பிரபஞ்சம் விரிவடைகிறது என்பது உண்மையே!
“இதன் பின்னர் பூமியை விரித்தான்.” (குர்ஆன் 79:30)
“வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்தோம்: நிச்சயமாக நாம் அதை விரிவாக்கம் செய்பவராவோம்.” (குர்ஆன் 51:47)
“பூமியை நாம் விரித்தோம்: நாம் அழகுற விரிப்பவர்கள்.” (குர்ஆன் 51:48)
“பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.” (குர்ஆன் 15:19)
“மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் – நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.” (குர்ஆன் 13:3)
“இன்னும், பூமியை – படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.” (குர்ஆன் 55:10)
‘பூமியை விரித்தான்’ என்ற குர்ஆனின் வசனத்தில் வரும் ‘தஹாஹா’ என்ற சொல் ‘தஹ்வு’ என்ற சொல்லின் மூலத்திலிருந்து வந்தது. இங்கு தஹ்வு என்ற சொல்லுக்கு விரித்தல் என்ற பொருள் வரும்.
நாம் அமரும் பாயை சுருட்டுங்கள் என்கிறோம். பாயை விரியுங்கள் என்கிறோம். இங்கு சுருக்கப்பட்ட பொருள் விரிவடையும்போது என்ன வார்த்தையை பயன்படுத்துகிறோமோ அதே வார்த்தையை கொண்டு பூமியையும் இறைவன் கையாள்கிறான்.
பல காலமாகவே இந்த பிரபஞ்சம் நிலையான ஒன்று என்றுதான் அறிவியலார் கூறி வந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் ரஷ்ய இயற்பியல் விஞ்ஞானி அலெக்சாண்டர் ஃபிரைட்மேனும் பெல்ஜிய விஞ்ஞானி லேமைட்ரீயும் பிரபஞ்சத்தின் விரிவடைதலை கண்டறிந்தனர். இந்த உண்மை 1929ல் தொலைநோக்கி சோதனை மூலம் விஞ்ஞானி எட்வின் ஹப்பிளால் நிரூபிக்கப்பட்டது. மேலும் நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்கள் ஒன்றை யொன்று விலகிச் செல்வதையும் தனது சோதனையில் கண்டறிந்தார் ஹப்பிள்.
பிரபஞ்சம் விரிவடைவது சம்பந்தமாக நோபல் பரிசை பகிர்ந்து கொண்ட மூன்று அமெரிக்கர்கள்
பிரபஞ்சம் விரிவடைவது சம்பந்தமாக மூன்று அமெரிக்கர்கள் நோபல் பரிசை பகிர்ந்து கொண்டனர். அதன் காணொளியைப் பார்ப்போம்.
உப்பி விரிகிறது. அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு பொருள் என்று கருதக் கூடாது. அது சோப்புக் குமிழி போல உப்பிக் கொண்டே போகும் ஒரு கோளம்’ -விஞ்ஞானி ஹப்பிள்.
இதைத்தான் இறைவனும் ‘பூமியை விரித்தான்’ அதாவது பூமியை விரிவாக்கம் செய்தான் என்று குர்ஆனில் கூறுகிறான். விஞ்ஞானி ஹப்பிளின் கருத்தை அப்படியே பிரதிபலிப்பதை பார்க்கவில்லையா!
‘பிரபஞ்சம் இருவித முடிவுகளில் சிதைந்து போகலாம்! ஒன்று குமிழிபோல் உப்பிக் கொண்டு அது தொடர்ந்து விரியலாம்! அல்லது பெரும் வெடிப்பில் [Big Bang] தோன்றிய பிரபஞ்சம், ஒரு பெரும் நெருக்கலில் [Big Crunch] மறுபடியும் நொறுங்கி முடிந்து போகலாம்! எனது யூகம், பிரபஞ்சம் பெரும் நெருக்கலில் ஒரு சமயம் அழிந்து போய்விடும் என்பது! பிரபஞ்சத்தின் பிரளய முடிவுகளை முன்னறிவித்த முனிவர்களை விட எனக்கு ஓர் பெரிய சலுகை உள்ளது! இப்போதிருந்து பத்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு எது நிகழ்ந்தாலும், என் கருத்து பிழையான தென்று நிரூபிக்கப்பட நான் உயிரோடு இருக்கப் போவதில்லை ‘ என்று புன்னகை புரிகிறார், ஸ்டாஃபென் ஹாக்கிங்!
முன்பு பூமியில் இருந்த நிலப்பரப்பு அனைத்தும் ஒன்றாகவே இருந்தன. பூமியானது விரியத் தொடங்கியவுடன் ஒன்றாக இருந்த நிலப்பரப்புகள் கண்டங்களாகவும், நாடுகளாகவும், தீவுக் கூட்டங்களாகவும் பிரிகின்றன.
ஹாக்கிங் கூறுகிறார்:
‘இருபதாம் நூற்றாண்டிற்கு முன்னர் ஒருவர் கூட பேரண்டம் விரிந்து செல்கிறது அல்லது சுருங்கி வருகிறது எனும் கருத்தைத் தெரிவிக்கவில்லை. பேரண்டம் மாற்றமே இன்றி நாம் காண்பது போலவே எக்காலமும் இருந்திருக்கிறது என்றே பலரும் நம்பி வந்தனர். பெரும்பாலான மக்களின் மன நிலையும் இதை ஒட்டியே அமைந்திருந்ததும் காரணமாக இருக்கலாம்.’ -எ ஃப்ரீ ஹிஸ்டரி ஆஃப் டைம் (பக்கம் 6)
“The discovery that the universe is expanding was one of the great intellectual revolutions of the 20th century.
(பேரண்டம் விரிவடைகிறது எனும் இக்கண்டுபிடிப்பு இருபதாம் நூற்றாண்டின் பெரும் அறிவுப் புரட்சிகளில் ஒன்றாகும்)
(அதே புத்தகம் பக்கம் 42)
உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகளான ஐசக் நியூட்டன் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற அறிஞர்கள் கூட பிரபஞ்சம் விரிவடைகிறது என்ற செய்தியை அறிந்திருக்கவில்லை. அது பற்றிய சிந்தனையும் அவர்களுக்கு எழவில்லை. இது போன்ற ஒரு வார்த்தைப் பிரயோகத்தை முகமது நபி என்ற ஒரு மனிதரால் சொல்லியிருக்க முடியுமா? என்று சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம். படிப்பறிவற்ற அந்த சமூகத்தையும் தனது தாய் மொழியையே எழுத படிக்க தெரியாத முகமது நபியையும் இங்கு நாம் நினைவில் நிறுத்தி பார்க்க வேண்டும். இந்த உண்மைகளை ஆராய்ந்தால் குர்ஆனின் வார்த்தைகள் நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைகள் என்ற முடிவுக்கே வருவோம்.
மேலும் விபரங்கள் அறிய…
http://en.wikipedia.org/wiki/Universe
source: http://suvanappiriyan.blogspot.in/2012/03/blog-post_13.html