அல்லாஹ்விடம் மிகவும் கோபத்திற்குள்ளாகிறவர்கள் அதிகமாகக் தர்க்கம் புரிபவரே!
”தேவையற்ற விஷயத்தில் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்குச் சுவனபதியைச் சூழ ஓர் இல்லம் கட்டப்படும். அன்றி உண்மையின் மீதிருந்தும் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்கு சுவனபதியின் மத்தியில் ஓர் இல்லம் எழுப்பப்படும். மேலும் எவர் நற்பண்புகள் உள்ளவராக இருக்கின்றாரோ அவருக்குச் சுவனபதியின் மேலே ஓர் இல்லம் நிர்மாணிக்ப்படும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: திர்மதீ)
”அல்குர்ஆனில் வீண் தர்க்கம் செய்வது நிராகரிப்பாகும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அபூதாவூத்)
”நிச்சயமாக அல்லாஹ்விடம் மனிதர்களில் மிகவும் கோபத்திற்குள்ளாகிறவர்கள் அதிகமாகக் தர்க்கம் புரிபவரேயாவர்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ)
நாங்கள் விதி பற்றி தர்க்கம் செய்து கொண்டிருக்கும்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தார்கள். (இதனைக் கண்ட) அவர்கள் மாதுளம் சுளைகளை அவர்களுடைய முகத்தில் பதித்து விட்டதைப் போன்று அவர்களுடைய முகம் சிவப்பாகும் வரை சினமுற்றனர். அப்பொழுது அவர்கள் ‘இது கொண்டா கட்டளையிடப்பட்டுள்ளீர்கள்? இதற்குத்தானா நான் உங்களிடம் தூதுவனாக அனுப்பப்பட்டேன்? நிச்சயமாக உங்களுக்கு முன்னிருந்தோர் தங்களின் மார்க்க விஷயத்தில் அதிகமாக தர்க்கம் செய்ததன் காரணமாகவும், தங்களின் நபிமார்களுடன் மாறுபட்டதன் காரணமாகவும் தான் அழிந்தனர் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: திர்மிதீ)
ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் தோழர்களுடன் அமர்ந்திருந்தனர். (அப்பொழுது) திடீரென ஒருவன் வந்து அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது வசைமாரி பொழிந்து அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினான். ஆனால் அவர்களோ ஏதும் கூறாமல் வாய் மூடி இருந்தனர். பின்னர் அவன் மறு முறையும் அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினான். ஏனினும் அவர்கள் ஏதும் கூறவில்லை. மீண்டும் அவன் அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்திய பொழுது அவனுக்கு பதில் கூறினர்.
உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து விட்டனர். அப்பொழுது அபூபக்கர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தாங்கள் என்மீது சினமுற்று விட்டீர்களா? என்று வினவினர்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்ல; எனினும் விண்ணிலிருந்து ஓர் வானவர் இறங்கி வந்து தங்களைப்பற்றி கூறிய வசைகளையெல்லாம் பொய்யாக்கி கொண்டிருந்தார். ஆனால் தாங்கள் பதில் கூறியதும் அந்த வானவர் சென்று விட்டார். எனினும் ஷைத்தான் (அவருடைய) இடத்தில் அமர்ந்து கொண்டான்; ஆதலின் ஷைத்தான் அங்கு அமர்ந்தபின் நான் அமர்ந்திருத்தல் தகாது’ என்று கூறினர். (அறிவிப்பவர்: இப்னுல் முஸையப் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அபூதாவூத்)