பசிப்பிணி மருத்துவன்!
பசி!!!
உலகிலேயே ஒரு மனிதனுக்கு வரக் கூடிய கொடிய நோய்!!!
இயந்தர மயமாக்கப்பட்ட இந்த உலகத்தில் ஒரு வேளை உணவுக்கும் வழி இன்றி, அவர்களைக் கவனிக்கவும் எவரும் இன்றி இந்த நோயினால் மடியும் மனிதர்கள் தான் உலகில் அநேகம்.
மற்ற நோய்களைக் கூட காசினை வாங்கிக் கொண்டு குணமாக்கும் மருத்துவர்கள், இந்த நோயினை கவனிப்பதே இல்லை. காரணம் – அந்த நோயாளிகளிடம் பணம் இருப்பதில்லை. இக்காலத்தில் பணம் இல்லையெனில் மருத்துவச் சேவையும் இல்லை.
காலத்தின் கோலம், பணம் இருப்பவர்களிடம் அந்த நோயும் வருவதில்லை. ‘பசி ஒரு ஏழ்மை நோய்’.
இவ்வாறே இன்றைய உலகினில் பெரும்பான்மையான மக்கள் கவனிப்பார் யாரும் இன்றி இந்த கொடிய நோயினால் அவதிப் பட்டுக் கொண்டு இருக்கின்றனர். இவர்களைக் கவனிக்க வேண்டிய அரசாங்கமோ இவர்களை பாரமாகவே கருதிக் கொண்டு இருக்கின்றது.
இத்தகைய சுழலில் தான் நாம் பசிப்பிணி மருத்துவர்களைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது.
பசிப்பிணி மருத்துவர்களா? அவர்கள் யார் என்றுக் கேட்கின்றீர்களா…?
அவர்கள் நாம் தான்…!!
பசியின் கொடுமையை நன்கு உணர்ந்த நமது மூதாதையர்கள் பசியினை ஒரு நோயாகவே கருதி வந்து இருக்கின்றனர். கருதியது மட்டுமன்றி அந்த நோயினை குணப்படுத்துவதை தங்களது கடமையாகவே கருதி வந்து இருக்கின்றனர்.
இப்பொழுது பசிப்பிணி மருத்துவன் என்னும் சொல்லை நாம் சற்று விரிவாகப் பார்ப்போம்.
பசி பிணி -> நோய்
மருத்துவன் -> நோய்களைக் குணப்படுத்துபவன்.
சரி, பசி என்னும் நோயினைக் குணப்படுத்துபவன் பசிப்பிணி மருத்துவன் என்றே வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவன் எவ்வாறு பசியினைக் தீர்த்து வைப்பான் என்றக் கேள்விக்கு பதில் காண்பதற்கு முன்னர் ஒருக் கேள்வி.
பசியினைப் போக்குவது எப்படி?
அட என்னங்க… சாப்பிட்டா பசி பறந்து போயிடப் போகுது. இத எல்லாம் ஒரு கேள்வின்னு கேட்குறீங்க அப்படின்னு சொல்றீங்களா!!! சரி தான். உணவினை உண்டால் பசி பறந்து விடும் தான்.
அதே வழிமுறையினைத் தான் நமது மூதாதையர்களும் கடைப்பிடித்தனர். பசி என்று வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாது அன்னமிட்டு அவர்களின் பசியினைத் தீர்த்தப் பின்னர் தான் தாங்கள் உண்ணுவதை வழக்கமாக அவர்கள் கொண்டு இருந்தனர். இதை ஒரு மாபெரும் அறச் செயலாகவே நம் முன்னோர் கருதி வந்தனர்.
பசியில் வாடிக் கொண்டு இருக்கும் ஒரு மனிதனுக்கு உணவு என்பது உயிர்க் கொடுப்பது போல் ஆகும். எனவே தான் ‘உண்டிக் கொடுத்தோர் உயிர்க் கொடுத்தோர்’ என்றும் அவர்கள் கூறினர்.
அந்த உணவினைக் கொடுக்கும் உழவுத் தொழிலையும் அவர்கள் முதன்மையானத் தொழிலாக கருதி அதற்குரிய மரியாதையினைக் கொடுத்து வந்தனர்.
வள்ளுவரும் உழவினை சிறப்பித்து பத்துக் குறள்களை உழவு என்னும் தலைப்பில் வழங்கி உள்ளார்.
ஆனால் இன்றோ, உழவு நசுக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. உலகிற்கே உணவினைக் கொடுக்கும் உழவர்கள் உண்ண உணவின்றி இந்தக் கொடிய பசிப்பிணியால் வாடிக் கொண்டு இருக்கின்றனர். அதைத் தீர்க்க வேண்டிய அரசாங்கமோ அவர்களை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றது.
எந்தப் பசியினைக் கண்டு நமது முன்னோர்கள் துடித்தார்களோ, அதே பசியினை இன்றுக் கண்டும் அதை தீர்க்க முயற்சிக்காது இன்று தன் வீட்டினில் மீதமான உணவினை பத்திரமாக குளிர் சாதனப் பெட்டியினில் வைத்து அதை அடுத்த நாளுக்கு பயன்படும் என்று அவர்களுக்காகவே பாதுக்காத்துக் கொள்கின்றனர்.
பரந்த மனப்பான்மையுடைய எனது சமுதாயத்தினரில் பலர் இன்று குறுகிய மனப்பான்மை உடைய மேற்கத்தியர் போல் மாறி விட்டனர்.
முன்பு எங்கள் இனத்தில் ஒழிக்கப்பட்ட பசிப்பிணியும் இன்று மீண்டும் தலை விரித்தாடுகின்றது.
விழிப்போம் மக்களே… பசிப்பிணி மருத்துவர்களாக நம் முன்னோர் வலம் வந்த இந்த நாட்டிலேயே தான் “கணக்கில் அடங்காத நெற்க் கதிர்கள் அழுகினாலும் சரி… அவற்றை பசியால் மடிந்துக் கொண்டு ஏழை மக்களுக்குத் இலவசமாக தர மாட்டேன்” என்றுக் கூறிய மன்மோகன் சிங்கும் இன்று பிரதமராக உலா வந்து கொண்டு இருக்கின்றார்.
உணவின் அருமையை அறிந்து நாம் செழிக்க வைத்த விவசாயம்… இன்று பணம் என்னும் மாயப் பொருளின் மேல் கயவர்கள் கொண்டுள்ள மோகத்தால் அழிந்துக் கொண்டு வருகின்றது…!!!
நோய் வந்தால் தான் அதனைத் தீர்க்க மருத்துவனின் தேவையும் வரும். இதோ நாம் துரத்திய பசிப்பிணி மீண்டும் வந்து இருக்கின்றது அதனைத் துரத்தி விட்டு மீட்டு எடுப்போம் நம் உழவினை… அதனுடனேயே நம் வாழ்வியல் முறைகளையும் தான். ஏன் எனில் நாம் மருத்துவர்கள்… பசிப்பிணி மருத்துவர்கள்!!!
– வழிப்போக்கன்