சாதிக்கத் துடிப்பவர்கள் மறக்க முடியாத சாதனைச் சகோதரி அர்ஃபா கரீம்
சாதிக்கத் துடிப்பவர்களுக்காக இந்தப் பதிவு….
எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களால் மறக்க முடியாத, மறக்கக் கூடாத ஒருவர் தான் சகோதரி அர்ஃபா கரீம் அவர்கள்.
ஆம் தனது ஒன்பது வயதில் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு மிகப் பெரும் சாதனையை நிகழ்த்திய சாதனையாளர் தனது 16ம் வயதில் இவ்வுலகை விட்டும் பிரிந்தார் என்பது ஒரு சோகமான உண்மை.
முன்னேற்றத்திற்கு யாரும், எதுவும் தடையல்ல என்பதை நிரூபித்தது மட்டுமன்றி, முயன்றால் இறைவன் அருளால் வெற்றி நிச்சயம் என்பதை பதிய வைத்தவர் தான் இந்த அர்ஃபா கரீம்.
யார் இந்த அர்ஃபா..?
பாகிஸ்தானின் ஃபைசலாபாத்தில் அம்ஜத் கரீம் ராந்தவா, திருமதி. கரீம் ராந்தவா தம்பதியினருக்கு 1995 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி பிறந்தார் அர்ஃபா.
கணிணித் துறைக்கு சற்றும் தொடர்பில்லாத விவசாயத்துடன் தொடர்புடைய குடும்பத்தில் பிறந்தவரானாலும் சிறுவயது முதலே அர்ஃபா, கணினியில் திறமை வாய்ந்த ஒருவராகவே இருந்ததனால் பாடசாலையின் ஆச்சரியமிக்க சிறுமியாகவே ஆசிரியர்களுக்கு அர்ஃபா தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.
சாதனைச் சகோதரியின் சாதனைகள்
5 வயது குழந்தை பருவத்தில் தான் வசித்த பகுதியில் காணப்பட்ட கணினி ஆவகங்களை கடந்து செல்லும் போது என்னுள் ஏற்பட்ட கணினி தொடர்பான எண்ணங்களே என்னை கணனித்துறைக்கு கொண்டுவந்ததாக அர்ஃபா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அர்பாவிற்கு குழந்தை பருவத்தில் ஏற்பட்ட இந்த தூண்டலின் துலங்கலாகவே ஆறு வயதில் சொந்தமாக கணனியை இயக்கவும் ஏபிடெக் (AP TECH) எனும் கணினி நிறுவனத்தில் இணையவும் முடிந்துள்ளது.
ஏ.பி.டெக் நிறுனத்தினால் அர்ஃபாவினுடைய அசாத்திய திறமையினை உணர்ந்த ஆசிரியர்கள் முறையான பயிற்சிகள் மூலம் இவரை உச்சத்திற்கு கொண்டு செல்லமுடியும் என நம்பியுள்ளனர். இதன் விளைவாகவே மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தினால் வழங்கப்படும் உயரிய விருதான உயர் தொழில் கணினி Microsoft Certified Professionals (MCPs.) விருதுக்கு அர்ஃபாவை தயார் செய்தனர்.
அர்ஃபா மீது ஆசிரியர்கள் கொண்ட நம்பிக்கை வீண் போகவில்லை. தனது 9 ஆவது வயதிலேயே எம்.சி.பி எனப்படும் கணினிக் கற்கையினை பூர்த்தி செய்து உலகின் புகழ் பெற்ற நபர்களில் ஒருவராக 2004ம் ஆண்டு நிரூபித்தார் அர்ஃபா கரீம்.
அவ்வாண்டில் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட உயர் தொழில் கணினி விருதினை உலகின் மிக இளம் வயதுடைய பொறியியலாளர் என்ற சாதனையுடன் தனது 9 ஆவது வயதிலேயே தன் நாட்டிற்கும் தான் வாழும் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் அவ்விருதினை வென்றெடுத்து தனது வாழ்க்கையினை சிறார்களுக்கு முன்னுதாரணமாக அமையும் வகையில் அமைத்து பாகிஸ்தானிய மக்களை மட்டுமல்லாது உலகமே தன்னை வியந்து பார்க்கும் படி உயர்ந்து நின்றார் அர்ஃபா.
இந்த விருது அர்ஃபாவின் சாதனை வாழ்க்கைக்கான பாதையாக அமைந்தது. எம்.சி.பி விருது வென்ற அர்பாவினை பாராட்டி மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் அமெரிக்காவுக்கு வரவழைத்து அவ்விருதினை தனது கைகளினாலேயே வழங்கி பெருமைப்படுத்தினார்.
எம்.சி.பி விருதினை பெற்ற பிறகு 2005 ஆண்டில் பலரின் கனவு இலட்சியமாக இருக்கும் வாஷிங்டனில் அமைந்துள்ள மைக்ரோ சாப்ட் நிறுவனத்தினுடைய ரெட்மென்ட் வளாக ஆய்வகத்தின் நிர்வாகிகளை பில்கேட்ஸின் அழைப்பின் பெயரில் தனது 10 ஆவது வயதில் சந்தித்தார் அர்ஃபா கரீம்.
2005 ஆண்டு காலப்பகுதியில் முறையே பாகிஸ்தானின் உயரிய விருதுகளில் ஒன்றான பாத்திமா ஜின்னா தங்க விருது, சலாம் பாகிஸ்தான் யௌவன விருது மற்றும் ஜனாதிபதி செயல்திறன் பெருமை விருது போன்ற விருதுகளையும் அள்ளிக் குவித்தார். இந்த விருதுகள் அனைத்தும் தனது 10ஆவது வயதில் வந்து சேரும் வகையில் தனது திறமைகளை வெளிப்படுத்தியதே அர்பாவின் சிறப்பம்சம்.
பாகிஸ்தானின் முக்கியத்துவம் மிக்கவர்களில் முதன்மையானவர்
கணிணித் துறையில் நடத்தப்பட்ட பல கருத்துக் களங்களுக்கும், கருத்து மோதல்களுக்கும் பாகிஸ்தான் சார்பாக கலந்து கொண்டு நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் பல பெருமைகளை ஈட்டித் தந்தவர் அர்ஃபா.
துபாயில் நடந்த பாகிஸ்தான் தொழில்நுட்பக் கருத்துக்களம் ஒன்றிற்கு பாகிஸ்தான் நாட்டுத் தூதுவராக அர்ஃபா சென்றிருந்தார். அதில் பல பரிசுகளை அள்ளிக்குவித்து ஏராளமானோரை ஆச்சரித்திற்குள்ளாக்கி வெற்றிபெற்றார்.
தொடர்ந்து 2006 ஆம் ஆண்டில் பார்ஸிலோனாவில் இடம்பெற்ற 5000 தொழில்நுட்ப உருவாக்குனர்கள் (Developers) மட்டுமே பங்கு கொண்ட டெக் எட் உருவாக்குனர் மாநாட்டில் பாகிஸ்தானிலிருந்து சென்ற ஒரே உருவாக்குனர் என்ற பெருமை பெற்றார் அர்ஃபா.
2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தான் தொலைத் தொடர்பாடல் நிறுவனத்தின் கம்பியில்லா 3 ஜீ தொழில் நுட்ப சேவையின் தூதுவராக அறிவிக்கப்பட்டார்.
சாதனைச் சகோதரி மரணத்தை நெருங்கிய தருணங்கள்….
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சாதனைப் பெண் அர்ஃபா கரீம் அவர்களுக்கு எந்தளவுக்கு வேகமாக வெற்றியும், சாதனைகளும் வந்து குவிந்தனவோ அதை விட வேகமாக மரணமும் வந்து சேர்ந்தது என்றால் அது மிகையில்லை.
குறிப்பிட்ட ஐந்து வருடங்களுக்குள் பல சாதனைகளைப் படைத்து உலகின் இளம் வயது சாதனையாளர் என்ற பெயரைத் தனதாக்கி உலகின் பலம் பெரும் தொழினுற்ப வல்லுனர்களையெல்லாம் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த அர்ஃபா அவர்களை ஆச்சரியக் கண்ணுடன் அனைவரும் பார்த்த வேலை கடந்த ஆண்டு டிசம்பர் 22ம் தேதி அனுதாபக் கண்ணுடன் அனைவரும் உற்று நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சாதனையாளர் நோயாளியாக அறியப்பட்ட நிமிடங்கள்.. .
ஆம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 22ம் தேதி அர்ஃபா கரீம் திடீரென வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு லாகூர் மருத்துவமனையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அர்பா அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின்னர் தான் கார்டியல் அரஸ்ட் மற்றும் முயலகப்பீடிப்பு (Epileptic seizure) எனும் மூளை தொடர்பான நோய் அர்பாவை தாக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அர்பாவின் அனைத்து செலவீனங்களையும் பொருப்பேற்று அமெரிக்காவுக்கு அர்ஃபாவை அழைத்து சிகிச்சை செய்ய மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் உயர் பீடம் தயாராகியது. இதற்கான அறிவிப்பை பில் கேட்ஸ் அறிவித்திருந்தார்.
மரண வேலையிலும் சாதனையைத் தொடர்ந்த சகோதரி
தான் மரணத் தருவாயில் இருக்கும் போதும் அர்ஃபா அவர்கள் அமெரிக்க வின்வெளி ஆய்வு மையமான நாஸாவுக்காக ஒரு திட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
நோயின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது அதே நிலை தொடர்ந்த காரணத்தினால் சென்ற மாதம் (ஜனவரி 2011) 14ம் தேதி இவ்வுலகை விட்டும் பிரிந்தார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ஒருவரின் மரணம் மற்றவர்களின் மனதில் இடம் பிடிக்கின்றது.
அர்ஃபா அவர்கள் உயிர் வாழும் போது அவரை அறிந்தவர்களை விட அவரின் மரணத்தின் பின் அவரைப் பற்றி அறிந்து கொண்டவர்கள் தாம் அதிகம் எனலாம். காரணம் ஒருவர் நமக்கு மத்தியில் இருக்கும் போது அவரைப் பற்றிய தேவையை நம்மில் பலர் உணர மாட்டோம்.
சகோதரி அர்ஃபா கரீம் அவர்கள் தனது இளம் வயதில் நிகழ்த்திய சாதனைகளை பார்க்கும் போது முஸ்லீம்கள் இவ்வுலகின் அறிவியல் வளர்ச்சிக்கு செய்த சேவைகள் தாம் நினைவுக்கு வருகின்றன.
அர்ஃபாவின் மறைவிற்கு பின்னர் லாகூரில் இருக்கும் பாகிஸ்தானின் தொழில்நுட்பப் பூங்காவின் பெயரை அர்பா மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா என பெயர் மாற்றம் செய்துள்ளதாக பாகிஸ்தானின் பஞ்சாப் முதலமைச்சர் ஷஹ்பாஸ் ஷெரிஃப் அறிவித்துள்ளார்.
இவரின் மறைவுக்கு மைக்ரோ சாஃப்டின் தலைவர் பில் கேட்ஸ், பாகிஸ்தானின் பஞ்சாப் முதலமைச்சர் ஷஹ்பாஸ் ஷெரிஃப், பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி மற்றும் பிரமர் யூஸுஃப் ரஸா கிலானி என பலரும் கவலை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அர்ஃபா கரீம் அவர்களின் புகைப்படத்துடன் கூடிய தபால் முத்திரையையும் வெளியிடும்படி பாகிஸ்தான் பிரதமர் கிலானி அறிவிப்பை வெளியிட்டுள்ளமையும் இங்கு கவணிக்கத் தக்கதாகும்.
உலக வரலாற்றில் சாதனைகளினால் மக்கள் மனங்களில் இடம் பிடித்த மிகச் சிலரில் உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கப்படும் அளவுக்கு கல்வித் துறையில் சாதனை படைத்தவர் தான் சகோதரி அர்ஃபா கரீம் அவர்கள்.
சகோதரி அர்ஃபாவின் மறுமை வாழ்விற்காக நாமும் இறைவனிடம் பிரார்த்திப்போமாக!
wikipedia வில் சகோதரி அர்ஃபா கரீம் தொடர்பான செய்திகளை பார்க்க… இங்கு க்லிக் செய்யுங்கள்.
www.arfakarim.org என்ற பெயரில் சகோதரி அர்ஃபா கரீமின் இணைய தளத்தைப் பார்க்க முடியும்.
சகோதரி அர்பா கரீம் ஃபேஸ்புக்கிலும் தனக்கென தனிப் பகுதியை உருவாக்கியிருந்தார்.
மாணவர்களே! சாதிக்கத் துடிப்பவர்களே!
சாதனைகள் நம்மைத் தேடி வருவதில்லை, நாம் தான் சாதனைகளை தேடிச் செல்ல வேண்டும். சாதிக்கத் துடிப்பவர்களுக்கு அர்ஃபா கரீம் ஒரு முன்மாதிரி.
அறிவின் வாயில்களை இறைவன் அர்பாவுக்கு அதிகமாகவே திறந்து கொடுத்திருந்தான், தான் வாழ்ந்த மிகக் குறைவான காலத்திலேயே உலகை உற்றுப் பார்க்க வைத்தவராக அல்லாஹ் அவரை மாற்றினான்.
முயற்சி செய்பவருக்கு அளவில்லாமல் இறைவன் வாரி வழங்குவான் என்பதை அர்ஃபாவின் வாழ்விலும் நாம் கண்டுகொள்ள முடிகின்றது.
முயற்சி செய்யுங்கள், சிந்தியுங்கள், பாடுபடுங்கள் முஸ்லீம்கள் இவ்வுலகின் அறிவியல் முன்னோடிகள் என்பதை திரும்பத் திரும்ப பதிய வையுங்கள்.
நமது பிறப்பு சம்பவமாக இருந்தாலும், இறப்பு சரித்திரம் படைக்க வேண்டும்.
சாதனைகளை நமதாக்குவோம்….. சரித்திரத்தில் இடம் பிடிப்போம்…
– RASMIN M.I.Sc
source: http://rasminmisc.blogspot.in/