நன்றி உணர்வே நல்வாழ்வின் அடிப்படை
இன்று ஒரு தனி மனித அளவில் ஏற்படும் பிரச்சனையாக இருந்தாலும், அல்லது குடும்ப அளவிலான பிரச்சனையாக இருந்தாலும் அல்லது ஒரு நாட்டளவிலான பிரச்சனையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குமே அடிப்படையாக அமைவது ஒருவகையான பொறாமை உணர்வு தான்.
ஒரு தனி மனிதன் தன்னை விட மேலுள்ளவனையும், ஒரு குடும்பம் தனக்கு மேலுள்ள குடும்பத்தையும், ஒரு நாடு தனக்கு மேலுள்ள நாட்டையும் பார்ப்பது தான் பெரும்பாலான பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைந்துள்ளதைப் பார்க்கிறோம்.
என்றைக்கு மேற்கூறப்பட்டவர்கள் தமக்குள்ளதை மட்டும் கொண்டு தன்னிறைவு அடைவது மட்டுமில்லாமல், தனக்குக் கீழுள்ளவரைப் பார்த்து ஆறுதல் அடைகின்றாரோ அன்றைக்கு அவர்களது பிரச்சனைகள் தீர்ந்து அவரிடம் குடிபுகுந்த பொறாமை குடிபெயர்ந்து அங்கு அமைதி குடியேறுகின்றது. நிம்மதி அங்கு கொடி கட்டிப் பறக்கின்றது.
ஒரு மனிதனுடைய அழகு, பணம், பதவி என்று ஆயிரம் பிரச்சனைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். உதாரணமாக ஒரு தனி மனிதனின் அழகை எடுத்துக் கொள்வோம்…
ஒவ்வொரு இளைஞனையும் அவன் பருவமடைந்ததும் அவனை ஆக்கிரமித்து அலைக்கழிக்கும் பிரச்சனை அழகு தான். தன்னை விட அழகான ஒருவரைப் பார்த்து, இவனைப் போன்று முக வெட்டும் உடற் கட்டும் தனக்கு இல்லையே என்று தனக்குள்ளே பொருமுகின்றான். புழுங்கிக் கொண்டிருக்கின்றான். அவனுடைய அடி மனத்தின் ஆழத்தில் புதைந்து கொண்டு அவனை அமுக்கிக் கொண்டிருக்கும் சகதியைக் களைவதற்கு உலகத்தில் எந்த ஒரு மனோ தத்துவ நிபுணர் முன் வந்திருக்கின்றார்?
இவனை உருக்குலைய வைத்துக் கொண்டிருக்கும் இந்த உள்நோயைக் குணப்படுத்தி ஒற்றடம் கொடுத்து வருடி விட எந்த வாழ்வியல் நிபுணர் காத்திருக்கின்றார்? அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர வேறு யாருமில்லை என்று அடித்துச் சொல்இ விடலாம்.
உளவியல் மற்றும் வாழ்வியல் வல்லுநரும் வழிகாட்டியுமான அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்.
”செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மை விடக் கீழானவர்களை அவர் பார்க்கட்டும்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6490)
நிச்சயமாக ஒருவன் தனக்கு மேலுள்ளவரைப் பார்க்கும் போது இத்தகைய பாதிப்புக்குள்ளாகி அதிஇருந்து மீளவே முடியாத நிலைக்கு ஆளாவான். அதே சமயம் இவனை விட அழகு குறைந்தவர்களை ஓர் ஆயிரம் பேரையாவது அவன் காண முடியும். தன்னை விட அழகு குறைந்தவர்களைப் பார்க்கும் போது, இவர்களை விட இறைவன் நம்மை அழகாக்கி வைத்திருக்கின்றானே என்று எண்ணி அல்ஹம்துலில்லாஹ் – அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று சொல்கின்ற போது அவன் மன அளவில் பெரும் நிம்மதி அடைகின்றான்.
நிறத்தை எடுத்துக் கொள்வோம். இதுவும் அழகு என்ற வட்டத்திற்குள் வந்து விடும் என்பதால் இதைத் தனியாகக் குறிப்பிடத் தேவையில்லை. ஆனால் இந்தப் பாதிப்பிற்குள்ளாகாத இளைஞரையோ, முதியவரையோ கூட நாம் காண முடியாது. எனவே இதை நாம் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. இத்தகையவர்கள் தங்களை விட நிறத்தில் குறைந்தவரைப் பார்க்கும் போது அவர்களை விட இவர்கள் நிறத்தில் நன்றாகத் தான் இருப்பார்கள்.
இவர்களை எல்லாம் விட கண்கள் இழந்தவர்களை, கைகள் இழந்தவர்களை, கால்கள் இழந்தவர்களைப் பார்க்கும் போது இந்த நிறம் என்பதெல்லாம் கடுகளவு கூட ஒரு குறையாகவே ஆகி விடாது. இப்படி ஊனமில்லாத உடல் உறுப்புகளை அல்லாஹ் நமக்குத் தந்திருக்கின்றானே என்று மன நிறைவோடு அவனுக்கு நன்றி செலுத்திடுவார்கள். அவர்களுடைய மனதில் ஏற்பட்ட பாறை போன்ற கவலைகள் எல்லாம் தூள் தூளாக நொறுங்கி விடும்.
இது மாதிரியே ஊனமுற்றவர்கள் தங்களுக்கு மத்தியில் நிறைவான எண்ணத்தை உருவாக்கிக் கொள்வதற்கு தங்களுக்குக் கீழுள்ளவர்களைப் பார்க்கும் போது மன நிம்மதி அடைவர். ஒரு கண்ணை இழந்தவர் இரு கண்களை இழந்தவரைப் பார்த்தும், இரு கண்களை இழந்தவர் கை, கால்களை இழந்தவரைப் பார்த்தும், ஒரு கையை இழந்தவர் இரு கைகளை இழந்தவரைப் பார்த்தும் ஆறுதல் அடைய வேண்டும்.
நிச்சயமாக இத்தகைய பார்வை தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறைகளை மறக்கடிக்கச் செய்வதுடன் அவர்களை தத்தமது எதிர்காலப் பணிகளில் தொய்வின்றி தொடரச் செய்கின்றது.
இதுபோல் நோயுள்ளவர்கள் தங்களுக்குக் கீழுள்ளவர்களைப் பார்க்கும் போது லி நிச்சயமாக தங்களை விட அதிகமதிகம் நோய்களைச் சுமந்தவர்களைக் காண முடியும் லி இத்தகையவர்களை ஒரு நோயாளி பார்க்கும் போது, நமக்கு அல்லாஹ் அளித்திருக்கும் இந்த நோய் அவர்களுக்கு வந்திருக்கும் நோயை விட ஆயிரம் மடங்கு குறைவானது, சொல்லப் போனால் இது நோயே அல்ல என்ற முடிவுக்கு வந்திடுவார். இதை நினைத்து அல்ஹம்துஇல்லாஹ் என்று கூறி, தன்னுடைய வாழ்க்கை சீரழிந்து விட்டது என்ற நினைப்பை ஓரத்தில் வைத்து விட்டு, தன் வாழ்க்கை ஓர் இனிய வாழ்க்கை என்ற நல்லெண்ணத்தை நோக்கி வந்து விடுவார்.
மனைவியிடம் மன திருப்தி அடைதல்
இன்று நம்மில் பலரிடம் ஆட்டிப் படைக்கும் ஓர் அற்ப சிந்தனை, அழகிய பெண்களைப் பார்க்கும் போது, ச்ச! இதுபோன்ற ஒரு மனைவி நமக்கு வாழ்க்கைத் துணைவியாக வாய்க்கவில்லையே என்பது தான். இந்தச் சிந்தனை தலை தூக்குபவரும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும் இதே சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு தனது மனைவியை விட அழகு குறைந்தவர்களைக் கருத்தில் கொண்டு மன திருப்தி அடைந்து கொள்ள வேண்டியது தான். இது போல் பெண்களுக்கும் சிந்தனை தோன்றலாம். அவர்களுக்கும் அரியதோர் அருமருந்தாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவுரை அமைந்திருக்கின்றது.
பொருளாதாரம்
இதுவரை அழகு, நிறம், ஊனம், நோய் போன்ற உடல் ரீதியிலான அருட்கொடைகளைப் பார்த்தோம். இப்போது பொருளாதார ரீதியிலான அருட்கொடைகளைப் பார்ப்போம்.
இதுவும் ஒரு தனி மனிதனைத் தாழ்வு மனப்பான்மைக்குக் கொண்டு செல்கின்றது. ஒரு குடும்பத்தை சீரழிவை நோக்கிக் கொண்டு செல்கின்றது. ஒரு நாட்டை நாசத்தை நோக்கி இழுத்துச் செல்கின்றது.
ஒருவன் ஐநூறு ரூபாய் சம்பாதிப்பான். இவன் தனக்கு மேலுள்ளவரைப் பார்த்து பொறாமைப் படுகின்றான். தனக்கு இப்படி ஒரு வருவாய் இல்லையே என்று தனக்குள் வேகவும் செய்கின்றான். இப்படிப் பட்டவன் இருநூறு ரூபாய் சம்பளம் வாங்குபவனைப் பார்க்கும் போது, அவனை விட தான் இரண்டு மடங்குக்கும் அதிகமாக சம்பாதிப்பதை நினைத்து ஆறுதல் அடைவான். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவான். இது ஒரு தனி மனித விவகாரம் என்றால் ஒரு குடும்பம் என்று வருகின்ற போது அங்கு இந்த விவகாரம் பூதாகரமான ஒன்றாக ஆகி விடுகின்றது.
தன் பக்கத்து வீட்டுக்காரர் பெரிய மாளிகையில் வசிப்பார். அந்தக் குடும்பத்தைப் பார்த்து குடிசை வீட்டில் வாழும் பெண்மணி ஏக்கப் பெருமூச்சு விடுவாள். தன் கணவர் சாதாரண கிளர்க் வேலை தானே பார்க்கிறார் என்று வேதனைப் படுவாள். இப்படி கவலைப்படும் ஒரு பெண் செய்ய வேண்டிய காரியம், சென்னையில் ஒண்டுத் திண்ணையில் குடியிருக்கும் மக்களின் வாழ்க்கை நிலையைப் பார்த்து வருவது தான். தரைப் படை என்று நம்மால் கிண்டலாகச் சொல்லப்படும் இம்மக்களின் சமையல், படுக்கை, குளியல், துவையல் எல்லாமே சாலைகளில் தான். இத்தனைக்கிடைய இந்த மக்கள் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிக்கின்றார்கள்.
கொட்டும் மழையிலும், கொளுத்துகின்ற வெயிஇலும் வானமே கூரையாகக் கொண்டு வாழும் மக்களை, கிளர்க்கின் மனைவி என்று வேதனைப் படும் இந்தப் பெண் பார்த்தால், தனக்கு இருப்பது குடிசை வீடாக இருந்தாலும் சொந்த வீடாக அமையப் பெற்றிருப்பது பெரும் பாக்கியம் என்று கருதி அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த முன்வருவாள். தன் வாழ்வை நல்லதொரு வாழ்வு என்று சந்தோஷப்படுவாள். கோபுர வாழ்க்கையைக் கண்டு கொந்தளிப்புக்குள்ளாகாமல் குடிசை வாழ்வைக் கண்டு மன அமைதி பெறுவாள். இவ்வாறு தனக்குக் கீழுள்ளவர்களைப் பார்க்கும் போது அவளது வாழ்வு நல்வாழ்வாக அதே சமயம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் வாழ்வாக அமைந்து விடுகின்றது.
பெரும்பாலான குடும்பங்களில் குழப்பங்கள் உருவாகக் காரணமாக அமைவது குடிசை வீட்டுப் பெண் அல்லது நடுத்தர வசதியுள்ள பெண் தன்னை விட பணக்காரப் பெண்ணைப் பார்ப்பதால் தான்.
அந்த வீட்டில் ரெஃப்ரிஜிரேட்டர் இருக்கின்றது, நம்மிடம் அதுபோல் இல்லையே! அங்கு வாஷிங் மெஷின், டி.வி., கிரைண்டர் எல்லாம் இருக்கின்றது நம்மிடம் இல்லையே! அவர்களிடம் கார் இருக்கின்றது, நம்மிடம் இரு சக்கர வாகனம் கூட இல்லையே என்று மன உளைச்சல் அடைகின்றாள் இந்தப் பெண்! தன்னை தன் கணவர் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லவில்லை, அதனால் இவருடன் வாழ மாட்டேன் என்று மண விடுதலை வாங்கிச் சென்ற மனைவியர் கூட உண்டு. இத்தகைய பெண்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவது போல் தங்களுக்குக் கீழ் நிலையில் உள்ளவர்களைப் பார்க்கும் போது அவர்களது இதயத்தை ரணமாக்கிய வதை சிந்தனைகள் வந்த வழி தெரியாது பின்வாங்கிப் போய் விடும்.
இம்மையிலும் நன்மை! மறுமையிலும் நன்மை!
ஒவ்வொருவரும் தனக்குக் கீழுள்ளவரைப் பார்ப்பாராயின் தனி மனித வாழ்க்கை மட்டுமல்ல, குடும்ப வாழ்க்கையும் இப்படிப்பட்ட குடும்பங்களைக் கொண்ட நாடும் சிறந்து விளங்கும். மேலும் இத்தகைய மக்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் மக்களாகத் திகழ்வார்கள் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இருக்க முடியாது.
தனக்கு மேலுள்ளவர்களைப் பார்க்கையில் பொறாமை ஏற்படுகின்றது. இதனால் இம்மையில் மட்டுமல்லாமல் மறுமையிலும் தண்டனைக்கு உள்ளாகின்றான். அதே சமயம் கீழுள்ளவர்களைப் பார்த்து தனக்குரியது நல்ல நிலை என்று அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் போது அது அவருக்கு மாபெரும் நன்மையைப் பெற்றுத் தருகின்றது. தனக்கு ஏற்பட்ட சோதனையைப் பொறுத்துக் கொள்ளும் போது அதுவும் அவருக்கு நன்மையைப் பெற்றுத் தருகின்றது.
ஓர் இறை நம்பிக்கையாளரின் விவகாரத்தைப் பார்க்கும் போது அது ஆச்சரியத்தை அளிக்கின்றது. அவரது காரியம் அனைத்தும் நன்மையாகவே அமைகின்றது. இ(ந்தப் பாக்கியமான)து ஓர் இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறு யாருக்கும் கிடைப்பதில்லை. அவருக்கு மகிழ்ச்சி ஏற்படும் போது அவர் நன்றி செலுத்துகின்றார். அது அவருக்கு நன்மையாக அமைந்து விடுகின்றது. அவருக்கு ஓர் இடர் ஏற்படும் போது அவர் பொறுமையை மேற்கொள்கின்றார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்து விடுகின்றது என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: சுஹைப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 5318)
எனவே இந்த ஹதீஸின் அடிப்படையில், இருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைந்து, ஏற்பட்ட சோதனையில் பொறுமை காக்கும் போது மறுமையில் மாபெரும் பாக்கியம் கிடைத்து விடுகின்றது. இம்மையில் இந்த நன்றி உணர்வு நல்வாழ்க்கைக்கு அடிப்படையாகி வாழ்க்கை இனிமையாகி விடுகின்றது. மேலும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் போது இம்மையில் அல்லாஹ் தன் அருட்கொடையை அதிகரிக்கவும் செய்கின்றான். கீழ்க்கண்ட வசனம் அதை உறுதி செய்கின்றது.
நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு அதிகமாக வழங்குவேன். நீங்கள் நன்றி மறந்தால் எனது வேதனை கடுமையானது (அல்குர்ஆன் 14:7)
Thanks: http://dubaitntj.blogspot.com