உடலுறவு – தம்பதியர் இருவருக்குமான உரிமை
(இஸ்லாமும் பாலியலும் 03)
பாலியல் திருப்தி என்பது கணவன், மனைவி இருவருக்கும் உள்ள உரிமை.
இது கணவனுக்கு மட்டுமே உள்ளது என நினைத்துக்கொள்வது தவறாகும்.
கணவனின் அளவுக்கு மனைவிக்கும் தன் பாலியல் தேவைகளின் நிறைவை எதிர்பார்க்கும் உரிமை உண்டு.
துல்லியமாக சொல்ல வெண்டுமானால், உடலுறவு என்பது தம்பதியர் இருவருக்குமான உரிமையாகும்.
ஒருவர் தம் துணைவியரின் பாலியல் பசியைத் தணிப்பது உடலுறவின், இன்னும் சொல்லப்போனால் மணவாழ்விற்கும்கூட சட்ட ஏற்புக்குறிய வழிமுறையாகும்.
இனி, உடலுறவில் கணவனின் உரிமை என்ன? மனைவியின் உரிமை என்ன? என்பதைப் பார்ப்போம்.
கணவனின் உரிமை :
ஓர் ஆண் உடலுறவுக்கு விரும்பும்போதெல்லாம் அவர் தம் மனைவியுடன் உடலுறவுகொள்ள உரிமை பெற்றுள்ளார். அவருக்காக தன்னை தயாராக வைத்துக்கொள்வது மனைவியின் மார்க்கக்கடமையில் ஒன்றாகும். நியாயமான காரணமின்றி இதில் தவறவிடுவது பாவச்செயலாகும்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்;
“ஓர் ஆண் தன் மனைவியைத் தன் படுக்கைக்கு அழைத்து அவள் வர மறுத்துவிட்டால், அவர் கோபமான நிலையில் தூங்குவார் எனில், காலைப்பொழுது வரை வானவார்கள் அவளை சபிக்கின்றனர். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: புகாரி, 3065 முஸ்லிம் 1436) இங்கு முஸ்லிமில் உள்ள சொற்களே இடம்பெற்றுள்ளன.
திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மற்றோர் ஹதீஸ்; “எவன் கைகளில் என் ஆத்மா உள்ளதோ அவன் மீது ஆணையாக, ஒருவர் தன் மனைவியைத் தன் படுக்கையின்பால் அழைத்து அவள் மறுத்துவிட்டால், அவளுடைய கணவன் அவள் மீது திருப்தியுறும்வரை அல்லாஹ் அவள் மீது கோபம் கொண்டிருக்கிறான். (நூல்: முஸ்லிம் 1436)
இதுகுறித்து இன்னுமோர் நபிமொழி; “ஓர் ஆண் தன் மனைவியைப் பாலியல் தேவை நிறைவேற்றத்துக்காக அழைத்தால், அவள் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தாலும் (அதை விட்டுவிட்டு) வரவேண்டும். (நூல்: திர்மிதீ 1160)
இவையும் இவை போன்ற பிற நபிமொழிகளில் இருந்தும் உடலுறவுக்கான கணவனின் கோருதலுக்கு மனைவி பணிவதன் முக்கியத்துவம் தெள்ளத்தெளிவாக விளங்குகிறது. இயல்புநிலையில், மனைவி கணவனின் அழைப்பை மறுப்பது கொடிய பாவமாகும். அதைவிட, அவளின் மறுப்பால் கணவன் விலக்கப்பட்ட செயலை (அதாவது வேறொரு பெண்ணை நாடி விபச்சாரம்) செய்துவிட்டால் அது மாபெரும் பாவமாகிவிடும்.
எனவே தகுந்த காரணமின்றி மனைவி தன் கணவனுக்கு உடலுறவை மறுப்பது விலக்கப்பட்ட செயல் (ஹராம்) ஆகும் என்பதை மேற்காணும் ஹதீஸ்களின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.
இந்த கருத்தின் அடிப்படையில்தான், பெண்கள் நஃபிலான நோன்பு வைப்பதற்குமுன் தங்கள் கணவன்மார்களிடம் அனுமதி கேட்குமாறு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பணித்தார்கள். ஏனெனில், அவள் நோன்பு நோற்றிருக்கும்போது கணவன் தன் பாலியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஆசைப்படலாம் அல்லவா?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; “ஒரு பெண், தன்னுடைய கணவன் அவளுடன் இருக்கும்போது அவருடைய அனுமதியின்றி (நஃபிலான) நோன்பு நோர்க்கக்கூடாது. (நூல்: புகாரி 4896)
ஆண்கள் கவனத்தில் கொள்ளவேன்டிய இரு விஷயங்கள் :
முதலாவதாக, உடலுறவு கோரும் கணவனின் உரிமை என்பதற்குப் பொருள், அவர் தம் இச்சையைத் தணித்துக்கொள்ளத் தம் மனைவியை வன்செயலால் கட்டாயப்படுத்தலாம் என்பதல்ல. கணவன் “கோப நிலையில் உறங்குவது”, “அதிருப்தி கொள்வது” பற்றி ஹதீஸ்களில் (நபிமொழியில்) கூறப்படுவதிலிருந்து, கணவன் அவளுடன் பலவந்தமாக இணைவதிலிருந்தும், அவளைப் புண்படுத்துவதிலிருந்தும் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் எனும் விஷயம் தெளிவுபடுகிறது.
அதுபோன்ற செயல் நியாயமாக இருப்பின், நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதை கணவனுக்கு அனுமதித்திருப்பார்கள். இஸ்லாத்தின் கொள்கைகளில் பொதுவான சட்டம்; மார்க்க விஷயத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை. இதுதான் சட்டம் என்று எடுத்துச் சொல்வதோடு நிறுத்திக்கொள்கிறது. அதை பின்பற்றுதல் அல்லது பின்பற்றாமல் இருத்தல் என்பதை அவரவர்களின் விருப்பத்திற்கே விட்டுவிடுகிறது. அதே வேளையில் சட்டத்தைப் பின்பற்றும்போது நற்கூலியும், சட்டத்தை மறுக்கும்போது தண்டனையும் நிச்சயம் உண்டு என்பதையும் இஸ்லாம் தெளிவாக எடுத்துச்சொல்கிறது.
இரண்டாவதாக, மனைவி தன்னை தயார்நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது சாதாரண இயல்புநிலைகளில் பொருந்தும். இஸ்லாமியச் சட்டங்கள் (ஷரீஆ) விதித்த இடர்களோ, தகுந்த காரணமோ இருக்கும் நிலையில் அது பொருந்தாது. மனைவி தன் சுயவுரிமைகளை விட்டுத்தர வேண்டியநிலை இல்லாதவரை, அவள் தன் கணவனுக்குப் பணிய கடமைப்பட்டிருக்கிறாள். எனவே, இதுபற்றிய பல்வேறு ஹதீஸ்கள், தங்கள் கணவன்மார்களுக்கு எதிராக உடலுறவை ஆயுதமாகப் பயன்படுத்தும் பெண்களுக்கே ஓர் எச்சரிக்கையாகும்.
எனினும் மாதவிடாயில் இருந்தால்
அல்லது பேறுகால ரத்தப்போக்கு கொண்டிருந்தால்
அல்லது நோயுற்றிருந்தால்
அல்லது உடல்ரீதியாக உடலுறவு கொள்ள இயலாமல் இருந்தால்
அல்லது களைப்புற்று, உணர்வெழுச்சி குன்றியிருந்தால்
அல்லது உடலுறவுச் செயல்பாடு அவளின் நலனைப் பாதிக்கக்கூடியதாய் இருந்தால்,
தன் கணவனின் உடலுறவுக்கோருதலுக்கு அவள் இணங்கவேண்டிய கட்டாயம் இல்லை. மாறாக, அவள் உடலுறவுக்கொள்ள இயலாமல் இருப்பதை கணவன் புரிந்துகொண்டு அவள்மீது அனுதாபம் காட்ட வேண்டும். எனினும், வெறுமனே “அதற்கான மனநிலையும் விருப்பமும் இல்லை” என்பது பெண்களின் நியாயப்பாடாக அமையாது.
அல்லாஹ் கூறுகின்றான்;
“எந்தவொரு ஆன்மாவின் மீதும் அது தாங்கவியலாத் சுமையை அல்லாஹ் சுமத்துவதில்லை.” (அல்குர்ஆன் 2:286)
மனைவி கடும் நோயுற்று, உடலுறவுகொள்ள சக்திபெறாத நிலையில் இருப்பதைப் பொருட்படுத்தாது, தன் பாலியல் தேவைகளைப் பூர்த்திசெய்யுமாறு கணவன் மனைவியிடம் கோரும் பல உதாரணங்களை நாம் காண்கிறோம். சிலர், மணவிலக்கு செய்துவிடுவதாகக்கூட மனைவிமார்களை மிரட்டுகின்றனர். தங்களின் இந்த நடத்தைக்கு மேற்கூறிய ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டுகின்றனர்! மனைவி உடலுறவில் ஈடுபடும் நிலையில் இல்லாது, அதற்காக ஓர் உண்மையான மற்றும் இஸ்லாமிய ரீதியாகத் தகுந்த காரணம் இருக்கும்பட்சத்தில், கணவன் மனைவியை நிர்பந்தித்தால், அவர் பாவம் செய்தவராகிறார். பெண்களும் மனிதப் பிறவிகளே; விரும்பும்போதெல்லாம் “ஆன்”, ஆஃப்” செய்துகொள்ள அவள் இயந்ந்திரம் அல்ல என்பதையும் முஸ்லிம் கணவன்மார்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
அறுதியாக, இந்த விவகாரங்களை மிகச் சிறந்தமுரையில் தீர்ப்பதற்கான வழிகளும் உண்டு. அவை; ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளுதல், மதிப்பு மரியாதை, அன்பு, பண்பு, பரிவு, துணைவருக்குத் தன்னைவிட முன்னிடம் அளிப்பது ஆகியவையே.
“நீங்கள் உங்களுக்கு விரும்புவதையே மற்றவர்களுக்கும் விரும்பாதவரை (உன்மையான) இறை நம்பிக்கையாளராக முடியாது” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதை (நூல்: முஸ்லிம் 45) நினைவில் கொள்ள வேண்டும். இந்த கருத்தாக்கம் தாம்பத்யத்தில் மென்மேலும் கூடுதலான முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
மனைவியின் உரிமைகள் :
ஆணைப்போல், பெண்ணுக்கும் பாலியல் தேவைகள் உண்டு. எனினும், ஆணைப்போலல்லாமல், பெண் தன் பாலியல் வேட்கையின்மீது கூடுதல் கட்டுப்பாடு கொண்டவள். இந்த வித்தியாசம், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நிலவும் உடல், உணர்வெழுச்சி மற்றும் உள்ளூர இயல்புணர்ச்சி ரீதியான வேறுபாடுகளினால் தோன்றுகிறது.
பொதுவாக, பெண் தன் பாலியல் தேவைகளை நிறைவேற்றும்படி கேட்கமாட்டாள். மாறாக, அவளுக்கு இச்சை ஏற்படும்போது, தன் கணவனை வசீகரிப்பதற்காகு பல்வேறு உத்திகளைக் கைய்யாளுவள். தன்னை அலங்கரித்துக்கொள்ளுதல், ஆசையைத்தூண்டும் வகையில் கணவனிடம் பேசுதல், ஏக்கத்துடன் கணவரைப்பார்த்தல் முதலியன. மாதவிடாய் சுழற்சி முடிந்ததும் பெண்ணின் பாலுறவு விருப்பம் மிகுந்திருக்கும். என்பது மருத்துவ வல்லுநர்களின் கருத்து. புரிந்துகொள்ளும் கணவன் இதை உணர்ந்து, தன் மனைவியின் சமிக்ஞைகளை உணர்ந்து செயல்படுவான்.
கணவன், தன் மனைவியின் பாலியல் தேவைகளை நிறைவேற்றுவது மார்க்கக்கடமையாகும். ஒரு தகுந்த காரணமோ அனுமதியோ இன்றி, மனைவியின் இந்த உரிமையை கணவன் நிறைவேற்றத் தவறினால் அவர் பாவம் செய்தவராவார். எனவேதான் கணவன் தன் மனைவியுடன் சிறிது காலத்திற்கு ஒருமுறை (அடிக்கடி) உடலுறவு கொள்ள வேண்டும் எனப் பல சட்டவியலார்கள் கருதுகின்றனர்.
கணவன் தன் மனைவியின் பாலியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அவளுடன் எத்தனை நாளுக்கொருமுறை உடலுறவு கொள்வது என்பது குறித்து அறிஞர்களிடையே கருத்துவேற்பாடு உள்ளது.
இமாம் அபூ ஹாமித் அல் கஸ்ஸாலி அவர்கள் கருத்தில், ஒரு மனிதர் தன் மனைவியுடன் நான்கு இரவுகளுக்கு ஒருமுறையாவது உடலுறவு கொள்ளவது மார்க்கக்கடமை என்று கூறப்படுகிறது. இந்தக் கண்ணோட்டத்திற்கு பின்வரும் சம்பவம் ஆதாரமாக அமைகிறது.
கதாவும் ஷஅபியும் அரிவிப்பதாக அப்துர் ரஸ்ஸாக் தம்முடைய அல்-முஸாஃபில் கூறுகிறார்;
“ஒரு பெண்மணி ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து, “என் கணவர் இரவில் நின்று வணங்குகிறார், பகலில் நோன்பு நோற்கிறார்” என்றாள். ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள், “நீர் உம் கணவரை மிகச் சிறப்பாகப் போற்றியிருக்கிறாய்” என்றார்கள். அதற்கு கஅப் இப்னு சவ்வார் அவர்கள், ”அவள் (அசலில்) புகார் செய்கிறாள்” என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கூறினார். “எப்படி?” என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு கேட்டார்கள்.
“அவள் தன் கணவரிடமிருந்து திருமணப் பங்கை பெறுவதில்லை எனக் கோருகிறாள் (அதாவது தன்னுடைய உரிமைகளை அவளது கணவன் நிறைவேற்றுவதில்லை)” என்றார். அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள், “இந்த அளவுக்கு நீர் புரிந்திருந்தால் நீரே அவளுக்கு தீர்ப்பு கூறவும்” என்றார்கள். அப்போது அவர் (கஅப் இப்னு சவ்வார் கூறினார்; “அமீருல் முஃமினீன் அவர்களே! நான்கு மனைவிகளைத் திருமணம் செய்ய அல்லாஹ் அனுமதித்துள்ளான். எனவே நான்கு பகல்களில் ஒரு பகலும், நான்கு இரவுகளில் ஓர் இரவும் அவளுக்கு உரிமையுண்டு..” (நூல்: ஸுயூத்தி, தாரிக் அல்-குல்ஃபா – பக்கம் 161)
இதன் அடிப்படையில், நான்கு இரவுகளில் ஒருமுறை ஒரு மனைதர் தன் மனைவியின் பாலுணர்வுத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது இமாம் அபூ ஹாமித் அல் கஸ்ஸாலி அவர்களின் கருத்து. ஏனெனில், அவருக்கு நான்கு மனைவிகள் இருப்பின், அவர் மற்ற மூன்று இரவுகளை தன்னுடைய மற்ற மனைவிகளுடன் கழிப்பதற்கு அனுமதி உண்டு.
இமாம் இப்னு ஹஸமின் கருத்தில், ஒரு மனிதர் மாதத்தில் ஒருமுறையேனும் தன் மனைவியுடன் படுக்கையில் கூடுவது மார்க்கக்கடமை. அண்ணாரின் கூற்றுப்படி; மாதவிடாய்களுக்கு இடையே ஒருமுறையாவது மனைவியுடன் உடலுறவு கொள்வது கடமை. இல்லாவிட்டால், அவர் பாவியாகிவிடுவார். இதற்கு அவர்கள் எடுக்கும் ஆதாரம்; திருமறையின் வாசகம். “எனினும், அவர்கள் தூய்மையடைந்துவிட்டால், அவர்களை அல்லாஹ் கட்டளையிட்டுள்ள இடத்திலிருந்து அணுகுங்கள்: என்பதாகும். (நூல்: அல்-முஹல்லா, பக்கம் 1672)
“அவர்களை அணுகுங்கள்” என்ற அல்லாஹ்வின் சொற்களிலிருந்து இப்னு ஹஸம் தமது கருத்தைப் பெற்று, இது கடமையைக் குறிக்கும் ஒரு கட்டளை என்கிறார்கள். ஆனால் அறிஞர்கள் பலர் இதை, மாதவிடாய்க்குப்பின் உடலுறவை அனுமதிக்கும் வாசகமாகாவே கருதுகின்றனர்.
அறிஞர்கள் சிலரின் கருத்துப்படி, ஒரு மனிதர் தன் மனைவியுடன் நான்கு மாதங்களில் ஒருமுறையேனும் கட்டாயம் உடலுறவு கொள்ளவேண்டும், இல்லாவிட்டால், அவர் பாவியாகிவிடுவார். இவர்கள் தங்களின் நிலைப்பாட்டிற்குப் பின்வரும் சம்பவத்தை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தீர்ப்பு :
இப்னு ஜரீர் அறிவிக்கிறார்; “நான் நம்பும் ஒருவர் இந்தத் தகவலை என்னிடம் கூறினார். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ரோந்து வரும்பொழுது, ஒரு பெண் இவ்வாறு கூறுவதை (கவிதை பாடுவதை) செவியுற்றார்கள்.
“இரவு நீண்டு செல்கிறதே! இருள் சூழ்ந்துள்ளதே!
(ஆனால்) என்னுடன் நெருங்கியிருக்க தோழன் இல்லையே.
என் உறக்கம் தொலைந்ததே!
தனக்கு இணையில்லாத அல்லாஹ்வின் அச்சம் மட்டும் இல்லையெனில் இந்தப் படுக்கையின் இருபக்கங்கள் அங்குமிங்கும் நகர்ந்திருக்குமே!” (அதாவது இறையச்சம் மட்டும் அப்பெண்மணியை தடுத்திருக்காவிட்டால் அவள் வழிதவறிப்போயிருப்பாள் என்பதைக் கூறுகின்றது கவிதையின் இறுதி வாசகம்).
உமர் ரளியல்லாஹு அன்ஹு கேட்டார்கள், “உமக்கு என்ன நேர்ந்தது?”
அதற்கு அவள்: “நீங்கள் தான் என் கணவரை சில மாதங்களுக்குமுன் போருக்கு அனுப்பிவிட்டீர்களே! இங்கே நான் அவருக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றேன்” என்றாள்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு கேட்டார்கள்; “உமக்கு தவறிழைக்கும் எண்ணம் இருக்கிறதா?”
அதற்கு அவள்; “அல்லாஹ்விடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்” என்றாள். உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்; “அப்படியென்றால் நீர் உம்மைக் கட்டுப்படுத்திக்கொள். அவருக்கு (கணவருக்கு) வெறும் ஒரு செய்தியை அனுப்பினாலே போதும். விஷயம் தீர்ந்துவிடும்” என்றார்கள்.
பின்னர் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரை – அப்பெண்ணின் கணவரை (திரும்ப வருமாறு) கட்டளையிட்டு செய்தி அனுப்பினார்கள். அதன்பின் தன் மகள் ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹாவிடம் சென்று கேட்டார்கள்; “என் விஷயம் சம்பந்தப்பட்ட ஒன்றை நான் உன்னிடம் கேட்க விரும்புகின்றேன். அதற்கு தீர்வு கூறவும். ஒரு பெண் தன் கணவன் இன்றி எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்க முடியும்?”
அவர் (ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா) வெட்கத்தில் தன் தலையைத் தாழ்த்திக்கொண்டார்கள். “நிச்சயமாக அல்லாஹ் உண்மையானா விஷயத்தில் வெட்கம் கொள்வதில்லை” என்றார்கள் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆகையால், அவர்கள் (ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா) தன் கையால் சைகை காட்டினார்கள் – மூன்று மாதங்கள் அல்லது நான்கு மாதங்கள் என. எனவே, நான்கு மாதங்களுக்கு மேலாக (எவரும்) ராணுவப் பணியில் அமர்த்தப்படக் கூடாது என உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்கள்.” (நூல்: தாரீஃக் அல்-குல்ஃபா. பக்கம் 161,162)
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இக்கேள்வியை தம் மனைவியிடம் கேட்காமல், தம் மகள் ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கேட்டுள்ளார்கள் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். இதற்கான காரணத்தை மவ்லானா அஷ்ரஃப் அலீ தானவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்; “உமர் ரளியல்லாஹு அன்ஹு தம் மகளிடமிருந்து நேரடியான விடையை எதிர்பார்த்தார்கள். தம் மனைவியைப் பொறுத்தவ்ரை, கேட்பது அவருடைய கணவன் என்பதால் மனைவியின் விடை பாரபட்சமாக அமையக்கூடிய வாய்ப்புண்டு என கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு எண்ணினார்கள். (நூல்: அல்-இஃபாதாத் அல்-கவ்மிய்யா 2:300)
எனினும், கணவனுக்காகான உடலுறவு உரிமை போலவே, தன் மனைவியின் பாலுறவுத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் நிபந்தனை உண்டு,.
அவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் அளவிற்கு உடல் வலிமை பெற்றிருக்க வேண்டும்.
கணவன் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தால்,
அல்லது உடலுறவில் ஈடுபட இயலாத அளவு பலவீனமாக இருந்தால்,
அல்லது தன் மனைவியுடன் உடலுறவு கொள்வதன் விளைவாக தாங்கவியலாத பலவீனம் ஏற்படுமானால்,
அவர் தம் மனைவியின் பாலுறவுத் தேவைகளை நிறைவேற்றவேண்டிய அவசியமில்லை. அதனால் பாவியாகவுமாட்டார்.`
அதே சமயம் இன்று…
வெளிநாடு செல்லும் பலரது இல்லத்தரசிகளின் நிலை எவ்வாறுள்ளது என்பதற்கு ஒரு சின்ன சாம்ப்பிள்…
தமிழகத்தின் கீழுள்ள ஒரு கடல்கரையுள்ள ஊரிலிருந்து ஒரு சகோதரி. (இவர் கணவர் துபாயில் பணிபுரிபவர்) அனுப்பியிருந்த கடிதத்தில்….
வெளிநாட்டில் பணி என்கிற மாயக்கவர்ச்சியில் மயங்கி, பெற்றோர் மற்றும் உற்றாரால் கணவன் திணிக்கப்பட பேருக்குத் திருமணம் முடித்துக்கொண்டு வாழும் அவர் தன் ஆற்றமையை கடிதத்தில் வரைந்துள்ளார். “ஏகப்பட்ட பணம் இருக்கிறது; ம்… என்றாலுக்கூட தாங்க ஓடிவரும் உறவினர்கள் இருக்கிறார்கள். பங்களா இருக்கிறது, கார் இருக்கிறது. கல்யாணமாகி ஒரு வாரத்தில் அவர் துபாய் போய்விட்டார். அந்த ஒரு வாரத்தில்கூட விருந்து, உறவுக்காரர்கள் வீட்டுக்கு போவதுமாக நிற்க நேரமில்லாமல் சுற்றிக்கொண்டே இருந்தோம்.
இன்று இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. நான் தனிமையில் தவிக்கின்றேன். எனது கணவர் என்று காட்டினார்களே அந்த நபரின் முகத்தைக்கூட நினைவில் வைத்துக்கொள்வதற்கு அவரின் சில புகைப்படங்கள்தான் உதவுகிறது. என்ன கேலி கூத்து இது? பொம்மை விளையாட்டைவிட மிகக்கேவலமாக இருக்கிறதே என்று அவமானமாக இருக்கிறது. இங்கு எல்லாமே வெறுத்துவிட்டது. பணம் வேண்டாம். அந்தஸ்தும் வேண்டாம். ஆடம்பரம் வேண்டாம். என்னை ஒரு பெண்ணாய் – மனைவியாய் நேசிக்கும் ஆடவனுக்காக நான் ஏங்குகிறேன்” என்று கடிதத்தை முடித்திர்ருக்கிறார் அந்த சகோதரி என்று ஒரு பெண் மருத்துவர் தெரிவிக்கிறார். இதற்கு கணவன்மார்களின் பதில் என்ன?
இதுபோன்ற ஏக்கப்பெருமூச்சுகள் ஒன்றல்ல இரண்டல்ல, தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுக்க இந்த சூடான மூச்சு காற்றில் மிதந்துகொண்டுதான் இருக்கிறது. இது யார் குற்றம்? ஆண்கள் சிந்திக்க வேண்டாமா?
கட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழே உள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்