நினைப்பதும் நடப்பதும்!
தலையில் துணியின்றி வெறுங்காலோடு வழிப்போக்கன் ஒருவன் கூஃபாவிலிருந்து மக்காவிற்குச் செல்லும் கூட்டத்தோடு போய்க் கொண்டிருந்தான்.
‘நான் ஒட்டகை மிது ஏறவும் இல்லை, என் மீது
சுமை எதையும் ஏற்றிக் கொள்ளவுமில்லை.
அடிமை எவனுக்கும் நான் முதலாளி அல்லன்.
தலைவன் எவனுக்கும் நான் அடிமையும் அல்லன்.
இன்றைக்கு என்ன செய்வது என்ற
எண்ணமுமில்லை! நேற்று நடந்ததைப் பற்றிக்
கவலையுமில்லை. சுதந்திரக் காற்றையே நான்
சுவாசிக்கின்றேன். நான் சுகவாழ்வே
வாழ்கின்றேன்’ என்று கருத்துப்பட பாடியவாறு மகிழ்ச்சியோடு சென்று கொண்டிருந்தான்.
ஒட்டகையில் சவாரி செய்து கொண்டிருந்த செல்வந்தர் ஒருவர் ‘வழிப்போக்கனே! எங்கு உன் பயணம்? திரும்பிவிடு. பாலைவனத்தில் அழிந்து போவாய்!’ என்று எச்சரிக்கை செய்தார்.
ஆனால் அந்த வழிப்போக்கனோ, அதைப் பொருட்படுத்தாமல் கனல் பறக்கும் அக்காட்டினிலே நுழைந்து தன் வழி சென்று கொண்டிருந்தான். நாங்கள் ‘;நுக்லே மஹ்மூத்’ என்னும் இடத்தில் வந்து சேர்ந்தோம். வழிப்போக்கனை எச்சரித்த அந்த செல்வந்தரின் வாழ்வு அங்கே முடிந்து விட்டது. அவர் சடலத்தின் தலைமாட்டில் நின்ற அந்த வழிப்போக்கன், ‘பல துன்பங்களுக்கு உள்ளான நான் உயிரோடு இருக்கின்றேன். சகல வசதியோடு ஒட்டகையில் சவாரி வந்த இவர் இறந்துவிட்டாரே!’ என்று ஆச்சரியப்பட்டான்.
நோயாளியின் அருகில் அமர்ந்து இரவெல்லாம் அழுது கொண்டிருந்த ஒருவன் காலையில் இறந்து போனான். ஆனால், நோயாளி பிழைத்துக் கொண்டான்.
என் பிரிய நண்பனே! காற்றெனப் பறக்கும் குதிரைகள் பல, வழியிலேயே இறந்து விடுகின்றன. நொண்டிக் கழுதை தன் சுமையுடன் நெடுவழி நடந்து பிரயாணத்தை முடித்து விடுகிறது. உடல்நலத்துடன் உள்ளவர்கள் திடீரென மடிந்து புதைகுழிக்கு எடுத்துச் செல்லப்படுவதையும், பயங்கரமான வெட்டுக்காயம் பட்டவன் பிழைத்து வாழ்வதையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம். நமது வாழ்வு நம் கையிலில்லை. – இமாம் ஸஃதீ
மொழியாக்கம்; முஹம்மது ஹஸன்
– பிறை 1970 ஜூன்