நம் குடும்பத்தில் ஒரு முஸ்லிம்!
இஸ்லாமை தமது வாழ்க்கை நெறியாக ஏற்க விரும்பும் ஒருவர் முஸ்லிமாக மாறும் வழிமுறை மிக எளிதானது. ஷஹாதா எனப்படும் நம்பிக்கை உறுதிமொழியை மனதால் ஏற்று வாயால் மொழிந்தால் போதும். பிற மதங்களில் இருப்பதுபோல வெற்றுச் சடங்குகள் தேவையில்லை. முஸ்லிமாக ஒருவர் மாறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நீங்கள் செல்வீர்களென்றால் வீடியோ கேமராவெல்லாம் எடுத்துச் செல்லத் தேவையிருக்காது. கேமராவின் மூடியை நீங்கள் திறக்குமுன்பே நிகழ்ச்சி முடிந்து விடக்கூடும்!
முஸ்லிமாக மாற விரும்புபவர் மிக எளிமையாக, இரு முஸ்லிம்களின் சாட்சியுடன் ‘வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை; முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த உலகிற்கு இறுதியாக அனுப்பப்பட்ட இறைத்தூதர்’ என்ற உறுதிமொழியை மொழியவேண்டும். அவ்வளவுதான். அதற்குமேல் எந்தச் சடங்குமில்லை.
ஆனால், அந்தப் புதிய முஸ்லிம்களுக்கு ‘ஷஹாதா’ சொல்வது ஒரு புதிய வாழ்க்கை முறையின் துவக்கம்தான். இது ஒரு முன்னுரை மாதிரி. அல்லது அவர்கள் வாழ்வில் ஒரு அத்தியாயம் முடிந்து இன்னொரு அத்தியாயம் துவங்குகிறது என்றும் சொல்லலாம்.
ஒருவகையில் இது அவர்கள் வாழ்வை முழுவதுமாக மாற்றி அமைக்கப்போகும் அனுபவம். கார்களை சுத்திகரிப்புச் செய்வது போல, இது ‘ஆன்மீக சுத்திகரிப்பு’ என்று சொல்லலாம். சுத்திகரிப்புச் செய்யப் பட்ட கார் வழுக்கள் நீக்கப்பட்டுப் பளபளப்பது போல அவர் பாவங்கள் நீக்கப்பட்டு, வாழ்வதன் நோக்கம் தெளிவாகி புதிய மனிதராக வாழ்க்கையைத் தொடர்கிறார். இன்னொரு வகையில் பார்த்தால், அடிப்படையில் அவர் அதே மனிதர்தான். ஒரு ஃபோர்டு கார் சுத்திகரிப்புச் செய்யு முன்னரும் ஃபோர்டு காராகத்தானே இருந்தது?.
சில புதிய முஸ்லிம்களின் குடும்பத்தினருக்கு இதைப் புரிந்து கொள்வதுதான் சிரமமாக இருக்கிறது; உண்மையைச் சொல்வதென்றால், சில புதிய முஸ்லிம்களுக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் தொழுகை, நோன்பு போன்ற செயல்களில் ஈடுபடுவதோடு, பெயர், தாடி, ஆடை போன்ற புறத் தோற்ற மாறுதல்களிலும் அவசரம் காட்டுவது வழக்கிலிருக்கிறது.
இந்த மாறுதல்களிலும் தவறேதுமில்லைதான்! இஸ்லாம் சிலவற்றைக் கடமையாக்கியிருக்கிறது. சிலவற்றை முஸ்லிம்களுக்குப் பரிந்துரைத்திருக்கின்றது. ஆனால் பரிந்துரைக்கப்பட்டவற்றையும் செய்தால்தான் ஒருவர் முழு முஸ்லிமாக இருக்க முடியும் என்பதல்ல. சில சமயங்களில் ஒரு புதிய முஸ்லிம் தன் புறத் தோற்றங்களை மாற்றிக் கொள்வதில் காட்டும் அவசரம் அவரது முஸ்லிமல்லாத பிற குடும்ப உறுப்பினர்களுக்குக் குழப்பத்தை உண்டாக்குகிறது. இதனால் அவர்கள் மனம் புண்படவும் வாய்ப்பிருக்கிறது.
“உன் பெயரை ஏன் ஒரு அரேபியப் பெயராக மாற்றிக் கொண்டிருக்கிறாய்? நாங்கள் உனக்கு வைத்த பெயரில் என்ன குறை கண்டு விட்டாய்?”
“ஏன் இப்படி வித்தியாசமான உடைகளை அணியத் தொடங்கி விட்டாய்?”
“முக்காடு அணிய வேண்டியத் தேவை திடீரென்று உனக்கு ஏன் ஏற்பட்டது? நான் பார்க்கும் ஆசிய முஸ்லிம் பெண்களில்கூட பாதிப் பேர் இதை அணிவதில்லையே?”
“இப்படி எல்லா நேரங்களிலும் பள்ளிவாசலே கதி என்று கிடந்தால், உன்னை யாராவது மூளைச் சலவை செய்துவிடுவார்களோ என்று எனக்கு பயமாக இருக்கிறது. என் குடும்பத்தில் ஒரு பயங்கரவாதியைச் சேர்த்து வைத்துக் கொள்ள என்னால் முடியாது”
இப்படியெல்லாம் கேள்விகள் பிறக்கலாம்.
ஒருவகையில் பார்த்தால், இது போன்ற எதிர்வினைகளை எதிர்கொள்வது கூட ஆரோக்கியமானதொரு விஷயம்தான். முஸ்லிமல்லாத குடும்ப உறுப்பினர்கள் இஸ்லாம் பற்றிச் சரியான முறையில் அறிமுகம் செய்விக்கப் படாததால்தான் இந்தக் கேள்விகளைக் கேட்கிறார்கள். புதிய முஸ்லிம் தமது குடும்பத்தினரின் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்காகவேனும் தாம் புதிதாக ஏற்றுக் கொண்ட கொள்கைகளைத் தொடர்ந்து சீர்தூக்கிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். கேட்கப்படும் கேள்விகளுக்குத் தகுந்த முறையில் பதில் சொல்ல வேண்டும். இது இரு தரப்பினருக்குமே நன்மை தரக்கூடியதுதான்.
இஸ்லாம் பற்றி இன்றையச் சூழலில் நிலவும் எதிர்மறைப் பிம்பங்களுக்கு காரணம், அதன் கொள்கைகளைப் பற்றி சரியான முறையில் அறியாமல் இருத்தல் அல்லது இனம்புரியாத ஓர் அச்சம்தான். புதிய முஸ்லிம்கள் இந்தச் சூழ்நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு, இஸ்லாம் பற்றித் தம் குடும்பத்தினருக்குத் தகுந்த முறையில் விளக்கலாம்.
“இல்லை அம்மா! இஸ்லாம் அப்படிப்பட்டதல்ல. நான் இஸ்லாத்தில்தான் இணைந்திருக்கிறேன்; அல்-கொய்தாவில் அல்ல.”
“இஸ்லாம் அமைதியை வலியுறுத்தும் மார்க்கம்; வன்முறையைத் தூண்டும் மார்க்கமல்ல. இஸ்லாமின் பெயரால் அக்கிரமமான காரியங்களில் ஈடுபடுபவர்கள் இம்மார்க்கத்தின் மீது வீண்பழிச்சொல் விழக் காரணமாகிறார்கள்”
“அப்பா..! குர்ஆன், பெண்களை அடிமைப் படுத்துவற்கான கையேடு அல்ல. இந்த உலகில் முதன் முதலாகப் பெண்களுக்கான உரிமைகளையும் கண்ணியத்தையும் பிரகடனப்படுத்திய ஆவணமே அதுதான்!”
இப்படியெல்லாம் இஸ்லாம் பற்றிச் சொல்ல ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன! அதிலும் இந்தக் கருத்துகளை புதிதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்கள் உரக்கச் சொல்லும்போது, முஸ்லிமல்லாதவர்களுக்கு அது கூடுதல் தெளிவைக் கொடுக்கலாம். அது மட்டுமல்லாமல், பல்வேறு கலாச்சாரங்களின் தாக்கத்தினால் குர்ஆனின் வழிகாட்டல்களை விட்டு விலகி வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கும் அவை நினைவூட்டலாக அமையும்.
இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நான்கு புதிய முஸ்லிம்களும் இஸ்லாமைத் தழுவுவதற்குமுன் இம்மார்க்கத்தைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்களாகத்தான் இருந்தார்கள். இஸ்லாமைத் தழுவுவது பற்றி தங்கள் குடும்பத்தினரிடம் அவர்கள் தெரிவித்தபோது, சந்தேகப் பார்வைகளையும் அச்ச உணர்வையும் மனக்கசப்புகளையுமே அவர்கள் எதிர்கொள்ள நேரிட்டது.
யுவான் ரிட்லி
ஒரு பத்திரிகையாளரான யுவான் ரிட்லி, செப்டம்பர் 2001 தாக்குதலுக்குப் பிறகு ஒரு முஸ்லிம் பெண் போன்ற வேடத்தில் ஆப்கானிஸ்தானில் நுழைந்து, தான் பணியாற்றிக் கொண்டிருந்த பத்திரிகைக்காகச் செய்திகள் திரட்டிக் கொண்டிருந்தபோது, தாலிபான் படையினரால் பிடிக்கப் பட்டார்.
உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அவர், ‘தாம் கல்லாலடித்துக் கொல்லப் படுவோமோ’ என்று பயந்து கொண்டிருந்தார். ஆனால், அதற்கு நேர்மாற்றமாக, சிறைப்பிடிக்கப் பட்டிருந்த அவர் மிக மரியாதையாக நடத்தப் பட்டார். குர்ஆனைப் படிக்கப் போவதாகவும் இஸ்லாமைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போவதாகவும் வாக்களித்த பிறகு அவர் விடுவிக்கப் பட்டார்.
பெண்களை அடக்கி, ஒடுக்கி, துன்புறுத்துவது பற்றிய உபதேசங்கள் இருக்கும் என எதிர்பார்த்துக் குர்ஆனைப் படிக்க ஆரம்பித்த அவருக்கு, அதில் அப்படி எதுவும் இல்லை என்பதே ஆச்சரியத்தை அளித்தது!. “இது பெண்ணுரிமைக்கான பிரகடனம்” என்று வியக்கிறார் யுவான் ரிட்லி.
2003-ல் யுவான் இஸ்லாமைத் தழுவினார். இஸ்லாம் அவருக்கு அளித்த தன்னம்பிக்கையும் கவுரவமும் பிரச்னைகள் நிரம்பியிருந்த அவரது கடந்த கால வாழ்க்கையை மறக்கடிக்கச் செய்தது. ஆனால் அவரது மனமாற்றத்தைப் பற்றி அவரது தாயை மட்டும் இன்னும் அவரால் புரிந்து கொள்ளச் செய்ய முடியவில்லை.
ஜான் ஸ்டாண்டிங்
ஜான், தனது முஸ்லிம் பெண் தோழி நசிராவை இஸ்லாமிலிருந்து வெளியேற்ற முயன்றார். நசிரா தனது நம்பிக்கையில் உறுதியாக இருப்பது தெரிந்த பிறகே, குர்ஆனைத் தானே படித்துப் புரிந்து கொள்ள ஜான் முடிவு செய்தார். சில மாதங்களுக்குள்ளாகவே அவர் இஸ்லாமைத் தழுவினார்.
அவர் முஸ்லிமாக ஆனதிலிருந்து மிக அமைதியான, கனிவான மனிதராக இருக்கிறார் என ஜானின் தந்தை டோனி ஒப்புக் கொள்கிறார். இருந்தாலும், ஜான் மூளைச் சலவை செய்யப் பட்டிருப்பாரோ எனத் தனக்கு இன்னும் ஐயம் இருப்பதாகவும் அவர் சொன்னார். ஜான் ஏதாவது வன்முறை தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார் எனத் தெரிந்தால் அவரை தமது குடும்பத்தை விட்டும் விலக்கிவிடுவதாகவும் அவரது தந்தை எச்சரித்திருக்கிறார். அவர் அப்படி எதையும் செய்துவிட மாட்டார் என்ற நம்பிக்கையும் அவரது குடும்பத்தினருக்கு இருக்கிறது.
ஜான் ஏன் தனது பெயரை ஜமாலுத்தீன் என மாற்றிக் கொள்ள வேண்டும்? நல்ல எதிர்காலமுள்ள இசைக்கலை தொடர்பான தொழிலை ஏன் அவர் கைவிட வேண்டும்? (இஸ்லாம் இசையைத் தடை செய்திருக்கிறது என்பது ஜானின் நம்பிக்கை). மேலும், ஒரு இஸ்லாமிய நாட்டிற்குக் குடிபெயர்வது பற்றி அவர் ஏன் யோசிக்க வேண்டும்? என்பதெல்லாம் ஜானின் தந்தைக்கு இன்னும் புரியாத புதிர்தான்.
இஸ்லாம் உண்மையில் இது போன்ற மாற்றங்களை கட்டாயமாக்கியிருக்கிறதா?
அகீல் பர்ட்டன்
அகீல், ஜமைக்காவைச் சேர்ந்த தன் கிருஸ்துவப் பெற்றோருடன் மான்செஸ்டர் நகரில் வளர்ந்தவர். தமது பெற்றோர் பின்பற்றிய கிருஸ்துவ மதம் அகீலுக்குப் பிடிக்கவில்லை. அது வெள்ளை இனத்தவருக்கான மதம் என்று அகீலுக்குத் தோன்றியது. இஸ்லாம் இதிலிருந்து மாறுபட்டது என்றும் அவருக்குத் தோன்றவில்லை. பள்ளிப் பருவத்தில் அவர் அறிந்திருந்த முஸ்லிம்களெல்லாம் ஆசிய நாடுகளிலிருந்து வந்தவர்கள். ஆனால், அவரைப் போன்றே ஜமைக்காவைச் சேர்ந்த ஒரு நண்பர் முஸ்லிமானது, அகீலுக்கும் இஸ்லாம் மீது ஆர்வம் ஏற்படக் காரணமான அமைந்தது. அவர் குர்ஆனைப் படிக்க ஆரம்பித்தார். பதில் கிடைக்காமல் அவரது மனதில் சுழன்று கொண்டிருந்த கேள்விகளுக்கெல்லாம் இஸ்லாமில் பதில் இருக்கிறது என்பதை அவர் கண்டு கொண்டார்.
ஒரு தொழில்முறை குத்துச்சண்டை வீரராக இருந்த அகீல், முஸ்லிமாக ஆனதிலிருந்து சண்டையிடுவதை நிறுத்திவிட்டு ஒரு பயிற்சியாளராகத் தொடர்கிறார். குத்துச்சண்டைக்காக அவர் பெற்ற கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறைப் பயிற்சிகள், தமது புதிய இஸ்லாமிய வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிப்பதற்கும் துணைபுரிவதாக அகீல் உணர்கிறார்.
ஷஹ்நாஸ் மாலிக்
வெள்ளை இனக் குடும்பம் ஒன்றைச் சார்ந்த ஷஹ்நாஸ் அவரது ஆசிய ஆண் நண்பர் நசீரைத் திருமணம் முடித்தபோது இஸ்லாமைத் தழுவினார். அப்பொழுதெல்லாம் வெறும் பெயரளவில் மட்டும் முஸ்லிமாக இருந்த நசீரை கடந்த ஆறு ஆண்டுகளில் ஷஹ்நாஸ்தான் மார்க்கத்தில் பிடிப்புள்ளவராக மாற்றினார். முதலில் ஷஹ்நாஸ் ஹிஜாப் அணியத் தொடங்கினார். அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து, நசீரின் தூண்டுதல் எதுவுமின்றியே முழு புர்கா அணிய ஆரம்பித்தார்.
உறவினர்கள், நண்பர்கள் சிலரின் கிண்டலும் கேலியும் ஷஹ்நாஸை தைரியமிழக்கச் செய்யவில்லை. மாறாக, அழகிப் போட்டியில் பங்கு கொள்வது போன்று ஆடை அணியும் மேற்கத்தியக் கலாச்சாரத்திலிருந்து விடுதலை பெற்றதாகவே அவர் உணர்கிறார்.
இந்த நான்கு புதிய முஸ்லிம்களும் வெவ்வேறு வழிகளில் தங்களது மனமாற்றத்திற்கு முந்தைய மேற்கத்திய கலாச்சார வாழ்க்கை முறைகளிலிருந்து இஸ்லாம் காட்டும் வாழ்க்கை நெறிமுறைகளுக்கு மாறியவர்களாவர். வழிமுறைகள் வேறாக இருந்தாலும், ‘மாற வேண்டும்’ என்ற உறுதி இவர்கள் அனைவரிடமும் இருக்கிறது. மாற்றங்களைத் தேடும் இவர்களின் வாழ்க்கைப் பயணத்தை உற்று நோக்கினால் அதில் இஸ்லாமிற்கும் மேற்கத்தியக் கலாச்சாரத்திற்கும் இடையிலான ஒரு தொடர்புப் பாலத்தை ஒருவேளை நாம் காணக்கூடும்.
மூலம்: http://news.bbc.co.uk/1/hi/programmes/3663771.stm
தமிழில் : இப்னு பஷீர்
நன்றி: சத்தியமார்க்கம்.காம்