மனிதகுல எதிரியிடமிருந்து பாதுகாப்பு
”இன்னஹு லகும் அதுவ்வும்முபீன்”-மனிதகுல எதிரி ஷைத்தான்
தெளிவாக அல்லாஹ் தனது திருமறை குர்ஆனில் குறிப்பிட்டு விட்டான்.
அல்லாஹ்வின் மாபெரும் கருணை, நமது எதிரி குறித்து பகிரங்கமாக செய்தி – தகவல் தந்துள்ளான்.
மனிதர்களின் தராதரம், குணாதிசயம், ஈமான் – இறைநம்பிக்கைக்கு ஏற்ப ஷைத்தான் வலை வீசுகிறான். ஆலிம்களுக்கு இன்னொரு ஆலிம் வடிவத்தில், பாமரர்களுக்கு இன்னொரு பாமரர் கோலத்தில் ஷைத்தான் காட்சி தருகிறான். தொல்லை தருவான்.
ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப்பட்டவுடன் ஸஜ்தா – சாஷ்டாங்கம் புரிய அனைத்து மலக்கு – வானவர்களும் இசைந்தனர். ஆனால், ஷைத்தான் மசியவில்லை. எதிர்த்து கேள்வி கேட்டான். ஸஜ்தா செய்யாத நிலம் பூமியில் இல்லை. இபாதத் – வழிபாட்டால் ஷைத்தான் மிகைத்தவன். அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்வதற்கு ஒப்புகிறான். ஆனால், அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று அடிபணிய மறுத்தான். முழுவதுமாக இறைகட்டளையை புறக்கணித்தான்.
“நான் நெருப்பிலிருந்து வந்தேன். ஆதம் மண்ணிலிருந்து படைக்கப்பட்டவர்” என்றான். இறுமாப்பு அவன் கண்ணை மறைத்தது. விளைவு; சபிக்கப்பட்டு விரட்டப்பட்டான்.
ஷைத்தான் செய்யும் தீங்கிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்று அல்லாஹ் எச்சரிக்கின்றான்.
நல்ல தவ்ஹீதுவாதியாக ஷைத்தான் விளங்கினான். ”ஸஜ்தா செய்தால் உனக்கு மட்டும் செய்வேன்” என்று அல்லாஹ்விடம் கலகக்குரல் எழுப்பினான். யாருக்கு ஸஜ்தா என்பதல்ல கேள்வி. உத்தரவு யாரிடமிருந்து வருகிறது என்பதை அவன் கவனிக்கத்தவறிவிட்டான். காரணம், பொறாமை!
உலகின் முதல் பாவம் பொறாமை. ஆதம் மீது ஷைத்தான் பொறாமை கொண்டான்.
ஸூரா ஃபலக் – சிறிய அத்தியாயம். பொறாமையிலிருந்து உங்களை பாதுகாக்கும். “குல் அவூது பிரப்பில் ஃப்லக்”,
ஸூரா நாஸ் – குல் அவூது பிரப்பின் நாஸ்”,
ஸூரத்துல் இக்லாஸ் – குல்ஹுவல்லாஹு அஹது”
– இம் மூன்று ஸூராக்களையும் படுக்கைக்கு செல்லுமுன்பு கட்டாயம் ஓதணும். நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓதினார்கள். தன் மனைவியான ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களையும் ஓதுமாறு வற்புறுத்தினார்கள்.
மனிதகுல ரஹ்மத் – ரஹ்மத்துல் லில் ஆலமீன் – அனைத்துலக அருட்கொடையாக நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்தும் பொறாமைக்காரனான ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாப்பு கோரினார்கள். கண்ணேறு, சூனியம், மந்திரம், மாயம், சூழ்ச்சி, பொறாமையிலிருந்து ஒவ்வொரு மனிதரும் பாதுகாப்பு பெற விரும்பினால், மூன்று “குல் ஸூராக்களையும்” ஓதி வரணும். சில ரிவாயத்துக்களில் நான்கு ஸூராக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது. “குல்யா அய்யுஹல் காஃபிரூன்” ஓதி வரவும்.
ஒளு செய்த பின்னர் படுக்கைக்கு போக வேண்டும். மறுமையில் கை, கால், முகம் ஒளிமயமாய் – நூர் பிரகாசிக்கும். மலக்குமார்கள் வியப்பில் ஆழ்ந்து போவார்கள். T.V., சினிமா பார்த்த நிலையில் தூங்கப்போகக்கூடாது. தூக்கம் பாவமாகிப் போகும்.
அமைச்சர், தேசத்தலைவர்களுக்கு எதிரிகளிடமிருந்து தாக்குதலை சமாளிக்க கறுப்பு கமாண்டோ படை பாதுகாப்பு. நமக்கு அல்லாஹ் பாதுகாப்பு தருகிறான். “குல் அவூது பிரப்பில் ஃபலக்” ஸூராவை ஓதினால் அல்லாஹ் பாதுகாப்பு தருவான். அல்லாஹ் தரும் பாதுகாப்பை, செக்யூரிட்டியை நாம் நிராகரிக்கக்கூடாது. இது அல்லாஹ்வின் நிஃமத் – அருட்கொடை.
பயம், அச்சம், கிலி, நடுக்கம் தீங்கிலிருந்து பாதுகாப்பு. விடியற்காலை ஃபஜ்ர் தொழுதவர்க்கும் அன்று முழுக்க அல்லாஹ்வின் பாதுகாப்பு உண்டு. ஸூரா “பலக்” வெளிரங்க ஆபத்து குறித்து பாதுகாப்பு தருகிறது. “நாஸ்” தொடர்பு, அகீதா, ஈமான் பூரணமாகும்.
– மவ்லானா மு ஹம்ம்து நக்ஷபந்தி, ஹைத்ராபாத்.
நன்றி: முஸ்லிம் முரசு, ஏபரல் 2011