மரணத்தின் பொருள் அழிந்து போவது என்பதல்ல!
மரணத்தின் பொருள் அழிந்து போவது என்பதல்ல! இடம் மாறுவது அல்லது குடிபெயர்வது என்பதுதான் சரியான அர்த்தம். மனிதன் ஒரு உலகத்திலிருந்து மற்றோர் உலகத்திற்கு மாறிக்கொண்டிருக்கின்றான். அழிவு அவனுக்கில்லை என்பதே உண்மை.
மனிதனின் முதல் உலகம் :
மனிதனின் முதல் உலகம் “ஆலமுல் அர்வாஹ்” ஆகும். உயிர்கள் நிலைபெற்றிருந்த உலகம் அது. அங்குதான் அல்லாஹு(த்)தஆலா “உங்கள் ரட்சகன் நானல்லவா?” என்று கேட்டான். “ஆம்! நீதான் எங்கள் பாதுகாவலன்” என்று உறுதிமொழி அளித்தோம்.
மனிதன் அந்த உலகிலிருந்து அடுத்தபடியாக எங்கே பயணம் செய்தான், இடம் மாறினான் தெரியுமா? தாயின் கர்ப்ப அறைக்கு. அந்த கர்ப்ப உலகத்திலிருந்து விண்ணால் சூழப்பட்ட இம்மண்ணுலகிற்கு வந்தான். அது அவன் கண்ட மூன்றாவது உலகம். இந்த உலகம் தான் அவன் தலைவிதியை நிர்ணயம் செய்வது. மேலும் அவன் பயணம் தொடர்கிறது…
ஆலமே பர்ஸக் :
அதன் பின்னர் ஆலமே பர்ஸக் -ஐ அடைகிறான். தீர்ப்பு நாளுக்கும் கியாமத்துக்கும் இடைப்பட்ட காலமே “பர்ஸக்” எனப்படுவது.
அங்கும் அவனால் தங்கி இருந்து விட முடியாது. அங்கிருந்து பயணப்பட்டு அவன் ஆகிரத்தை – மறு உலகை அடைவான். மனிதன் மாறி மாறி வரும் இடங்களில் இறுதியான இடம் இதுதான். இங்குதான் அவன் விசாரணைக்கும் உட்படுத்தப்படுவான்.
அவனுடைய செயல்களில் நன்மைகள் அதிகமிருந்தால் சுகங்கள் நிறைந்த சுவனத்திற்கு மாற்றப்படுவான். தீமைகள் அதிக அளவில் செய்திருந்தால் நரகம் எனும் தீக்குண்டத்தில் தள்ளப்படுவான். (அல்லாஹ் நம் அனைவரையும் நரகத்திலிருந்து காப்பாற்ற வேண்டும்.)
இறந்த பின் உயிர் பெற்றெழுவதையும், விசாரணைக்காக “ரப்புல் ஆலமீன்” அல்லாஹ்வின் முன் கொண்டு சென்று நிறுத்தப்படுவதையும் முஸ்லிம்கள் மட்டுமே நம்புகிறார்கள். நம்பித்தான் ஆக வேண்டும். நம்பாதவர்கள் முஸ்லிமே அல்ல. ஏனெனில் மறுமையை நம்புவதும் ஈமானின் ஒரு பகுதியாகும்.
நிராகரிப்பாலர்கள், இணை கற்பிப்பவர்கள் இவைகளை சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்றார்கள். உடல் அழுகி சதையையும், எலும்புகளையும் மண் இரையாக்கிக்கொண்ட பின் மீண்டும் அவன் உயிர்ப்பெற்றெழுதல் எப்படி சாத்தியமாகும்? என்கின்றனர். இவர்களுக்கு உலகம் தான் உண்மை எல்லாம். அதனால்தான் முடிந்தவரை உலகத்தை அனுபவி ராஜா அனுபவி என்பது அவர்களின் கொள்கையாக இருக்கிறது.
இறந்த பிறகு எழுப்பப்படுவோம், உலக வாழ்வு விளக்கக் கணக்கைக் கொடுக்க இறைவன் முன் நிறுத்தப்படுவோம், விசாரிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையுள்ள முஸ்லிம் தான் மறுமைக்காக தன்னைத் தயார்படுத்திக்கொள்கிறான்.
மறுமையின் மீது உறுதியான நம்பிக்கை வேண்டும். மறுமையை நம்பாதாவன் முஃமினே அல்ல!