இல்லறத்தை இனிதாக்க தனிமையைப் பயன்படுத்துங்கள்!
இந்த உலகில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு ஆணும், பெண்ணும் திருமணம் செய்துகொண்டு இல்லறம் என்னும் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள்.
அது இன்பமும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கிறதா? என்றால், அது தான் இல்லை.
ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சினைகள் தோன்றி இல்லற வாழ்க்கையை சிக்கல் மிகுந்ததாக மாற்றுகின்றன.
வெகுசிலரே அந்தச் சிக்கல்களைத் தகர்த்தெறிந்து தங்களுடைய வாழ்க்கையை இனிமையாக அமைத்துக் கொள்கின்றனர்.
நீங்களும் உங்களுடைய வாழ்க்கையை சிறந்ததாக அமைத்துக்கொள்ள இதோ சில வழிகள்:
1. பட்டியலிடுங்கள் :
திருமணமாகி சில ஆண்டுகளுக்குள் மிகப்பெரிய சிக்கல் எதுவும் வராது. அவ்வாறு வந்தாலும் விரைவிலேயே தீர்ந்துவிடும். பெரும்பாலும் குழந்தைகள் பிறந்த பின், அலுவலகம் சம்பந்தமான பொறுப்புகள் அதிகரித்த பின்னர் தான் சிக்கல்கள் முளைக்கின்றன. இந்த காலகட்டத்திற்குள் மனைவியின் விருப்பு- வெறுப்பு, நிறை-குறை, இயலும்-இயலாமைகளைக் கணவனால் கண்டுகொள்ள முடியும். அதேபோல கணவரின் குணங்களையும் மனைவியால் அறிந்து கொள்ள முடியும். எனவே அவற்றை தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ பட்டியலிடுங்கள்.
திருமணத்திற்கு முன்பு உங்களுக்குப் பிடிக்காத சில விஷயங்கள் தற்போது பிடித்ததாக மாறியிருக்கும். அவற்றை அடிக்கோடு இடுங்கள். இதுவே உங்களுடைய துணைக்காக நீங்கள் எவ்வளவு விட்டுக் கொடுத்துள்ளீர்கள் என்பதை தெளிவுபடுத்தும். அடிக்கோடுகள் அதிகமாக அதிகமாக தம்பதியர்களின் நெருக்கம் அதிகமாகும்.
2. கணக்கெழுதுங்கள் :
பட்ஜெட் என்பது நாட்டுக்கு மட்டுமல்ல, வீட்டுக்கும் அவசியமான ஒன்று. ஓரளவு வசதி படைத்த கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் பெரும்பாலான குடும்பங்களில் பட்ஜெட் என்ற பேச்சுக்கே இடமில்லை. இருவருமே கைநிறைய சம்பாதிப்பதால் கவலை இல்லை. திடீரென அவசரத் தேவைகள் ஏற்பட்டாலும் ஓவர் டைம், பி.எப் லோன் என சமாளித்துக் கொள்கின்றனர். நடுத்தரக் குடும்பங்களில் இருவருமே வேலைக்குச் சென்றாலும், 20-ந் தேதியே மனைவி பஞ்சப்பாட்டு பாட ஆரம்பித்து விடுகிறார். ‘வாங்குற சம்பளத்தை உங்கிட்ட தான குடுக்குறேன்’ என கணவனும் கோபப்பட ஆரம்பித்து பிரச்சினைகள் துவங்குகின்றன.
இதற்குக் காரணம் பெரும்பாலான கணவர்களுக்கு விலைவாசி பற்றிய பேப்பர் அறிவுதான் இருக்கும், கடை அறிவு இருக்காது. எனவே வாங்குகிற பொருளுக்கான விலையை எழுதி வையுங்கள். எழுதுவதோடு மட்டுமின்றி அதை கணவர் கண்ணில் படும்படி வைத்துவிடுங்கள். ‘குடுக்குற காசு எங்கே போவுது’ என்ற பேச்சுக்கே இடமிருக்காது. மேலும் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து பட்ஜெட் போடுவதால் தேவையற்ற பொருட்கள் வாங்குவது தவிர்க்கப்படுவதுடன், இருவருக்கும் இடையேயான நெருக்கமும் அதிகரிக்கும். எனவே பட்ஜெட் போட்டு குடும்பத்தை நடத்திப் பாருங்கள். பொருளாதாரத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் பிரச்சினைக்கே இடமிருக்காது.
3. வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் : ‘
களைப்பாக இருக்கிறது’, ‘போர் அடிக்கிறது’ இவை இரண்டுமே தாம்பத்ய வாழ்வில் கணவன்-மனைவி இருவருமே சொல்லக்கூடியவை. அலுவலகம், வீடு ஆகிய இரண்டு இடங்களிலும் அதிக வேலை செய்பவர்களுக்கு உடல் மெலியும், உள்ளம் சோர்வடையும். இரண்டு இடங்களிலும் அதிக வேலை இல்லாதவர்களுக்கு போர் அடிக்கும்.
எனவே கணவன்-மனைவி இருவரும் உட்கார்ந்து பேசி தங்களுடைய வேலைகளைப் பகிர்ந்து கொள்ளலாம். அதற்காக வேலைகளை கட்டாயமாக திணிக்கக் கூடாது. அவரவர்களுக்குப் பிடித்த வேலைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் பெரிய குழந்தைகள் இருந்தால் அவர்களையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். உதாரணமாக சிறிய குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று வரும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். இதனால் தன்னை அங்கீகரிக்கிறார்கள் என்ற மனப்பான்மை குழந்தைகளுக்கு வருவதுடன், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையையும் பொறுப்பாகச் செய்வார்கள்.
இருவருக்குமே அதிக வேலைகள் இருக்கிறதா? யோசிக்கவே வேண்டாம்… வேலைக்காரியை நியமித்து விடுங்கள். ஏனெனில் சில நூறு ரூபாய்க்காக ஆசைப்பட்டு வேலைக்காரியை நியமிக்காமல் நீங்களே அனைத்து வேலைகளையும் செய்யும் போது உடல்நலம் சீர்குலையும். பின்னர் வைத்தியச் செலவாக டாக்டரிடம் பல நூறு ரூபாய்களை இழக்க நேரிடும்.
4. பாராட்டுங்கள் :
உங்கள் துணை எந்தவொரு செயலைச் செய்தாலும், அது நல்லதாக இருக்கும் பட்சத்தில் பாராட்டத் தவறாதீர்கள். குறிப்பாக உங்களுடைய அலுவலக நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் பாராட்ட மறக்காதீர்கள். நீங்கள் அடைந்த வெற்றிக்கு உங்கள் துணையே முழுமுதற் காரணம் என அவர்களை முன்னிலைப்படுத்தி பாராட்டும் போது, உங்கள் மேல் இருக்கும் கோபமெல்லாம் சூரியனைக் கண்ட பனி போல விலகிவிடும்.
சமையலில் சிறுசிறு தவறுகள் இருந்தாலும் எரிந்து விழாமல், பாராட்டின் மூலம் நாசூக்காக இதை உணர்த்துங்கள். உதாரணமாக, ‘இன்று நீ சமைத்தது அல்வா போல இனிமையாக இருந்தது. ஆனால், காரம் மட்டும் கொஞ்சம் கம்மியாக இருந்தால் திருநெல்வேலி அல்வா போல சூப்பராக இருந்திருக்கும்’ என்று கூறுங்கள். இனி குடும்பத்தில் பிரச்சினை என்ற பேச்சுக்கே இடமில்லை. அதேபோல் அவ்வப்போது சின்னச்சின்ன பரிசுகளையும் கொடுத்துக் கொண்டே இருங்கள். அது ‘ஹேர் க்ளிப்’பாகவோ, ‘கர்ச்சீப்’பாகவோ இருக்கலாம். நீங்கள் என்ன பரிசு கொடுக்கிறீர்கள்? என்பது முக்கியமல்ல. அதை நீங்கள் அன்போடு தருவது தான் முக்கியம்.
5. தனிமையைப் பயன்படுத்துங்கள் :
எவ்வளவுக்குத்தான் உங்களுக்கு அதிகமான வேலை இருந்தாலும் கிடைக்கின்ற தனிமையை பயன்படுத்துங்கள். வீட்டிலும் வேலை, அலுவலகத்திலும் வேலை என எப்போதும் பிஸியாகவே இருக்கும் கணவன்-மனைவி இருவரும் சிறிது நேரம் ஒதுக்கி, தனிமையில் மனம் விட்டுப் பேசுங்கள். இருவரும் மாதம் ஒருநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வெளியில் எங்கேயாவது சென்று வரலாம். அன்றைய தினம் வீட்டில் சமைக்காமல் ஹோட்டலில் சாப்பிடலாம்.
கணவனும், மனைவியும் சேர்ந்து காலையிலோ அல்லது மாலையிலோ அரைமணி நேரம் நடக்கலாம். இதனால் உடலுக்கு மட்டுமல்ல, உறவுக்கும் நல்லது. நீங்கள் தனிமையில் இருக்கும் நேரங்களில் உங்கள் துணையின் கைகளை ஆதரவாகப் பற்றியிருங்கள். ‘உனக்காக நான் எப்போதும் இருக்கிறேன்’ என்பதை அந்தப் பற்றுதல் சொல்லாமல் சொல்லும். எனவே தனிமை என்பது புது ஆற்றலைத் தரும் ஒன்றாக இருக்கிறது. இதனால் கணவன்-மனைவி உறவுக்குள் புதிய பரிமாணம் ஏற்படுகிறது.
-அபராசிதன்