நடைமுறை வாழ்வில் நாத்திகத்தின் ‘முரண்பாடு’..!
தம் கொள்கைப்படி வாழ மக்களை பின்பற்ற அழைக்கும் ஒரு மதமோ அல்லது மதம் சாரா இயக்கங்களோ தங்களுக்கென ஒரு கோட்பாட்டை ஒரு வரையறை செய்திருக்க வேண்டியது அவசியம். அக்கோட்பாடு சரியானதா அல்லது தவறானதா என்பது அதுக்குறித்து விவாதிக்க படும்போது அறிந்துக்கொள்ளலாம்.
ஆனால் கடவுளை ஏற்றுக்கொள்ளாமல் அதை எதிர்க்கும் நாத்திகம் என்ற ஒரு கொள்கை(?) கடவுள் மறுப்பு அல்லது எதிர்ப்பு என்ற பிரதான ஒரு காரணத்தை மட்டுமே முன்னிருத்தி இச்சமுகத்தில் தன்னை ஒரு இயக்கமாக நிறுவ முயல்கிறது, கம்யூனிஷ மற்றும் திராவிட இயக்க சாயல் இவற்றில் இருந்தாலும் உலகம் தழுவிய அளவில் ஒரே கொள்கை கோட்பாடுகளை கொண்ட ஒரு பேரியக்கமாக நாத்திகம் இல்லை., கொள்கைரீதியில் தனக்கென வரையறை கொள்ளாவிட்டாலும் வாழ்வியல் முறையிலாவது தனக்கென தனிச்சட்டங்கள் ஏற்படுத்தி இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.,
மதங்கள் முன்னிறுத்தும் சடங்கு சம்பிரதாயங்கள் போலியானது என புறந்தள்ளி வாழ்க்கைக்கும் வாதத்திற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் எந்த ஒரு செய்கையும் நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்துபவர்களே நாத்திகர்கள் என இச்சமுகத்தில் அவர்களுக்கு ஒரு குறீயிடு உண்டு. ஆனால் எதை மதங்கள் மேற்கொள்வதாக விமர்சித்து அதை விடுத்தார்களோ அத்தகைய செயலை பகுத்தறிவு போர்வையில் தமது அன்றாட நடைமுறை வாழ்வில் அவர்கள் மேற்கொள்வது தான் அபத்தமானது… ஏன் அறிவுக்கு பொருந்தாததும் கூட., அவற்றில் ஓரிரண்டு குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
வணக்கம்??
பொதுவாக மதங்களின் அடிப்படை கொள்கை “இறையை வணங்குதல்” ஆகும். ஆக வணங்குதல் அவசியமற்ற ஒன்று என்று அசெய்கையே எதிர்க்கும் நாத்திகர்கள்., அச்செயலுக்கு சொல் வடிவம் கொடுத்து ஏற்பது தான் நடை முறை வாழ்க்கையில் நாத்திகம் கொள்ளும் நூறு சதவீகித தெளிவான முரண்பாடு.
இஸ்லாம் தவிர்த்த ஏனைய மதங்களை பின்பற்றுவோர் சர்வசாதாரணமாக ஒருவரை ஒருவர் சந்திக்கின்ற போது பெரும்பாலும் “வணக்கம்” என்ற வார்த்தையையே உபயோகப்படுத்துகிறார்கள். இது அறிமுகப்படுத்தும்போது வாழ்த்துச்செய்தியாக கொண்டாலும் இது இறைவனுக்கு மட்டுமே உரித்தாக வேண்டிய ஒரு செயல் வடிவ வார்த்தை.
சரி மதங்களை பின்பற்றோர் தான் தவறாக இறைவனுக்கு மட்டுமே கொடுக்கவேண்டிய கண்ணியத்தை சக மனிதர்கள் மத்தியில் சொல்கிறார்களென்றால் பகுத்தறிவில் செயல்படும் நாத்திகர்களும் அதே வார்த்தையே சொல்வது தான் ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஏனெனில் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொள்ளும் போது உங்கள் மீது அமைதியும் சமாதானமும் நிலவட்டும் என்று சொல்வதே ஏற்புடைய வார்த்தையாக இருக்கும் ஏனெனில் எந்த ஒரு மனிதருக்கும் அமைதி மற்றும் சமாதானம் என்பது எல்லா காலங்களிலும் தேவையான ஒன்று. மேலும் இவ்வாக்கியத்தை ஒருவரை சந்திக்கும் எல்லா தருணங்களிலும் உபயோகப்படுத்தலாம். ஆக மேற்கண்ட வரிகளே மனித அறிமுக பொழுதுகளில் சொல்வது ஏற்புடையதும் பிறிதொருவர் மேல் கொண்ட அக்கறைக்கு உரித்தான வார்த்தையாக இருக்கும்.,
எனினும் அவ்வார்த்தை ஒரு மார்க்க/ மத ரீதியான அடையாளத்தை ஏற்படுத்தும் என குறை சொன்னாலும் பரவாயில்லை., உடன்பாட்டு முறையில் அதை ஏற்றுக்கொள்வோம்., மேற்கண்ட வார்த்தைகள் சொல்வது வேண்டாம் என்ற போதிலும் குறைந்த பட்சம் நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்பதே ஏற்புடைய வார்த்தையாகும்.
வணக்கம் என்ற வார்த்தையின் விளக்கம் குறித்து சற்று ஆராய்ந்தால் இவ்வார்த்தை தமிழ் மொழியில் இருவேறு அர்த்ததில் கையாளப்படவில்லை., மேலும் இதற்கு வேறு மறைமுக பொருளும் இல்லை., இவ்வார்த்தை வணங்குதல் அல்லது வணங்கப்படுதலை மட்டுமே மையப்படுத்திய ஒரு இணைப்பு வார்த்தையாகும்- தமிழ் பொருளகராதியில் இவ்வார்த்தையின் பொருள் குறித்து பார்த்தாலும் வணக்கம் என்ற தனிச்சொல்லுக்கு எந்தவித அர்த்தமும் கிடையாது வேறு வினை/பெயர்ச்சொல்லுடன் சேரும் போதே பொருள்கொள்ளப்படுகிறது. உதாரணமாக வணக்கம் தெரிவிக்கிறேன்., உன்னையே வணங்குகிறேன்.. இப்படி.,
ஆக எதிரில் நிற்கும் ஒருவரை சுட்டி “வணக்கம் என்ற சொல்லை உபயோகித்தால் அச்சொல் அர்த்தம் பெற்று அவர் வணக்கத்திற்குரியவராக பொருள்படும். எதையும் அறிவுரீதியாக அணுகி சம்பிரதாயங்களை மறுக்கும் நாத்திகம், அடிபணிதலுக்குறிய பிரத்தியேகமான சொல்லாடல் வார்த்தையை பயன்படுத்துவது ஏன்? அதுவும் அவர்களின் அடிப்படைக்கு கூற்றுக்கு எதிராக அவ்வார்த்தை இருந்தும்..?
இல்லை…இல்லை வணக்கம் என்ற வார்த்தையை வணங்குதல் என்ற பொருளில் பயன்படுத்த வில்லை மாறாக ஒருவரின் அறிமுக துவக்கத்தில் வெறும் வழக்கு சொல்லாக தான் பயன்படுத்துகிறோம் என்றால்., மேற்குறிப்பிட்ட அற்புத முகமனோடு அனேக வார்த்தைகள் அழகிய தமிழில் அணிவத்திருக்க வெறுமனே வாய் உச்சரிப்பிற்காக பொருளற்ற வெற்று வார்த்தையே பயன்படுத்த வேண்டிய அவசியமென்னே?
அடுத்து,
பிறந்த நாள் கொண்டாட்டம்.
மதம் தவிர்த்தும் ஏனைய இயக்கம் சாந்தவர்களாலும் பிறந்த நாள் கொண்டாடுவதை நாம் அன்றாடம் வாழ்வில் பார்த்து தான் வருகிறோம்., அதிலும் இறந்த தலைவர்களுக்கு மாலை அணிவித்து அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் வழக்கம் தேவையா இல்லையா என்பதை விட முதலில் அது அறிவுக்கு பொருத்தமானதா…?
(( இங்கு எல்லோரையும் குறித்து பேசவில்லை, பகுத்தறிவு பேசும் நாத்திகர்களை குறித்தே ))
ஏனெனில் ஒருவர் இறந்தவுடனேயே அவரது வாழ் நாள் வரையறுக்கப்பட்டு அவரது ஆயூட்காலமும் கணக்கிடப்பட்டு அவரது செய்கைகள் முடிவுறுகின்றன. அப்படியிருக்கும் போது இறந்த மனிதர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதென்பது எப்படி சாத்தியமாகும்..? வருடா வருடம் பிறந்த நாள் என்ற பெயரில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் சடங்கு தமிழகத்தில் திராவிட கழக பெயரில் நாத்திகர்கள் நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
உயிருள்ளவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவது தேவையில்லையென்ற போதிலும் அது அவர்களுக்கு மன மகிழ்ச்சியளிக்கும் என்ற விதத்திலாவது அச்செய்கையை நியாயப்படுத்தலாம்., ஆனால் இறந்தவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதற்கு பெயர் தானா.. பகுத்தறிவு???
இச்செயலை நியாயப்படுத்த, நாங்கள் பெரியார் புரிந்த சேவைக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கும் முகமே அவர் சிலைக்கு மாலை அணிவிக்கிறோம் என சமாதானம் சொல்கின்றனர்., ஆனால் ஒரு மனிதர் மேற்கொண்ட சேவைக்கு கொடுக்கும் கண்ணியத்தின் வழிமுறை அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவிப்பதிலா இருக்கிறது..? அதுவும் எதை வணங்கும் பொருளாக ஆக்க வேண்டாம் என்று மறுத்தாரோ அத்தகைய கல்லிலே அவரை வடித்து மரியாதை எனும் பெயரில் வருடத்திற்கு ஒரு முறை மாலை அணிவிப்பதை சடங்காக செய்து வருவதுதான் உச்சக்கட்ட கொடுமை.,
ஆக இறந்த ஒருவரை கண்ணியப்படுத்துதல் என்பது அவரது எண்ணத்தை பூர்த்தி செய்வது , அல்லது அவரது சொல்லுக்கு செயல்வடிவம் கொடுப்பதில் இருக்கிறது., இன்னும் அதிகப்பட்சமாக அவர் பெயரில் பொது மக்களின் நலத்திற்கு தேவையானவற்றை ஏற்படுத்துவது மற்றும் உருவாக்குவது அவர் கொணர்ந்த கொள்கைக்கு மதிப்பு கொடுக்கும் விதமாக அமையும். மாறாக “மாலை அணிவிப்பதில் மாற்றமடைய போவதில்லை மரித்தவரின் மரியாதை.!”
இச்செயலை நாடு தழுவிய அளவில் உள்ள அனைத்து நாத்திகர்களும் செய்யவில்லை மாறாக சில “இயக்க தோழர்கள்” மட்டுமே செய்வதாக சொன்னாலும் .இஃது அறிவுக்கு பொருந்தாத இச்செயலை ஏன் ஏனைய நாத்திகர்கள் எதிர்க்கவில்லை… குறைந்த பட்சம் விமர்சிக்கக்கூட வில்லை?
ஆக,
1. இறந்தவருக்கு பிறந்த நாள் கொண்டாடுவதும்
2. ஒருவரை கண்ணியப்படுத்த அவரது உருவப்படத்திற்கு அல்லது சிலைக்கு மாலை அணிவிப்பதும்
நடைமுறை வாழ்வில் நாத்திகம் சந்திக்கும் இரண்டாவது தெளிவான முரண்பாடு.
எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே! -தந்தைபெரியார் – “விடுதலை” 15-2-1973 (This quote taken from tamil oviya blogspot)
அதுப்போல,
பெரியாரின் போதனைகளை பின்பற்றுவோரை குறித்து இங்கு நான் விமர்சிக்க வில்லை மாறாக அவரது பெயரை வைத்து பகுத்தறிவுக்கு பொருத்தமில்லாத செய்கைகளின் ஈடுபடும் நாத்திகர்களை குறித்தே இங்கு விமர்சனம்.!
ஷார்ட்டா சொல்லணும்னா…
மதங்களின் போலி சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை மறுக்கும் நாத்திகர்கள் அதே, மதம் சார்ந்த நபர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏன்? அதுவும் பகுத்தறிவிற்கு பொருத்தமில்லாத வகையில் இருந்தும் கூட???
இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும் – இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை. (39:23) அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
source: http://iraiadimai.blogspot.in/2011/09/blog-post_23.html