அல்குர்ஆன் – சுன்னாவை சரியான முறையில் புரிந்து கொள்வதற்கான சில வழிகாட்டல்கள்
الأصول العلمية لفهم النصوص
இஸ்லாம் அல்லாஹ்விடமிருந்து வந்த மார்க்கம் என்பதால் அதன் அடிப்படை மூலாதாரங்களாக அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த வஹீயாக உள்ள அல்-குர்ஆனும் சுன்னாவுமே காணப்படுகின்றன. இதுபற்றி அல்-குர்ஆனும் சுன்னாவும் பல்வேறு இடங்களில் பேகின்றன.
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள், இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும் உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள், உங்களில் ஏதாவது ஒரு விடயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள் – இது தான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (அல்-குர்ஆன் 4:59)
முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்(வது) எல்லாம் ‘நாங்கள் செவியேற்றோம், (அதற்குக்) கீழ்ப்படிந்தோம்’ என்பது தான், இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள். இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ – அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். (அல்-குர்ஆன் 24:51-52)
மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ
பெண்ணுக்கோ உரிமையில்லை, ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸுலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்-குர்ஆன் 33:36)
இதே கருத்தைப் பின்வரும் வசனங்களும் வலியுறுத்துகின்றன. (பார்க்கவும்: அல்-குர்ஆனின் வசனங்கள் 4:65, 28:50, 24:63 மற்றும் 49:1)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இந்த அடிப்படையை வலியுறுத்திப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசியுள்ளார்கள்.
உதாரணமாகப் பின்வரும் ஹதீஸைக் குறிப்படலாம்.
‘நான் அல்-குர்ஆனையும் அது போன்ற ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளேன்.’ (அஹ்மத்)
இவ்வடிப்படையை அதிகமான மக்கள் புரிந்து கொண்டாலும்கூட அல்-குர்ஆனையும் சுன்னாவையும் சரியான முறையில் புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுவதை அவதானிக்க முடிகின்றது. அவை இரண்டையும் சரியான முறையில் புரிந்து கொள்வதற்கான அடிப்படை அறிவு இல்லாமையே இதற்குக் காரணமாகும்.
இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான அல்-குர்ஆனையும் சுன்னாவையும் புரிந்து கொள்வதற்கான சில வழிகாட்டல்களை அல்-குர்ஆன் சுன்னா அடிப்படையில் ஆய்வு செய்த அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவை இங்கு தொகுத்துத் தரப்படுகின்றன.
1) நபித் தோழர்கள் சென்ற வழியில் (மன்ஹஜுஸ் ஸஹாபா) நின்று விளங்குதல்:
அல்-குர்ஆனையும் சுன்னாவையும் சரியான முறையில் விளங்கவும், வழிகேடுகளில் இருந்து நம்மைப் பாதுகாத்து கொள்ளவும் இது முக்கியமான ஓர் அம்சமாகும்.
இஸ்லாத்தில் நபித்தோழர்களுக்கு மிகச் சிறந்த அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது. அல்லாஹுத்தஆலா அவர்களைப் புகழ்ந்து அல்-குர்ஆனில் பல்வேறு இடங்களில் கூறியுள்ளான்.
இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக் கொண்டவர்களும், அவர்களை (எல்லா) நற்கருமங்களிலும் பின்தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான், அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள், அன்றியும் அவர்களுக்காக சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் – இதுவே மகத்தான வெற்றியாகும். (அல்-குர்ஆன் 9:100 )
”முஹம்மது அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றார், அவருடன் இருப்பவர்கள் காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்குக்கிடையே இரக்கம் மிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜுது செய்பவர்களாகவும், அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜுதுடைய அடையாளமிருக்கும், இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும்; இன்ஜீலிலுள்ள அவர்கள் உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில் அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது; இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோபமூட்டுகிறான் – ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்’ (அல்-குர்ஆன் 48:29)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தனது தோழர்களின் சிறப்பை எடுத்துக் கூறியுள்ளார்கள்:
النُّجُومُ أَمَنَةٌ لِلسَّمَاءِ فَإِذَا ذَهَبَتِ النُّجُومُ أَتَى السَّمَاءَ مَا تُوعَدُ وَأَنَا أَمَنَةٌ لأَصْحَابِى فَإِذَا ذَهَبْتُ أَتَى أَصْحَابِى مَا يُوعَدُونَ وَأَصْحَابِى أَمَنَةٌ لأُمَّتِى فَإِذَا ذَهَبَ أَصْحَابِى أَتَى أُمَّتِى مَا يُوعَدُونَ .
‘நட்சத்திரங்கள் வானத்திற்குப் பாதுகாப்பாகும். அவை சென்று விட்டால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்ட (அழிவு) வந்துவிடும். நான் எனது தோழர்களுக்கு பாதுகாப்பாவேன். நான் சென்று விட்டால் எனது தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (குழப்பங்கள்) வந்துவிடும். எனது தோழர்கள் எனது உம்மத்திற்குப் பாதுகாப்பாவார்கள். அவர்கள் சென்றுவிட்டால் எனது உம்மத்தினருக்க வாக்களிக்கப்பட்டவை வந்துவிடும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
இவ்வாறு அவர்களின் சிறப்புக்கள் பற்றிக் கூறுகின்ற ஏராளமான ஆதாரபூர்வமான ஹதீஸ்களைக் காண முடிகின்றது.
நபித் தோழர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒன்றாக வாழ்ந்தவர்கள். நபியவர்களுக்கு வஹீ அருளப்படுவதை நேரடியாகப் பார்த்தவர்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் குர்ஆன் சுன்னா மூலம் எதை நாடுகிறார்கள் என்பதை நன்கறிந்தவர்கள். அவற்றை விளங்குவதில் சிக்கல்கள் வரும்போது அவற்றுக்கான விளக்கத்தை நேரடியாக நபியவர்களிடம் பெற்றுக் கொண்டவர்கள். எனவேதான் அல்-குர்ஆன் சுன்னாவை மிகச் சரியாக விளங்க வேண்டுமாக இருந்தால் நபித் தோழர்களின் விளக்கத்தின் ஒளியில் நின்று விளங்க முற்பட வேண்டும்.
இதுபற்றி இமாம் இப்னு தைமிய்யா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்:
‘அகீதாவுடைய விடயத்தில் முஸ்லிம்கள் இரண்டு முக்கியமான அம்சங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அவற்றில் ஒன்று, அல்-குர்ஆன் சுன்னா வாசகங்கள் மூலம் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எதை நாடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளல். இதற்காக அல்-குர்ஆன் அருளப்பட்ட அரபு மொழியை அறிந்து கொள்வதுடன் ஸஹாபாக்களும், தாபியீன்களும், ஏனைய உலமாக்களும் குறிப்பிட்ட சொற்களுக்கு என்ன அர்த்தங்களைக் கூறியுள்ளார்கள் என்பதையும் அறிதல் வேண்டும். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்-குர்ஆனையும் சுன்னாவையும் நபித் தோழர்களுக்குப் போதித்தபோது அதன் மூலம் தான் நாடும் கருத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள். இந்தவகையில் நபித் தோழர்கள் அல்-குர்ஆனை மனனமிட்டதைவிட அதன் கருத்துக்களைப் பூரணமாகப் புரிந்து கொண்டார்கள் எனலாம்’ (மஜ்மூஉல் பதாவா 17/353)
இமாம் சாத்திபீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இதுபற்றி பின் வருமாறு கூறுகிறார்கள்:
‘ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் (ஸஹாபாக்கள், தாபியீன்கள் , அவர்களைத் தொடர்ந்து வந்தோர்) அல்குர்ஆன் மற்றும் அதனுடன் தொடர்பான கலைகள் பற்றி மிக்க ஞானமுள்ளவர்களாக இருந்தனர் ‘ (அல்முவாஃபகாத் 2/79)
மேலும் இப்னு அப்தில் ஹாதீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இந்த விடயம் தொடர்பாக பின்வருமாறு கூறுகிறார்கள்:
‘அல்-குர்ஆன் சுன்னாவுக்கு ஸலபுகளுடைய காலத்தில் இல்லாத விளக்கத்தைக் கொடுப்பது கூடாது. அவ்வாறு செய்தால் குறிப்பிட்ட விடயத்தில் அவர்கள் அறிவிலிகளாகவும், வழிகேடர்களாகவும் இருந்துள்ளனர் என்ற கருத்தையே அது கொடுக்கும்’ ( அஸ்ஸாரிமுல் முன்கீ, பக்கம்: 427)
இதே கருத்தைத்தான் குர்ஆன் சுன்னாவை ஆளமாகக் கற்ற அறிஞர்களில் அனேகமானவர்கள் கொண்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
இவற்றிலிருந்து அல்-குர்ஆனையும் சுன்னாவையும் சரியான முறையில் விளங்கிக் கொள்ள ஸஹாபாக்களின் விளக்கத்தின் நிழலில் நின்று விளங்க முயற்சிக்க வேண்டுமென்பது தெளிவாகின்றது. குறிப்பாக இந்த அமசம் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை (அகீதா) விடயத்தில் மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
ஏனெனில் அகீதாவுடன் தொடர்பான அல்-குர்ஆன் சுன்னாவை விளங்கும்போது ஸஹாபாக்களின் விளக்கத்தை ஒதுக்கி விட்டு தமது சுய சிந்தனையின் அடிப்படையில் விளங்க முற்பட்டபோதே இஸ்லாமிய வரலாற்றில் பல வழிகேடுகள் தோன்றின என்பது வரலாறு சொல்லும் உண்மையாகும்.
2) அரபு மொழி அறிவு:
அல்-குர்ஆனும் சுன்னாவும் தூய்மையான அரபு மொழியில் அமைந்தவையாகும். அவற்றை சரியாகப் புரிந்து கொள்ளவேண்டுமாக இருந்தால் அரபு மொழி அறிவு இன்றியமையாததாகும். அரபு மொழி தெரியாமல் அவற்றை அனுகும்போது அல்லாஹ்வும் அவனது தூதரும் நாடாத பல அர்த்தங்களை கூறுவதென்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். நிதானமாகச் சிந்திக்கின்ற எவரும் இதைப்புரிந்து கொள்ள முடியும். எனவேதான் இந்த சமுதாயத்தில் வந்த அனைத்து அறிஞர்களும் அரபு மொழி விடயத்தில் கூடிய கவனம் செலுத்தியுள்ளனர்.
அரபு மொழியின் விசாலமான அறிவு அற்ற ஒருவரால் அல்-குர்ஆனையும் ஹதீஸையும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது என்று இமாம் ஷாபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள். (பார்க்க: அர்ரிஸாலா, பக்கம்: 50)
மேலும், இப்னு அப்தில் பர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இதுபற்றிப் பின் வருமாறு கூறுகின்றார்:
அல்-குர்ஆனையும் ஹதீஸையும் விளங்குவதற்காக அரபு மொழியின் உதவி தேடப்படல் வேண்டும். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், சுன்னா, பராயிழ் (வாரிசுரிமைக் கல்வி), அரபு இலக்கணம் போன்றவற்றைக் கற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தி வந்தார்கள். (பார்க்க: ஜாமிஉ பயானில் இல்ம் 2/1132)
அல்-குர்ஆன் தெளிவான அரபு மொழியில் அருளப்பட்டது என்பதை அல்-குர்ஆன் பல இடங்களில் குறிப்பிடுகின்றது. உதாரணமாக சூரா யூசுப்: 2, சுஅரா: 195, நஹ்ல்: 103 போன்ற வசனங்களைக் குறிப்பிடலாம்.
அவ்வாறே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
3) ஒரே தலைப்பில் வந்துள்ள அல்-குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் தேடி ஒன்று சேர்த்தல்:
அல்-குர்ஆன் சுன்னாவைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கான மற்றுமொரு வழியாக இது உள்ளது. பொதுவாக அல்-குர்ஆனும் ஹதீஸும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவையாகவே காணப்படுகின்றன.
அவற்றுக்கிடையில் நிச்சயமாக முரண்பாடுகள் எதுவும் கிடையாது. எனவே, குறிப்பிட்ட ஒரு விடயம் தொடர்பான தெளிவைப் பெற விரும்பினால் அதனுடன் தொடர்பான அனைத்து வசனங்களையும் ஹதீஸ்களையும் ஒன்றுதிரட்டி, அவற்றின் நிழலிலேயே தீர்வைப் பெற முயற்சிக்க வேண்டும். மாறாக ஆளமான தேடல் இல்லாமல் எடுத்த எடுப்பில் தனக்குக் கிடைத்த ஒரு சில வசனங்களையும் ஹதீஸ்களையும் வைத்து முடிவெடுக்கும் போது வழிகேடுதான் உருவாகும்.
ஒரே தலைப்பில் வந்துள்ள அல்-குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் திரட்டி ஒன்று சேர்க்கும்போது சிலவேளை அவற்றுக்கிடையில் முரண்பாடுகள் இருப்பது போல் தோன்றலாம். அவ்வாறான வேளைகளில் அவற்றுக்கிடையில் இணக்கங்கண்டு தீர்வுகளைப் பெறுவதற்கான வழிமுறைகளைச் சட்ட அறிஞர்கள் விளக்கியுள்ளனர். அவற்றை அறிந்து கொள்வதும் அல்குர்ஆன் ஹதீஸ்களைச் சரியாக விளங்கிக் கொள்வதற்கு வழிவகுக்கும்.
4) ஷரீஆவின் நோக்கங்களை அறிந்து கொள்ளல்:
அல்-குர்ஆன் சுன்னாவைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு இதுவும் அவசியமாகும். நிச்சயமாக அல்லாஹ்வால் மார்க்கமாக்கப்பட்ட அனைத்தும் மனிதர்களின் இம்மை மறுமை நலன்களையே இலக்காகக் கொண்டுள்ளன.
‘ஷரீஆவின் அடிப்படை நோக்கம், நலவுகளை அடைந்து கொள்வதும் கெடுதிகளை அகற்றுவதுமாகும்’ என்று இமாம் இப்னு தைமிய்யா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். எனவே, அல்-குர்ஆன் சுன்னாவைச் சரியாகப் புரிந்து கொள்ள விரும்புகின்ற ஒருவர் ஷரீஆவின் நோக்கங்களையும் இலக்குகளையும் மிகத் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகும். ஷரீஆவின் நோக்கங்களையும் இலக்குகளையும் அறிந்து கொள்ள முடியாத ஒருவரால் அல்-குர்ஆன் சுன்னாவைச் சரியாகப் புரிந்து கொள்வது சாத்தியமற்றதாகவே காணப்படும்.
ஆக, அல்-குர்ஆனையும் சுன்னாவையும் சரியான முறையில் புரிந்து கொள்வதன் மூலமே இஸ்லாத்தைப் பூரணமாக அதன் தூய்மையான வடிவில் புரிந்து பின்பற்ற முடியும். எனவே, அதற்கான சரியான வழிமுறைகளைப் பின்பற்றி அவற்றை சரியான முறையில் புரிந்து கொள்ள முயற்சிப்போமாக.
மௌலவி எம்.எல். முபாரக் ஸலஃபி, மதனீ M.A.