திருநெல்வேலி – பட்டிக்காடா பட்டணமா?
தமிழ்நாட்டின் தென்கோடியில் இருக்கும் தின்னவேலிச் சீமைதான் எங்க ஊர். கடல் போல பெருக்கெடுத்து ஓடும் தாமிரவருணி ஆறு உள்ள ஊர். கடல் இல்லாததால், சுனாமி ஆபத்து இல்லைன்னு நிம்மதியா இருந்தோம்; பொறுக்க முடியாம, கூடங்குளம் அணு ஆலையை அந்தப் பக்கம் கொண்டு வந்து வச்சிட்டாய்ங்க!!
பக்கத்து ஊரான நாகர்கோவில் முதல் பக்கத்து மாநிலமான கேரளம் வரை எங்க ஊரைத் தேடிவர வைக்கும் ஆரெம்கேவி, போத்தீஸ் போல அரசன் ஐஸ்கிரீம்ஸும் திருநெல்வேலியின் அடையாளங்களில் ஒன்று!! நகரில் தனியார் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்களோடு போட்டி போடும், மருத்துவக் கல்லூரிகளோடு இணைந்த ஹைகிரவுண்ட் அரசு ஆஸ்பத்திரியும், அரசு சித்த மருத்துவமனையும் உண்டு.
….நெசமா எங்க ஊருதான்!!
திருநெல்வேலி ஜங்ஷன் மற்றும் டவுண் ஆகியவற்றிலிருந்து 5-6 கிமீ தூரத்தில் உள்ள எங்க ஊரில், தாமிரவருணியின் வாய்க்கால் ஒன்று ஓடுகிறது. வாய்க்காலின் ஒருகரையில் வரிசையான தெருக்களில் வரிசையாக அமைந்த வீடுகள், மறுகரையில் வயல்கள், மலைத் தொடர், அதையொட்டி ரயில் பாதை என்று அழகான ரம்மியமான பசுமைக் காட்சிகள் கொண்ட ஊர். அந்த வாய்க்கால்தான் விவசாய ஆதாரமாக மட்டுமின்றி, குளிக்க, குடிக்கவும் ஆகியிருந்தது – அப்போ!!
முற்காலங்களில் விவசாயம், நெசவு, பர்மா/சிலோன் வியாபாரங்கள் ஆகியவையே வருமான வழிகளாக இருந்து, பின்னர் அவற்றின் அழிவினால், பீடி சுற்றுதலில் வந்து நின்றாலும், வறுமை குறையவில்லை எங்க ஊரில். மக்கள் கல்வியின் சிறப்பை அறிந்திருக்கவில்லையாதலாலும், உடன் பசிதீர்க்கவேண்டிய அவலமிருந்ததாலும், பதின்மப் பருவத்திலேயே அரபு நாடுகளில் கீழ்நிலை வேலைகள் செய்யத் தொடங்கி, அதில் பல சிரமங்களை அனுபவித்தபின், கல்வியின் சிறப்பை உணர்ந்து, தற்போது எப்பாடு பட்டேனும், தம்மக்களை – ஆண்-பெண் பேதமில்லாமல் – ஒரு பட்டம் பெற வைத்துவிடுகிறார்கள்.
எங்கள் ஊரும் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான ஊர்களைப் போலவே, கல்வியிலும் சிறந்து விளங்க ஆரம்பித்துவிட்டது என்பதற்கு இவ்வருடம் 10ம் வகுப்புத் தேர்வில் மாநிலத்தில் இரண்டாம் இடமும், +2 தேர்வில் மாநிலத்தில் நான்காம் இடமும் பெற்றதே சாட்சி. இஞ்சினியர்கள், ஆசிரியர்கள், மென்பொருளாளர்கள், கடுபொருளாளர்கள் (ஹி.. ஹி.. hardware specialists!!), கணக்காளர்கள் என்று பல்வேறு துறையிலும் இளைய தலைமுறையினர் சிறந்து விளங்குகின்றனர்.
கவிஞர்கள், எழுத்தாளர்கள் அரிதாகத் தெரிந்தாலும், சிலர் இருக்கிறார்கள். அத்தோடு மருத்துவக் கல்லூரியில் சேர்பவர்களது எண்ணிக்கையும் வளர்ந்து வருகிறது. (கலெக்டர்தான் இன்னும் யாரும் ஆகலை :-(( ) ஊருக்குள்ளேயே பல பள்ளிகள், ஒரு பெண்கள் கல்லூரி, இஸ்லாமிய கல்லூரிகள் இருப்பதும் வளர்ச்சியின் அறிகுறிகள். இவையெல்லாவற்றோடு இஸ்லாமிய விழிப்புணர்வும் வளர்ந்து வருகிறது, புகழனைத்தும் இறைவனுக்கே.
இத்தோடு, வணிக முறையிலும், எங்கள் ஊர் மிகுந்த வளர்ச்சி கண்டிருக்கிறது. ஒரு பட்டிக்காடு பட்டணம் ஆனது என்று சொல்லுமளவு, முன்பெல்லாம் எதற்கெடுத்தாலும் திருநெல்வேலி ஜங்ஷன் அல்லது டவுண் செல்ல வேண்டிய நிலை மாறி, தற்போது எல்லாமே ஊருக்குள்ளேயே கிடைக்கிறது. முஸ்லிம்களே பெரும்பான்மையாக உள்ள ஊர் என்றாலும், எல்லா தரப்பினரும் வாணிபம் செய்கிறார்கள் எங்கள் ஊரில். உள்ளுர்லயே தரமான மருத்துவர்களும் உண்டு. எனினும், சில சிறப்பு தேவை/சேவைகளுக்கென்று நகருக்குச் செல்வோம்.
மற்றபடி, என் சொந்த ஊர் மிகவும் எளிமையான ஊர். நிறையப் பதிவர்கள் அவரவர் ஊரின் சிறப்பாகக் குறிப்பிட்டிருந்ததுபோல, விதவிதமான சாப்பாட்டு வகைகளென்று லிஸ்ட் போட்டு எழுதுமளவு இல்லையென்றாலும் மற்ற ஊர்களில் உள்ளதுபோல, மருந்துச் சோறு, சேமியா பிரியாணி, தக்கடி, மடக்குப் பணியாரம், ஓட்டுமாவு, எனச் சில உண்டு. இதையெல்லாம் தாண்டி, உணவைப் போலவே, எங்கள் ஊரின் பல எளிமையான நடைமுறைகள்தான் எங்கள் ஊரின் தனித்துவம் என்று நினைப்பதால், அவற்றைப் பகிர்கிறேன்.
o ஊருக்குள்ளேயேதான் கல்யாண சம்பந்தம் செய்துகொள்வார்கள். மிக மிக அரிதாகத்தான் வெளியூர் சம்பந்தம் செய்வது.
o எல்லாருமே உள்ளூர்க்காரர்கள் என்பதால், யார் வீட்டுக்குச் சென்றாலும், தேநீர்/ஹார்லிக்ஸ்/பூஸ்ட் மட்டுமே பரிமாறப்படும். நெருங்கிய உறவுகளாக இருந்தால், அல்வா, மிக்சர் போன்ற ஸ்நேக்ஸும் பரிமாறப்படும். விருந்துக்கென்று பிரத்யேகமாக அழைக்கப்பட்டாலொழிய உணவருந்துவதில்லை. (அதுவே வெளியூர்க்காரர்களாக இருந்தால், எந்நேரமானாலும் விருந்துடன் பலமான கவனிப்பு இருக்கும்).
o கல்யாணத்திற்கு அல்லது விசேஷங்களுக்கு அழைப்பதும் இன்னார்தான் போய் அழைக்க வேண்டும் என்ற வரைமுறையெல்லாம் இல்லை. பெரும்பாலும் வீட்டிலிருக்கும் பள்ளியிறுதி/கல்லூரி மாணவர்கள்தான் இதற்குப் பொறுப்பு. வீட்டுப் பெரியவர்கள் தெருவாரியாக லிஸ்ட் போட்டுக் கொடுக்க, இவர்கள், அழைக்கப் போவார்கள். குடும்ப வகையறாக்களை அடையாளம் சொல்ல, உடன் ஓரிரண்டு நடுத்தர வயதுப் பெண்களும் செல்வார்கள்.
o அழைக்கச் செல்லும் வீட்டில் யார் இருந்தாலும் பத்திரிகையைக் கொடுத்து விபரம் சொல்லிவிட்டு வந்துவிடலாம். பெரியவர்களை நேரில் பார்த்துத்தான் சொல்ல வேண்டும் என்றில்லை. “என்கிட்டே நேரில சொல்லல” அல்லது “எம்பொண்டாட்டிய அழைக்கலை” என்றெல்லாம் வீம்பு பிடிக்க வழியில்லை!!
o ஆனால், அழைக்கப்படும்போது முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, உங்களை கல்யாணத்திற்கு மட்டும் கூப்பிடுகிறார்களா அல்லது விருந்திற்கும் அழைக்கிறார்களா என்பதை!! ஆமாம், “இந்த நாள், இந்த நேரம் ஆண்-பெண் அனைவரும் சாப்பிட வாங்க” என்று அழைத்தால்தான் விருந்துண்ண செல்லவேண்டும்!! அதிலும், உறவின் நெருக்கத்தைப் பொறுத்து, ஆண்-பெண் அனைவரும், ஆண்கள் மட்டும் அல்லது குடும்பத் தலைவர் மட்டும் என்று விருந்து அழைப்புகள் அமையும். ரொம்பக் கவனமாக் கேக்கணும்!!
o வீட்டில் பெரியவர்கள் இல்லாத சமயம், சிறுவயதினர் மட்டும் இருந்தால், இதைக் கவனிக்கத் தவறிவிட்டால், பெரியவர்களிடம் திட்டு வாங்க வேண்டியிருக்கும்!! (நாங்களும் வாங்கிருக்கோம்ல!!) ஏனெனில், கூப்பிட்டும் விருந்துக்குப் போகவில்லையென்றால், நமது அதிருப்தியைத் தெரிவிப்பதாகக் கருதப்படும்.
o இது உங்களுக்கு வியப்பைத் தந்தாலும், மிகவும் வசதியான முறையாக எனக்குத் தெரிகிறது. முதலில், விருந்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை தெளிவாகத் தெரிந்துவிடுமாகையால், உணவு தயாரிக்கும் அளவை முடிவு செய்வது எளிது. வீணாகும் அளவு வெகுவாகக் குறையும். மேலும், விருந்துக்குச் செல்லவிலையென்றாலும், உறவின் நெருக்கத்தைப் பொருத்து, விருந்து முடிந்தபின், உணவை நம் வீட்டிற்கு அனுப்பிவைப்பார்கள். வரமுடியாத வயதானவர்கள், வர வசதிப்படாத நிலையில் உள்ளவர்கள் இருப்பது முன்பே தெரிந்தால், விருந்து தயாரானதும் உடன் அவர்களுக்கு வீட்டிற்கே கொடுத்துவிடுவார்கள்.
o வெளியூர்க்காரங்களுக்கு இந்த விதி பொருந்தாது. உங்களை எங்க வீட்டு கல்யாணத்துக்கு அழைச்சோம்னா, அது கல்யாணத்தன்று நடக்கும் விருந்துக்கும் சேர்ந்த அழைப்புதான்!! ஆனா, வராதவங்களுக்கு பார்ஸல் அனுப்பப்படமாட்டாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்!!
o எவ்வளவு பெரிய ஆளானாலும், கல்யாணம், விருந்து எல்லாம் வீட்டில்தான். நோ கல்யாண மண்டபம்!! ஒரு வீட்டில் விசேஷம் என்றால், விருந்து வைப்பதற்கு, வட்டாரத்தினர் (பக்கத்து வீடுகள்) தம் வீட்டின் முன்னறை/ஹாலைக் காலி செய்து தரவேண்டியது கட்டாயக்கடமை. சமையலும் நடுத்தெருவில் வைத்துதான் நடக்கும். சமையலுக்கு தயார்செய்வதிலும், கலத்தில் (பந்தியில்) பரிமாறுவதிலும் வட்டாரத்துக்காரர்கள் உதவவேண்டும்.
o கல்யாணம் முடிந்தபின், பெண் தினமும் மதியம் தன் தாய் வீட்டிற்கு வந்துவிட்டு, அந்தியில்தான் கணவன் வீட்டிற்குச் செல்வாள். கூட்டுக் குடும்பங்கள் என்பதாலும், முன்பு தனியறைகள் இல்லா மணமகன் வீட்டில் பெண்ணுக்கு ஓய்வு எடுக்க வசதியிருக்காது என்ற காரணத்தாலும் ஏற்படுத்தப்பட்ட பழக்கமாக இருக்கலாம். இப்போதும் தொடர்கிறது.
o திருமணமான புதிதில் முதல் ஒருவாரம் வரை மணமகன் வீட்டினர் வந்து மாலையிலும், அடுத்த நாள் மதியம் பெண்வீட்டினரும் வந்து பெண்ணை அழைத்துப் போவார்கள். ஏன்னா, புதுமணப்பெண்ணுக்கு மாப்பிள்ளை வீடு போய்வர வழிதெரியாதே? அதன்பிறகு பெண்களே சென்றுவருவார்கள். இப்போல்லாம், (பெரும்பாலும்) பைக் வைத்திருக்கும் சகோதரனிடமும், கணவரிடமும் இந்த ட்யூட்டி தரப்படுகிறது!!
o கல்யாணத்தில் பெண்ணுக்குப் போடப்படும் நகைகளின் அளவு என்பது மணமகள் வீட்டினரின் இஷ்டம்!! எந்த டிமாண்டும் வைக்கப்படமாட்டாது!! ஒரே டிமாண்டான வரதட்சணையையும் இப்போல்லாம் பெரும்பாலான இளைய தலைமுறை ஆண்கள் தடுத்துவிடுகிறார்கள்.
o மேலும் கல்யாணச் சீர் என்பது கட்டில்-மெத்தை தவிர்த்து, 11 பாத்திரங்கள் மட்டுமே!! இதில் கும்பா (சின்னக் கிண்ணம்) முதல் பெரிய கொப்பரை வரை அவரவர் வசதிப்படி எவர்சில்வர் மற்றும் வெண்கலத்தில் வாங்கிக் கொடுக்கலாம்.
o கல்யாண விருந்தும், இரு தரப்பும் தனித்தனியே தத்தம் உறவினர்களுக்கு வைத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும், இந்த விருந்து கல்யாணத்திற்கு முந்தைய தினம் “ஊர்ச்சாப்பாடு” என்ற பெயரில் நடத்தப் படும்.
o பொதுவிருந்து என்பதும் – வலியவரானாலும், எளியவரானாலும் – நெய்ச்சோறு, மட்டன் குழம்பு, தாளிச்சா என்ற எளிமையான ஒரே பொதுமெனுதான்!! அதிலும், மட்டன் குழம்பு மட்டும் ஒருமுறைதான் பறிமாறப்படும். “ரீ-ஃபில்” கிடையாது!!
o ஆஹா, இவ்வளவு எளிமையா என்று தோணினாலும், இதில் சேமிச்சதையெல்லாம் விருந்துகளில் பெண்வீட்டினர் விட்டுவிடவேண்டிவரும். பெண்வீட்டுத் தரப்பில், மணமகன் வீட்டாருக்கு வைக்க வேண்டிய விருந்துகள் பலவகை உண்டு. ஏழுநாட்கள் பெண் அழைப்பு விருந்து வைத்து, மணமகன் வீட்டிற்கும் தினமும் கொடுத்து விடுவது, மறுவீடு, மாமி பசியாற, மாப்பிள்ளை பசியாற, இன்னும் என்னென்னவோ பெயர்களில் விருந்து உண்டு. மணமகன் தரப்பிலோ ஏழுநாள் மணமகள் அழைக்க வருபவருக்கு விருந்து தவிர, ஒன்றிரண்டு சிம்பிளான விருந்துகள் மட்டுமே.
இருந்தாலும், பல ஊர்களின் பழக்க வழக்கங்களைக் கேட்ட/பார்த்த பிறகு, எங்க ஊர் பழக்கங்கள்தான் எளிமையா தெரியுது!! எனினும், இதுவே அதிகபட்சச் சுமையாகத் தெரியுமளவுக்கு வறுமையும், அறியாமையும் இன்னும் இருக்கிறது ஊரில்.
தற்போது இளைஞர்கள் மத்தியில் இஸ்லாமிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், வரதட்சணையைத் தடுத்து வந்தாலும், மற்றவைகளைத் தடுக்க அதிக முயற்சி எடுப்பதில்லை. ஏனெனில் பலருக்கும் இத்தகைய பழக்கவழக்கங்கள் இருப்பதே தெரிவதில்லை என்பதோடு, இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம் என்பதாகக் கருதிவிடுவதாலும் கூட இருக்கலாம். அதேசமயம், சில செல்வந்தர்கள், தம் அந்தஸ்தை நிரூபிக்க எளிமையாக இருக்கும் நடைமுறைகளையும் மாற்றி வருவதால், உண்மையாகவே இவற்றைத் தடுக்க நினைப்பவர்களுக்கும், எளியவர்களுக்கும் தடைக்கல்லாக அமைகிறது.
எனினும், மாற்றங்கள் ஏற்படத்தான் செய்கின்றன, மனங்களிலாவது
source: http://hussainamma.blogspot.in/