சிறந்த கணவரின் அடையாளம் சகிப்புத்தன்மையே!
பொதுவாக கணவன் தனது மனைவியுடன் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். இன்முகம் காட்டி அவளுடன் பழக வேண்டும். அவளது தொந்தரவுகளையும், துன்பங்களையும் சகித்துக்கொள்ள வேண்டும்.
“பெண்களுடன் நல்ல முறையில் பழகி வாழ்க்கையை நடத்துங்கள்” என்று அல்லாஹ் குர்ஆனில் கட்டளையிட்டுள்ளான். அதை மதித்து நடக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகவும் இருக்கிறது.
அகிலத்திற்கும் அருட்கொடையாக, முன்மாதிரியாக ஏக இறைவனால் அனுப்பிவைக்கப்பட்ட இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறுதி மரண நேரத்தில் அவர்களின் பொன்னான வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் என்ன தெரியும?
“தொழுகை! அதை விட்டு விடாதீர்கள்.
உங்கள் பொருப்பில் உள்ளவர்களை துன்புறுத்தாதீர்கள்.
அல்லாஹ்வின் அன்பு பெண்களை சூழ்ந்து நிற்கிறது…”என்று சொன்னார்கள். (நூல்: இஹ்யா உலூமித்தீன்)
பொதுவாக ஒரு மனிதரின் கடைசி வார்த்தை உலகில் அனைவரலும் மதிக்கப்படக்கூடிய ஒன்று. அதற்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுப்பது உண்டு. அதிலும் முஃமின்களுக்கு அவர்களின் உயிரினும் மேலானவர் என்று இறைவனால் சுட்டிக்காட்டப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கடைசி வார்த்தை உலக ஆண்களுக்கு பெண்களைப்பற்றி மிகவும் முக்கியமான அவசியமான செய்தியை விட்டுச் சென்றிருக்கிறது என்றால் அது எவ்வளவு முக்கியமாக பேணப்பட வேண்டிய விஷயம் என்பதை ஒவ்வொரு ஆணும் சிந்திக்கக் கடமைப்படுள்ளார்கள்.
குறிப்பாக கணவன்மார்கள் இதை மனதில் கொண்டு தங்கள் மனைவிகளிடம் அன்பாகவும், நளினமாகவும் நடந்து கொள்ள முன்வர வேண்டும். இப்படி மனைவிகள் மீது அன்பு செலுத்தி அவர்களால் ஏற்படும் துன்பங்களை பொறுத்துக் கொள்வது மாபெரும் ஸுன்னத்தாகும்.
ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் தனது மனைவியுடன் சண்டை போட்டார். மனைவியின் சில குணங்கள் அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் மனைவி மீது வெறுப்புற்று அவளை “தலாக்” விட தயாரானார்.
இது பற்றி கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் முறையிட வந்தார். அவரிடமிருந்து எல்லாவற்றையும் கேட்ட கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்;
“உனக்கென்ன கேடு! இல்லறம் என்பது அன்பின் மீது தானே அமைக்கப்படுகிறது. அதில் பராமரிப்பும், புறக்கணிப்பும் எப்படி ஒன்று சேர முடியும்?” என்று கூறி “உன் மனைவியோடு சேர்ந்து வாழ்” என்று உபதேசித்து அனுப்பிவிட்டார்கள்.
திருமணம் என்பது வெறும் உணர்ச்சிகளுக்காக மட்டும் அல்ல. இரண்டு பேரும் தங்களின் இச்சைகளை இன்பமாக தணித்து விட்டு எழுந்து போவதல்ல. அன்பு, தூய்மை, மரியாதை, கண்ணியம், கட்டுப்பாடு, இறையச்சம், மனித நேயம், சகிப்புத்தன்மை, பொறுமை- இவைகளையெல்லாம் அதில் அடங்கியிருக்கிறது.
இந்த தன்மைகளிக் கொண்டு தனது மனைவியுடன் நற்பண்புகளோடு பழக வேண்டும். தவறு செய்தால் பெருந் தன்மையோடு மன்னித்து சகித்துக் கொள்ள வேண்டும்.