உன்னுடைய எதிரியைத் தெரிந்து கொள்!
அல்லாஹ் கூறுகிறான்: ”ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான்.” (அல்குர்ஆன் 35:6)
“பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்” (என்றும் ஷைத்தான் கூறினான்). (அல்குர்ஆன்7:16,17)
இடது கையால் சாப்பிடுவான்
நீங்கள் சாப்பிடும் போது வலது கையால் சாப்பிடுங்கள் குடிக்கும் போது வலது கையால் குடியுங்கள். ஏனெனில் ஷைத்தான் தான் இடது கையால் சாப்பிடுவான். குடிப்பான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம்3764
தொழ விடமாட்டான்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் பொழுது விடியும் வரை (தொழுகைக்கு எழாமல்) உறங்கிக் கொண்டேயிருப்பது பற்றிக் கூறப் பட்டது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அவரது காதில் ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 1144)
இப்படியும் செய்வான்..
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்கல் எவரேனும் கொட்டாவி விட்டால் தம்மால் முடிந்த வரை அவர் அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் ஹா’ என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கின்றான். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 3289)
ஷைத்தானின் லாட்ஜ் மற்றும் ஹோட்டல்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:. ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூறாவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது” என்று சொல்கிறான். அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் கூறா விட்டால் ஷைத்தான் “இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்” என்று சொல்கிறான். (அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4106)
ஷைத்தானின் திறவுகோல்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, “நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!” என்று (அங்கலாய்த்துக்) கூறாதே. மாறாக, “அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்” என்று சொல். ஏனெனில், (இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே’ என்பதைச் சுட்டும்) லவ்’ எனும் (வியங்கோள் இடைச்)சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழிவகுக்கும். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 5178)
ஷைத்தான் அழுகிறான்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மைந்தன் (மனிதன்) சஜ்தா (சிரவணக்கத்திற்கான) வசனத்தை ஓதி சிரவணக்கம் (சஜ்தா) செய்தால் ஷைத்தான் அழுதவாறே “அந்தோ எனக்கு வந்த நாசமே! ஆதமின் மைந்தன் சிரவணக்கம் செய்யும்படி கட்டளையிடப்பட்டான். அவன் சிரவணக்கம் செய்துவிட்டான். அவ னுக்குச் சொர்க்கம் கிடைக்கப்போகிறது. ஆனால் (ஆதி மனிதர் ஆதமுக்குச்) சிரம் பணியும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. நானோ மறுத்து விட்டேன். எனவே, எனக்கு நரகம்தான்” என்று கூறியபடி விலகிச்செல்கிறான். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 133)
ஷைத்தானின் ஓட்டம்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக (பாங்கு சொல்) அழைக்கப்படும்போது ஷைத்தான் பாங்கு சப்தத்தைக்கேட்கக்கூடாது என்பதற்காக சப்தத்துடன் காற்றை விட்டுக்கொண்டு திரும்பி ஓடுகிறான். பாங்கு சொல் முடித்ததும் முன்னே வருகின்றான். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் (மீண்டும்) திரும்பி ஓடுகிறான். இகாமத் சொல் முடித்ததும் முன்னே வருகின்றான். (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதருடைய உள்ளத்தில் ஊடுருவி ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, “இதை நினைத்துப் பார்; அதை நினைத்துப் பார்” என்று அவர் அதற்கு முன் நினைத்திராத விஷயங்களை அவருக்கு நினைவூட்டிக் கூறுகின்றான். எந்த அளவிற்கென்றால், அந்த மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதை அறியாதவராக மாறிவிடுகிறார். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 608)
பிளவு ஏற்படுத்துவான்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அரேபிய தீபகற்பத்தில் தொழுகையாளர்கள் தன்னை வணங்குவார்கள் என்ற நம்பிக்கையை ஷைத்தான் இழந்துவிட்டான். எனினும், அவர்களிடையே பிளவை உருவாக்குவ(தில் வெற்றி கண்டு விட்ட)ன். (அறிவிப்பவர் : ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 5417)
சந்தோஷப்படுகிறான்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ; அரேபிய தீபகற்பத்தில் தன்னை வணங்குவார்கள் என்ற நம்பிக்கையை ஷைத்தான் இழந்துவிட்டான். எனினும், நீங்கள் லேசாக கருதக்கூடிய அமல்கள் மூலமாக சந்தோஷப்படுகிறான். (நூல் : அஹ்மத்)
மந்திர முடிச்சு
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உறங்கும்போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின்போதும் இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுக்க எஞ்சி) இருக்கிறது. ஆகவே, நீ உறங்கு’ என்று கூறி (உங்களை விழிக்கவிடாமல் உறங்க வைத்து)விடுகிறான். நீங்கள் (அவனது கூற்றை ஏற்காமல்) கண்விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. நீங்கள் அங்கசுத்தி (உளூ) செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. நீங்கள் தொழுது விட்டால் முடிச்சுகள் முழுவதும் அவிழ்ந்துவிடுகிறது. நீங்கள் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் காலைப் பொழுதை அடைவீர்கள். இல்லையெனில் மனக்குழப்பத்துடனும், சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவீர்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 1142)
ஷைத்தானின் கேள்விகள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்கல் ஒருவரிடம் (அவர் மனத்திற்குள்) ஷைத்தான் வந்து, “இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?” என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், “உன் இறைவனைப் படைத்தவர் யார்?” என்று கேட்கின்றான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் அடையும்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். (இத்தகைய சிந்தனையிருந்து) விலகிக்கொள்ளட்டும். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 3276)
ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு பெற
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : சூரத்துல் பகரா ஓதப்டுகிற வீட்டிலிருந்து ஷைத்தான் விரண்டோடுகின்றான். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: லா இலாஹ இல்லல் லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல் ஷய்இன் கதீர் – என்று ஒரு நால் நூறு முறை சொல்கிறவருக்கு, பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(க நற்பலன் கிடைக்கும். மேலும் நூறு நன்மைகள் எழுதப்படும். (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும் அந்த நால் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாக அது இருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது; ஒருவர் இதை விட அதிகமான (தடவைகள் இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர. (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 3293)
“என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழி கெடுப்பேன்” என்று கூறினான். (அல்குர்ஆன் 15:39,40)
source: ஏப்ரல் தீன்குலப் பெண்மணி – 2011