உயிரைப் பற்றி அன்றும், இன்றும், என்றும்!
”முஹம்மதே! உயிரைப் பற்றி அவர்கள் உன்னிடம் கேட்கின்றனர். ‘உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்’ என்று கூறுவீராக.” (குர்ஆன் 17:85)
குர்ஆன் கூறும் இந்த வசனம் நம்மை வியப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறது. குர்ஆனின் பல வசனங்கள் உலகில் உள்ள அனைத்து படைப்புகளைப் பற்றியும் சிந்திக்கச் சொல்கிறது. விண்வெளி பயணம் மனிதர்கள் ஆகிய நீங்கள் செய்ய முடியும். இன்னும் பல அறிவியல் முன்னேற்றங்களைக் கண்டாலும் உயிரைப் பற்றி உங்களால் ஒரு முடிவுக்கு வர முடியாது என்று அடித்து சொல்கிறது குர்ஆன். ‘மனிதனே நீ குறைவாகவே அறிவு கொடுக்கப்பட்டிருக்கிறாய். உயிரின் சூட்சுமத்தை உன்னால் அறிந்து கொள்ள முடியாது’ என்று கூறுகிறது.
உயிரைப் பற்றி சில யூதர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டபோது என்ன நடந்தது என்பதை பின் வரும் புகாரி ஹதீஸ் நமக்கு விளக்குகிறது.
பேரீச்ச மட்டை ஒன்றைக் கையில் ஊன்றியவர்களாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் மக்கள் சஞ்சாரம் இல்லாத ஒரு பாழ் வெளியில் சென்றபோது அவர்களுடன் நானும் சென்று கொண்டிருந்தேன். அப்போது யூதர்களின் குழு ஒன்றை அவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் ‘ரூஹை (உயிர்) பற்றி அவரிடம் கேளுங்கள்’ என்றார்.
அவர்களின் இன்னொருவர் ‘அவரிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்கள்; உங்களுக்குப் பிடிக்காத எதையும் அவர் சொல்லப் போவதில்லை’ என்றார். அவர்களில் மற்றொருவரோ, ‘(இல்லை!) இறைவன் மீது ஆணையாக நாம் (அதைப் பற்றி) அவரிடம் கேட்டே விடுவோம்’ என்றார். (முடிவில்) அவர்களில் ஒருவர் எழுந்து, ‘அபுல் காஸிம் அவர்களே! உயிர் என்றால் என்ன? என்று கேட்டார்.
உடனே நபி அவர்கள் மெளனமானார்கள். ‘அவர்களுக்கு இறைவனிடமிருந்து இப்போது செய்தி அறிவிக்கப்படுகிறது’ என்று என்னுடைய மனதிற்குள் நினைத்தபடி நான் நின்று கொண்டிருந்தேன். (இறைச் செய்தி வரும்போது ஏற்படும் சிரமம் விலகும் வரை பொறுத்திருந்தேன்)) அவர்கள் தெளிவடைந்தபோது ‘(நபியே!) உம்மிடம் அவர்கள் ரூஹைப் பற்றிக் கேட்டார்கள். ரூஹு என்பது என் இறைவனுடைய கட்டளையைச் சார்ந்ததாகும். ஞானத்தில் (மிகக்) குறைந்த அளவே தவிர அவர்கள் கொடுக்கப்படவில்லை என்று நீர் (பதில்) கூறும்!’ (திருக்குர்ஆன் 17:85) என்று (திருக்குர்ஆன் வசனத்தை) கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (ஸஹீஹூல் புகாரி 125) Volume:1, Book: 3)
இந்த நபி மொழியை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்கெனவெ தயார் செய்திருந்து திட்டமிட்டு சொன்ன பதிலும் கிடையாது இது. தனது தோழர்களோடு நடந்து செல்லும் பொது எதேச்சையாக யூதர்கள் எதிரில் தென்பட அவர்கள் முகமது நபியிடம் தங்களது சந்தேகத்தைக் கேட்கின்றனர். யூதர்கள் கேட்ட கேள்விக்கு அவர்களால் சுயமாக பதில் சொல்ல முடியவில்லை. சிறிது நேரம் மௌனமாகிறார்கள். ஏனெனில் இது போன்ற அறிவு பூர்வமான விஷயங்களை அந்த அரபு மக்கள் அதிகம் விளங்கியிருக்கவில்லை. பிறகு இறைச் செய்தி வருகிறது. அந்த நேரத்தில் முகமது நபிக்குள் ஏற்படும் மாற்றத்தை நபித் தோழர் கவனிக்கிறார். அன்று இறங்கிய இந்த வசனம் இன்று வரை விஞ்ஞானிகளால் ஒரு தீர்வைக் காண முடியவில்லை.
பல சினிமாக்களில் இறந்தவுடன் அந்த உடலிலிருந்து ஒரு ஆவி பிரிவது போலவும் பிறகு அந்த ஆவி வேறொரு உடலில் புகுந்து கொண்டு ‘லக லக லக லக லக’ என்று புரியாத மொழியில் பேசுவதை பார்த்து நம் தமிழன் வாய் பிளந்து உட்கார்ந்திருப்பது எல்லாம் அறிவியலுக்கு சாததியம் இல்லை. அதே போல் பேய் பிசாசு குட்டி சாத்தான் என்று சொல்லி நாகூரிலும், ஏர்வாடியிலும், வேளாங்கண்ணியிலும் மனநோயாளிகள் புரள்வதை அறிவியலும் ஒத்துக் கொள்வதில்லை இஸ்லாமும் ஒத்துக் கொள்வதில்லை.
ஏதோ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரவர் கற்பனைக்கு ஒரு வரையறையை உயிருக்கு வைத்திருக்கிறார்கள்.
இனி உலக வழக்கில் உயிரைப் பற்றி நாம் வைத்திருக்கும் இலக்கணத்தை வரிசையாக பார்ப்போம்.
1. உடம்பு உயிர் எடுத்ததோ? உயிர் உடம்பு எடுத்ததோ?
உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது?
உருத் தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே?
கருத் தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே?
நம் முன்னோர்களான சிவ வாக்கியர் கூட இந்த உயிரின் சூட்சுமத்தை விளங்காமல் அதனையே பாடலாக எழுதி வைத்து சென்றும் விட்டார்.
2. உயிருக்கு விக்கி பீடியா தரும் தகவல்
உலக மதங்கள் பலவற்றில் உயிர் என்பது, உயிரினம் ஒன்றின் “பொருள் தன்மை” அற்ற பகுதியைக் குறிக்கும். ஆன்மா, ஆவி போன்ற வேறு பல பெயர்களாலும் குறிப்பிடப்படும் இதிலேயே சிந்தனை, ஆளுமை முதலியன அடங்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. இறையியலில், பொதுவாக உயிர் ஒரு உயிரினத்தின் இறப்பிற்குப் பின்னரும் தொடர்ந்து இருப்பதாக நம்பப்படுகிறது. சில மதங்கள், உயிர்கள் இறைவனால் படைக்கப்பட்டன என்கின்றன. வேறு சில மதங்களில் உயிர் எவராலும் படைக்கப்படாத நிலையானவற்றுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இறப்பின் போது உடலை விட்டு நீங்கும் உயிர் இன்னொரு உடல் எடுத்து உலகில் மீண்டும் பிறக்கின்றது என்கின்றன மறுபிறவியில் நம்பிக்கை கொண்ட சில மதங்கள். உடல் உயிர்களுக்கான தற்காலிகத் தங்குமிடம் என்றும், இறுதியில் இறைவனைச் சென்றடைவதற்கான செயல்களில் ஈடுபடுவதற்காக உயிர்களுக்கு இறைவன் உடலைக் கொடுக்கிறான் என்பதும் சில மதங்களின் கொள்கை.
உலகிலுள்ள பொருள்களைக் கிடைபொருள், கிளர்பொருள் என அறிவியல் உலகம் பகுத்துக் காண்கிறது.
உயிர் உள்ள பொருளை அறிவியல் கிளர்பொருள் Organism என்கிறது.
இது தூண்டினால் துலங்கும் response to stimuli.
இனப்பெருக்கம் செய்யும் reproduce.
வளர்ந்து மறையும் grow and develope.
தனித்துவம் கொள்ளும் Homeostasis.
இதனைத் தமிழர் மால் என்றனர். மால் என்றால் ஆசை. எல்லா உயிருக்கும் ஆசை உண்டு. பிற்காலத்தில் இதனைச் சத்தி என்றனர். சத்துள்ள பொருள் சத்தி. உடலில் சத்து இருந்தால் இயங்கும். இயங்குவது சக்தி.
உயிர் இல்லாமல் சும்மா கிடக்கும் பொருளைக் கிடைபொருள் Inorganism என்கிறோம். இதுதான் மெய். இதனைத் தமிழர் சிவம் என்றனர்.
விலங்கு, செடி, காளான், வைகல் என்பன உயிரின வகைகள். (such as animal, plant, fungus, or micro-organism), virus)
3. டாக்டர் ஹமீத்கான் கருவியலைப் பற்றியும் உயிரைப் பற்றியும் கூறும் தகவலைப் பார்ப்போம்.
நாத்திகத்தைத் தகர்க்கும் கருவியல் கண்டுபிடிப்பு:
பேரண்டத்திற்கு ஒரு ஆரம்பம் இருந்துள்ளது என்பதை சென்ற நூற்றாண்டு வரை அறிவியல் உலகம் எவ்வாறு அறியாமல் இருந்ததோ அவ்வாறே கரு வளர்ச்சி தொடர்பான அறிவியலிலும் போதிய விபரங்களை அறிவியலாளர்கள் அறிந்திருக்கவில்லை. இதன் காரணமாக நாத்திக விளக்கத்தில் ஏதோ நியாயம் இருப்பது போன்று மத நம்பிக்கையற்றவரிடம் ஒரு பிரம்மையை நாத்திகத்தால் ஏற்படுத்தி இருக்க முடியும்.
ஆனால் சென்ற நூற்றாண்டின் இறுதியில் கருவியல் துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் கருவுற்ற முட்டையானது உயிருள்ளதன்று. அது உயிரற்ற பிண்டம் என்ற உண்மையை வெளிப்படுத்தி நாத்திகச் சித்தாந்தத்தைத் தகர்க்கும் மற்றொரு அறிவியல் உண்மையாக வெளிப்பட்டது.
உலகின் முதலாவது சோதனைக் குழாய் குழந்தை பிறந்த கதை பெரும்பாலோர் மறந்திருக்க மாட்டார்கள். ஆயினும் மூன்று வருடம் கழித்து அவளுக்கு ஒரு சகோதரி பிறந்த வரலாறு அதிகமானோர் அறியவில்லை எனத் தோன்றுகிறது. அது ஒரு சுவாரசியமான வரலாறு.
முதல் சோதனைக் குழாய் குழந்தையைப் பெற்றெடுத்த இங்கிலாந்து தேசத்து பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ‘ப்ரவ்ன்’ தம்பதியினருக்கு மூன்று வருடங்கள் கழித்து மற்றொரு குழந்தை வேண்டும் என ஆசை பிறக்கவே அவர்கள் முதலில் அணுகிய மருத்துவக் கழகத்தை மீண்டும் அணுகி தங்களது ஆசையைத் தெரிவித்தனர்.
அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட விஞ்ஞானிகள் அவர்களிடம் மீண்டும் விந்தணுவையும் கரு முட்டையையும் எடுக்காமலேயே ‘ப்ரவுன்’ தம்பதியரின் இரண்டாவது குழந்தையைச் சோதனைக் குழாயில் நட்டு வளர்த்து பிறகு திருமதி ப்ரவுனின் கருவறைக்கு மாற்றி மற்றொரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும்படிச் செய்தார்கள்.
விந்தனுவும் கரு முட்டையும் எடுக்காமல் குழந்தையை உருவாக்க எப்படிச் சாத்தியமாயிற்று? இக்கதையை எடுத்துக் கூறி அதற்கு விளக்கம் தரும் இந்தியரான டாக்டர் ஹமீத்கான் (இவர் இலண்டன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவரும் அமெரிக்காவின் அறிவியல் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் இருப்பவர்) ப்ரவுன் தம்பதியினர் முதல் குழந்தைக்காக மருத்துவ உதவி நாடியபோதே அவர்களிடமிருந்து விந்தணு மற்றும் கரு முட்டைகளை எடுத்து அவைகளை இணையச் செய்து கருவுற்ற முட்டைகளாக ஆக்கி வைத்திருந்தவைகளில் சில மிச்சம் இருந்ததாகவும் அவற்றுள் ஒன்றை எடுத்தே இரண்டாவது குழந்தையை உருவாக்கியதாகவும் கூறுகிறார்.
இங்கு இயல்பாக எழும் கேள்வி உலகில் உள்ள எந்த உயிரையாவது இவ்வளவு காலம் இறந்து போகாமல் பதப்படுத்தி வைக்க முடியுமா? என்பதாகும்.
இந்த நிகழ்ச்சி கருவுற்ற முட்டை மக்கள் நினைப்பது போன்று உயிருள்ள பொருள் இல்லை என்றும் அது உயிரற்ற பொருளே என்றும் காட்டுவதாகக் கூறுகிறார் டாக்டர் ஹமீத் கான்.
கருவுற்ற முட்டை உயிரற்றது என்பதை நிரூபிக்கக் கூடிய சோதனை ஒன்றையும் அவர் கூறுகிறார். ஒரு புழுவையும் அப்புழுவின் கருவுற்ற முட்டையையும் தனித் தனியாக வேறு வேறு குழாயில் வைத்து அவைகளை மைனஸ் எழுபது டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலையில் வைத்திருந்து பிறகு சிறிது நேரம் கழித்துப் புழுவை எடுத்துப் பார்த்தால் அப்புழு இறந்து போயிருக்கும். ஆயினும் அதன் கருவுற்ற முட்டையை எவ்வளவு நாள் வேண்டுமானாலும் வைத்திருந்து அதன் பிறகு அதிலிருந்து உயிருள்ள புழுவை உருவாக்க முடியும் எனக் கூறுகிறார் டாக்டர் ஹமீத்கான்.
டாக்டர் ஹமீத்கான் கூறும் இந்த விளக்கத்திலிருந்து உயிரினங்களைத் தோற்றுவிக்கும் அவைகளின் கருவுற்ற முட்டை உயிரற்ற பிண்டமே என்பதை தெளிவாக விளங்குகிறோம். கருவில் வளரும் குழந்தையின் உயிர் தொடக்கத்திலேயே அதனிடம் இருக்கும் ஒன்றில்லை என்பதும் கருவறையில் அது வளரும்போது மற்றொரு விதத்தில் பெற்றுக் கொள்வதே என்பதும் தெளிவாகும்.
இதை இன்னமும் விளங்கிக் கொள்ளச் சிரமமப்படும் நாத்திக நண்பர்கள் மிகக் குறைந்தபட்சம் ப்ரவுன் தம்பதியினரின் இரண்டாவது குழந்தைக்கு உயிர் வந்ததைப் பற்றி மட்டுமாவது சற்று சிந்திக்க வேண்டும்.
உலகிலுள்ள எந்த உயிரினத்தையும் சற்றைக்கெல்லாம் கொன்றுவிடும் மைனஸ் எழுபது டிகிரி சென்டிகிரேடு எனும் தாழ்ந்த வெப்பநிலையில் மூன்று வருடம் உயிரற்ற பிண்டமாக தங்கியிருந்து அதன் பிறகு தோற்றமெடுக்கத் தொடங்கிய அக் குழந்தைக்கு உயிர் கிடைத்ததா இல்லையா என்பதையும் உயிர் கிடைத்தது என்றால் அந்த உயிர் எப்படி வந்தது என்பதையும் பற்றி மட்டுமாவது காய்தல் உவத்தல் இன்றி சிந்திப்பது மிகவும் நன்று. சிந்திப்பார்களா!
“நீங்கள் எப்படி இறைவனை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.” (குர்ஆன் 2:28)
source: http://suvanappiriyan.blogspot.in/2012/02/blog-post_12.html