ஹதீஸ்களை மறுக்கும் போக்கு….
மவ்லவி, கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி
“”(நபியே!) உம்முடைய ரட்சகனின் மீது ஆணையாக, அவர்கள் தங்களுக்கிடையே கருத்து வேறுபாடு கொண்ட விஷயத்தில் உம்மை நீதிபதியாக ஆக்கி, பிறகு நீர் தீர்ப்பளிப்பதைப் பற்றித் தங்கள் மனங்களில் எவ்வித அதிருப்தியையும் பெற்றுக்கொள்ளாமல் முற்றிலும் (அதனை) ஏற்றுக்கொள்ளதவரை அவர்கள் ஈமான் கொண்டவர்களாக ஆகமாட்டார்கள்.” (அல்குர்ஆன் 4:65)
“அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்; (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள், (மாறு செய்வதை விட்டும்) எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் புறக்கணித்தால், நம் தூதரின் மீதுள்ள (பொறுப்பான)தெல்லாம் (நம் செய்தியை உங்களுக்குத்) தெளிவாக எத்திவைப்பது தான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5:92)
“ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். (அவனுடைய) தூதருக்கும் வழிபடுங்கள். ((வழிபடாமலிருந்து) உங்களுடைய நற்செயல்களை நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள்.” (அல்குர்ஆன் 47:33)
“(அல்லாஹ்வின்) தூதருக்கு வழிபட்டவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு வழிபட்டவராகிவிட்டார்.” (அல்குர்ஆன் 4:80)
“திண்ணமாக முஃமீன்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் புரிந்துள்ளான் அவர்களிலிருந்தே தூதர் ஒருவரை அனுப்பியதன் வாயிலாக. அவர் அவர்களுக்கு அவனுடைய திரு வசனங்களை ஓதிக்காண்பித்து, அவர்களைப் (பாவங்களை விட்டும்) பரிசுத்தப்படுத்தி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன் பகிரங்க வழிகேட்டிலேயே இருந்தார்கள். (அல்குர்ஆன் 3:164)
ஹதீஸ்களை மறுக்கும் புதிய போக்கு….
குழப்பங்களிலெல்லாம் மிகப் பெரியது, மனிதத்தன்மையை இழக்கச்செய்வது, அவர்களின் மறுமை வாழ்வினை பாழ்படுத்துவது, மனிதர்களின் ஈமானிலும் இஸ்லாமிய நெறிகளிலும் ஏற்படுகின்ற குழப்பமாகும்.
இன்று அல்லாஹ்வின் வேதமாகிய குர்ஆனைக் கொண்டே குழப்பத்தை உண்டாக்க சிலர் முளைத்துள்ளனர்.
“இந்த குர்ஆனின் மூலம் பலரை (அல்லாஹ்) வழிதவறச் செய்கிறான். இதன் மூலம் பலரை நேர்வழி பெறச்செய்கிறான்”. (அல்குர்ஆன் 2:26)
நேர்மையான எண்ணத்துடனும், தூய மனத்துடனும் குர்ஆனைத் தொடர்பு கொள்கிறவரை நேர்வழி பெறச் செய்கிறான். தீய எண்ணத்துடனும், நம்பிக்கையில்லா மனத்துடனும் தொடர்பு கொள்கிறவரை வழிதவறச் செய்கிறான் என்பது இதன் கருத்தாகும். எனினும் குர்ஆன் அருளப்பட்டதின் நோக்கம், மனிதர்கள் நன்மையையும், தீமையையும் பகுத்துணர்ந்து நேர்வழி செல்வதற்காகத்தான்,
அல்லாஹு(த்)தஆலா கூறுகிறான்: “பசுமையானதோ, காய்ந்ததோ எதுவாயினும் தெளிவான (இந்த) வேதத்தில் இல்லாமலில்லை”. (அல்குர்ஆன் 6:59)
சிறிய, பெரிய அனைத்துச் செய்திகளும், சட்டங்கள், அறிவுரைகள் அனைத்துத் தேவைகளும், விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் அனைத்துத் துறைகளும் இதில் கூறப்பட்டுள்ளன என்பது இதன் கருத்து.
ஆனால், திருக்குர்ஆனுடைய எல்லா வசனங்களுக்கும் விளக்கத்தை எல்லா மனிதர்களும் புரிந்துகொள்ள முடியாது என்பதால் அல்லாஹு(த்)தஆலா தன் திருத்தூதர் ஒருவரை – குர்ஆன் அருளப்படுவதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்னரே – அனுப்பிவைத்து விளக்கம் கூறச் செய்தான். அதனைப் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.
“மனிதர்களுக்கு அவர்களுக்காக இறக்கி வைக்கப்பட்டதை நீர் விளக்குவதற்காக (இந்த திக்ராகிய) குர்ஆனை உமக்கு நாம் இறக்கி வைத்தோம்.” (அல்குர்ஆன் 16:44)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கம் கூறாமல் திருக்குர்ஆனிலுள்ள எந்த சட்டத்தையும் எந்த வணக்க வழிபாடுகளையும் எவரும் முழுமையாகத் தெரிந்திட முடியாது. விளக்கம் மட்டுமல்ல, குர்ஆனை ஓதுவதற்கும், வேத ஞானத்தை கற்பதற்கும் ஆன்மீகப் பரிசுத்தம் பெறுவதற்கும் அந்தத் தூதரவர்களின் வழிகாட்டல் தேவை. இதனை அல்லாஹு(த்)தஆலா பின்வரும் வசனங்களில் கூறுகிறான்.
“திண்ணமாக முஃமீன்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் புரிந்துள்ளான் அவர்களிலிருந்தே தூதர் ஒருவரை அனுப்பியதன் வாயிலாக. அவர் அவர்களுக்கு அவனுடைய திரு வசனங்களை ஓதிக்காண்பித்து, அவர்களைப் (பாவங்களை விட்டும்) பரிசுத்தப்படுத்தி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன் பகிரங்க வழிகேட்டிலேயே இருந்தார்கள். (அல்குர்ஆன் 3:164)
இவ்வசனத்தில் அல்லாஹு(த்)தஆலா தன் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் திருக்குர்ஆன் சம்பந்தமான மிக முக்கியமான பணிகளைப்பற்றி விளக்குகிறான்.
திருக்குர்ஆனின் வசனங்களை ஓதிக்காண்பித்து, அதிலுள்ள சட்டங்கள், அறிவுரைகள், ஞானங்கள் ஆகியவற்றை கற்றுக் கொடுத்து மக்களைப் பரிசுத்தமானவர்களாக ஆக்குவதற்காகவே அவர்களை அனுப்பியதாக கூறுகிறான்.
அவ்வாறு இருக்கையில் இத்தகைய திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல், செயல் தேவையில்லை; அவர்கள் கொடுத்த குர்ஆன் மட்டுமே போதும் என்று ஒருவன் சொன்னால், அவன் முற்றிலும் மார்க்க அறிவில்லாதவன் என்றே சொல்ல வேண்டும். எனவே, அல்லாஹ்வுக்கு வழிபடுவதாகச் சொல்கிறவர்கள் அவனுடைய திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் வழிபட்டே ஆக வேண்டும்.
அல்லாஹ்வின் தூதருக்கு வழிபட்டே ஆக வேண்டும் என்பதைப் பற்றி அல்லாஹ் தனது திருமறையில் கூறும்போது:
“அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்; (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள், (மாறு செய்வதை விட்டும்) எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் புறக்கணித்தால், நம் தூதரின் மீதுள்ள (பொறுப்பான)தெல்லாம் (நம் செய்தியை உங்களுக்குத்) தெளிவாக எத்திவைப்பது தான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5:92)
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். (அவனுடைய) தூதருக்கும் வழிபடுங்கள். ((வழிபடாமலிருந்து) உங்களுடைய நற்செயல்களை நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள்.” (அல் குர் ஆன் 47:33)
“(அல்லாஹ்வின்) தூதருக்கு வழிபட்டவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு வழிபட்டவராகிவிட்டார்.” (அல் குர் ஆன் 4:80)
இவை போன்று பல வசனங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சொல்லுக்கும், செயலுக்கும் கட்டாயமாகக் கட்டுப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. அல்லாஹ்வின் தூதருக்கு வழிபடாமல் அல்லாஹ்வுக்கு வழிபட்டவராக முடியாது என்பதையும் மேலுள்ள கடைசி வசனம் தெளிவாக்குகிறது. ஏனெனில், அல்லாஹ்வுடைய தூதரின் சொல்லும் செயலும் அவனுடைய கட்டளைப்படியே நிகழ்வுறுகின்றன என்பதால், தூதருக்குக் கட்டுப்படுதல் அவசியம். அடுத்த வசனமும் இதனைத் தெளிவுபடுத்துகிறது.
“அவர் (நம் தூதர்) தம் மன விருப்பப்படி (எதனையும்) பேசுவதில்லை. அது (அவருக்கு) அறிவிக்கப்படுகின்ற வஹீயே தவிர வேரில்லை. வல்லமை மிக்க (ஜிப்ரீலான)வர் அதனை அவருக்குக் கற்றுக்கொடுத்தார்.” (அல்குர்ஆன் 53: 3,4,5)
இத்தகைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றி அவர்களுடைய அடிச்சுவட்டில் தடம் பதித்து வாழ்வது தான் அல்லாஹ்வின் மன்னிப்பும், அருளும் கிடைக்கப் பெற வழி என்பதனைப் பின்வரும் வசனம் அறிவிக்கிறது.
“(நபியே!) கூறுவீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அப்பொழுது அல்லாஹ் உங்களை நேசிப்பான்; மேலும் உங்களுடைய பாவங்களையும் உங்களுக்கு மன்னிப்பான்.” (அல்குர்ஆன் 3:31)
இவ்வாறே, ஒருவர் முஃமினாக ஆவதற்கு நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தீர்ப்பினை ஏற்க வேண்டியது அவசியம் என்பதையும் அல்லாஹ் கூறுகிறான்:
“உம்முடைய ரட்சகனின் மீது ஆணையாக, அவர்கள் தங்களுக்கிடையே கருத்து வேறுபாடு கொண்ட விஷயத்தில் உம்மை நீதிபதியாக ஆக்கி, பிறகு நீர் தீர்ப்பளிப்பதைப் பற்றித் தங்கள் மனங்களில் எவ்வித அதிருப்தியையும் பெற்றுக்கொள்ளாமல் முற்றிலும் (அதனை) ஏற்றுக்கொள்ளதவரை அவர்கள் ஈமான் கொண்டவர்களாக ஆகமாட்டார்கள்.” (அல்குர்ஆன் 4:65)
இரு நபர்கள் ஒரு விஷயத்தில் தங்களுக்கிடையே தர்க்கம் செய்துகொண்டபொழுது, ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்விருவரையும் விசாரித்துத் தீர்ப்புச் செய்தபொழுது, தீர்ப்பு தனக்கு பாதகமாக இருந்த ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தீர்பப்பற்றி சற்று அதிருப்தியடைந்தார். அந்நேரத்தில் இந்த ஆயத்து இறக்கப்பட்டது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த தீர்ப்பு அல்லாஹ்வின் தீர்ப்பு தான் என்பதை அவனே அறிவிக்கின்றான்.
அல்லாமா இப்னுல் அரபீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் காருத்தாவது: “ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த தீர்ப்பில் அவர்களைச் சந்தேகிக்கிறவர் காஃபிர் தான்”. (தஃஸீர் குத்துபீ)
இவ்வாறே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த தீர்ப்பில் அதிருப்தி கொண்ட முனாஃபிக் ஒருவர், அதனை ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் முறையிட்டபோது, ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த முனாஃபிக்கின் தலையைத் தங்களுடைய வாளால் வெட்டி வீழ்த்தினார்கள். கொலை செய்யப்பட்டவரின் உறவினர் இதுபற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் முறையிட்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடனடியாகப் பின்வரும் வாசகத்தைக் கூறினார்கள்:
“உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு முஃமினான மனிதரைக் கொலை செய்யத் துணிந்திருப்பார் என்று நான் கருதவில்லை”. (மஆரிபுல் குர்ஆன்)
மக்களுக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்பவர்தான் ஈமானுள்ளவர் என்று அல்லாஹு(த்)தஆலாவே தீர்ப்பு வழங்கியிருக்கும்போது நபிக்கு இந்த மார்க்கத்தில் தனி அதிகாரம் கிடையாது என்று கூறுகிற இன்றைய புதிய காஃபிர்களைப் பற்றி முஸ்லிம்கள் அறிந்து, அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆன்மீகச்சுடராகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல், செயல் தேவையில்லை; குர்ஆன் மட்டும் போதுமென்றால் மனித வாழ்க்கையே சூன்யமாகிவிடும்.
ஷைத்தான் ரஷாத் கலீஃபா
சமீப காலமாக தமிழகத்தில் ரஷீதா கலீஃபா எனும் ஷைத்தானை அல்லாஹ்வின் தூதர் என்பதாக நம்பி அவன் கூறியுள்ளவாறு குர்ஆன் மட்டுமே நம்பகமானது; ஹதீஸ்களெல்லாம் ஷைத்தானுடைய வாசகங்கள்; ஹளரத் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய எதிரிகளால் கற்பனையாகச் சொல்லப்பட்ட செய்திகள் என்று சொல்லிக்கொண்டு குழப்பம் செய்து வருகின்றனர்.
இவர்கள் இஸ்லாத்தை விட்டு வேளியேறியவர்கள்; காஃபிர்கள்; இறை நிராகரிப்பாளர்கள். இவர்களுடன் திருமண சம்பந்தங்கள் செய்துகொள்வது கூடாது. இவர்கள் இறந்துவிட்டால், ஜனாஸா தொழ வைப்பதோ, முஸ்லிம்களின் கப்ருஸ்தானில் இவர்களை அடக்கம் செய்வதோ கூடாது என்று உலமாகள் தீர்ப்பளித்துள்ளனர்.