மனைவியின் “புலம்பல்கள்”
1. வீட்டுல நான் என்ன கரடியா கத்துனாலும், நீ பாட்டுக்கு கத்திகிட்டேயிரு, எனக்குத் தோணுனதைத்தான் நான் செய்வேன்னு செய்யற நீங்க, உங்க அம்மா, அண்ணன் அல்லது அக்கா முன்னாடி மட்டும், அவங்க எதாவது செய்யச்சொல்லும்போது “என்னம்மா, அப்படியே செஞ்சுருவோமா, சரிதானே”ன்னு அவங்க முன்னாடியே என்கிட்ட கேட்டு ஏன் மானத்த வாங்கறீங்க?
2. அது எப்படி தினமும் காலையில கரெக்டா நீங்க ஷூ போட்டதுக்கு அப்புறம்தான் மொபைல்/ கார்ச்சாவி எடுக்கலைன்னு உங்களுக்கு ஞாபகம் வருது..
3. மொபைலையோ, லேப்டாப்பையோ வெளியே வைக்காதீங்கன்னு எவ்வளவு சொன்னாலும் கேக்காம, டேபிள்ல போட்டுட்டு அத நம்ம பிள்ளைங்க தொட்டுப் பாத்தாலே, பங்காளிச் சண்டை போடறீங்க…இதுவே உங்க நண்பர்கள்/ உங்க உறவினர் பிள்ளைங்களோ எடுத்து அது உயிரே போற அளவு நோண்டினாலும், சிரிச்சுகிட்டே இருக்கறதோட, “நல்ல இண்டெலிஜண்டா இருக்கானே உங்க பிள்ளை”ன்னு பாராட்டி சர்டிஃபிகேட் வேற கொடுக்கிறீங்க?
4. உங்க ஆஃபிஸ்ல நீங்க இல்லாம ஒரு வேலையும் நடக்காது; உங்க ஆஃபீஸே உங்கள நம்பித்தான் இருக்குங்கிற மாதிரி அப்படி ஒரு பில்ட்-அப் கொடுப்பீங்க. ஆனா, ஒரு மாசம் லீவுல ஊருக்குப் போகும்போது ஒருதரம் கூட ஆஃபிஸ் மேட்டராவோ, அட நீங்க நல்லாருக்கீங்களான்னு கேட்டு கூட ஒருத்தரும் ஒரு மெயில் அனுப்பவோ, ஃபோனோ பண்றதில்லையே ஏங்க?
5. ஒண்ணாங்கிளாஸ் படிக்கிற நம்ம சின்னவனுக்கு ஒரு சிம்பிளான 1+1 கூட்டல் கணக்கு சொல்லிக் கொடுக்கச் சொன்னா, அதுக்கு அல்ஜீப்ரா, கால்குலஸ், பிதோகிரஸ் தியரத்தையெல்லாம் இழுத்து, கடைசியில அவனுக்குத் தெரிஞ்ச ஒண்ணு, ரெண்டு, மூணைக் கூட மறக்க வச்சிர்றீங்களே, எப்படிங்க அது?
6. நம்ம வீட்டு ஏரியாவில பேங்க் இருக்கறதால பணம் கொடுத்து கட்டச் சொன்ன என் சொந்தக்காரரை என்னவெல்லாம் சொன்னீங்க என்கிட்ட! ஆனா, உங்க நண்பர் அவரோடபக்கத்து பில்டிங்க்ல இருக்க E.B.யில கரண்ட் பில் கட்ட உங்களக் கூப்பிட்டாகூட இதோ வந்துட்டேன்டான்னு ஓடிப் போறீங்களே எப்படிங்க?
7. சமைக்கும்போது கிச்சன்ல வந்து நின்னு, அதப் போடு, இத ஊத்துன்னு ஐடியா கொடுத்து, கொஞ்சம் சுமாராவாவது வந்துருக்கக்கூடியதை வாயிலயே வைக்கமுடியாம ஆக்குறீங்களே ஏங்க?
8. ஏதாவது ஒரு விஷயத்தைப் பத்தி எங்கப்பாகிட்ட பேசி, கஷ்டப்பட்டு என் வழிக்கு கொண்டு வந்துகிட்டு இருக்கும்போது, மேட்டர் என்னன்னே தெரியாம, நடுவுல பூந்து உங்கப்பா சொல்றதுதான் சரின்னு சொல்லி, “மாப்பிள்ளையே சொல்லிட்டாரும்மா”ன்னு எனக்கெதிரா எங்கப்பாவையே திருப்பி விட்டுர்றீங்களே எப்படிங்க அது?
9. இன்னிக்கு ஸ்டாக் கிளியரன்ஸ், அப்பாடா, சமைக்க வேண்டாம்னு சந்தோஷமா சொன்னதுக்கப்புறமும், அன்னைக்குன்னு நேரங்காலம் தெரியாம குடும்பத்தோட வந்து நிக்கிற உங்க ஃப்ரண்டை சாப்பிடாம போகக்கூடாதுன்னு பிடிச்சு வைப்பீங்களே, அது ஏங்க?
10. இவ்வளவும் நீங்க தெரிஞ்சே செய்றீங்கன்னு தெரிஞ்சும் உங்க மேல என்னை பைத்தியமா இருக்க வச்சுருக்கீங்களே, அதுதான் எப்படின்னு கொஞ்சம்கூட புரியவேயில்லைங்க!!
இது தொடர் பதிவு இல்லதான்; இருந்தாலும், தோழிகள் அவங்கவங்க ரங்ஸ் மேலே பாடவேண்டிய பாட்டுக்கள் இருந்துதுன்னா தொடர்ந்து பாடுங்க!!
பெருநாளை முன்னிட்டு கடை 3 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. பின்னூட்டம் போட்டு வைங்க, வந்து கண்டுக்கிறேன். வீட்டுலயும் ரொம்ப பிஸியா இருக்கும். 3 நாள்ல என்னை மறந்துறாதீங்க.(மறந்தா என்ன, சோனியா காந்தியை ஏன் பிடிக்கும்னு ஒரு பதிவு போட்டா எல்லாரும் ஓடி வந்துற மாட்டீங்க?)
எல்லாருக்கும் பெருநாள்/ விடுமுறை வாழ்த்துக்கள்!!(பெருநாள் வெள்ளிக்கிழமை வந்ததால, ரெண்டு நாள் லீவு போச்சு!!)
source: http://hussainamma.blogspot.in/