மரபுக்குத் திரும்புவோம்!
பூமிப் பரப்பு எங்கிலும் வாழக்கூடிய மனிதர்களுக்கு அந்தந்த பகுதிகளில் சக்தியும், நோயிலிருந்து மீளும் மருந்தும், தீர்வும் இறைவன் உண்டாக்கியிருக்கிறான். பருவ வகை உணவுகளுக்குள்ளாகவே உடல் உபாதை, நோய் தடுக்கும் ஆற்றலை உள்ளடக்கியிருக்கிறான். ஒவ்வொரு பகுதியிலும் எளிய முறையில் அதிக உணவு கிடைக்குமாறு செய்திருப்பது இறைவன் ஏற்படுத்திய அற்புதங்களில் ஒன்று.
தமிழகத்தில் விளையக்கூடிய பருவ உணவுகளைத் தள்ளி வைத்து தவிர்த்துவிட்டு, வெளிநாட்டு உணவுகளை உட்கொள்வதால் வியாதிகள் பல உருவெடுக்கின்றன. அந்தந்த நிலம், குலம், இடத்திற்குத் தக்கவாரே திணைக் கலாச்சாரம் அமைந்திருக்கிறது.
விலை உயர்வு என்றவுடன், உலகம் முழுவதும் விலை ஏறுதல் நடக்கிறதென கூறப்படுகிறது. நமது திணைக்களத்திற்கும், உலகத்திற்கும் சம்பந்தமில்லை. மரபு, இயல்பு, இயற்கைத் தன்மையிலிருந்து ஒதுங்கியுள்ளது காரணம்!
காலைக் கருக்கத்தில் வயலுக்குச் செல்லும் குடியானவர், வெயில் உச்சிக்கு நகரும் போது மர நிழலில் அமர்ந்து தான் கொண்டு வந்த பழைய கஞ்சியை குடித்து பச்சை மிளகாய், வெங்காயத்தை கடித்துக் கொள்வர். பம்ப் செட் பைப்பில் பாய்ந்தோடி வரும் நீரை அருந்தி 80, 90 வயது வரை திடகாத்திரத்தோடு உயிர் வாழ்ந்தனர். சளி பீடிக்கவில்லை. நோய் தொந்தரவில்லை.
நீரைக்காய்ச்சி குடியுங்கள். பிஸ்லெரி வாட்டர் அருந்துங்கள். தொடர் பயமுறுத்தல் நடக்கிறது. அரசு 0/2 பைசாவுக்குத் தரும் நீர் 800 மடங்கு விலை வைத்து அன்னிய கம்பெனிகள் 16/& ருபாய்க்கு விற்கின்றன. நீரைக் காய்ச்சி பருகுவதால் தண்ணீர் மூலம் சக்தியளிக்கும் நுண்ணுயிர்கள் அழிகின்றன ஆய்வியலாளர் தெரிவிக்கின்றனர்.
சாம்பல், வேப்பங்குச்சியால் பல் துலக்கி 70 வயது வரை வெண் பற்களுடன் உலா வரும் பலரை கிராமங்களில் காணலாம். ஆனால், பற்பசை உபயோகிக்கவில்லையெனில் பற்கள் கொட்டிவிடும் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. அன்னியர் ஆதிக்கம் மெல்ல, மெல்ல தமிழர் மரபை குழிதோண்டி புதைக்கின்றது.
தமிழக மரபு உணவுகளான பனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சீனிப்பெரும் கிழங்கு, பலாப்பழம், வெள்ளரிக்காய், பேரிக்காய், விளாம்பழம், கொய்யா, எலந்தப்பழம், பனம்பழம், பதநீர், பனங்கற்கண்டு, கருப்பட்டி, கரும்புச்சாறு வெல்லம், பருத்திப் பால், தண்டங்கீரை, முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, கேழ்வரகு இவையனைத்தும் இன்று விளிம்பு நிலை மக்கள் உணவாக, பொருளாதாரத்தில் கீழ் நிலை மக்களுக்குரிய பொருளாக மாற்றப்பட்டிருக்கிறது.
அன்னிய உணவுகளான பீஸா, வெரைட்டிகேக், கோக், பிரியாணி, சிக்கன்பர்கர், சிக்கன் ஸ்டிக்ஸ், தந்தூரி சிக்கன், தந்தூரி நக்கெட்ஸ், பொட்டட்டோ வெட்ஜஸ் என விதவிதமான வகைகள் தமிழரை ஈர்ப்பு கொள்ள வைத்து நோயாகப் பற்றிப் பிடித்திருக்கின்றன. மாற்றார் மரபுக்குள் தம்மை மூழ்க்கடித்துக் கொண்டோர் கறையேராது அடிமையாயினர். சந்ததிகளையும் தாரை வார்க்கின்றனர். மண்ணின் மரபுக்கு திரும்புவோம்.
-சோதுகுடியான், முஸ்லிம் முரசு பிப்ரவரி 2012
source: http://jahangeer.in/?paged=3