முஜாஹிர்களும் மன்னிப்பும்
[ أَبَى هُرَيْرَةَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كُلُّ أُمَّتِي مُعَافًى إِلَّا الْمُجَاهِرِينَ وَإِنَّ مِنْ الْمُجَاهَرَةِ أَنْ يَعْمَلَ الرَّجُلُ بِاللَّيْلِ عَمَلاً ثُمَّ يُصْبِحَ وَقَدْ سَتَرَهُ اللَّهُ عَلَيْهِ فَيَقُولَ يَا فُلَانُ عَمِلْتُ الْبَارِحَةَ كَذَا وَكَذَا وَقَدْ بَاتَ يَسْتُرُهُ رَبُّهُ وَيُصْبِحُ يَكْشِفُ سِتْرَ اللَّهِ عَنْهُ ]
உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள் “என் சமூகத்தில் அத்துணை பேருக்கும் மன்னிப்பு உண்டு ஆனால் முஜாஹிர்களைத்தவிர” முஜாஹிர்கள் என்பவர் யார் எனில் அவர் இரவில் ஒரு பாவச்செயலை செய்கிறார் பின் காலையில் எழுந்து மறுநாள் தன் முந்தின நாள் இரவில் செய்த காரியத்தை பகிரங்கப்படுத்துகிறார். இரவில் அவர் செய்ததை அல்லாஹ் மறைத்துவைத்திருந்தான் ஆனால் அவனோ அந்த திறையைக் கிழித்துவிட்டான்.
என் நண்பர் ஒருவரோடு வீதியில் நடந்துகொண்டிருந்தேன். அப்பொழுது அங்கு ஒரு கூட்டத்தினர் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தனர். அவர்களை நெருங்க நெருங்க அவர்களின் சம்பாஷணையில் சில வார்த்தைகள் என் காதில் விழ ஆரம்பித்தது. அதில் ஒருவர் தம் இளமைக்காலத்து சுய புராணத்தை வாசித்துக்கொண்டிருக்கிறார். தன் பாலிய வயதில் ” விலைமாது ” என்றால் யார்? என்று அறிய நாடி தான் அதில் பெற்ற அனுபவங்களை தன் சக நண்பர்களோடு பகிர்ந்துகொள்கிறார். அதை கேட்டு சுற்றி இருந்தவர்கள் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்”. திடுக்குற்று விழித்தேன்.
இதோடு கலைந்தது போனது என் கனவு, உயிரற்று போனது என் உறக்கமும். இது நான் கண்ட சமீபத்திய கனவு, ஏன் இப்படி ஒரு கனவு? என்று என் மூளையில் மின்மினிகள் வட்டமிட, என் சிந்தைக்கு விருந்தாய், அழையா விருந்தாளியாய் வந்து சேர்ந்த்து இந்த நபிமொழி.
இறைவன் தனக்கென 99 பெயர்களை வகுத்து வைத்துள்ளான். அந்த பெயர்களின் வெளிப்பாடக இவ்வுலகில் தன் இயக்கங்களை நிகழ்த்துகிறான். அப்படி அவனுக்குள்ள விசேஷ பெயர்களில் முக்கியமானவைகளில் ஒன்று “சத்தார்” என்பதாகும்.
சத்தார் என்பதன் பொருள் “மறைப்பவன்” என்பதாகும்.
இன்று நாம் நல்ல தந்தையாக/ தாயாக, மகனாக/மகளாக, கணவனாக/ மனைவியாக, முதலாளியாக/ தொழிலாளியாக வலம் வந்து கொண்டிருக்கிறோம். கொஞ்சம் யோசித்து பாருங்கள் நம் உண்மை நிலைகள் அடுத்தவர்களுக்கு தெரிய ஆரம்பித்தால், நம் மானம் மரியாதைகள் என்னவாகும், அல்லது நாம் வாழ்க்கையை நிமிடங்கள் தான் சந்தோஷமாக கரையுமா?
வாழ்வில் அடுத்தவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக நாம் மறைத்த பல விஷயங்களை நாம் நம் மனதில் சுமைகளாக தூக்கிக்கொண்டு திரிகிறோம். இந்த விஷயத்தின் இறைவன் தன் படைப்புகள் மீது காட்டிய அற்புதமான கருணையின் விளைவு. அவர்கள் தாங்கள் செய்த தவறுகளோடு மானம் மரியாதை இழக்காமல் வாழ்கிறார்கள்.
நான் மேலே சுட்டிக்காட்டிய கனவைப்போன்று, இன்று நம் வாழ்வில் நடந்துகொண்டுள்ள நிஜங்கள் எத்தனையோ. தவறை செய்துவிட்டு அதை கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் சபைகளில் வெளிப்படுத்துகிறோம், இன்னும் ஒரு படி
மேலே போய் அதை தன் பெருமையின் அடையாளமாகவும் பயன்படுத்தவும் விரும்புகிறோம்.
தன் தவறுகள் பதிவு செய்யப்படுகின்றன என்ற நிலைக்கூட நாம் மறந்துவிடுகிறோம். மனித மரியாதைகள்
இந்த வார்த்தைகள் தான் மனிதனின் (Stand) நிலைப்பாட்டை, அவன் எங்கிருக்கிறான் என்பதை அவனுக்கே அடையாளப்படுத்துகின்றன. சுயத்தை இழந்து போலியான மரியாதைகளில் தன்னை துழைத்துவிட்ட மனித சமுதாயம்.
மீண்டும் தன் சுயதேடுதலில் இருங்குவதற்கு இதைவிட அழமான அறிவுரைகள் எங்கு கிடைக்கும். இது இஸ்லாமியர்களுக்கு என்று சொல்வதைவிட பொதுவாக மனித சமூதாயத்திற்கான ஒரு அறைகூவல். இன்று இந்த ஹதீஸை உரைகல்லாக்கி நம் வாழ்க்கையை அதில் தீட்டிப்பார்தால், கிடைக்கிற விடைகளோ எத்தனை எத்தனை…
பொதுவாக நம்மை படைத்தவன் இறைவன் வகுத்த நீதி “அறைகளில் நடப்பதை வீதிக்கொண்டு வருவதை அவன் விரும்புவதில்லை “. ஏனெனில், அழகு என்பதற்கு அளவுகோலே ஆடையோடு இருப்பது தான். ஆடை அவிப்புகள் ஒரு காலமும் அழகாக ஆகிவிடாது, அது ஆபாசம் மட்டுமே. சிந்தனையில் கூட வன்புணர்ச்சியால் சிக்குண்டு கிடப்பவர்களுக்கு வேண்டுமானால் அது அழகாக தெரியலாம். ” விதிவிலக்குகள் வழிகாட்டிகளாக ஆகா” என்பது ஒரு விதி. இறைவன் வகுத்த நியதிகளில் எவை மறைவாக உள்ளதோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட்வேண்டியவையே.
உதாரணத்திற்கு ஒன்று ” நோன்பு காலங்களில் நோன்பு பிடிக்க முடியாதவர் என்று ஒரு பேணுதல் உள்ள மருத்துவரால் வழிகாட்டப்படுகிற ஒருவர் நோன்பை விட மார்க்க சட்டங்கள் அனுமதி அளிக்கிறது. ஆனால், காலம் நோன்புடையதாக இருப்பதால் அவர்கள் அதன் கண்ணியத்தை பேணி மற்ற நோன்பாளிகள் வெளியில் எப்படி நடந்துகொள்கிறார்களோ அப்படித்தான் இவரும் இருக்கவேண்டும். தன் உணவு உண்ண வேண்டிய நிர்பந்த நிலை ஏற்பட்டால் என்ன ஒரு சிறந்த வழிகாட்டுதலை செய்து தந்திருக்கிறார்கள் நபியவர்கள்.
இதே அடிப்படையில் தான் இஸ்லாமிய அடையாளங்களை பொது இடங்களில் வெளிப்படுத்தினால் கேவலமாக இருக்கும் என்று மறைத்தாலும், மறைக்க வேண்டிய வைகளை வெளிப்படுதினாலும் அவர் இந்த வகையிலே கணிக்கப்படுவார்.
இன்றை காலை நம் வாழ்வில் கூட எத்தணையோ நிகழ்வுகள், பாவமான காரியங்களை செய்துவிட்டு இறைவன் அவற்றை மறைத்திருக்க நாமாக அவற்றை பகிரங்கப்படுத்தி நம் பாவமன்னிப்பிற்கு நாமே தடைபோட்டுக்கொள்கிறோம். இது போன்ற நிகழ்வுகள் இனி நம் வாழ்வில் நிகழாமல் இருப்பதற்கு கவனமாக இருப்போமாக. ஆமீன்.
– பேராசிரியர், இஸ்மாயில் ஹஸனீ