இஸ்ரேல் – ஈரான் மற்றும் குண்டு வெடிப்புகள்: சத்தியமான பொய்கள்!
செய்தி ஊடகங்களில் வரும் செய்தியை மட்டும் ஒருவர் அப்படியே நம்ப ஆரம்பித்து விட்டால் உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வித்தியாசத்தை யாராலும் கண்டு பிடிக்க முடியாது என்று சொல்லப்படுவதுண்டு.
அப்படி சொல்வது உண்மை தான் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பும் அதை தொடர்ந்து வரும் ஊடக செய்திகளும்.
பொதுவாக எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் அதை நடத்தியவர்கள் யார் என்பது தெரியவில்லையாயின் அதனால் பயனடைபவர்கள் யார் என்பதைக் கண்டு பிடித்தால், அது உண்மை குற்றவாளிகளை அடையாளம் காட்ட உதவலாம். டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பில் எல்லா ஊடகங்களும் ஈரானின் பங்களிப்பை நோக்கி மாத்திரமே கை நீட்டுகின்றன. சமீப மாதங்களில் ஈரான் அணுசக்தி விஞ்ஞானிகள் காந்த குண்டு கலாச்சாரத்தை பயன்படுத்தி இஸ்ரேலால் கொல்லப்பட்டது குறித்தோ தன்னுடைய அரசியல் எதிரிகளை எவ்வழிமுறையை பயன்படுத்தியாவது கொல்லும் இஸ்ரேல் குறித்து எவ்வித அலசலோ, கருத்தோ யூகங்களோ ஊடகங்களில் வெளிவராதது ஆச்சரியமே.
இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே நெடுங்காலமாய் இருந்து வரும் உறவை பிரிக்க அமெரிக்கா நீண்ட காலமாய் முயன்று வருகிறது. இந்தியாவில் பெருகி வரும் கச்சா எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்ய இந்தியா ஈரானை பெரிதும் நம்பியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் மிரட்டலை மீறி இந்தியா ஈரானுடன் தொடர்பு வைத்து கொண்டிருக்கும் நேரத்தில், குறிப்பாக தான் விற்கும் கச்சா எண்ணெய்க்கான தொகையை இந்திய ரூபாயில் வாங்க ஈரான் முதல் தடவையாக சம்மதித்திருக்கும் நிலையில் இத்தாக்குதல் நடந்திருப்பது நிச்சயமாக ஈரானுக்குப் பயனளிக்க கூடிய செய்தி அல்ல. எனவே இத்தாக்குதல் காரணமாக இந்தியா ஈரான் உறவு பாதிப்புக்குள்ளானால் யாருக்கு லாபம் எனும் இக்கோணத்திலிருந்தே இத்தாக்குதல் ஆராயப்பட வேண்டும்
நிச்சயமாக இத்தாக்குதலால் பயனடைய போவது இஸ்ரேல்தான் என்றாலும், இது ஊடகங்களில் விவாதிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதற்காக இஸ்ரேலியர்களே அவர்களின் காரில் குண்டு வைத்தார்கள் என்று சொல்வதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை, ஈரானியார்கள்தான் குண்டு வைத்தார்கள் என்று சொல்வதற்கு ஆதாரம் இல்லாதது போலவே. ஆனால் இப்படி ஒரு சம்பவத்துக்குத் தான் இஸ்ரேல் காத்து கொண்டிருந்தது என்பது, இச்சம்பவத்தை வைத்து இந்தியா ஈரான் உறவை பாதிப்படைய செய்ய இஸ்ரேல் மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலிருந்து நன்கு விளங்குகிறது.
ஈரானை ஒரு சண்டைக்கார நாடாகவும் தீவிரவாத செயல்களை பிற நாடுகளில் அரங்கேற்றும் போக்கிரி நாடாகவும் சித்தரிக்க இஸ்ரேல் படாத பாடு படுகிறது. ஆனால் உண்மை என்னவெனில் இஸ்ரேல்தான் ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராய் இருக்கிறது என்பது நடுநிலையான மேற்குலக பத்திரிகையாளர்களே ஒத்து கொள்ள கூடிய உண்மை. தாக்குதல் நடந்த ஒரு சில மணி நேரத்திலேயே இது ஈரானின் கைங்கர்யம் என்று இஸ்ரேல் பிரதமர் நேதான்யாஹூ எவ்வித ஆதாரமும் இல்லாமல் சொன்னார். இஸ்ரேல் பிரதமர் பகிரங்கமாக சுமத்திய குற்றச்சாற்றுக்கான எவ்வித ஆதாரமும் இதுவரை தரப்படாததை எந்த ஊடகமும் கேள்வி எழுப்பவில்லை. அதே சமயம், “இத்தாக்குதலுக்கும் எந்த ஒரு நாட்டுக்கும் தொடர்பிருப்பதற்கான ஆதாரம் இதுவரை இல்லை” என இந்தியா அறிவித்துள்ளது.
ஆச்சரியம்! இந்தியாவுக்குள் நடந்த ஒரு தாக்குதலுக்கு எந்த ஒரு வெளிநாட்டு சக்தியாவது காரணம் என்பதற்கான யாதொரு ஆதாரமும் இதுவரை இல்லை என இந்தியா அறிவித்திருக்கும் நிலையில், தாக்குதல் நடந்த செய்தி வெளியான நிமிடத்திலேயே அத்தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என இஸ்ரேல் பிரதமர் அறிவிக்கிறார் எனில், ஈரான்மீது இஸ்ரேல் எந்த அளவுக்கு வஞ்சம் வைத்துள்ளது என்பது தெளிவாவதோடு, இது இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையில் பகைமை மூட்டுவதற்கான இஸ்ரேலின் கைங்கர்யமாக ஏன் இருக்கக்கூடாது என்ற சந்தேகத்தையும் பெரிதாக எழுப்புகிறது. ஆனால், இந்நிமிடம் வரை எந்த ஒரு ஊடகமும் இதனைக் குறித்து கேள்வி எழுப்பத் தயாராகாதது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே!
திரும்ப திரும்ப பொய்யை சொன்னால் உண்மையாகி விடும் எனும் கோயபல்ஸ் தத்துவத்தைப் போல், ஈரான் குறித்து பொய்களைத் திரும்ப திரும்ப உண்மையைப் போல் சொல்கிறது இஸ்ரேல். ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க போகிறது என்று 2012ல் இஸ்ரேல் சொன்ன இதே கருத்தைத்தான் 1992ல் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதான்யாஹுவும் 1996ல் அப்போதைய இஸ்ரேல் பிரதமர் ஷிமான் ஃபெரஸும் சொன்னது குறிப்பிடத்தக்கது.
தனக்கு பிடிக்காதவர்களை கொலை செய்வதில் கை தேர்ந்தது மொசாத் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த மாதம் தெஹ்ரானின் மையப் பகுதியிலேயே முஸ்தபா அஹம்தி ரோஷன் எனும் அணு விஞ்ஞானி கொல்லப்பட்டதன் பின்னால் இஸ்ரேல்தான் உள்ளது என்பது நடுநிலையாளர்கள் ஒத்து கொண்ட உண்மை. கடந்த நான்கு ஆண்டுகளில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஐந்தாவது அணு விஞ்ஞானி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து தெரிவித்த கார்டியன் பத்திரிகையின் ஜுலியன் பார்கர், “1972ல் முனிச் ஒலிம்பிக்கில் தங்களைத் தாக்கிய பலஸ்தீன் போராளிகளைக் கொன்றதிலிருந்து 2010ல் மூத்த ஹமாஸ் தலைவர் மஹ்மூதை துபாய் ஹோட்டலில் கொலை செய்தது வரை புரபஷனலாக கொலை செய்யும் திறம் கொண்ட இஸ்ரேல் மாத்திரமே இதை செய்திருக்க முடியும் என்பதைக் கணிப்பதற்குப் பெரிய திறமை ஏதும் தேவையில்லை” என்கிறார்.
ஈரானில் நடக்கும் சிறு நிகழ்வும் மேற்கத்திய ஊடகங்களால் பெரிதுபடுத்துவதைக் கண்டு நாம் ஏமாந்து விடக் கூடாது. ஏனென்றால் பேரழிவு ஆயுதங்கள் இருக்கிறது என்று ஈராக்கை துவம்சம் செய்த அமெரிக்கா இது வரை அதற்கான எச்சத்தைக்கூட ஆதாரமாக காட்ட முடியவில்லை என்பதோடு, ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் ஏதுமில்லை எனவும் சிஐஏ பிழையான தகவலைத் தந்துவிட்டது எனவும் ரொம்ப சாதாரணமாக அமெரிக்கா ஈராக்கின் கதையை இழுத்து மூடிவிட்டதைக் கவனிக்க வேண்டும். ஆனால் இஸ்ரேல் திரும்ப திரும்ப ஈரான் அணு குண்டைத் தயாரிக்கும் நிலைக்குச் சென்று விட்டது என்று பல்லவி பாடுவதை விட்ட பாடில்லை.
இஸ்ரேலுக்குத் தற்போதுள்ள நெருக்கடியிலிருந்து தப்பிக்க ஒரு எதிரியை அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காகவே ஈரானைப் பயன்படுத்துகிறது. இஸ்ரேலுடன் நெருக்கமாக இருந்த அரபு சர்வதிகாரிகள் எல்லாம் எகிப்தின் மல்லிகை புரட்சியில் வெளியேற்றப்பட்டு விட்டார்கள். தற்போது வளைகுடா நாடுகளில் இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே ஆதரவான பலஸ்தீனின் பதாஹ் அமைப்போ, பலஸ்தீன் போராளி அமைப்பான ஹமாஸுடன் இணங்கி, இரண்டும் ஒற்றுமையாக செயல்படும் தருணத்தை நோக்கி செல்கின்றன.
இஸ்ரேலின் கொள்கைகளுக்கு எதிராகவும் தங்களுக்கு மேம்பட்ட வாழ்க்கை தரம் வேண்டும் என்பதற்காகவும் இஸ்ரேல் அரசுக்கு எதிராக அதன் சொந்த குடிமக்களே ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இஸ்ரேலில் உள்ள மத்திய தர வர்க்கத்தினர் அகண்ட இஸ்ரேலைவிட நிம்மதியான வாழ்க்கை மற்றும் தங்கள் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதற்கே முன்னுரிமை கொடுக்கின்றனர். எனவே பிரச்னையை திசை திருப்ப இஸ்ரேலியர்கள் கேட்கும் வசதியைச் செய்து கொடுக்க முடியாத இஸ்ரேல், இஸ்ரேல் மக்கள் கேட்காத போரை அவர்கள் மேல் திணிக்கின்றனர். போர் செய்வதற்கு ஒரு எதிரி தேவை என்பதால் ஈரானை எதிரியாக கட்டமைக்கின்றனர்.
மத்திய கிழக்கின் ஓரே அணு ஆயுதம் வைத்துள்ள நாடான இஸ்ரேல் யதார்த்தத்துக்கு முகம் கொடுக்க முடியாமல் தானே தேவையற்ற ஒரு போரை ஏற்பாடு செய்து அப்போரை தன் குடிமக்கள் மீது திணிக்கிறது. இஸ்ரேலின் நிறுவனர்களில் ஒருவரும் அதன் தேசிய ஹீரோவுமான மோஷே தயானின் மனைவை ருத் தயானின் வார்த்தைகளில் சொல்வதென்றால் “இன்று இஸ்ரேல் ஓர் கனவு தேசமல்ல, மாறாக பிரச்னைகளின் நடுவே தத்தளிக்கும் ஓர் தேசமே இஸ்ரேல்”!
– ஃபெரோஸ்கான்
source: http://www.inneram.com/articles/readers-articles/israel-iran-3158.html