அம்மாவும், மனைவியும்!
ஒரு கீழ்த்தட்டு நடுத்தர கூட்டுக் குடும்பத்தின் இலக்கணப்படி, சாப்பாடு மட்டுமின்றி, அன்றாட நடவடிக்கைகளிலும் கடைஞ்செடுத்த சிக்கனத்தைப் புகுத்தியிருந்தார் என் அம்மா. அத்தோட கலகம் பண்றதுக்கு வீட்டில பையன்களும் கிடையாது. அதனால அம்மாவோட சிக்கன பட்ஜெட்டைக் கேள்வி கேட்பாரே இல்லை!! இப்படியாக, அம்மா சொல்பேச்சு கேட்டு, கொடுத்ததச் சாப்பிட்டும், கிடைச்சத உடுத்தியும், ’அடக்கமான பெண்களா’ வளர்ந்து வந்தோம்.
இதுல என்னன்னா, சமையல்ங்கிறது ஒரு பெரிய கஷ்டமான வேலையாவே படலை எனக்கு. நான் அடுக்களை பக்கம் போறதேயில்லைங்கிறது வேற விஷயம்!! இப்படியா சந்தோஷமா இருக்கும்போது, எனக்குச் சோதனைக்காலமும் வந்துச்சு – கல்யாணம்கிற பேர்ல!!
கல்யாணமாகி மாமியார் வீட்டுக்குப் போன மறுநாளே, காலையில டீயோட, ரெண்டு ‘ஹாஃப்-பாயில்’ வந்துது ரூமுக்கு!! விடியக்காலையிலயே முட்டையா, அதுவும் ரெண்டான்னு அதிர்ச்சியோட பார்த்தேன். எங்கூர்ல, ரெண்டு முட்டையில நாலு வெங்காயத்தை அரிஞ்சுப் போட்டு ஒரு குடும்பமே ஒருவேளைச் சாப்பாட்டை முடிச்சுப்போம். இங்க ஒருத்தருக்கே ரெண்டு முட்டையான்னுதான் முதல் அதிர்ச்சி. சரி, முதல் நாள்னு ஸ்பெஷலாத் தர்றாங்க போலன்னு எதுவும் சொல்லாம கஷ்டப்பட்டு சாப்பிட்டுகிட்டேன்.
ஆனா அடுத்த நாளும் அது தொடர்ந்துது!! இதுக்கிடையில ரங்க்ஸ் என்ன செய்வார்னா, நான் திக்கிமுக்கி ஒரு முட்டையைச் சாப்பிட்டு முடியுற வரை காத்திருந்து, நைஸா அவருக்குள்ள ரெண்டு ஹாஃப்-பாயில்ல ஒண்ணை என் பிளேட்ல தள்ளிவிட்டுட்டு, “அக்கா, இங்க பாரு, இன்னும் சாப்பிடாம உக்காந்திருக்கா”ன்னு அக்காவை வேற தூண்டிவிட்டுட்டுப் போவார். புதுப்பொண்ணாச்சே, முதல்லயே சுயரூபத்தைக் காட்டவேண்டாம்னு கோவத்தை அடக்கிட்டு இருந்தாலும், இயலாமையில கண்ணுல தண்ணி முட்டும் எனக்கு. ஏன்னா இதச் சாப்பிட்டுட்டு, அடுத்த அரைமணியில ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடணும். வயத்துல இடம் வேணாமா? இப்படியே ஒரு வாரம் போனதும், பொறுக்கமுடியாம மாமியார்கிட்ட காலையில முட்டை வேண்டாம்னு மெதுவாச் சொல்லிட்டேன்.
மூணுவேளையும் விதவிதமான சாப்பாடுதான். சாப்பாடு வகைகளைப் பார்த்தாலே ஆச்சர்யமா இருந்துது. ஏன்னா, எங்க ஊர்ல நான் சொன்னதுபோல, “mass food”தான் நிறைய. ஆனா, இங்கயோ, அரிசிரொட்டி, பாலாடை, ஓட்டப்பம், ஆப்பம், ஜாலரப்பம், பத்திரினு எல்லாமே செய்றதுக்கு ரொம்ப நேரம் எடுக்கிற வகைகள். சரி, கல்யாண வீட்டு ஜோர்ல செய்றாங்கன்னு நினைச்சா, ஒரு மாசம் கழிச்சும் அதேபோல வகைதொகையாச் சாப்பாடு தொடரவும், முதல்முதலா நானும் இப்படியெல்லாம் சமைக்கணுமேன்னு எனக்கு பயம் வந்துது!! எவ்வளவு நாளைக்கு சாப்பிட்டுகிட்டு மட்டுமே இருக்க முடியும்?
அதுவுமில்லாம, ஒவ்வொரு சாப்பாட்டுக்கும் ஒரு காம்பினேஷன் வேற வச்சிருந்தாங்க. உதாரணமா, பாலாடைன்னா அதுக்கு தொட்டுக்க மட்டன் ரோஸ்ட்தான் வேணும். இல்லைனா, ‘புலி பசிச்சாலும்..’ கதைதான்!! எங்க வீட்லயோ, சப்பாத்திக்குச் சாம்பார்னாலும்கூட கேள்வியே கேட்காம சாப்பிட்டுக்கிடுவோம். அப்புறம், தேங்காய் – கேரளா பார்டர்ல உள்ளவங்களைக் கேக்கணுமா? ஒரு நாளைக்கு குறைஞ்சது ரெண்டு தேங்காய் செலவாச்சு. எங்கம்மா மகராசியோ, ஒருநாளைக்குள்ள மொத்தச் சமையலையே ரெண்டு கீத்து தேங்காயில முடிச்சுடுவாங்க!! இப்படி எல்லாத்துலயும் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம்!!
இப்ப நானும் இதேபோல சமையல் செய்யணுமேங்கிற கவலை என்னைப் பிடிச்சுகிச்சு. நல்லவேளை, நாலு மாசத்துலயே ரங்க்ஸ் அபுதாபி வந்துட்டதால பிழைச்சோம்னு கூடவே ஓடிவந்தேன். தனிக்குடித்தனம்தான்கிறதால ஒரு நிம்மதி. மெதுவா எல்லாம் செஞ்சு படிச்சுக்கலாம்னு ரெஸிப்பிகள் எழுதி வாங்கிட்டு வந்தேன். ரங்ஸை சோதனை எலியா வச்சு என் சமையல் ப்ராக்டிகல்களை ஆரம்பிச்சேன். முத முத, முட்டை மஞ்சக்கரு உடையாம ஒரு ஹாஃப்-பாயில் போட நான் பட்ட பாடு என்னைவிட ரங்க்ஸுக்குத்தான் நல்லாத் தெரியும்!! ஆச்சு, இப்படியே பரிசோதனை செய்ய ஆரம்பிச்சு பல வருஷங்கள் ஓடிப்போச்சு.
இப்ப அவர்கிட்ட என் சமையல் எப்படின்னு கேட்டா, முழுசா திருநெல்வேலியாவும் இல்லாம, நாகர்கோவிலாவும் இல்லாம, நடுவால வள்ளியூர்ல நிக்குதும்பார். சரி, 14 வருஷத்துல வள்ளியூர் வரை வந்தாச்சு. இன்னும் ஒரு ஏழெட்டு வருஷத்துல நாகர்கோவில் வந்துடாது?
இப்ப நல்ல முன்னேற்றம் இருக்கு. என்னன்னு கேக்குறீங்களா? ரங்க்ஸ் சோதனை எலியிலிருந்து சோதனைப் பெருச்சாளியா ஆகிட்டார். அவ்ளோ வெயிட் கூடிடுச்சு, இதுவும் முன்னேற்றம்தானே? ஆக, இப்படியே விட்டா நல்லதுக்கில்லைன்னு டயட்ல இருந்தோம்/இருந்துகிட்டேயிருக்கோம் நாங்க. அப்பாடா, சமையல்லருந்து ஓரளவு விடுதலைன்னு சந்தோஷப்படவும் முடியாது. நார்மல் சமையலைவிட, டயட் சமையல் செய்றது இன்னும் கொடுமை!!
அப்படி டயட்ல இருந்த ஒரு சுபயோகத் தினத்துல, வாப்பாவும், புள்ளையுமா உக்காந்து சாப்பிட்டுகிட்டு இருந்தாங்க. ரங்ஸோட கோட்டா முடிஞ்சும் நகராம உக்காந்துகிட்டிருக்க, நான் அதைக் கண்டுக்காம, மூத்தவனுக்கு மட்டும் பரிமாறிகிட்டிருக்க, “எனக்கு?”ன்னு அப்பாவியாக் கேட்டார். “அதான் மூணு தோசை வச்சேனே?”ன்னு சொல்லிட்டு கருமமே கண்ணாயிருக்க, அவர் புலம்ப ஆரம்பிச்சுட்டார்.
“ஹூம், எங்கம்மாவெல்லாம் நானே வேண்டாம்னாலும் விடமாட்டாங்க. கிட்ட உக்காந்து சாப்பிடுப்பான்னு அன்பா பரிமாறுவாங்க. ஏன், இப்ப ஊருக்குப் போனாகூட விடாம, எனக்காக அதைச் செஞ்சு, இதைச் செஞ்சு சாப்பிடுப்பான்னு தருவாங்க. நான் போதும்போதும்னு சொன்னாலும் கேக்காம, இன்னும் சாப்பிடுன்னு வச்சுத் தந்துகிட்டேயிருப்பாங்க. இங்க என்னடான்னா, எண்ணி எண்ணி சாப்பாடு போடுறே நீ?
புருஷனுக்கு அளந்து அளந்து சாப்பாடு போடுற அளவு கலி முத்திப் போச்சு!”ன்னு அவர்பாட்டுக்குப் பேசிகிட்டே போக, என் செல்ல மகன் இடைமறிச்சான். “வாப்பா, உங்க உம்மாவும் அப்படித்தானா? என் உம்மாவும் அப்படித்தான்! நான் வேண்டாம்னு சொன்னாலும் விடுறதில்லை; போதும்னாலும் விடாம சாப்பாடு வச்சுகிட்டே இருப்பா. சே, இந்த உம்மாக்களே ரொம்ப மோசம். இல்ல வாப்பா?” என்று சொல்ல, சார் முகத்தப் பாக்கணுமே!!