கத்தின் பெயரால் நன்மையை நாடி மூன்று இடங்களைத் தவிர பயணிக்க முடியாது, புனித மிக்க மஸ்ஜிதுல் ஹராம், எனது மஸ்ஜித் (மஸ்ஜிதுன் நபவி), மஸ்ஜிதுல் அக்ஸா’ என நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
‘எவர் நாம் கட்டளையிடாத ஒன்றை புதிதாக ஏற்படுத்துவார்களோ அது நிராகறிக்கப்படும்’ என நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
மண்ணறைகளை தரிசிப்பது நபிவழியாகும். அதை தரிசிக்கும் நோக்கில் பயணம் மேற்கொள்வது தான் தடுக்கப்பட்டுள்ளது.
‘மண்ணறைகளை தரிசியுங்கள் நிச்சயமாக அது உங்களுக்கு மறுமை சிந்தனையை ஏற்படுத்தும்’ என நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
கேள்வி 5 : ஸுன்னாவை பின்பற்றி வாழும் ஒருவர் வழிதவறிச் சென்ற (ஹுராபிகளின்) இறுதிச் சடங்குகளில் கலந்து அவர்களுக்காக தொழுகையை நிறைவேற்ற முடியுமா?
பதில் : பெரும் பாவமான ஷிர்க்கை செய்தவர்கள், உதாரணத்திற்கு, மரித்தோரிடம் உதவி தேடுவது, அவர்களிடம் பிரார்த்திப்பது, வானவர்களிடம், ஜின்களிடம், வேறு படைப்புக்களிடம், உதவி தேடுவது, பிரார்த்திப்பது தெளிவான ஷிர்க்காகும். அவர்களது இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வது, அவர்களுக்காக தொழுகையை நிறைவேற்றுவதும் அனுமதிக்கப்பட மாட்டாது.
ஷிர்க் அல்லாத வழிகெட்ட பித்அத்துக்களை செய்பவர்கள், உதாரணத்திற்கு, ஷிர்க் இல்லாத மவ்லூத் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள், மிஃராஜ் இரவை கொண்டாடுபவர்கள் இவர்கள் செய்வது பாவமே. எனினும் இவர்களது இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள முடியும், அவர்களுக்காக தொழுகையை நிறைவேற்ற முடியும். அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காத இந்தப் பாவிகளுக்காக இறைவனிடம் பிரார்த்திக்க முடியும்.
அல்லாஹ் கூறுகிறான்: ‘நிச்சயமாக அல்லாஹ் ஷிர்க் அல்லாத ஏனைய பாவங்களை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்’ (4: 116).
கேள்வி 6 : மரணித்தவரை நல்லடக்கம் செய்து விட்டு அங்கு அல்குர்ஆன் ஓதுவது, மரித்தோரின் வீட்டில் கூலிக்கு அல்குர்ஆனை ஓதுவதின் சட்டமென்ன? நாம் அவர்களை மரித்தோருக்கு கருணைக் காட்டுபவர்கள் என்று தான் அழைப்போம்!
பதில் : மார்க்க அறிஞர்களின் தீர்ப்பு ஒருவரின் ஜனாஸாவை அடக்கியதன் பின் அங்கு அல்குர்ஆனை ஓதுவது தெளிவான வழிகேடான பித்அத்தாகும். இவ்வாறான நடைமுறைகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இருக்கவில்லை. அன்னார் அவ்வாறு செய்வதற்கு ஏவவோ, அல்லது அவர்களோ செய்யவில்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவரின் ஜனாஸாவை அடக்கிவிட்டு அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்து ‘உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்புத் தேடுங்கள், அவரது உள்ளம் உறுதியுடன் இருப்பதற்கும் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள், ஏனெனில் அவர் இப்பொழுது விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்.”
மண்னறையில் அல்குர்ஆன் ஓதப்படுவது நன்மையாக இருக்குமானால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதற்கு வழிகாட்டியிருப்பார்கள். மரணித்தவரின் வீட்டில் கூடி அல்குர்ஆனை ஓதுவதற்கு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமோ, ஸஹாபாக்களிடமோ, தாபிஈன்களிடமோ, அதைத் தொடர்ந்து வந்தவர்களிடமோ எந்த முன்மாதிரியுமில்லை.
ஒரு முஸ்லிம் அவனுக்கு கவலைதரும் ஏதாவது நிகழ்ச்சிகள் நடந்தால் அவன் பொருமையை மேற்கொள்ள வேண்டும், இன்னும் அவன் அல்லாஹ்வின் திருப்தியை எதிர்ப் பார்த்து செயல்பட வேண்டும். பொருமையாளனின் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள்: ‘இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்; அல்லாஹும்ம ஃஜுர்னி பீ முஸீபதி வஹ்லுப் லீ ஹய்ரன் மின்ஹா’.
மரணம் நடைபெற்ற அவ்வீட்டில் கூடி அல்குர்ஆன் ஓதுவது, உணவு வகைகள் செய்து பரிமாறுவது அனைத்தும் வழிகெட்ட பித்அத்தாகும்.
வெளியீடு: மேல் மட்ட அறிஞர் குழு ஸவுதி அரேபியா
தமிழாக்கம்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
நன்றி: சுவனதென்றல்