நம்மில் அடங்கிக் கிடக்கும் திறனை யாராலும் தடைபோட முடியாது!
அனைத்து வெள்ளையர்களும் செல்வந்தர்கள்” `ஆசியர்கள் அறிவு கூர்மையுள்ளவர்கள், திறமையானவர்கள், புத்திசாலிகள்` என்று சொல்வதுண்டு. இது உண்மைக்கு புறம்பான பழமொழி.
நான் கருப்பு இனத்தவன், தாழ்ந்த ஜாதிக்காரன் அதனால் வெள்ளை இனத்தை சார்ந்த அல்லது உயர்ந்த ஜாதி ஆசிரியர் அல்லது அரசியலைச் சார்ந்தவர் எங்களை முன்னேற்றம் அடைய விடாமல் தடுக்கின்றனர் என்று எண்ணிக்கொண்டே இன்னும் எத்தனை காலங்கள் நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு பின்னோக்கியே பயணம் செய்வது?!
நம்மில் அடங்கிக் கிடக்கும் திறனை யாராலும் தடைபோட முடியாது என்ற ஒரு நம்பிக்கையை வெளிக் கொண்டுவர ஆக்கப்பூர்வமான, தேவையான வெறி, ஒரு உந்துதல் சக்தி நம்மிடம் அவசியம் தேவைப்படுகின்றது.
பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை. நிறத்திலும், இனத்திலும் உயர்ந்தோர் தாழ்ந்தோர் இல்லை என்ற புதிய சிந்தாந்தம் நம்மை விட்டு மறையத் தொடங்கிவிட்டதின் .காரணம் நம்மில் ஆழமாக புதைந்து விட்ட மனோநிலைதான் அது நம்மை முன்னேற விடாமல் தடை போடுகின்றது.
“ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?” என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவினர். அதற்கு நபியவர்கள் “இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார்(பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்” என்றார்கள். (நூல்: அபூதாவூத்)
பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!
”மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா 2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
தலமைக்குக் கீழ்ப்படிவீர்!
”ஒ… மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி 1706)
சட்டம், அரசியல் சாசனம் அனைத்துமிருந்தும் ஓர் பயனுமில்லை. பெரியோர் பலர் பல நல்ல மாற்றங்கள் கொண்டு வந்தும் திரும்பவும் இன வேற்றுமை காணும் அதே நிலைக்கு நாம் தள்ளப் படுவதின் அடிப்படைக் காரணங்களை நாம் சிந்திக்கும் பொழுது ஒன்று மட்டும் தெளிவாகின்றது அது பணத்தின் மீதுள்ள அளவுக்கு அதிகமான பேராசை. அந்த பணத்தின் மீதுள்ள மோகம் மக்களை பிரித்தாளும் தன்மைக்கு அடித்தளமாக உள்ளதனை நாம் அறியலாம். அரசியலில் உள்ளவர்களும் மதத்தினை(மார்கதினை) போதிப்பவர்களும் இதற்கு உட்பட்டுவிடுகின்றனர். ஒரே ஜாதியில் எத்தனை பிரிவு ஒரே மார்க்கத்தில் எத்தனை வழிபடும் முறை. மார்க்கம் போதிப்போர் பல்வேறு கருத்தினை தாங்களே தங்களுக்குத் தெரிந்த அறிவின் அடிப்படையில் மக்களை குழப்பமடையச் செய்து அவர்களுக்குள் பிரிவினை உண்டாக்கி விடுகின்றனர்.
“இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் – நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள். உங்கள் பலம் குன்றிவிடும்”.- திருக்குர்ஆன்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்’. (நூல்: ஸஹீஹ் புகாரி 7376)
நான் சொல்வதே சரி மற்றவர் சொல்வது தவறு என்று மக்களை சிந்திக்க விடாமலும் அறிவினைத் தேட வழி வகுக்காமல் தடை போடுகின்றனர். அறியாமையும் போராட்டமும் இதன் விளைவாக முடியும்.ஒற்றுமை குறையும் பொதுவுடைமை கொள்கை கொண்ட மக்கள் இந்த இனவெறி கொள்கை கொண்ட மக்களால் பாதிப்புக்குள்ளாகின்றனர். கருத்தும் அறிவும் ஒவ்வொருவருக்கும் அவர் தேடுவதில் கிடைக்கும் ஊற்று நீர். நாம் பெற்ற அறிவு கடல் நீரில் ஒரு சொட்டு.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. (திருக்குறள்)
”மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.” (அல்குர்ஆன் 49 : 13)
source: http://nidurseasons.blogspot.in/2012/04/blog-post_09.html