முஸ்லிம்களை ஏன் எழுத நேர்ந்தது? – அ.மார்க்ஸ்
[ நான் கடந்த இருபது ஆண்டுகளாக முஸ்லிம்கள் குறித்து எழுதியவற்றுள் சில கட்டுரைகளைத் தேர்வு செய்து ஒரு நூலாக வெளியிடவேண்டுமெனத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார் எனது நீண்ட நாள் வாசகர் லால்குடி ஷேக் அப்துல்லா. “இழப்பதற்கு ஏதுமில்லை” என்கிற அந்நூல் சென்ற ஜனவரி 22, 2012 அன்று திருச்சியில் வெளியிடப்பட்டது. அந்நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை இது. – அ.மார்க்ஸ் ] ( நூல் ஒன்றின் விலை ரூ100. ஆகும்.)
நான் கடந்த இருபது ஆண்டுகளாக எழுதி வருபவற்றில் சிறுபான்மையோர் பிரச்சினைகள் தொடர்பான சுமார் பத்து கட்டுரைகள் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. உலக அளவில் செப்டம்பெர் 11 (2011)க்குப் பின், முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் குறித்துப் புரிந்து கொள்ளவும் புரிய வைக்கவும் வேண்டிய தேவை பன்மைத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஏற்பட்டது என்றால், இந்தியாவைப் பொருத்தமட்டில் ஒரு பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்நிலை உருவானது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதென்பது ஒரு தொழுகைத் தலம் இடிக்கப்பட்ட நிகழ்வோடு முடிந்துவிடவில்லை. அதை ஒட்டி இங்குள்ள 15 கோடி முஸ்லிம்கள் மீதும் ஒரு வெறுப்பு அரசியலும் கட்டமைக்கப்பட்டது. உலகில் மிக அதிக அளவில் முஸ்லிம்கள் வசிப்பதில் இரண்டாவது நிலையிலுள்ள நாடு நம்முடையது.
இஸ்லாம் குறித்து மக்கள் மத்தியிலிருந்த புரியாமைகளைப் பயன்படுத்தி, இது வாளோடு வந்த மதம் எனவும், முஸ்லிம்கள் எல்லோரும் ஜிகாதிகள் எனவும், இங்குள்ள மதரசாக்கள் அனைத்தும் தீவிரவாதத்தை உற்பத்தி செய்யும் களங்களாக உள்ளன எனவும் பெரிய அளவில் இங்கே கருத்துப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வகையில் இங்குள்ள முஸ்லிம்கள் எல்லோரும் ஒரு ‘சந்தேகத்திற்குரிய சமூகமாக’ கட்டமைக்கப்பட்டனர். ஊடகங்கள் இக்கட்டமைப்புக்குத் தூபமிட்டன. திரைப்படங்களில் முஸ்லிம்களைக் கருணை உள்ளவர்களாகவும்’ நட்புக்குரியவர்களாகவும் சித்திரிக்கும் நிலை (எ.டு: ‘பாவமன்னிப்பு’) மாறி அவர்களைத் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்திரிக்கும் சூழல் உருவானது, இது முஸ்லிம்களின் மனநிலையில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தின.
செப்டெம்பர் 11க்குப்பின் உலக அளவில் இஸ்லாமிற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பல சொல்லாடல்கள் உருவாக்கிப் பரப்பப்பட்ட கதையையும், அதில் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளின் பங்கையும் நாம் அறிவோம். ‘இஸ்லாமியப் பயங்கரவாதம்’, ‘பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம்’ ‘தீமைகளின் அச்சு’ ‘இஸ்லாமிய வெறி’ முதலியன இவற்றில் சில. சாமுவேல் ஹட்டிங்டன் போன்றோர், “இனி கலாச்சாரங்களுக்கு இடையேதான் யுத்தங்கள்” என்று எழுத ஆரம்பித்தனர்.
முஸ்லிம்கள் எல்லோரும் ‘கலாச்சாரத்தின் கைதிகளாகச்’ (prisoners of culture) சித்திரிக்கப்பட்டனர். 1400 ஆண்டுகளுக்கு முந்திய கலாச்சாரத்தையும், அரசியலையும் மாற்றமின்றிச் சுமந்து கொண்டிருப்பவர்கள், அதற்குள் முடங்கிப் போனவர்கள், அவர்களுக்கு வரலாறு கிடையாது, அரசியல் கிடையாது, விவாதங்கள் கிடையாது என்பதான ஒரு பிம்பம் கட்டமைக்கப் பட்டு முஸ்லிம்கள் எல்லோரையும் ஏதோ ‘அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட மக்களாக’ (museumized people) அணுகப்படும் நிலை ஏற்பட்டது.
இது எப்படிச் சரியாகும்? எந்த ஒரு மனிதரின் அரசியல் செயல்பாட்டையும் (political behaviour) அவரது மதத்தை வைத்து அடையாளப்படுத்துவதும் விளக்குவதும் சாத்தியமா? இன்றைய அரசியல் என்பது ஏதோ ஒரு பழமையின் எச்ச சொச்சமாக (cultural residue) இருக்க முடியுமா? இன்றைய அரசியலாகட்டும், கலாச்சாரமாகட்டும் அவை பழமையின் எச்சங்களாக இருக்க முடியாது. அவற்றிற்கு ஒரு சமகால இருப்பு உண்டு. அவை வரலாற்றினூடாக மாறி வந்துள்ளன. சமகால நிர்ணயிப்பே அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வரலாற்றையும், இன்றைய அரசியலையும் தூக்கிக் கடாசிவிட்டு எல்லாவற்றையும் கலாச்சாரத்தின் எச்சமாகப் பார்ப்பதைக் காட்டிலும், கலாச்சாரத்தையே நாம் வரலாறு மற்றும் அரசியல் பின்புலத்தில் வைத்துப் பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம். இன்றைய தீவிரவாதம், பயங்கரவாதம் என்பனவெல்லாம் கலாச்சாரத்தின் விளைபொருள்கள் அல்ல. மாறாக அவை முழுக்க முழுக்க சமகால அரசியலால் கட்டமைக்கப் பட்டவை. அவை கலாச்சாரத்தின் சில கூறுகளைப் பயன்படுத்தலாம். ஆனால் அவை இன்றைய அரசியல் திட்டத்தின் கைப்பிள்ளைகளாகவே (servants of contemporary political project) உள்ளன என்பதை நாம் மறந்துவிடலாகாது.
இத்தகைய சிந்தனை ஓட்டங்களின் ஊடாகத்தான் இஸ்லாம் குறித்தும் இந்திய முஸ்லிம்கள் தினந்தோறும் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் எங்களைப் போன்றோர் சிந்திக்கத் தொடங்கினோம். வரலாற்றில் இஸ்லாமின் பாத்திரம் குறித்து அறிந்துகொள்ள எங்களுக்குச் சில அற்புதமான முன்மாதிரிகள் இருந்தன. இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த எங்களுக்கு மாக்ஸிம் ரோடின்சன், எம்.என்.ராய் முதலான மார்க்சீயர்கள், பெரியார் ஈ.வெ.ரா போன்ற பகுத்தறிவாளர்களின் ஆக்கங்கள் பெரிதும் கைகொடுத்தன. இவற்றில் தொடங்கி முஸ்லிம் அறிஞர் பெருமக்கள் எழுதிய நூற்களையும், இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து எழுதப்பட்ட பல ஆய்வுக் கட்டுரைகளையும் வாசித்தோம். படித்ததோடு நிற்காமல், படித்தவற்றை சிறு நூல்களாகவும், கட்டுரைகளாகவும் எழுதவும் தொடங்கினோம்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் இவ்வாறு எழுதப்பட்டதுதான் ‘இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்’. தொடர்ந்து உலகளவிலும், இந்தியாவிலும், தமிழகத்திலும் ஏற்பட்ட மாற்றங்கள் இத்தகைய எழுத்துக்களின் தேவைகளை அதிகப்படுத்தின. என்னைப் பொருத்தமட்டில் இலக்கிய ஆய்வுகள், மனித உரிமைப் பணிகள், எனது ஆசிரியப் பணி ஆகியவற்றின் ஓரங்கமாக இதுவும் ஆகியது.
இவ்வாறு எழுதப்பட்டவற்றுள் தேர்வுசெய்யப்பட்டவையே இக்கட்டுரைகள். இவை மூன்று தலைப்பிற்குள் அடக்கப்பட்டுள்ளன. 1947க்குப் பிந்திய இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை என்னவாக இருந்தது, இது குறித்து அறிக்கை அளிக்க அரசால் அமைக்கப்பட்ட ஆணையங்கள் என்ன கூறின, எத்தகைய பரிந்துரைகளைமுன்வைத்தன, இந்த அடிப்படையில் எத்தகைய கோரிக்கைகளை முஸ்லிம்கள் முன்வைக்கத் தொடங்கினர். அவற்றின் இன்றைய நிலை என்ன என்பவற்றை முதல் கட்டுரை விளக்குகிறது. தலித்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மிக முக்கியமான ஒன்று. அதுபோல மதக் கலவரங்களுக்கு எதிராக ஒரு சட்டம் தேவை என்பதை மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர். அப்படியான ஒரு சட்ட வரைவு இன்று உருவாக்கப்பட்டுள்ள போதிலும்’ எதிர்பார்த்ததுபோல இந்துத்துவ சக்திகளிடமிருந்து கடுமையான எதிர்ப்புகளை அது சந்தித்துக் கொண்டுள்ளது. இத்தகைய சட்டம் ஒன்றின் தேவையை இரண்டாம் கட்டுரை வலியுறுத்துகிறது.
முஸ்லிம்களுக்கு எதிராக இங்கு கட்டமைக்கப்பட்டுள்ள பாசிசக் கதையாடல்களை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறது இரண்டாம் தொகுதி. மூன்று கட்டுரைகள் இதில் உள்ளன. முஸ்லிம்களுக்கு எதிராகப் பரப்பப்படும் கட்டுக்கதைகளை கேள்வி பதில் வடிவில் கட்டுடைக்கிறது முதல் கட்டுரை. இஸ்லாம் வாளோடு வந்த மதம் என்பது இத்தகைய கட்டுக்கதைகளில் ஒன்று. அதாவது கட்டாய மதமாற்றத்தின் மூலமாகவே இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் மதம் மாற்றப்பட்டனர் என்பது இதன் பொருள். பிரிவினைக்கு முந்திய இந்தியாவில் மேற்கு பஞ்சாப் (இன்றைய பாகிஸ்தான்), கிழக்கு வங்கம் (இன்றைய வங்க தேசம்) ஆகிய பகுதிகளில்தான் அதிக முஸ்லிம்கள் இருந்தனர். அந்த இரு பகுதிகளிலுமே எக்காலத்திலும் வலுவான முஸ்லிம் ஆட்சி இருந்ததில்லை என்கிற உண்மை ஒன்றே இக்கட்டுக்கதையை உடைக்கப் போதுமானது. இப்படியான தகவல்கள் அப்பகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம்களுக்கு எதிரான கட்டுக்கதை உருவாக்கத்தில் வரலாற்றுத் திரிபுகள் பெரும் பங்கு வகிகின்றன. பா.ஜ.க தலமையிலான கூட்டணி அரசு மத்தியில் ஆண்டபோது பாடநூல்கள் திருத்தப்பட்டு விஷக் கருத்துக்கள் புகுத்தப்பட்டன. மத்திய கால வரலாற்றுப் பாடநூலில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களைச் சுட்டிக் காட்டுகிறது அடுத்த கட்டுரை.
இந்துத்துவத்திர்கும் பாசிசத்திற்குமான தொடர்பு ஒரு நூற்றாண்டுகாலப் பழமையுடையது. சென்ற நூற்றாண்டின் முற்பாதியில் ஆர்.எஸ்.எஸ்.எஸ், இந்து மகா சபை முதலான இந்துத்துவ அமைப்புகளுக்கும் அன்றைய ஹிட்லர் மற்றும் முசொலினியின் பாசிசக் கட்சிகளுக்கும் இருந்த நேரடித் தொடர்பை ஆதாரபூர்வமாக நிறுவுகிறது இப்பகுதியின் இறுதிக் கட்டுரை. ஜெர்மானிய, இத்தாலிய பாசிசங்களை முன் மாதிரிகளாகக் கொண்டே இங்கு இந்துத்துவப் பாசிசம் இன்றுவரை செயல்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. மலேகான் முதலான இடங்களில் குண்டு வெடிப்பு நடத்தி, இன்று கைதாகிச் சிறையிலுள்ள சாத்வி பிரக்யா தாக்குர் மற்றும் லெப். கர்னல் பிரசாத் புரொகித். ரமேஷ் உபாத்யாயா முதலான இந்திய இராணுவத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் அதிகாரிகள் ஆகியோருக்கும் ‘அபிநவ பாரத்’ அமைப்பிற்கும் நாசிக்கிலுள்ள சாவர்கரின் உறவினர் உள்ளிட்ட இந்துத்துவவாதிகளால் நடத்தப்படுகிற போன்சாலே இராணுவப் பள்ளிகளுக்கும் உள்ள தொடர்புகள் இன்று நிரூபணமாகியுள்ளன. அபிநவ பாரதம், போன்சாலே இராணுவப் பள்ளி முதலியன கட்டுரையில் சுட்டிக்காட்டப் படுகிற ‘பலில்லா’ முதலான பாசிச அமைப்புகளின் மாதிரியில் உருவாக்காப் பட்டவை.
இந்துத்துவ சக்திகளை இராணுவத்திற்குள் ஊடுருவச் செய்யும் பணியை இவை செய்து வருகின்றன. சென்ற பத்தாண்டுகளில் நடைபெற்ற பல தீவிரவாதத் தாக்குதல்களை இவர்களும் இவர்களோடு தொடர்புடையவர்களுமே செய்து வந்துள்ளனர். பலர் இப்போது கைதாகி வழக்குகள் நடக்கின்றன, இந்த உண்மை வெளிப்படுவதற்கு முன்னதாக இவற்றில் பல ‘முஸ்லிம் தீவிரவாதிகளால்’ நடத்தப்பட்டவையாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்பாவி முஸ்லிம்கள் பலர் இவ்வாறு கைதும் செய்யப் பட்டனர். இவ்வாறு கைதாகிச் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம் இளைஞன் ஒருவனைச் சிறையில் சந்திக்க நேர்ந்த சுவாமி அஸீமானந்த் மனம் திருந்தி தாங்கள் நிகழ்த்திய குண்டு வெடிப்புகள் பற்றி தானாகவே முன்வந்து வாக்குமூலம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற ஜூலையில் நார்வே தலைநகரம் ஆஸ்லோவில் ஒரு கட்டிடத்தில் குண்டு வைத்துத் தகர்த்தும் அருகில் ஒரு தீவில் கூடியிருந்த இடதுசாரி அணிகள் மீது துப்பாகியால் சுட்டும் 93 பேர்களைக் கொன்ற கிறிஸ்தவ அடிப்படைவாதி ஆண்டர்ஸ் பெஹ்ரிக் தனது அறிக்கையில் சுமார் 102 பக்கங்களில் இந்திய இந்துத்துவவாதிகளைப் புகழ்ந்துள்ளான். மேற்கத்திய பாசிஸ்டுகள் நமது இந்துத்துவவாதிகளுக்கு முன்மாதிரியாக இருந்ததுபோக இன்று அவர்களுக்கு நமது இந்துத்துவவாதிகள் முன்மாதிரியாக உள்ளனர்.
மூன்றாம் பகுதியில் உள்ள கட்டுரைகள் நாங்கள் இஸ்லாமைப் புரிந்துகொள்ள மேற்கொண்ட முயற்சிகளுக்குச் சாட்சியம் பகர்பவை. முதற் கட்டுரை, “இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து” என முழங்கிய பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் இஸ்லாம் குறித்தும் நபிகள் குறித்தும் பேசியவற்றின் தொகுப்பு.
மதங்களை ஒழிக்கப்புறப்பட்டுள்ளதாகச் சொல்லும் நீங்கள் இஸ்லத்திற்கு மாறச் சொல்வதன் பொருளென்ன, இஸ்லாமே நன்மருந்து என்றால் நீங்கள் ஏன் மதம் மாறவில்லை, கடவுளை மறுக்கும் நீங்கள் ஹஜ் யாத்திரை, இறுதி இறைத் தூதர் முதலான கருத்துக்களை எவ்வாறு ஏற்றுக் கொள்கிறீர்கள் முதலான கேள்விகளுக்கு பெரியார் அளிக்கும் பதில்கள் அழகு.
நூலின் இறுதிக் கட்டுரை நபிகளின் மறைவை ஒட்டிய நிகழ்வுகள் இஸ்லாமிய ஆளுகையின் உண்மையான பொருள் ஆகியவற்றைத் தொட்டுக்காட்டுகிறது. இந்நூலை முழுமையாக வாசித்து முடிக்கும்போது சிறுபான்மையோர் முன்னுள்ள கடமைகள் குறித்த பிரக்ஞை ஒருவருக்கு உருவாகுமாயின் அதுவே இந்நூலின் வெற்றி என நம்புகிறேன்.
– அ.மார்க்ஸ்